கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 26, 2019

விளக்கெண்ணெய் வைபவம்


விளக்கெண்ணெய் வைபவம்


எங்கள் காலத்தில், கோடை விடுமுறை என்றால் ஒரு விஷயத்திற்கு யாரும் தப்ப முடியாது. அது எண்ணெய் குடித்தல். விடுமுறைக்கு கிராமத்திற்கு சென்றாலும் சரி, இருக்கும் இடத்திலேயே இருந்தாலும் சரி, ஒரு நாள் விளக்கெண்ணெய் கொடுக்காமல் விட மாட்டார்கள்.

ஒரு நல்ல நாள் பார்த்து(நிஜமாகத்தான்) அன்று எண்ணெய் கொடுக்கலாம் என்று முடிவு செய்வார்கள். மாமா திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அதற்கான சாமான்கள் வாங்கி வரச்செல்வார். நாங்கள் சாமான்கள் விற்கும் கடை திறந்திருக்க கூடாது, என்று சாமியிடம் வேண்டிக் கொள்வோம். ஏனோ சாமி ஒரு முறை கூட எங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்ததில்லை.

எண்ணெய் கொடுப்பதற்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மறு நாள் எங்களை எழுப்பி, பல் தேய்த்து விட்டு வரச் சொல்வார்கள். நோ காபி. எண்ணையில் சேர்க்க வேண்டிய கஷாயம் அதற்குள் ரெடியாகியிருக்கும். அதில் சதகுப்பை என்று ஒன்று சேர்ப்பார்கள் என்று தெரியும். அதன் நாற்றம் சகிக்காது. அதைத் தவிர வேறு சில பொருள்களும் சேர்ப்பார்கள். கஷாயம், எண்ணெய் இவைகளை ஸ்வாமிக்கு முன் வைத்து விட்டு, பின் முற்றத்திற்கு கொண்டு வருவாள் அம்மா. உடன் மாமா, மாமிகளும் நார்த்தங்காய் சகிதம் வருவார்கள். எங்களோடு, மாமா குழந்தைகள், அத்தை குழந்தைகள் எல்லோரும் உண்டு.

முதல் போணியை மாமா பையன் ராமகிருஷ்ணன் செய்வான், அடுத்தது நான், பிறகு எங்கள் மூன்றாவது அக்கா. பிறகு மாமாக்கள் மகள்கள். நாங்களெல்லாம் சமர்த்து குழந்தைகள். அதிகம் படுத்தாமல் குடித்து விடுவோம். கொஞ்சம் உவ்வே என்றால் உடனே, "ஊம்ம், நார்த்தங்காயை சாப்பிடு" என்பார்கள்.  எண்ணெய்  குடித்து விட்டு, படுத்துக் கொள்ளக் கூடாது. குதிக்கச் சொல்வார்கள். நாலைந்து முறை வடவண்டை தாழ்வார திண்ணையில் ஏறி கீழே குதிப்போம்,மாமாவின் பெரிய பையன் சம்பத், எங்கள் பெரிய அக்கா போன்றவர்கள் கடகடவென்று குடித்து விட்டு,வாந்தி எடுப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்.  

அடுத்த லாட் படுத்தல் லாட். வாந்தி எடுப்பது, முற்றத்தை சுற்றி ஓடுவது, அழுவது, போன்ற அலப்பறைகள் அரங்கேறும். எங்கள் அத்தை குழந்தைகளுக்கு எங்கள் அம்மாவிடம் பயம் உண்டு என்றாலும், ரகளை பண்ணுவார்கள். அதிகம் படுத்துவது அத்தை பையன் கிருஷ்ணன், மற்றும் எங்கள் அண்ணா. பயங்கரமாக அலறி, குடிக்க முடியாது என்று ஓடுவார்கள், மாமாவும், அம்மாவும் விசிறி கட்டை சகிதம் துரத்துவார்கள்.

இரண்டாவது அக்கா, கடைசி அக்கா போன்றவர்கள் ஓட மாட்டார்கள், அழுவார்கள், ஒவ்வொரு மடக்கு முழுங்கிய பிறகும் வாந்தியெடுக்க முயலுவார்கள், யாராவது ஒருவர் அவர்களின் முதுகை தடவி, சரி செய்வார்கள்.

ஒரு வழியாக குடித்து முடித்ததும் சிறுவர்கள் எதிரே இருக்கும் தென்னந் தோப்பிற்கு விரட்டப் படுவார்கள்.  ஒன்பது மணிக்கு சூடாக காபி. பதினோரு மணிக்கு பருப்புத் துவையலோடு ஜீரக ரசம் சாதம். நோ மோர் சாதம்.  இதனாலேயே ஜீரக ரசம், பருப்புத் துவையல் என்றால் அப்போதெல்லாம் பிடிக்காது. எத்தனை முறை வயிற்றை காலி செய்தோம் என்று கணக்கு வேறு சொல்ல வேண்டும். மதியம் மூன்று மணிக்கு மேல் எட்டு முறை ஆகி விட்டது  என்றால் குளிக்கலாம்.

சும்மா சொல்லக்கூடாது, குளித்த பிறகு நிஜமாகவே உடல் லேசானது போல் ஒரு உணர்வு வரும்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு முறை எங்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். "வீட்டிற்கு விலக்கான சமயத்தில் எண்ணெய் குடிக்க கூடாது" என்று நான் என் அத்தைப் பெண்ணிடம் கூற, அவள்,"அப்படியா? நான் வீட்டில் இல்லை", என்று ஒதுங்க,அத்தை அவளை,"இந்தா உனக்கு எப்போ நாள் என்று எனக்கு தெரியும், யார் கிட்ட பொய் சொல்ற?' என்று உள்ளே இழுத்தது ஒரு கிளை கதை.

 



49 comments:

  1. குட்மார்னிங்...

    விளக்கெண்ணெய் குடித்தது போலானான்... என்றெல்லாம் கதைகளில் படித்திருந்தாலும் நான் அந்த அனுபவத்துக்கு ஆளானதில்லை என்பதை பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அறிவிக்கிறேன்!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. விளக்கெண்ணெய் குடிக்காததால் ஒரு பதிவு போடும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்களே..!

      Delete
    2. ஸ்ரீராம் இப்பத்தான் உரைத்தது நீங்க நேற்று விளக்கெண்ணை குடித்துவிட்டு வந்தேன்னு சொன்னது ஹா ஹா ஹாஹ் ஆ...டூ லேட்!! இல்லையா?!

      கீதா

      Delete
  2. அதிகபட்சம் வேப்பம் இலை அரைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறேன். அதுவும் ஓரிரு முறைதான்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கிருந்த ஒரு தோல் அலர்ஜி பிரச்சனைக்கு கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு குடித்தால் நல்லது என்று யாரோ சொன்னதை கேட்டு, ஒரு மாதம் தினசரி அப்படி குடித்து, மஞ்சள் காமாலை வந்து விட்டது. தினசரி வேப்பிலை சாப்பிடக்கூடாதாம்.

      Delete
  3. திருக்காட்டுப்பள்ளியா? ஆ.... எங்கள் மாமா - அக்கா அங்குதான் தங்கள் திருமண வாழவைத்த தொடங்கினர். ஒம்பத்துவேலி அக்ராஹாரத்தில்... அங்கு ஏற்கெனவே இருந்த இரண்டு சித்தப்பாக்களில் ஒருவர் ராஜம் காபியில் வேலை பார்த்தவர். இன்னொருவர் அங்கு கடை வைத்திருந்தார். அவர் பெண் நேற்று கேன்சர் நோயால் காலமானாள். நேற்று எனது வருத்தமான அனுபவம் அது.

    ReplyDelete
    Replies
    1. ராஜம் காபி கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது. உங்கள் மாமாவுக்கு நிச்சயம் எங்கள் மாமாக்களை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் முத்து மாமா என்னும் முத்துசாமி அய்யர் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம்.

      Delete
    2. ஸ்ரீராம் அந்த மாமா முத்துசாமி ஐயரோட ஒன்றுவிட்ட மைத்துனரின் தம்பியின் மச்சினியின் ஓரகத்தியின் அண்ணா மனைவி பெயர்.....

      அட! பானுக்கா அது இருங்க ஹான் நினைவுக்கு வந்டுருச்சு எங்க அத்தையோட ரெண்டுவிட்ட நாத்தானோரோட ஓரகத்தியோட மச்சினியோட ஒன்றுவிட்ட அத்தை..

      அட ஸ்ரீராம் அப்ப நாம சொந்தக்காரங்களாயிட்டோம்!!!

      கீதா

      Delete
    3. கீதா ரங்கன்... நேரம் கிடைக்கும்போது யோசித்து எழுதிக்கொண்டே வந்தீர்களானால் டிரம்ப்கூட உங்கள் சொந்தக்கார்ராயிருக்கும்...என்ன ஒண்ணு... முப்பத்தஞ்சு விட்ட (அது என்ன ஒன்று விட்ட மட்டும்தான் இருக்கணுமா என்ன) மாமாவின் நாப்பத்தஞ்சுவிட்ட ஓரகத்தி என்று லைன் பிடித்தால் கண்டுபிடித்துவிடுவீர்கள்.

      Delete
  4. வாந்தி எடுத்தவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா? ஐயோ பாவம்!

    //ஓடுவார்கள்... விசிறி கட்டை சகிதம் துரத்துவார்கள்//

    பார்க்கவே ரசனையாக இருக்கும் போலவே....

    ReplyDelete
    Replies
    1. அப்பொழுது அது ரசனையாக தோன்றியதில்லை, இப்போது விவரிக்கும் பொழுது அப்படி தோன்றுகிறது போல.

      Delete
  5. இப்போதெல்லாம் எங்கும் இந்த வித்துவான்கள் நடைபெறுவதாகக் காணோம். நவீன மருத்துவத்தில் இதெல்லாம் தேவை இல்லை என்று விட்டு விட்டார்கள் போலும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நவீன மருத்துவத்தின் தயவால் இந்தக் கால குழந்தைகள் தப்பித்தார்கள். தப்பித்தார்களா? அல்லது எதையாவது இழந்திருக்கிறார்களா? வருகைக்கும், மீள் வருகைகளுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. சின்ன வயசில் நானெல்லாம் விசிறிக்கட்டை அடி வாங்கி இருக்கேன். ஆனால் இப்போச் சமர்த்தாகக் குடிச்சுடறேன். :)))) பாராட்டத் தான் யாரும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் விளக்கெண்ணை குடிக்கிறீர்களா? இதற்காகவே உங்களை பாராட்ட வேண்டும். பிடியுங்கள் பாராட்டை.

      Delete
  7. பெரியவர்கள் இப்படியெல்லாம் முன்னேற்ப்பாட்டுடன் செய்வதால்தான் நெடுங்காலமாக மருத்துவமனைகளுக்கு போகாமல் வாழ்ந்தார்கள்.

    தலைப்புதான் படிக்க வருபவர்களை சற்றே தள்ளி நிறுத்தி வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். நாம் கை கழுவி விட்ட பல பழக்கங்கள் பொருள் பொதிந்தவை என்று மேலை நாட்டில் கண்டு பிடித்து கூறியவுடன் நாமும் அதை மீண்டும் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறோம்? அது போல இந்த எண்ணெய் குடிக்கும் பழக்கமும் மீண்டு(ம்) வரலாம்.
      வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  8. விளக்கெண்ணெய் என்ற தலைப்பைப் படித்த உடனேயே எனக்கு கோபுலுவின் ஓவியம் ஞாபகம் வந்தது. அதையே இங்கு போட்டிருக்கிறீர்கள்.

    நாம இந்த வைபவத்தையெல்லாம் மறந்துவிட்டோம் இல்லையா? எனக்கு விளக்கெண்ணெய் கொடுத்த ஞாபகம் இல்லை. ஆனால் வேப்பிலைக் கொழுந்து அரைத்து கட்டியாகத் தருவார்கள். நான் எப்போதுமே, இது வேண்டாம், அது பிடிக்கும் என்று மருந்து விஷயத்தில் செய்யவே மாட்டேன். ஒன்றிர்க்கு இரண்டு உருண்டை கொடுத்தாலும் சாப்பிட்டுவிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. //கோபுலுவின் ஓவியம் ஞாபகம் வந்தது. அதையே இங்கு போட்டிருக்கிறீர்கள்.//.
      எங்கள் கல்லூரி குழுவில் என் தோழி இந்தப் படத்தை பகிர்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் பழைய நினைவுகள் கிளர்ந்து எழுந்தன.
      மருந்து விஷயத்தில் நானும் உங்களைப் போலத்தான். வருகைக்கு நன்றி.

      Delete
  9. எங்கள் வீட்டிலும் விளக்கெண்ணெய் கிடையாது, வேப்பம்கொழுந்து அரைத்து சீடை அளவு உருட்டி தருவார்கள், விழுங்கி விட்டு விளையாட சென்று விடுவோம்.
    என் குழந்தைகளுக்கும் கொடுத்து இருக்கிறேன்.
    பேத்தி, பேரன்கள்தான் சாப்பிடவில்லை, உரைமருந்துடன் சரி.
    படம் ரசித்த படம்.

    ReplyDelete
    Replies
    1. >>> பேத்தி, பேரன்கள்தான் சாப்பிடவில்லை, உரைமருந்துடன் சரி...<<<

      இப்போது தான் உரைமருந்தும் இல்லாமல் போயிற்றே!...

      ஆனாலும் மீண்டும் திரும்பி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்...

      Delete
    2. பேர குழந்தைக்கு விளக்கெண்ணையை பாலாடையில் ஊட்டும் தைரியம் நமக்கில்லை. உர மருந்து கொடுத்து விட்டேன். வருகைக்கு நன்றி.

      Delete
    3. பேர குழந்தைக்கு விளக்கெண்ணையை பாலாடையில் ஊட்டும் தைரியம் நமக்கில்லை. உர மருந்து கொடுத்து விட்டேன். வருகைக்கு நன்றி.

      Delete
    4. படத்திற்கு கோபுலுவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்ன ஒரு பாவம்!

      Delete
  10. விளக்கெண்ணெய் வைபவம் மிகப் பெரிய களேபரம் ..
    தங்கள் கைவண்ணத்தில் அருமை..

    இந்தப் படம் எனது சேகரிப்பிலும் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி.

      Delete
  11. இதெல்லாம் அனுபவித்து கடந்து வந்தவன் நான் எனப் பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஓ! அப்படியா? வருகைக்கு நன்றி.

      Delete
  12. வணக்கம் சகோதரி

    விளக்கெண்ணெய் வைபவம் நன்றாக இருந்தது. படமும் அதற்கேற்ற மாதிரி கோபுலு கைவண்ணத்தில் மிக அழகு. அந்தகாலத்தில் மருத்துவர்கள் நம் வீட்டு பெரியவர்கள்தான்.அவர்களின் கவனிப்பில் நம் உடல்நலம் சீராக இருந்தது. இப்போதெல்லாம் உரை மருந்தே வேண்டாம் என்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. /இப்போதெல்லாம் உரை மருந்தே வேண்டாம் என்கிறார்கள்//
    இதைத்தான் துரை சாரும் சொல்லியிருக்கிறார். சொல்ல முடியாது திரும்பி வந்தாலும் வரலாம். தோப்புக்கரணம் போடுவதும், காதை பிடித்து முறுக்குவதும் நல்லது என்று வரவில்லையா?
    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  14. விளக்கெண்ணெய் வைபவம்
    நானின்று தான் அறிகிறேன்
    சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வருகைக்கு நன்றி.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ஹை டண்டனக்கா ஹை டண்டனக்கா! நான் விளக்கெண்ணை குடிச்சதே இல்லையே! இரண்டு பாட்டிகளுமே ஏனோ கொடுத்ததில்லை. ஒரு வேளை திருநெல்வேலி/கேரளக்காரர்களுக்குப் பழக்கம் கிடையாதோ!! ஹிஹிஹிஹி...
    ஆனால் எனக்கு மலச்சிக்கல் சிறுவயதில் உண்டு. அப்போது அப்பா வழிப்பாட்டி வி எ சும்மா ஸ்பூன்ல விட்டுக் குடிக்கச் சொல்லி நான் அப்போதெல்லாம் ரொம்பக் குறும்பாக்க்கும் ஸோ குடிக்காமல் வீட்டில் ஓடி அப்புறம் பாட்டி வேண்டாம் போ வேற ஏதாவது செஞ்சுக்கலாம்னு சொல்லிவிட்டார். நான் தாத்தா பாட்டி அத்தைகளுக்கு மிக மிக செல்லம். எனவே குடிச்சதே இல்லை. ஆனா வி எ குடிச்ச/இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டதுண்டு!! ஹா ஹா ஹா

    பானுக்கா அந்தப் படத்துல இருக்கறது போலவே இருக்கு உங்க வீட்டு சீன்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ.கே.ஓ.கே!
      ஓ.கே.ஓ.கே ! எங்கள் வீடு மட்டுமல்ல, அந்த பழக்கம் இருந்த பல வீடுகளும் அப்படித்தான் இருக்கும். வேறு சில குழுக்களில் நான் இதை பகிர்ந்திருந்தேன், அனுபவித்த சிலரும் அப்படியே கூறினர்.

      Delete
  17. வாந்தி எத்த பின்னும் மீண்டும் முதல்லருந்தா!!!ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ!

    ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  18. என் மகனுக்கு உச்சந்தலையில் விளக்கெண்ணை வைத்ததுண்டு. உரை மருந்து கொடுத்ததுண்டு. பல நாட்டு மருந்துகள் தான் பெரும்பாலும். அதுவும் நாகர்கோவில் கோபால ஆசான் கடையிலிருந்து வாங்கி வைத்துக் கொண்டு விடுவேன் அப்ப திருவனந்தபுரத்துலதானே இருந்தேன் ஸோ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, அப்போதைய காலகட்டங்களில் குழந்தைகள் எண்ணெய் மணத்துடனும் வழுக்கலாகவுமே இருக்கும். :) யாருக்குக் குழந்தை பிறந்திருந்தாலும் அந்தக் குழந்தையை முதல் முதல் பார்க்கிறவங்க ஒரு சிட்டிகை சர்க்கரையைக் குழந்தையின் வாயில் வைத்துவிட்டு "உச்சி எண்ணெய்" எனப்படும் இந்த விளக்கெண்ணெயை வைத்துவிட்டேக் கைகளில் குழந்தையை எடுப்பார்கள். இப்போல்லாம் அந்தப் பழக்கம் இல்லை. என் மாமா, சித்தி குழந்தைகளுக்கு நான் தனியாகவே விளக்கெண்ணெய் புகட்டி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினு எல்லாம் செய்திருக்கேன். அதனால் எனக்குக் குழந்தை பிறந்தப்போக் குழந்தையைத் தூக்கக் கஷ்டப்படவில்லை.

      Delete
    2. உரைமருந்துக்கெனவே தனிக் கலுவம் உண்டு. சிலர் நல்ல சந்தனக்கல்லிலும் உரைத்துக் கொடுப்பார்கள். என் குழந்தைகள் இருவருமே சிறப்புக் குழந்தைகள் என்பதால் அவங்களுக்கு நோ எண்ணெய்! சூரியக் கதிர்களில் தான் குளித்தனர். ஆகவே அப்போவே இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல விடுபட்டது எனலாம். பேரக்குழந்தைகள் எல்லோருமே அம்பேரிக்காக் குடிமக்கள்!

      Delete
    3. நானும் உரை மருந்து கொடுத்திருக்கிறேன். வருகைக்கும், மீள் வருகைகளுக்கும் நன்றி.

      Delete
    4. //குழந்தையை முதல் முதல் பார்க்கிறவங்க ஒரு சிட்டிகை சர்க்கரையைக் குழந்தையின் வாயில் வைத்துவிட்டு "உச்சி எண்ணெய்" எனப்படும் இந்த விளக்கெண்ணெயை வைத்துவிட்டேக் கைகளில் குழந்தையை எடுப்பார்கள்.//
      இப்போதெல்லாம் குழந்தையின் வாயில் சர்க்கரை வைப்பதை மருத்துவர்கள் அனுமதிப்பது இல்லை. கீதா அக்கா.

      Delete
  19. படம் செம இல்லையாக்கா கோபுலு!! சூப்பர் என்ன அழகான படம்! ஒவ்வொருவர் முகத்திலும் என்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்!! செம

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கோபுலு ஒரு லெஜெண்ட்.

      Delete
  20. வயிற்றுப் பூச்சிக்கு வேப்பிலைக் கொழுந்து சாப்பிடச் சொல்லுவாங்க அவ்வளவே! கொழுந்து இப்போதும் நான் கண்டால் பறித்துச் சாப்பிடுவதுண்டு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தினம் கொழுந்து வேப்பிலை சாப்பிடலாம். என் தாத்தா சாப்பிட்டு வந்தார். அரைத்தெல்லாம் சாப்பிட்டதில்லை. எங்க அம்பத்தூர் வீட்டு வேப்பமரத்தின் கொழுந்துகளையும் வேப்பங்குச்சிகளையும் தினம் காலை தெருக்காரங்க வந்து உடைத்து எடுத்துச் செல்லுவாங்க! பாவம்! இப்போ மரத்தை வெட்டி விட்டார்களாம்! :( என்ன செய்யறாங்களோ! தெருவே வெறிச்! :(((((

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. சிறு வயதில் வேப்பங் கொழுந்து, வேப்பம் பழம் சாப்பிட்டிருக்கிறோம். அதிகம் சாப்பிடக்கூடாது என்பார்கள்.

    ReplyDelete
  23. வீட்டிலுள்ளோர் எல்லோரும் ஒரே நாளில், நேரத்தில் குடித்தால்... என்ன செய்வார்கள் என்ற கவலையோடையே படித்து வந்தேன். ஓகோ! தென்னந்தோப்பா!..

    ஆனந்த விகடன் தீபாவளி மலர் அட்டைப்படம்! கோபுலு தான் என்னமாய் வரைந்திருக்கார்!..

    ReplyDelete