கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 31, 2016

Happy new year 2017எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த வருடத்தில் உங்கள் ஆசைகள் பூர்த்தியாகவும், ஆரோக்கியம் சிறப்பாக அமையவும் இறைவனை வேண்டுகிறேன்.😃😃😃😍

Tuesday, December 27, 2016

சாருவும் நானும் - 4

சாருவும் நானும் - 4


"விளையாடுறீங்களா? நான்தான் டெலெக்ராம் கொடுத்தேன்.."

"இருக்கலாம், ஆனா எங்களுக்கு வந்து சேரல.. வேணும்னா பாருங்க, இதுலதான் லெட்டர்ஸ், டெலெக்ரா எல்லாம் பின் பண்ணி வச்சிருக்கோம்.." அவன் ஒரு நோட்டை தூக்கிப் போடா, அதில் நான் கொடுத்திருந்த டெலெக்ராம் இல்லை."

"எங்க ஆபிஸுக்குனு ஒரு ரூம் உங்க ஹோட்டலில் உண்டு இல்லையா"?

"உண்டு சார், ஆனா அதுக்கு நீங்க முன்னாலேயே இன்பார்ம் பண்ணனும். இப்படி திடீர்னு வந்து நின்னா எங்களால எதுவும் செய்ய முடியாது. "

"வேற ரூம் இருந்தா குடுங்க.."

"இப்போ சீசன் சமயம், ஒரு ரூம் கூட காலி இல்ல, வெரி சாரி!"

 வேலையாக எதற்கும் கையோடு வைத்துக் கொள் என்று மேனேஜர் கொடுத்திருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினேன். அதைப் படித்தவன் சற்று யோசித்தான்.

"லேடீஸோடு வந்திருக்கீங்க, ஒன்னு வேணா செய்யுங்க, ஸ்டாப் ரூம்ல இன்னிக்கு நைட் தங்கிக்குங்க, காலைல, வேறு ரூம் பார்த்துக்கங்க..நா ரூமை க்ளீன் பண்ணி வைக்க சொல்றேன், நீங்க போய் கீழ இருக்கற ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க, அப்புறம் சாப்பாடு தீர்ந்துடும். "

ஏற்கனவே தீர்ந்து விட்டது. நாங்கள் போன பொழுது பாத்திரங்களை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தவரேங்களை பார்த்ததும் முகச் சுளிப்போடு தண்ணீர் கொண்டு வைத்தார். "வெஜிடேரியன், சைவம் என்றெல்லாம் சொல்லியும் மீண்டும் மீண்டும் சிக்கன் இருக்கு, மட்டன் இருக்கு என்றான். கடைசியில் எவர்சில்வர் முறத்தில் கொண்டு வந்த சாதத்தை எங்கள் இருவர் இலையிலும் பாதிப் பாதியாக கொட்டி விட்டு, அதன் மீது தயிரை மீண்டும் கொட்டி விட்டு திரும்பியே பார்க்காமல் போய் விட, உப்பு கூட போடாமல் விரைத்துக் கிடந்த அந்த சாதத்தை சாப்பிட்டு விட்டு ரிசப்ஷனுக்கு திரும்பினோம்.

"சூரி, சாருக்கு ஸ்டாப் ரூமைத் திறந்து விடு.."

அந்த சூரி பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்து,நடந்து,நடந்து ஹோட்டலின் ஒரு மூலையில் இருந்த ஸ்டாப் ரூமைத் திறந்து விட்டான். அதை ஸ்டாப் ரூம் என்பதை விட, ஸ்டோர் ரூம் என்பது பொருத்தமாக இருக்கும்.சற்றே பெரிதான அந்த அறை அங்கு போடப் பட்டிருந்த சாமான்களினால் சிறியது போலத் தோன்றியது.

ஒரு பக்க சுவற்றை ஒட்டி போடப்பட்டிருந்த டேபிள் மீதுஒட்டை, உடைசல் நாற்காலிகள் கவிழ்த்து போடப்பட்டிருந்தன. அதன் எதிர் பக்க சுவரை ஒட்டி ஒரு த்ரீ சீட்டர் சோபா, அதை ஒட்டி ஒரு குட்டி மேஜை, அதன் மீது டெலிபோன்(வேலை செய்யுமா?), நடுவில் ஒரு வட்ட டீபாய் அதன் மீது சாம்பல் தட்டப்படாத ஆஷ் டிரே. சூரி டீப்பாயை நகர்த்தி விட்டு ஒரு மடக்கு கட்டிளைப் பிரித்து நடுவே போட்டான்.

"எதுனா வேணுமா சார்"?

"கொஞ்சம் தண்ணீ , தலகாணி, போர்வை"

"தண்ணீ கொண்டாறேன், தலகாணி..,போர்வ.."? என்றபடி வெளியே போனவன், சற்று நேரத்தில் ஒரு ஜக்கில் தண்ணீரும், ஒரு தலகாணியும், ஒரு படுக்கை விரிப்பை போர்வை என்றும் கொண்டு வந்தான்.

ஒரு பொறுப்புள்ள லட்சிய கணவனாக இருந்த ஒரு போர்வை தலைகாணியையும் சாருவுக்கு கொடுத்து விட்டு நான் சோபாவில் படுத்துக்க கொண்டேன். ஜன்னல் வழியாக ஹலோ சொன்ன குளிர் காற்று என்னை தூங்க விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. எழுந்து ஜன்னல் கதவை சார்த்த முயன்ற போதுதான் ஜன்னல் கதவிற்கு கொக்கி இல்லாதது தெரிந்தது. சாருவோ ஒரு ஞானியைப் போல புது இடம், வசதிக்கு குறைவான படுக்கை, வாடை காற்று இவை எதனாலும் பாதிக்கப் படாமல் நிம்மதியாக தூங்கினாள்.

காலையில் ரூமை(??)காலி செய்து விட்டு டிஸப்ஷனுக்கு வந்த பொழுது, டிசப்ஷனிஸ்ட்,"நீங்க ரூமுக்கு வாடகை ஒன்னும் குடுக்க வேணாம், நேற்று ராத்திரி சாப்பிட்டதுக்கு மட்டும் பணம் குடுங்க" என்று பிள்ளை நீட்டினான். அதைப் பார்த்து விட்டு கிறுகிறுத்து வந்ததற்கு ஒரு சோடா குடிக்கலாம் போல் இருந்தது. அப்புறம் அதற்கும் அல்லவே மூன்று மடங்கு விலை கொடுக்க வேண்டும்!

கொடைக்கானலில் சில்வர் காஸ்கேட் பின்னணியிலிசாருவை அணைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள ரூம் காலி  இல்லை. ஏரியின் விஸ்தீரணத்தை பெடல் போட்டால் அளக்க ரூம் காலி இல்லை, குதிரைச் சவாரி செய்ய ரூம் காலி இல்லை, கோக்கர்ஸ் வாக்கில் கிடைக்கும் சுடுசுடு இட்லி வடையை சுவைக்க ரூம் காலி இல்லை. எனக்கு தற்கொலை முனையிலிருந்து குதித்து விடலாம் போல எரிச்சல் வந்தது. 

"என்ன சார் நேத்துதான் வந்தீங்க, அதுக்குள்ள கிளம்பிடீங்க.."? நேற்று வந்த டாக்ஸி டிரைவர்.

"இல்லைப்பா ரூமே கிடைக்கல, என்ன பண்ரதுன்னு தெரியல"
"நாதான் அப்பவே சொன்னேனே.? இப்போ சீசன் சமயம், ரூம் கிடைக்காதுனு.. ஒண்ணு  பண்ணுங்க சார், இந்த கொடைகானல ஒரு வாரமும் பாக்கலாம், ஒரு நாளிலும் பாக்கலாம், ஒன் அவர்லேயும் பாக்கலாம், எல்லாம் ஒண்ணுதான், பேசாம ஒரு டாக்ஸி அரேஞ்ஜ் பண்ணிகிட்டு, சுத்தி பார்த்துட்டு கீள எறங்கிடுங்க, அதன் பெஸ்ட். நம்ம பிரென்ட் ஒருத்தர் இருக்காரு."

அவன் அறிமுகப்படுத்திய ட்ரைவர் அப்படி சொல்ல முடியாமல் சோப்பு விளம்பரத்தில் வருவது போல வெள்ளை வெளேர் வேட்டி, சட்டை அணிந்து, மரியாதைக்குரிய தோற்றத்தில் நடு வயதினராக இருந்தார்.

"டிபன் சாப்டீங்களா சார்.."?

இன்னும் இல்லை, முதல்ல ஒரு நல்ல ஹோட்டலுக்கு போங்க, பயங்கர பசி." அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் கும்பல் நெரிந்தது. அன்றைய ஸ்பெஷல் ரவா பொங்கலாம். அதை நாங்கள் சாப்பிட துவங்கிய பொழுது "ஊ ஊ,ஊ " என்று ஒரு பெரிய சைரன் ஒலி  கேட்டு ஹோட்டலே திடுக்கிட்டது. ஒலித்தது எங்கள் டேபிளுக்கு எதிர் டேபிளில் இருந்த ஒரு ஐந்து வயது சிறுவன். அந்த நிமிடமே எங்கள் தட்டு அவன் டேபிளுக்கு வந்தாக வேண்டும் என்று அவன் அலறிய அலறலுக்கு பணி(ய)ந்து  ரவாப் பொங்கலை அவனிடம் சமர்ப்பித்து விட்டு லெமெனே இல்லாத ஒரு லெமன் ரைஸை சாப்பிட்டு விட்டு   மஞ்சளாக இருந்த தண்ணீரை கடவுள் பெயரைச் சொல்லி முழுங்கி விட்டு 'கொடை' வலத்தை துவங்கினோம்.
-தொடரும்  Friday, December 23, 2016

சீக்ரெட் சாண்டாவும், பிராமின்ஸ் டாமினேஷனும்

சீக்ரெட் சாண்டாவும், 
பிராமின்ஸ் டாமினேஷனும் 
என் மகனும் மருமகளும் அன்று ஷாப்பிங் கிளம்பினார்கள். 'சீக்ரெட் சாண்டா' விற்காக பரிசுகள் வாங்க வேண்டும் என்றான். அதென்ன சீக்ரெட் சாண்டா? கார்ப்பரேட் கல்ச்சரில் இதுவும் ஒன்று. க்ரிஸ்மாஸுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக ஒரு நாளைக்கு ஒரு பரிசு என்று அலுவலகத்தில் நம்மோடு பணிபுரியும் ஒருவருக்கு அவருக்குத் தெரியாமல் தினம் ஒரு பரிசு அவர் மேஜையில் வைத்து விட வேண்டுமாம். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை கம்பெனியின் ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மெயில் அனுப்பி விடுவார்களாம். கடைசி நாளன்றுதான் யார் அந்த சாண்டாக்ளாஸ் என்று தெரிவிப்பார்களாம். தினசரி பரிசு ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் வாங்க வேண்டுமாம், கடைசி நாள் பரிசு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கலாமாம். உங்களில் யாருக்காவது இப்படி சீக்ரெட் சாண்டா சுவாரஸ்யமாக ஏதாவது பரிசு கொடுத்திருக்கிறாரா?   

இரண்டு நாட்களுக்கு முன் நானும் என் எதிர் வீட்டில் வசிக்கும் பெண்மணியும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு டீ மானிடைசேஷன், மோடி, என்று சுற்றி கலைஞரின் உடல் நிலையில் வந்து நின்றது. கலைஞரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு அத்தனை உடன்பாடு இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மரியாதையும், மதிப்பும் உண்டு. எங்கள் உரையாடலை அப்படியே தருகிறேன்..
எ.வீ.: அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. 

நான்: ஆமாம். அவருடைய நிர்வாக திறமையை விட என்னைக் கவர்ந்தது அவருடைய உழைப்பு. இந்த வயதில் எத்தனை உழைப்பு? வேறு யாராவது இப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான். பிறகு அவருடைய இலக்கிய திறன்

எ.வீ.: அதில் என்ன விசேஷம் என்றால் அவர் முறையாக பள்ளி,கல்லூரி சென்று பயிலவில்லை. தானாகவே எல்லாவற்றையும் கற்றிருக்கிறார்..

நான்: அதற்கு அவர் பிறந்த குலம் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இசை, நாட்டியம் மட்டுமல்ல,இலக்கியத்திலும் அவர்களுக்கு புலமை அதிகம் இருக்கும். நான் தேவரடியார்களைப்பற்றி ஒரு கட்டுரை வாசித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பெண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் இருந்தது தேவரடியார்கள் குலத்தில் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்த அந்த கட்டுரை ஆசிரியர் தேவதாசி முறையை தடை செய்ததன் மூலம் பல நல்ல கலைகளை நாம் இழந்து விட்டோம் என்று எழுதியிருந்தார்.

எ.வீ.: அதற்கு காரணம், தே வேர் எக்ஸ்பிளாய்டெட். சின்ன வயதில் வேண்டுமானால் அவர்களுக்கு டிமாண்ட் இருந்திருக்கும், அதற்குப் பிறகு வறுமையிலும், வியாதியிலும் 
எத்தனை பேர் இறந்திருப்பார்கள்?

நான்: உண்மைதான். நான் சொல்ல வந்தது. அவர்களுடைய கலைத்  திறமையை பற்றி மட்டும்தான். தேவதாசிகளின் நடனத்தில் வேகம் அதிகம் இருக்குமாம். அவர்கள் ஆறு காலம் பயிற்சி செய்வார்கள். இப்போதெல்லாம் மூன்று காலம்தானே பயிற்சி செய்கிறார்கள்? ஏன் கருணாநிதியே தன்னுடைய பேத்தியின் நடன அரங்கேற்றத்தை பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் வேகம் வேண்டும் என்று சொன்னாராம்

எ.வீ.: ஓ! அப்படியா? அது சரி, நடனமும் பாட்டும் எப்படி பிராமணர்களின் ஆதிக்கத்தில் வந்தது?

நான்: பிராமணர்களின் ஆதிக்கமா? அப்படி எல்லாம் கிடையாதே? எல்லாரும்தானே பாட்டும், நடனமும் கற்றுக் கொள்கிறார்கள்?

ஏ.வீ.: இல்லை இல்லை நீங்கள் கண்டிப்பாக பாட்டு க்ளாசில் சேர்த்து விடுவதைப்போல நாங்கள் செய்வதில்லை(அவர் சைவப் பிள்ளை).இசை உலகில் பிராமின்ஸ் டாமினேஷன் எப்படி வந்தது? 

அவருடைய கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Tuesday, December 20, 2016

சாருவும் நானும் - 3

சாருவும் நானும் - 3

"இனிமே நாளைக்கு காலைல ஏழு மணிக்குத்தான் மொத பஸ்" என்ற டீ கடைக்காரரிடம், "அப்போ இனிமே பஸ் கிடையாதா"? என்று டி. வி. யில் பேட்டி எடுப்பவர் போல கேட்க, அவர் முறைத்தார். 

"என்ன சார் கொடைக்கானலா"?... கேட்பது யார் ? ஒரு  ட்ரைவரா?

"என்ன சார்?" மறுபடியும் என் மனதிற்குள் சொல்லி பார்த்துக் கொண்டேன், சிலிர்த்தது. "இன்னா?" "எவ்ளோ தர"? "குந்து.." என்று அஃறிணையில் விளிக்கப்பட்டே பழக்கமாகி விட்டதால் இவருடைய 'சாரு'க்காகவே அவர் வண்டியில் போவதென்று தீர்மானித்தேன்.

"அம்பாசிடர் கார் இருக்கு, பெட்ரோல் போட்டுக்கணும், டீசல் பூட்டின வண்டி இருக்கு எது சார் வேணும்.."?  

"அம்பாசிடர்" என்றேன் மிதப்பாக.

"அறுநூறு ரூபா ஆகும் சார், வேனுக்கு நானூறு ரூபா ஆகும்.."

என் சந்தோஷம் அத்தனையும் நொடியில் மறைந்து போனது. "என்னப்பா இது? கொஞ்சம் பாத்து சொல்லுப்பா.."

நீங்க எவ்ளோ சார் தருவீங்க"?

சாரு ஏதோ சொல்ல வாயைத் திறப்பது தெரிந்தது. அவளை இப்போது பேச விடுவது ஆபத்து. சாருவுக்கு பேரம் பேச ரொம்ப ஆசையுண்டு. காலையில் நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்து வீட்டிலிருந்து இரையும் ரேடியோ இரைச்சலையும் மீறி வாசலில் கறிகாய்காரனோடு சண்டை போடுவாள். அவன் ஒன்று எட்டணா சொல்லும் வாழைக்காய்களை,"தோ பாருப்பா, அதெல்லாம் முடியாது, நான் மூணு எடுத்துக்கறேன், ஒண்ணே முக்கால் ரூபா குடுத்திடறேன்.." என்று வெற்றிகரமாக வியாபாரத்தை முடிப்பாள்.
எனவே அவளை முந்திக்கொண்டு ஏதோ ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "முன்னூறு ரூபா தரேன்.." என்றேன்.

கையிலிருந்த பெட்டியை தொப்பென்று கீழே போட்டான். "ஏய்! சாருக்கு முன்னூறு ரூபாய்க்கு மேலே கொண்டு விடணுமாம் என்று சற்று தள்ளி நின்றிருந்த தன நண்பர்களை பார்த்து கேலியாக கூறினான். 

அங்கிருந்த ஒருவன், " பாவம் ஏன் சார் கஷ்டப்படுரீங்க"? இப்படியே துண்டை விரிச்சுப் படுங்க, கார்த்தாலே மொத பஸ்சுல போய்டலாம்" என்றான். 

கொடை ரோடில் வந்து டாக்ஸி டிரைவர் ஒருவன் கேலியை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தலை எழுத்து..!

டீக்கடை ரேடியோவில் 'ஜெயமாலா' முடிந்து 'தேன் கிண்ணம்' துவங்கி விட்டது.சுற்றிலும் கவிந்து கொண்ட இருளில் நாங்கள் தனித்து விடப் பட்டோம். இங்கு தங்குவதற்கு நல்ல லாட்ஜ் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் இருப்பதையே லட்சியம் செய்யாமல் ட்ரைவர் குழு அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. கடைசியில் வேறு வழி இல்லாமல், எங்களிடம் வந்து பேசிய டிரைவரிடம் மன்றாடித் தோற்று, அவன் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டு வேனில் ஏறினோம். 

"என்ன சார் ஹோட்டலில் ரூம் புக் பண்ணிடீங்களா..? இப்போ கோடை விழா நடக்குது, ரூமே கிடைக்காது.." சொன்ன அவன் நாக்கு கரி நாக்காக இருக்க வேண்டும்.

ஹோட்டல் ஸ்வயம் ப்ரகாஷில் ரிஸப்ஷனிஸ்ட் விவரம் கேட்டு விட்டு, தடிமனான புத்தகத்தை திறந்து எதையோ தேடினான். "என்னிக்கு டெலிக்ராம் கொடுத்தீங்க.."? என்று கேட்டு, சற்று சிறிய நோட் ஒன்றில் மீண்டும் தேடி விட்டு, " சாரி சார், உங்க பேர்ல ரூம் புக் பண்ண சொல்லி எந்த இன்பார்மேஷனும் எங்களுக்கு வரலை.." என்றான். 

-தொடரும் 

Thursday, December 8, 2016

அதிர்ஷ்டம் VS போராட்டம்

அதிர்ஷ்டம் VS போராட்டம் வாழ்நாள் முழுவதும் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாத ஒருவரும், வாழ்க்கை முழுவதும் தான் சொல்ல விரும்பியதை சொல்லி, செய்ய விரும்பியதை செய்த ஒருவரும்(நல்ல விதமாகத்தான்) நண்பர்கள். அந்த இருவரும் அடுத்தடுத்த நாட்களில் மரணத்தை தழுவியது ஆச்சர்யமாக இருக்கிறது. கதைகளில்தான் இப்படி கேள்விப்பட்டிருக்கிறோம். 

அவர்கள் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் கூறியுள்ளதை பார்ப்போமா?

தன்னுடைய 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' என்னும் நூலில், ஜெயலலிதாவைப் பற்றி சோ எழுதியிருப்பது.

ஜெயலலிதாவிற்கு அப்போது பத்து வயதிருக்கும். ஒய்.ஜி.பி. ட்ரூப்பில் அப்போது ஒரு ஆங்கில நாடகம் ஒன்று போட்டார்கள். அதில் நான் ஜெயலலிதாவின் கழுத்தை  நெரித்து கொலை செய்வதைப் போல காட்சி. ஒத்திகையின் போது நான் கழுத்தை நெரிப்பது போல நடிக்கும் பொழுது பயப்படுவதற்கு பதிலாக பகபகவென்று சிரிப்பார். எல்லோரும் அவரிடம் பயப்பட வேண்டும் என்று கூறினால், இந்த சோ முழிப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது" என்பார். ஒரு வழியாக நான் கொஞ்சம் முழிப்பதை குறைத்துக் கொண்டு, அவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு எப்படியோ நடித்து முடித்தோம். 

நான் நாடகங்களில் நடிக்கும் பொழுது எனக்காக கொடுக்கப்பட்ட டயலாக்கைத் தவிர அவ்வப்பொழுது எனக்குத் தோன்றும் என் சொந்த வசனங்களை பேசி விடுவேன். இதைக் குறித்து ஜெயலலிதாவின் தாயார் சந்தியா ஒய்.ஜி.பி.யிடம் புகார் செய்வார். நான் என் சொந்த வசனங்களை பேசக் கூடாது என்று அவர் கூறும் பொழுது "சரி, சரி" என்று தலை ஆட்டி விட்டு, மேடையில் எனக்கு தோன்றுவதைத்தான் பேசுவேன். ஜெயலலிதா நடிக்க வந்த பொழுது, நான் இப்படி என் சொந்த வசனங்களை பேசினால் அவர் அம்மா சந்தியாவைப் போல அசந்து விட மாட்டார், தானும் அதற்கேற்றார்போல் பேசி சமாளித்து விடுவார். ட்ரூப்பில் மற்றவர்களை விட என்னிடம் அதிக நட்போடு இருந்தார்".  

ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து பத்து வருடங்கள் தமிழகத்தை ஆண்டால், தமிழ் நாடு சிறப்பான நிலை அடையும் என்று நம்பினார்.

1979 அல்லது 1980 இல் குமுதத்தில் 'மனம் திறந்து பேசுகிறேன்' என்ற தொடரை(சுயசரிதம்?) ஜெயலலிதா எழுத ஆரம்பித்தார், ஆனால் சில வாரங்களிலேயே 'மனம் திறந்து பேச முடியவில்லை' என்று கூறி நிறுத்தி விட்டார். அதில் "என் வாழ்க்கையில் முக்கியமான நான்கு ஆண்கள், ஒய்.ஜி.பார்த்தசாரதி. முக்தா ஸ்ரீனிவாசன், சோ, சோபன் பாபு". சோபன் பாபுவைப் பற்றி தனியாக எழுதுகிறேன். சோ என் உடன் பிறவா சகோதரர், என் வாழ்க்கையின் எந்த முடிவையும் இவரை கலக்காமல் எடுக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

அப்படிப்பட்டவரையே கூட ஒரு சமயம், "இவர் ஒன்றும் என் நண்பர் இல்லை" என்று கத்தரித்தார், பின்பு தேர்தல் சமயத்தில் அழைத்து ஆலோசனை பெற்றார். அதன் பிறகு இறுதி வரை அந்த நட்பு நீடித்தது. 

ஜெயலலிதாவிற்கு வேண்டுமானாலும் மாற்று கருத்து வந்து சென்றிருக்கலாம், ஆனால் சோ அவரை தன் சகோதரியாகவே பாவித்திருக்கிறார் போலிருக்கிறது. தன் இளைய சகோதரி தன் மீது எத்தனை கோபம் கொண்டிருந்தாலும், அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் மன்னிக்கும் மூத்த சகோதரனைப் போல ஜெயலலிதாவிற்காக தன் உயிரை பிடித்து வைத்துக் கொண்டிருந்தாரோ என்று தோன்றுகிறது.  

சோவை விட வெற்றிகரமான வழக்கறிஞர்கள் உண்டு. அவரைவிட மேன்மையான பத்திரிகை ஆசிரியர்கள் உண்டு. அவரை மிஞ்சும் நடிகர்கள் நிறைய பேர் உண்டு. இதெல்லாம் அவர் பலம் அல்ல. அவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. தனக்கு கிடைத்த புகழுக்கு அதிர்ஷடம் ஒரு பலமான காரணம் என்று உணர்ததால்தான் அவரால் பூமியில் காலூன்றி நிற்க முடிந்தது. அவருடைய நேர்மைதான் அவர் பலம். 

ஜெயலலிதா அழகும், திறமையும், நளினமும் கொண்ட நடிகையாக பொது வாழ்விற்கு வந்தார். பாடல் காட்சிகளில் அவரின் துள்ளல் ஒரு ப்ளஸ். அது அவருக்கு முன்பும் யாரிடமும் கிடையாது, அவருக்கு பின்பும் யாரிடமும் கிடையாது. அவருடைய நினைவாற்றலை பலர் புகழ்ந்திருக்கிறார்கள். மேக்கப் போட்டுக் கொண்டபடியே வசனங்களை உதவி இயக்குனர்கள் படிக்க ஒரு முறை கேட்டுக் கொள்வாராம், பின்னர் செட்டில் போய் அப்படியே பேசி ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கி விடுவாராம். என்றாலும் திரை உலகில் அவர் பெரிய அளவில் சாதித்தார்  என்று கூற முடியாது. வெற்றி படங்களில் நடிப்பதையோ, பெரிய ஹீரோக்களோடு நடிப்பதையோ, அதிக சம்பளம் பெறுவதையோ இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. நடிப்பு என்றால் ஒரு சாவித்திரி, லட்சுமி, சரிதா, ரேவதி என்றெல்லாம்  கூறுகிறோமே அந்த வரிசையில் வர மாட்டார். ஆனால் அரசியல் வாழ்க்கையில் இவர் சாதித்தது மிக அதிகம். 

இவரால் என்ன செய்து விட முடியும்? என்ன தெரியும்? வசந்த சேனா.. என்றெல்லாம் இவரை இழித்தும், பழித்தும் பேசியவர்களின் வாயை அடைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. எம்.ஜி.ஆர். இவரை அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம். ஆனால் அவர் இவருக்கு ஒரு பாதுகாப்பான களத்தை அமைத்து தரவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் சந்தித்த அவமானங்களும், சோதனைகளும் வேறு யாருக்காவது நேர்ந்திருந்தால் தாக்குப் பிடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். நெருப்பு ஆற்றில் நீந்தி வந்தேன் என்று அவரே குறிப்பிட்டது போல இத்தனை சோதனைகளை சந்தித்து மக்களின் தலைவராக உயர்வது என்பது மிகப் பெரிய சாதனை.  அவருக்கு நன்கு பரிச்சயமான, ஒரு துறையில் சாதித்ததை விட, அனுபவமே இல்லாத மிகக் கடினமான ஒரு துறையில் சாதித்ததுதான் ஜெயலலிதாவின் சிறப்பு.

இரண்டு துணிச்சல்கார புத்திசாலிகளை ஒரே சமயத்தில் பறி கொடுத்திருக்கிறது தமிழகம்.

Sunday, December 4, 2016

சாருவும் நானும் -2

சாருவும் நானும் -2

அந்த ஞாயிற்றுக் கிழமை நாங்கள் மேனேஜரின் வீட்டுக்குப் போன பொழுது அவர்கள் வீட்டில் டி .வி.யில் ஏதோ ஒரு தமிழ் சினிமா ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போனதும் அவருடைய குழந்தைகள் வால்யூமை குறைத்து விட்டு டி.வி. அருகே அமர்ந்து படம் பார்ப்பதை தொடர்ந்தனர். வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்து எங்கள் பார்வை டி.வி.யில் விழுந்த பொழுது படத்தில் பாடல் கட்சி. அதுவரை ஏதோ ஒரு கிராமத்தில் பாவாடை,தாவணி அணிந்து, குஞ்சலம் வைத்து பின்னிக் கொண்டிருந்த கதா நாயகியும், வேஷ்டி, தாயத்துக் கயிறுமாக இருந்த கதாநாயகனும், திடீரென்று மாடர்ன் உடை அணிந்து, ஏதோ ஒரு மலை வாச ஸ்தலத்தில் ஜிங்கு ஜிங்கென்று குதித்தார்கள். ஏரியில் படகோட்டினார்கள்.

படம் பார்த்துக் கொண்டிருந்த மானேஜரின் மகள் அவர் பக்கம் திரும்பி, " டாடி, இது கொடைக்கானல் லேக்தானே."? என்க,

"ஆமாம், ஆமாம்" என்றார். அதோடு நிற்காமல் என் பக்கம் திரும்பி, "நீங்கள் கொடைக்கானல் போயிருக்கீர்களா முரளி"? என்றது என் போதாத காலம்.

"ம் ஹும் .. இல்லை.." என்று சாரு என்னை முந்திக் கொண்டு பதில் சொன்னாள்.

"நைஸ் பிளேஸ், யூ ஹவ் டு ஸீ " என்றவர் தொடர்ந்து, "உனக்குத்தான் லீவ் இருக்கே, ஜாலியா போயிட்டு வர வேண்டியதுதானே"? என்றார்.

இப்போ சீசன் சமயமாச்சே? அக்காமடேஷன் கிடைக்க வேண்டாமா"?

"ஓ! கமான், ஸ்டே பண்றதா ப்ராப்லம்? நம்ம ஆபீசுக்கு ஹோட்டல் ஸ்வயம் ப்ரகாஷில் சூட் உண்டு. நீ எப்போ போறேன்னு சொல்லு, நான் உனக்கு அக்காமடேஷன் புக் பண்ணித்தரேன்" என்று டிசைட் பண்ணி வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் முடிவெடுப்பதற்கு எனக்கென்னவோ அதிகாரம் இருப்பது போல கூறினார்.  

வீட்டிற்கு வரும் பொழுது, சாரு "நான் கொடைக்கானல் பார்த்ததே இல்லை" என்றல்.

"நான் நிறைய பார்த்திருக்கிறேன், சினிமால.."

என் ஜோக்கிற்கு அவள் சிரிக்கவில்லை.

இந்த வருஷம் போலாமா? உங்க மானேஜர்தான் ரூம் புக் பண்ணி தரேன் என்கிறாரே?

ரூம்தான் அவர் புக் பண்ணி கொடுப்பார், துட்டு நான்தான் கொடுக்கணும், பாக்கி செலவெல்லாம் யார் பண்ணுவா"?

சாரு வாயை மூடிக் கொண்டதில் அந்த சப்ஜெக்ட்டையே மூடியாயிற்று என்று நினைத்தேன்... மறு நாள் அவள் சித்தி வரும் வரை.

"வா சித்தி, எப்படி இருக்கே? உஷாகிட்டேயிருந்து லெட்டர் வரதா? எப்போ வருவா"?

"அடுத்த மாசம் பத்தாம் தேதி வரா, இந்த தடவ அவ நேர டெல்லி வந்துடுவா, நானும், சித்தப்பாவும் டெல்லி போறோம், அங்கேயிருந்து ஆக்ரா, மதுரா, பிருந்தாவன் எல்லாம் பார்த்துட்டு, இங்க வந்து பதினஞ்சு நாள்தான் இருப்பா, அப்புறம் சிங்கப்பூர், ஹாங்காங், போயிட்டு அப்படியே ஊருக்கு போய்டுவாள்,, பேக்கேஜ் டூர் .."

"நீ ஏற்கனவே டில்லி பாத்துருக்க இல்லையோ.."?

 அது காசி போனப்போ.. அப்போ, இந்த இடமெல்லாம் பார்க்கல.. அடுத்த வருஷம் சித்தப்பா ரிடையர் ஆயிடுவா, அதுக்குள்ள எல்.எப்.சி.இல் பார்த்தால்தானே உண்டு.."

தான் வீசிய குண்டின் விளைவை உணராமல் சித்தி போய் விட, சாரு, ஹும்!அதிர்ஷ்டம்.! இந்த உஷா வெறும் எஸ்.எஸ்.எல்.சி., நான் பி.எஸ்.சி. படித்திருந்து என்ன பிரயோஜனம்? கேவலம் ஒரு கொடைக்கானல் போக கொடுத்து வைக்கல.. இவ போன வருஷம் யூரோப் போயிட்டு வந்து அலட்டினா, இந்த வருஷம் சிங்கப்பூர்... எல்லாத்துக்கும் தலைல எழுதி இருக்கணும்.."

அவளுடைய பொருமல் எனக்கு எரிச்சல் ஊட்டினாலும், அது ஓரளவு நியாயமானதுதான். கல்யாணமான இந்த இரண்டு வருடங்களில் நான் அவளை எங்கேயும் அழைத்துச் சென்றதில்லை. எனக்கு அலையும் உத்தியோகம் என்பதால் எப்போதடா வீட்டில் இருப்போம் என்றிருக்கும். அவளுடைய பிறந்த வீடும் சென்னையாகவே இருப்பதால் பிறந்த வீட்டிற்கு போகும் சாக்கில் ஊருக்குப் போவதும் இல்லை, இப்போது ஒரு மாறுதலுக்காக கொடைக்கானல் போனால் என்ன?

வெரி குட் டெசிஷன்..! போய்ட்டு வா. இந்த வயசுல என்ஜாய் பண்ணாமல் அப்புறம் எப்போ என்ஜாய் பண்ண முடியும்? ஐ வில் அரேஞ்ஜ் for யுவர் ஸ்டே"  மானேஜர் தட்டி கொடுத்தார்.

நாங்கள் கொடைக்கானல் போகப் போவதை சாரு பக்கத்து வீட்டில் புத்தகம் இரவல் வாங்கி, அவுட் ஹவுஸ் குழந்தைகளை டி.வி.பார்க்க அனுமதித்து,வேலைக்காரியோடு சிரித்துப் பேசி,லெட்டர் எழுதி, போன் பண்ணி எல்லோருக்கும் தெரியப் படுத்தினாள்.

அடுத்த ஒரு வாரத்தில் என் பர்ஸ் மளமளவென்று காலியாக சாரு கொடைக்கானல் போக சீப்பு, கொடைக்கானல் போக சோப்பு, கொடைக்கானல் போக ஸ்டிக்கர் போட்டு என்று வாங்கிய சாமான்களின் அளவு, திருமணமாகிச் செல்லும் பெண்ணிற்கு வாங்கித் தரும் சாமான்களை விட அதிகம் இருந்தது.

ஊருக்கு போவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே பாக் பண்ண ஆரம்பித்து விட்டாள். தன் பீரோவை தளி கீழாக கொட்டி முதலில் பச்சை புடவையை எடுத்து வைப்பாள். " பச்சை வேண்டாம், அங்கே எங்க பார்த்தாலும் பச்சையாக இருக்கும், கான்ட்ராஸ்டாக ஏதாவது கட்டிக்க கொள்ளலாம்.." என்று பச்சை புடவையை உள்ளே வைத்து விட்டு சிவப்பு புடவையை எடுத்து வைப்பாள். அதற்கு பிளவுஸ் பழசாக தோன்றும், உடனே அதை வைத்து விட்டு பிரௌன் புடவையை எடுத்து வைப்பாள்.

" சாரு, அப்படியே எங்க நாக்பூர் அக்கா கொடுத்த ஷாலையும் எடுத்து வைச்சுக்கோ.."

ஆமாம் பெரிய ஷால்..! ஒரு அறுதல் பழசு..! தூக்கிப் போட மனசில்லாம ஒங்க கிட்ட குடுத்திருக்கா, அதை எடுத்து வைச்சுக்கணுமா? தவிர இது ஜூன் மாசம்தானே? இப்போ ஒன்னும் குளிராது.."

ஒரு இடத்தின் சீதோஷ்ணம் அது கடல் மட்டத்திலிருந்து எத்தனை உயரத்தில் இருக்கிறது என்பதைக் குறித்து மாறுபடும் என்னும் அடிப்படை பூகோளத்தை சாருவுக்கு புரிய வைக்கும் த்ராணி எனக்கில்லாததால் வாயை மூடிக் கொண்டேன்.

ஊருக்கு கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் இருக்கும் சாருவின் பெரியப்பா பையனுக்கு சீமந்தம் என்று கடிதம் வந்தது.

எங்க பெரியப்பா அவ்வளவு பெரிய மனுஷன்(உசிலை மணி சைஸ்) தன கைப் பட லெட்டர் எழுதி இருக்கார், போகாம இருக்கறது மரியாதை கிடையாது. தவிர அவருக்கு பெண்னே கிடையாது நான்தான் பெண் ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்யணும். போற வழிதானே? தலையைக் காட்டி விட்டு போய்டலாம்.."

"அங்க போனா ரெண்டு நாள் வேஸ்ட் ஆகிடும்.."

"எப்படி ரெண்டு நாளாகும்?. சீமந்தம் முடிஞ்ச உடனே சாப்பிட்டு விட்டு கிளம்பிடலாம்.."

"ரொம்ப அழகா இருக்குடி! வந்ததும் ஓடறேங்கறது.. ஒரு நாளில் கொடைக்கானல் எங்கேயும் ஓடிடாது. சாயந்திரம் பூச்சூடலுக்கு நாத்தனார் ஸ்தானத்தில் நீதான் இருக்கணும். நாளைக்கு முதல் பஸ்ஸில் உங்களை ஏத்தி விட்டுடறோம்" சாருவின் பெரியம்மா கண்டிப்பாய் கூறி விட மீற முடியவில்லை.

நாத்தனார் ஸ்தானம் என்று கூறி விட்டதால் பூச்சூடல் பெண்ணுக்கு புடவை எடுத்துக் கொடுக்கத்தான் வேண்டும் என்று சாரு அவள் மன்னிக்கு ஒரு புடவையும் தான் இரண்டு புடவைகளும் எடுத்துக் கொண்டது வேறு விஷயம். 

சாரு அன்று இரவே எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டாள். "நாங்க முதல் பஸ்ஸில் கிளம்பி விடுவோம். உங்களை எல்லாம் எதுக்கு எழுப்பி சிரமப் படுத்தனும்"? 

ஆனால் மறு நாள் காலையில் வீட்டில் இருந்த அத்தனை பேரும் அவளை எழுப்ப வேண்டி இருந்தது.

 முதல் காபி, செகண்ட் டோஸ், மூன்றாவது டோஸ்..

"குளி, ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போய்டலாம்.." உபசாரம் கொஞ்சம் ஓவர்தான். என்ன செய்வது சில சமயங்களில் அன்புத் தொல்லைகளை தவிர்க்க முடியாது.

எந்த ராஜா எந்த பட்டிணம் போனாலும் சாருவுக்கு சாப்பிட்டவுடன் பத்து நிமிடம் படுத்துக் கொள்ள வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ராகு காலம் ஆரம்பித்ததை சாருவின் தவறு என்று கூற முடியாது. எப்படியோ கிளம்பும் பொழுது மணி நாலு.

சாருவின் பெரியப்பாவிடம் விடை பெற்றுக் கொள்ளலாம் என்று வந்த பொழுது, துண்டை விரித்து படுத்திருந்தவர் எழுந்து, கையிலிருந்த விசிறிக் காம்பை என் பக்கம் திருப்பி ஆட்டி,முகத்தை வேறு மேலே தொக்கி, "க்கும்.." என்று உறும பயந்தே போனேன்.

பாதி தூக்கத்தில் எழுப்பினால் தன் பெரியப்பாவுக்கு கோபம் வரும் என்று சாரு சொல்லியிருக்கிறாள், அதற்காக இப்படியா? என் அப்பா கூட என்னை விசிறிக் காம்பால் அடித்ததில்லை.

"ஸ்ஸ்ஸ்.. எப்படி போறேள் னு பெரியப்பா கேட்கிறார்" என்று சாரு என் விலாவில் இடித்ததும்தான் அந்த உறுமலுக்கு இப்படி ஒரு பொருள் உண்டு என்று தெரிந்தது.

"இங்கேயிருந்து நேரா மதுரை, மதுரைலேர்ந்து.." நான் முடிக்கும் முன் பெரியப்பா மறுபடி விசிறிக் காம்பை ஆட்டி, "ம்ஹும்.." என்றார். பிறகு எழுந்து பக்கத்திலிருந்த சொம்பு ஜலத்தினால் வாயை கொப்பளித்து விட்டு, "எதுக்கு அனாவசியமா மதுர வரைக்கும் போகணும்? திண்டுக்கல்லில் எறங்குங்கோ, அங்கேர்ந்து கொடை ரோட்டுக்கு நிறைய பஸ் உண்டு, கோடை ரோடுலேர்ந்து..."

கொடைக்கானல் செல்லும் கடைசி பஸ் சென்று ஐந்து நிமிடம் ஆகியிருந்தது...

-- தொடரும்.

Thursday, December 1, 2016

சாருவும் நானும்

சாருவும் நானும் 

கொஞ்ச நாட்களாக மிகவும் சீரியசாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு மாறுதலுக்கு, நான் எழுதி, 1992 நவம்பர் மாதம் மங்கையர் மலரில் வெளியான "கொடைக்கானல் போனோம்" என்னும் குறுநாவலை ஒரு சிறு தொடராக பதிகிறேன். 24 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்பதால் இப்போதைய கால கட்டத்திற்கு கொஞ்சம் மாறுதலாக இருக்கலாம். நான் தலைப்பை மட்டும் காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி இருக்கிறேன். படித்து, சிரித்து, ரிலாக்ஸ் செய்யுங்கள். பின்னூட்டம் இட மறக்க வேண்டாம்.

ஒரு மனிதனுக்கு போதாத காலம் என்றால் அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். சாப்பிட்டு விட்டு  நிம்மதியாக தூங்கலாம் என்று படுத்தால் மீண்டும் எழுந்திருக்க முடியாத ஸ்ட்ரோக்காக, சிவனேன்று பிளாட்பாரத்தில் ஓரமாக போய் கொண்டிருக்கும் பொழுது பிரேக் இழந்து பிளாட்பாரத்தில் ஏறி மோதித்தள்ளும் அரசு பேருந்து வடிவத்தில், உயரும் என்று எதிர்பார்த்து போட்ட கம்பெனி ஷேர் சடாரென்று கீழே விழுந்து உங்களுக்கு பலமாக அடி படலாம். இப்படி ஏதாவது மோசமான நிகழ்வுகளால் வரலாம். ஆனால் எனக்கோ வெகு வினோதமாக என் சின்சியாரிட்டி வடிவில் வந்தது.

என்னுடைய உழைப்பு எங்கள் கம்பெனியின் விற்பனை டார்கெட்டை தாண்டியதில் கம்பெனிக்கு கணிசமான லாபம் கிடைத்ததோடு,இந்த ரீஜெனிலேயே அதிகம் விற்பனை செய்த டிவிஷன் என்ற சிறப்பும் சேர எங்கள் மானேஜர் வெகு குஷியானார்.

எல்லோருக்கும் முன்னால் அவர் என்னை ஆஹா! ஓஹோ! என்று புகழ்ந்த பொழுதே பயந்தேன்,பயந்த படியேதான் நடந்தது. என்னை தனியாக அழைத்து,"இந்த சண்டே எங்க வீட்டுக்கு டின்னருக்கு வந்துடு, ஓ.கே.?

இல்லை, எதுக்..?"

என்ன எதுக்கு? சாப்பிடத்தான்.. நான் என் வொய்ப் கிட்ட சொல்லியாச்சு. அவ இதுக்காக தன்னோட ப்ரோக்ராமெல்லாம் கேன்சல் பண்ணியிருக்கா. ஸோ, யூ, ஆர் கமிங் வித் யுவர் வொய்ப்.." ஆணையிடுவது போல சொல்லிவிட்டு தீவிரமாக சிஸ்டத்தை பார்ப்பது போல பாவனை செய்தார். 

அவருக்கு அசிடிட்டி வந்தாலும் வந்தது, அதுதான் சாக்கென்று அவர் மனைவி புளி சேர்க்கக் கூடாது, காரம் அதிகம் கூடாது, கிழங்கு கூடாது, எண்ணெய் கூடாது என்று தினசரி பத்திய சமையலை சமைக்க, இவருக்கு நாக்கு அருவருத்து போகும் போதெல்லாம் எங்களில் யாரையாவது ஏதாவது சாக்கு சொல்லி சாப்பிட கூப்பிட்டு விடுவார். 

வேறு வழியில்லை, போய்த்தான் ஆகா வேண்டும். அங்கு போய் மானேஜர் யாரையாவது சாப்பிடக் கூப்பிட்டாலே அவர் மனைவி செய்யும் சாம்பார் சாதத்தையோ, வாங்கி பாத்தையோ, பிஸிபேலாபாத்தையோ உருளைக் கிழங்கு ரோஸ்டோடு சாப்பிட வேண்டும். அவர் கை வசம் இருக்கும், எத்தனையோ முறை கேட்டு அலுத்த, இரண்டு ஜோக்குகளுக்கு விலா நோக சிரிக்க வேண்டும். அவர் குழந்தைகளின் அதிகப் பிரசங்கித்தனங்களை ஆஹா! என்ன அறிவு கூர்மை என்று வியக்க வேண்டும். 

இதையெல்லாம் விட அவை மனைவி புதிதாக வாங்கியுள்ள நகையையோ, புடவையையோ, க்ளாஸ்வேரையோ, துடைப்பத்தையோ பார்த்து விட்டு என் மனைவி சாரு என்னோடு போடப்போகும் சண்டைக்கும், அதன்பிறகு சமாதான நடவடிக்கைக்காக செலவிட வேண்டியதற்கும் ஆயத்தமாக வேண்டுமே.

மாலை காபியை குடித்துக் கொண்டே சாருவிடம் விஷயத்தை சொன்னேன்.

அப்படியா? அப்போ நான் அந்த பின்னி சில்க்கை எடுத்துக்கலாம்.."
என்று சாரு சொன்னதும், நில அதிர்ச்சிக்கு உண்டானதைப் போல என்றெல்லாம் சொன்னால் அது பொய். சாரு அவ்வப்பொழுது வீசும் குண்டுகளை சமாளித்து, சமாளித்து நான் ஷாக் புரூப் ஆகவே மாறி விட்டேன். ஹைட்ரஜன் குண்டாவது, நைட்ரஜன் குண்டாவது? ஒன்றும் இனிமேல் என்னை எதுவும் செய்ய முடியாது.

"என் ப்ரெண்ட் மீனா மத்தியானம் வந்திருந்தா, அவளுக்காக இந்த புடவையை வாங்கினாளாம், ஆனா அவ ஹஸ்பேண்ட் அவளுக்கு இந்த கலர் சூட் ஆகாதுன்னு சொன்னாராம். நான் கலராக இருப்பதால் எனக்கு நன்னா இருக்கும்னு மீனா சொன்னா.."

இப்போது இதை நான் ஆமோதித்தாலும் கஷ்டம், ஆமோதிக்காவிட்டாலும் கஷ்டம். ரெண்டும் கெட்டானாக,"ம்..ம் .. புடவை நன்னாத்தான் இருக்கு ஆனா இப்போ எ ..து ..க் ..க்..கு?

" ஒங்க மேனேஜர் வீட்டில சாப்பிட கூப்பிட்டிருக்காங்க,பளிச்சுனு ட்ரெஸ் பண்ணின்டு போக வேண்டாமா? தவிர போன தடவை உங்க மேனஜர் வொய்ப் ஒரு பின்னி சில்க் கட்டிண்டிருந்தா, என்ன விலைனு கேட்டதுக்கு இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லீனு திமிரா பதில் சொன்னா. அவளாலதான் காஸ்ட்லீ புடவை கட்டிக்க முடியுமா? என்னாலேயும் முடியும்னு காட்டணும்.."

"காஸ்ட்லீ புடவை கட்டிக்கணும்னா ஒங்கிட்ட எவ்ளோ பட்டுப் புடவை இருக்கு, அதுல ஒண்ணு கட்டிக்கோயேன்.."

"ம்..ம் ..நீங்க பஞ்சகச்சம் கட்டிண்டு வாங்கோ, நான் பட்டுப் புடவை கட்டிக்கறேன்.."

"அப்போ எதுக்கு பட்டுப் புடவை வாங்கணும்.?"

"ரொம்ப அழகா இருக்கே.. கோவில்,குளம், நாள், கிழமை, கல்யாணம், கார்த்தி இதுக்கெல்லாம் பட்டுப் புடவை வேண்டாமா?"

நான் வாயடைத்துக் கொண்டேன். 'போன மாதம்  ஒரு ஷிஃபான் வாங்கினாயே என்று கேட்கவில்லை. சாரு வழக்கம்போல என் மௌனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டாள்"

"மீனா ரொம்ப நல்ல மாதிரி, இப்போ பணத்துக்கு அவசரமில்லை. மெதுவா மாசக் கடைசில கொடுனு சொல்லிட்டா."

இருபதாம் தேதி என்பது மாத முதல் என்ற எண்ணம் சாருவுக்கு. எப்படியோ இன்னும் பத்து நாள் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். 

"இன்னும் கிளம்பலையா ? பேப்பரெல்லாம் அப்பறம் படிச்சுக்கலாம், சீக்கிரம் கிளம்புங்கோ"

"எங்க"? 

"எங்கேயா? சரிதான், இன்னிக்கு ப்ளௌஸ் பீஸ் வாங்கி தைக்க குடுத்தால்தான், அவன் சனிக்கிழமை சாயந்திரம் குடுப்பான்.."

சாருவிடம் ஏற்கனவே ரெண்டு கருப்பு பிளவுஸ்கள் இருப்பது என் நினைவுக்கு வந்தாலும் அதை வெளியே சொல்லவில்லை. சொல்லி என்ன பிரயோஜனம்? 

"ஐயோ! உங்களுக்கு கலரைப் பத்தி ஏதாவது தெரியுமா? அது ப்ளாக்கிஷ் க்ரீன், இது க்ரீனிஷ் பிளாக்" என்பாள். பேசாமல் கிளம்பினேன்.

"ஏன் இப்படி மூஞ்சியை உம்முனு வெச்சிண்டு வரேள்? எப்படியும் என் னோட பர்த்டே அடுத்த மாதம் வரும், அதுக்கு வேற புடவை வாங்க வேண்டாம். நான் இதையே கட்டிக்கிறேன்"

இப்போது இப்படித்தான் சொல்லுவாள். ஆனால் பர்த்டேக்கு நாலு நாள் முன்னால் ஒரு சாந்தா வந்து அவள் வாங்கி கொண்ட புடவை டிசைன் அவள் ஹஸ்பேண்டுக்கு பிடிக்கலைனு இவளிடம் குடுத்துட்டு போவாளே !?  

- தொடரும்     

Saturday, November 26, 2016

தொடரும் நட்பு!

தொடரும் நட்பு!

நமக்கு அமையும் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியும். அப்படி அமையும் நண்பர்களுக்கு நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை உண்டு. 

உதவாக்கரை என்று வீட்டில் உள்ளவர்களால் கரித்து கொட்டப்பட்டவர் குடும்பத்தையே தூக்கி நிறுத்துபவராக மாறலாம், மிகச் சிறந்த குழந்தை என்று கொண்டாடப்பட்ட குழந்தை உதவாக்கரை ஆகலாம். இதைத்தான் பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெரும், பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்னும் சொலவடை கூறுகிறது. 

ஆடை இழந்தவனுக்கு கைகளை போல நண்பனுக்கு ஆபத்து என்றல் ஓடி வந்து உதவ வேண்டும் என்று நட்புக்கு இலக்கணம் கூறுகிறது திருக்குறள். ஆனால் பெரும்பான்மையோர் நண்பனுக்கு ஆபத்து என்று தெரிந்தால் ஓடிப் போய் விடுவார்கள். 

நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாமாம். கடைசி வகை நண்பர்கள் வாழை மரம் போன்றவர்கள். வாழை மரத்திற்கு தினமும்  தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பூச்சி அரிக்காமல் பாதுகாக்க வேண்டும், கொஞ்சம் வேகமாக கற்று அடித்தால் வாழை மரம் சாய்ந்து விடும், சாயாமல் இருக்க முட்டு கொடுக்க வேண்டும். அப்பொழுதான் பலன் கொடுக்கும், அதுவும் ஒரு முறைதான். இது போல தினசரி பார்த்து, பேசி பழகி பராமரித்தால்தான் சிலருடைய நட்பை பாதுகாக்க முடியும். 


மத்திம வகை தென்னை மரம் போன்றவர்கள். தென்னை மரத்திற்கு அவ்வப்பொழுது தண்ணீர் பாய்ச்சினால் போதும். வருடக் கணக்கில் பலன் கிடைக்கும். இது மாதிரி சிலரோடு அவ்வப்பொழுது தொடர்பில் இருந்தால் போதும் நட்பு நீடிக்கும்.  

முதல் தர நண்பர்கள் பனை மரம் போன்றவர்கள். பனை மரத்தை யாரும் விதைப்பதில்லை. அதற்கு நீர் பாய்ச்ச வேண்டும் என்பதெல்லாமும் கிடையாது. பறவையின் எச்சத்தாலோ, அல்லது வேறு ஏதோ வகையில் தானே முளைக்கும் அது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளும். இப்படி ஏதோ ஒரு சிறிய விஷயத்தில் தோன்றினாலும், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வளர்ந்து அபரிமிதமாக நன்மையையும் செய்வார்கள் இந்த வகை நண்பர்கள்.
எனக்கு மூன்று வகை நண்பர்களும் உண்டு. 

இராமாயணத்தில், நண்பனாக அறிமுகமான குகனையும், சுக்ரீவனையும், சகோதரனாகவே ஏற்றுக் கொள்கிறான் ராமன். வாலியை மறைந்து நின்று அவன் அம்பு எய்த பிறகு மரணப் படுக்கையில் இருக்கும் வாலி ராமனிடம் சில கேள்விகளை கேட்கிறான், அவற்றுள் ஒன்று, "உன் மனைவியை ராவணன் கவர்ந்து சென்று விட்டான், அவளை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக போயும் போயும் இந்த சுக்ரீவனோடு போய் நட்பு பூண்டிருக்கும் உன் சாதுர்யம் எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் ஒரு சொடக்கு போட்டால் ராவணன் உன் மனைவியை உன் காலடியில் கொண்டு வைத்து விடுவான், அப்படி இருக்க இந்த கோழையை எப்படி நண்பனாக்கிக் கொண்டாய்?" என்று கேட்க, அதற்கு ராமன், " உன்னோடு நான் எப்படி நட்பு பூண முடியும்? சுக்ரீவனும் நானும் ஒரே நிலையில் உள்ளவர்கள். நீயோ மாற்றான் மனைவியை கவர்ந்து வந்துள்ளவன், உனக்கு என்னுடைய வலியும் துயரமும் ஒரு போதும் புரியாது. நட்பு சமமான இருவருக்கிடையேதான் சிறப்பாக இருக்கும்." என்று பதில் கூறுகிறான்.   

அறிவு, அந்தஸ்து, சூழல், எண்ணம் போன்ற எதிலாவது சமமாக இல்லாத இருவர் நட்பு பூண்டால் அது நீடிக்காது என்பதற்கு புராணத்திலும், சரித்திரத்திலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. மிகச் சிறப்பான உதாரணம் மஹாபாரதத்தில் அரசன் துருபதனுக்கும், அந்தணர் துரோணருக்கும் இடையே இருந்த நட்பு. 

சிறு வயதில் குருகுலத்தில் ஒன்றாக படித்த பொழுது தோழர்களாகிறார்கள் இருவரும். பிரியும் பொழுது, அரசனான தன்னிடம் எந்த உதவி தேவை என்றாலும் அணுகலாம் என்று கூறி பிரிகிறான் துருபதன். கால் ஓட்டத்தில் வறியவராகி விட்ட துரோணர் தன மகனுக்காக ஒரு பசு மாட்டினை தன் தோழனான அரசன் துருபதனிடம் தானமாக பெற்று வரலாம் என்று அவனை நாடிச் செல்கிறார். நாடாளும் அரசனாக விளங்கும் தனக்கு ஏழையான பிராமணர் எப்படி நண்பராக இருக்க முடியும் என்று அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான். இதனால் மனம் புண் பட்ட துரோணர், அர்ஜுனனிடம் குரு தக்ஷணையாக துருபதனை போரிட்டு வென்று, அவனை தேர்க்காலில் கட்டி இழுத்து வர வேண்டுகிறார். அர்ஜுனன் அப்படியே செய்ய, "நீ அரசன் என்ற மமதையில்தானே அன்று என்னை அவமதித்தாய், இன்று நீ என் அடிமை, நான் உனக்கு என் வசப்பட்ட ராஜ்ஜியத்தை பிச்சையாக போடுகிறேன், எடுத்துக் கொள்" என்று அவனை வேறு விதமாக அவமானப் படுத்த, அதை மனதில் வைத்து கருவிய துருபதன், அர்ஜுனனை மணந்து கொள்ள ஒரு மகளும், துரோணரை கொல்ல ஒரு மகனும் தனக்கு வேண்டும் என்று வேள்வி செய்து திரௌபதியையும், திருஷ்டதுய்மனையும் பெறுகிறார். 

ஆக மஹாபாரதத்தில் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக அமைவது அந்தஸ்தில் சமமில்லாத இருவரிடையே உண்டான நட்பு.! அதே மஹாபாரதத்தில் சுயநல நோக்கோடு ஏற்பட்டது என்றாலும் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையே நிலவிய நட்பு ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. தேரோட்டியின் மகனான கர்ணனை அரசனாக உயர்த்தி நண்பனாக்கிக் கொண்டு அதற்க்கு 100% நியாயம் கர்ப்பிக்கிறான் துரியோதனன்! அதற்கு விலையாக கர்ணன் தன் உயிரையே தருவது நட்பின் பரிமாணத்தை உயர்த்துகிறது.

புராணத்தை விட்டு விட்டு சரித்திர காலத்திற்கு வந்தால், கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே நிலவிய நட்பிற்கு வில்லனாக வந்தது அவர்கள் வாரிசுகளின் காதல். இங்கேயும் அந்தஸ்துதான் தடை. ஆனால், இந்த அந்தஸ்து கிருஷ்ண தேவராயருக்கும் தெனாலி ராமனுக்கும் இடையேயும், அக்பருக்கும் பீர்பாலுக்கும் இடையேயும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஒளவையாருக்கும் அதியமானுக்கும் இடையே நிலவிய நட்பு ஆச்சர்யமானது. அந்த காலத்திலேயே ஒரு பெண்ணும் ஒரு ஆணும் நட்பு கொள்ள முடியும் என்று நிரூபித்த நட்பு. இதைப் போல மற்றொரு ஆச்சர்யமான நட்பு பிசிராந்தையாருக்கும், கோப்பெருஞ் சோழனுக்கும் இடையே நிலவிய நட்பு. 


பாண்டிய நாட்டில் வாழ்ந்த பிசிராந்தையாரும், சோழ மன்னனான கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு கொள்கின்றனர்.  இறுதி காலத்தில் தன் புதல்வர்களின் செயலால் மனமொடிந்த கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் விடத் துணிகிறார். அப்போது, தான் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்திருப்பது தெரிந்தால் தன் நண்பரான பிசிராந்தையார் நிச்சயம் தன்னை காண வருவார், தன்னுடன் அவரும் வடக்கிருந்து உயிர் விடுவார் என்று தனக்கு அருகில் தன் நண்பருக்கும் ஒரு ஆசனத்தினை தயாராக வைத்து காத்திருக்கிறார். அதைப் போலவே இந்த செய்தியை கேள்விப் பட்ட பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து உறையூருக்கு வந்து கோப்பெருஞ் சோழனோடு வடக்கிருந்து உயிர் நீக்கினார் என்பது ஆச்சர்யமூட்டும் விஷயம்.மிகச் சமீபத்தில் மூதறிஞர் ராஜாஜியும், பெரியார் ஈ.வே.ரா.வும் கருத்தாலும்,கொள்கையாலும் மாறுபட்டாலும் சிறந்த நண்பர்களாகவே விளங்கினர். ராஜாஜி மரணமடைந்த பொழுது, அவருடைய இறுதிச் சடங்குகளை  தள்ளாத வயதிலும், வீல் சேரில் அமர்ந்தபடி கண்களில் தாரை தாரையாக நீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தார் பெரியார். அப்படிப் பட்ட தலைவர்களை இனிமேல் பார்க்க முடியுமா? 

ஒரு சீன பழமொழி உங்கள் குழந்தைகளை பத்து வயது வரை இளவரசனைப் போல நடத்துங்கள், பதினெட்டு வயது வரை அடிமையை போல நடத்துங்கள், அதற்குப் பிறகு நண்பனைப் போல நடத்துங்கள் என்கிறது. ஆனால் வேறு சிலர் குழந்தைகளுக்கு நண்பர்கள் வெளியில் நிறைய பேர் கிடைப்பார்கள், பெற்றோர்கள் ஒருவர்தானே இருக்க முடியும், எனவே நான் என் குழந்தைகளுக்கு பெற்றோராகவே இருக்க விரும்புகிறேன் என்கிறார்கள். என்னுடைய கேள்வி, நாம் நண்பர்களாக நடத்தினாலும் அவர்கள் நம்மை நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமே?
    
இந்து மதம் கடவுளிடம் செலுத்தும் பக்தியில் ஒன்பது விதங்களைக் கூறி, அதில் ஒன்று 'சக்யம்' என்கிறது. அதாவது கடவுளை தோழனாக கருதுவது. அர்ஜுனன் கிருஷ்ணனிடம் செலுத்திய பக்தி இந்த வகையைச் சார்ந்தது. சைவ சமய குரவர்கள் நால்வரில் சுந்தரர் இந்த வகை பக்தியைத்தான் சிவ பெருமான் மீது செலுத்தி தம்பிரான் தோழர் எனப்பட்டார்.

ஸோ, மனிதர்கள் முதல் கடவுள் வரை செல்லுபடியாகக் கூடிய நட்பு கொண்டாடப்பட வேண்டிய விஷயம்தானே ?    

என் வலைப்பூவில் நான் என் கணவரின் பள்ளித் தோழர்கள் சந்திப்பை பற்றி எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு 'எங்கள் ப்ளாக்' ஸ்ரீராம் நட்பை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகு, நட்பை பற்றி யோசித்ததில் இந்த பதிவு உருவாயிற்று. மராத்தான் போல இது ஒரு ப்ளாகத்தான் ஆகி விட்டது. 

Tuesday, November 22, 2016

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே


1965 ஆம் வருடத்திலிருந்து 1971 வரை சென்னை மைலாப்பூர் பி.எஸ்.ஹை ஸ்கூல்(வடக்கு)ல் படித்த மாணவர்கள் ஒன்று கூடிய நிகழ்வு 15.11.16 செவ்வாய் அன்று மைலாப்பூர் கிளப்பில் நடந்தது. அந்த மாணவர்களில் என் கணவரும் ஒருவர் என்பதால், நானும் என் கணவரோடு அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். 

மாலை 6:30 முதல் 8:30 வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் அங்கு சென்ற போது 6:40 இருக்கும். மூன்று குடும்பத்தினர்தான் வந்திருந்தனர். சற்று நேரத்தில் பெரும்பான்மையோர் வந்து விட்டனர். உடனே ஜூசும், ஸ்டார்ட்டர்களும் வரத் துவங்கின, மெயின் கோர்ஸ் உணவு ஆரம்பிக்கும் வரை வந்து கொண்டே இருந்தன.

ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோர் 45 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கின்றனர். 

"உன்னைப் பார்த்ததும் படகோட்டி படத்தில் வரும் பாடல்தாண்டா நினைவுக்கு வருது, நீ பாடுவாயே..." என்றும்,

"எப்படிடா அப்படியே இருக்க? இப்போ கூட தோளில் ஒரு பையை மாட்டி விட்டால் கடைசி பெஞ்சில் உட்கார்த்தி விடலாம்". என்றும் 

"நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு முறை கணக்கு வாத்தியார், மிகவும் கஷ்டமாக கேள்வித்தாளை தயாரித்து விட்டார், இவன் கிட்ட கொஞ்சம் ஆன்செர் ஷீட் காட்டுடானு சொன்னேன், காட்ட  மாட்டேன்னு சொல்லிட்டான்..." என்றும் அந்த காலத்திற்கே சென்று விட்டார்கள். 

இந்த ரீ யூனியனை ஏற்பாடு செய்ததில் பெரும் பங்கு வகித்த திரு.கிருஷ்ண பிரசாத், திரு. முரளி, மற்றும் திரு.ரகுநாதன் இவர்களில் ரகுநாதன் அமெரிக்கா சென்று விட்டதால் கலந்து கொள்ளவில்லை. கிருஷ்ண பிரசாத் ஏதோ அவர் வீட்டு விசேஷம் போல எல்லோரையும் தனிப்பட்ட முறையில் உபசரித்து, கவனித்துக் கொண்டார். 

எல்லோரையும் வரவேற்று பேசிய கிருஷ்ண பிரசாத் அவர்கள் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக ஒரு நண்பரின் வீட்டில் சந்தித்த பொழுது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30ம் தேதி சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் ஆனால் இந்த வருடம் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப் போய் விட்டது என்றும் கூறினார்.. 

தங்கர் பச்சனின் பள்ளிக்கூடம் படத்தை பார்க்கும் போதெல்லாம் தனக்கு தங்கள் பள்ளியின் ஞாபகமும், ஆசிரியர்களின் ஞாபகமும்தான் வரும் என்றார். பள்ளிக்கூட நண்பர்களை பார்த்தால் தான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன் என்று கூறிய அவரை விட அப்படி எதுவும் சொல்லாத திரு.விஸ்வநாதனும், திரு. ராஜசேகரும் உணர்ச்சி பொங்க தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

அவர்களுக்கிடையே நிலவிய ஆரோக்கியமான போட்டி பற்றியும், அதே நேரத்தில் நண்பர்கள் எப்படி ஒருவரை ஒருவர் மோட்டிவேட் செய்து கொண்டனர் என்பது பற்றியும் விரிவாகவே பேசினார் ராஜசேகர். 

சமீபத்தில் மரணமடைந்த அவர்களின் பள்ளித் தோழர் நாகலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினோம். 

இதில் கிருஷ்ண பிரசாத், விஸ்வநாதன், விஜயகுமார் என்ற மூவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தனராம். இப்படி ஆண்கள் தங்கள் நட்பை கொண்டாடிக் கொண்டிருக்க, பெண்கள், " ஆண்கள் எப்படி இத்தனை ஆண்டுகள் தங்கள் நட்பை தொடர்கிறார்கள்,நம்மால் ஏன் முடிவதில்லை? என்ற கேள்வி எழுந்தது.(ஏன் முடிவதில்லை? யாராவது சொல்லுங்களேன்) 

சிட்டிபாபு என்பவரின் மனைவி டாக்டர் ஆனந்தி என்பவர் மட்டும் இதை மறுத்தார். கோவில்பட்டியில் பள்ளி படிப்பை முடித்திருக்கும் இவரும் இவர் பள்ளித் தோழிகளும் அதே பள்ளியிலேயே ரீ யூனியனை நடத்தினார்களாம். விதி விலக்கான பெரிய விஷயம்தான்.  

இன்றைக்கு தாத்தாவாகி விட்ட எல்லோரும் ஒரே குரலில் ஒப்புக்கொண்ட விஷயம், பேரன் பேத்திகளிடம் அவர்களுக்கு உள்ள வாஞ்சை! எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த பொழுது அவர்களோடு நேரம் அதிகமாக செலவிட முடியவில்லை, இன்றைக்கு பேரக் குழந்தைகளோடு இருக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இல்லை என்றார்கள். 

இதன் பிறகு,  இனிப்பு மற்றும் ஐஸ் கிரீமோடு சுவையான உணவு. என்னென்ன ஐட்டம் என்பதை சொல்ல மாட்டேன், கண் பட்டு விடும். கால எந்திரம் எதுவும் இல்லாமலேயே பல வருடங்களுக்கு பின்னால் சென்று விட்டு வந்த சந்தோஷம் என் கணவருக்கு. புதிதாக சில நண்பர்களை சந்தித்த எனக்கு மகிழ்ச்சி!

Friday, November 18, 2016

பலிக்கும் கனவுகளும் அது தந்த பாடமும் !

பலிக்கும் கனவுகளும் அது தந்த பாடமும் !


கனவுகள் குறித்த என்னுடைய முந்தைய பதிவினை'// அவசரப் படாதீர்கள், கதை சாரி கனவு இங்கே முடியவில்லை..//- என்று முடித்திருந்தேன். 
என் கணவருக்கு சிகிச்சை நடந்தது செவ்வாய் கிழமை. அன்று மாலை என்னோடு தொலை பேசியில் பேசி, என் கணவரின் உடல் நலத்தை விசாரித்த என் மைத்துனன், "வியாழக் கிழமை அண்ணாவை பார்க்க வருகிறேன்" என்று கூறினான். ஆனால் புதன் கிழமை வேலையிலிருந்து திரும்பிய அவன், திடீரென்று மயங்கி விழுந்து விட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக செய்தி வந்தது. சர்க்கரையின் அளவு அதிகமாகி விட்டதாம். சிகிச்சை பலனின்றி இரண்டு  நாட்களில் அவன் இறந்து போனான். இப்போது என் கனவை நினைவு கூறுங்கள். //-ஈஸி சேரில் சாய்ந்து தூங்கி கொண்டிருக்கும் என் காலடியில் வலது புறம் ஒருவரும் இடது புறம் ஒருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். வலது புறம் இருப்பவர் டீசென்டாக உடை அணிந்து கொண்டிருக்கிறார். ஆனால் சற்று கவலையோடு ஏதோ யோசித்தபடி இருக்கிறார். இடது புறம் இருப்பவர் வயலில் வேலை செய்பவரைப் போல வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக்க கொண்டு முண்டாசு அணிந்து கொண்டு குந்தியபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் என்னிடம்," வெங்கி அவ்வளவுதான், போயாச்சு.." என்கிறார், உடனே வலது புறம் இருப்பவர், "சீ! சீ! இவன் சொல்றதை நம்பாதே, நான் அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன்" என்கிறார். உடனே இடது புறம் இருப்பவர், அப்படினா இதுக்கு பதிலா எனக்கு வேற உசிரை காட்டுங்க, நான் என்ன பண்ண முடியும்?" என்கிறார். நான் திடுக்கிட்டு முழித்துக் கொண்டேன்.//- 

என்னை மிகவும் பாதித்த கனவு இது. இதைப் போலவே என்னை அதிகம் பாதித்த வேறு இரு கனவுகள் இளம் வயதில், மனைவியையும், மூன்று வயது மகனையும் விட்டு விட்டு அகாலமாக இறந்து போன என் மாமா மகனின் மரணமும், சுனாமி என்னும் பேரழிவும். 

என் மாமா பையன் டிசம்பர் மதம் இறந்து போனான். எனக்கு அக்டோபாரிலிருந்தே  கனவுகள் வரத் துவங்கி விட்டன. எல்லாம் அப்ஸ்ட்ராக்ட் ஆக இருந்ததால் என்னால் அவைகளை புரிந்து கொள்ள இயலவில்லை.

சுனாமி பற்றிய கனவு  மூன்று நாட்கள் அடுத்தடுத்து பகல் தூக்கத்தில்தான் வந்தது. முதல் நாள் ஹோ வென்று அலை ஓசை மட்டும், இரண்டாம் நாள் அலை ஓசையோடு மக்களின் ஓலம்.., முன்றாம் நாள் ஒரு பெரிய குழி வெட்டி அதில் நிறைய பிணங்களை போட்டு மொத்தமாக மூடுகிறார்கள். என்னடா கண்ராவி கனவு! என்று நினைத்துக் கொண்டேன். அது அப்படியே பலித்த பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. 

சோகமாக முடிக்காமல் சுபமாக முடிக்கிறேன். என் மகளுக்கு திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு திருமண பத்திரிகை அதில், முதல் வரியில் என் மகளின் பெயர் அச்சிடப்பட்டு, இரண்டாம் வரியில் வெட்ஸ் என்னும் வார்த்தை, மூன்றாம் வரியில் மணமகனின் பெயர் அச்சிடப்பட்டிருக்கிறது, மருமகனின் அப்பாவின் முகம் தெளிவாக தெரிகிறது அவர் பெயர் 'ராம' என்று துவங்குகிறது. அவர் வீட்டில் குண்டாக வெள்ளையாக ஒருவர் இருக்கிறார் என்று வந்தது. இந்த கனவு வந்த ஒரு மாதத்தில் என் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. எங்கள் சம்பந்தி அம்மாள் குண்டாகவும் வெள்ளையாகவும் இருப்பார். மாமாவின் பெயர் ராமகோடி.

அதே போல என் மகனுக்கு திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு நாள் அவன் அச்சடித்த திருமண பத்திரிகைகளை ஒரு அட்டை பெட்டியில் கொண்டு வந்து அன்னை படத்திற்க்கு முன்பு வைப்பது போல கனவு வந்தது. அதுவும் விரைவில் பலித்தது.  

இப்படிப் பட்ட கனவுகள் வந்து அவை பலிக்கும் பொழுது அரவிந்த அன்னை கூறியுள்ளதுதான் என் நினைவுக்கு வரும். ஒரு விஷயம்  
இந்த பூவுலகில் நடை பெறுவதற்கு முன்பே சூட்சும உலகில் முடிந்து விடும் என்பார். அதை சிலருக்கு ஏனோ இயற்கை காட்டி கொடுக்கிறது. இயற்கை சிந்து பைரவி ஜனகராஜோ?(அந்த படத்தில் அவருக்கு தெரிந்த விஷயத்தை வெளியே சொல்ல விட்டால் தலை வெடித்து விடும் போல ஆகி விடும், அதனால் பல விஷயங்களை போட்டு உடைத்து விடுவார்). அதைப் போல இயற்கையும் ரகசியத்தை பாதுகாக்க முடியாமல் யாரோடாவது பகிர்ந்து கொள்ள துடிக்கும் போலிருக்கிறது. 

மனதளவில் நுட்பமாக(subtle) ஆகும் அளவிற்கு clairvoyant ஆக மாறுவோம், அப்போது இதெல்லாம் சாத்தியம் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ போன ஜென்மத்தில் ஏதாவது ஆன்மீக பயிற்சி செய்திருப்பார்கள் அதனால் விளைந்த 'சித்தி' என்கிறார்கள். அது சித்தியோ பெரியம்மாவோ ரொம்ப சந்தோஷத்தை தரக் கூடிய விஷயம் என்று கூற முடியாது. 

ஏனென்றால் சில விஷயங்கள் நமக்கு புரியவே புரியாது(எனக்கு வந்த சுனாமி கனவை போல), புரிந்த விஷயங்களையும் தடுக்க முடியாது. நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, மோசமான விஷயமாக இருந்தால் வெளியே சொல்லவும் முடியாது. மனதிற்குள் வைத்துக் கொண்டு மருக வேண்டும். பெரிய அவஸ்தை அது. 

இந்த அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயம். ஒரு பேரறிவு இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது. உண்மையில் நாம் செய்கிறோம் என்று நாம் நினைக்கும் பல செயல்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டவை. நாம் வெறும் நிமித்த காரணம்தான். எனவே இதில் நமக்கு கர்வம் கொள்ள எதுவும் இல்லை. 

பொறுமையாக படித்தவர்களுக்கு நன்றி!Monday, November 14, 2016

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
குழந்தைகள்!

இன்றலர்ந்த பூக்கள் 
இறைவனின் தூதர்கள் 
காணாத சொர்க்கத்தின் 
கார்பன் காப்பிகள் 
சிவப்பு முக்கோணத்தால் 
சிறை படுத்தப் பட்டாலும் 
தவிர்க்காமல் தலை நீட்டும் 
அழகான அதிகப் படிகள்.
  
Happy children's day! பேத்தி உறங்கிய பிறகுதான் பி.சி. ஐ திறக்க முடிகிறது. எனவே கொஞ்சம் தாமதமாக குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

Friday, November 11, 2016

கனவு பலித்தது.

கனவு பலித்தது.


ஸ்ரீ ராமின் கனவுகள் பற்றிய பதிவு, அதற்கு ஏஞ்சலின் அவர்களின் பின்னூட்டம்,கீதா அக்காவின் பதிவு, இவை எல்லாவற்றையும் படித்த பிறகு, என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. 

எனக்கு நிறைய கனவுகள் பலித்திருக்கின்றன. சில கனவுகள் அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கும், சில கனவுகள் அப்படியே பலிக்கும்.  

என்னுடைய அக்காக்கள் கருவுற்றிருக்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பது என் கனவில் வந்து விடும். ஆனால் நான் கருவுற்றிருந்த பொழுது அப்படி எதுவும் வரவில்லை. என் மகனை சுமந்து கொண்டிருந்த பொழுது இறந்து போன என் பாட்டி ஜிலு ஜிலுவென்று ஜொலிக்கும் வைரத்தோடுகள் அணிந்து உட்கார்ந்து கொண்டிருப்பதை போல கனவு வந்தது. அதை என் அம்மாவிடம் சொன்ன பொழுது," கர்ப்பிணி பெண்களின் கனவில் வைரம் வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் முத்து வந்தால் பெண் குழந்தை என்றும் கூறினார்.

நான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதிய வருடம், பரீட்சைக்கு இரண்டு  மூன்று மாதங்களுக்கு முன்பே நான் எவ்வளவு மார்க் வாங்குவேன் என்று கனவில் வந்து விட்டது. பெரும்பாலும் என் தேர்வு முடிவுகள் என் கனவில் வந்து விடும். என் மகன் சி.ஏ. இன்டெர் தேர்வு எழுதிய பொழுது அவன் தான் பாஸாகி விட்டதாக எனக்கு போன் செய்து தெரிவிப்பது போல கனவு வந்தது. சாதாரணமாக தேர்வு முடிவுகளை அவன் வீட்டில்தான் கணினியில் பார்ப்பான். அப்படி இருக்க தொலைபேசியில் தெரிவிக்கிறானா? எப்படி? என்று நான் குழம்பினேன். திருச்சியில் ஒரு நண்பரின் மகளின் திருமணத்திற்கு சென்று விட்டு பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அவனுக்கு ரிசல்ட் வந்திருக்கிறது. போனில் அழைப்பு, என் மகன், தான் இண்ட்டரில் தேறி விட்டதாக கூறினான்.

ஒரு முறை, மும்பையில் இருந்த என் நாத்தனார் குடும்பத்தினரோடு ஏதோ ஒரு கடற்கரைக்குச் செல்கிறோம், அங்கு கடலின் நடுவில் ஒரு கோட்டை உள்ளது. அதை காட்டி என் நாத்தனாரின் மருமகள், "என்னிடம் இது சிவாஜி கட்டிய கோட்டை. ஹை டைட் சமயத்தில் கடல் நீர் கரையில் அதிக தூரம் உள்ளே வரும், அப்பொழுது அங்கு செல்வது கடினம். ஹை டைட் ஓய்ந்ததும் கடல் நீர் உள்வாங்கி விடும் அப்பொழுது நடந்தே செல்லலாம். நாங்கள் அப்படி அந்த கோட்டைக்கு சென்றிருக்கிறோம்" என்று கூறுவது போல ஒரு கனவு வந்தது. நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் நாத்தனாரின் வீட்டில் நாங்கள் தங்கியிருந்த சமயம் என் நாத்தனாரின் கணவர், அலிபாக் செல்லலாம் என்று ஏற்பாடு செய்தார்.  அது ஒரு கடற்கரை கிராமம் என்பதே எனக்கு தெரியாது. அங்கு சென்றோம், கடலுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கோட்டையை பார்த்து, "நடு கடலில் போய் கோட்டை கட்டியிருக்கிறார்களே? அங்கு எப்படி செல்ல முடியும்"? என்று நான் கேட்க, நான் மேலே எழுதியிருக்கும் அதே வாசகங்களை என் நாத்தனாரின் மருமகள் கூறினாள்.

என் திருமணத்திற்கு முன்பு நாங்கள் ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரத்தில் வசித்து வந்தோம். இப்பொழுது விக்னேஷ் அபார்ட்மெண்ட் இருக்கும் இடத்தில் அப்பொழுது குடிசைகள்தான் இருந்தன. அதில் ஒரு வீட்டில் நான்கு சகோதரிகள் இருப்பார்கள். ஒரு நாள் அவர்கள் எல்லோரும் பால் குடம் எடுத்து வருவது போல கனவு வந்தது. அப்படி கனவு வருவது நல்லதல்ல என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அந்த வீட்டின் மூத்த பெண்ணிற்கு ஏதோ கெடுதல் நிகழப் போகிறது என்று என் உள்ளுணர்வு கூறியதால் எனக்கு மிகுந்த சங்கடம் ஏற்பட்டது. கடவுளிடம் அவர்களுக்கு எந்த தீமையும் நிகழக் கூடாதே என்று வேண்டிக் கொண்டிருந்தேன். என் வேண்டுதலுக்கு பலன் இல்லை, அன்று மதியம் மூன்று மணி அளவில் அந்த குடும்பத்தின் மூத்த மருமகன் இறந்து விட்டார் என்று செய்தி வந்தது.

எனக்கு திருமணமான பொழுது என் கணவர் மஸ்கட்டில் இருந்தார். எனக்கு விசா கிடைக்காததால் நான் என் பிறந்த வீட்டில்தான் இருந்தேன். அப்பொழுது எனக்கு வேலை கிடைப்பது போலவும், அலுவலகம் செல்ல தயாராகி நான் வீட்டு வாசலில் நிற்க, என்னை அலுவலக கார் வந்து அழைத்துச் செல்வது போலவும் கனவு வந்தது.. செல்லும் சாலையோ சுத்தமாகவும், அழகாகவும் நடுவில் மரங்கள் இருக்க மிகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. நான் இந்த கனவை என் வீட்டில் இருந்தவர்களிடம் கூறினேன், அவர்களோ, அடடா! என்ன கனவு! வேலை கிடைப்பதே குதிரை கொம்பு(அப்போதெல்லாம் அப்படித்தானே இருந்தது) இதில் கார் வந்து உங்களை அழைத்துச் செல்லுகிறதாக்கம்..!! (அலுவலக வண்டியே பிக் அப். ட்ராப் போன்ற விஷயங்கள் அப்போதெல்லாம் நம் ஊரில் கிடையாதே) என்று கேலி செய்தனர். ஆனால் விரைவிலேயே எனக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்து நான் எம்பிளாய்மென்ட் விசாவில்தான் அங்கு சென்றேன். அப்பொழுது அங்கு அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போர்களை பிக் அப் செய்யவும், ட்ராப் செய்யவும் அலுவலக ஊர்திகள் உண்டு. பிற்பாடுதான் அதை நிறுத்தினார்கள். ஆகவே என்னை அழைத்துச் செல்ல அலுவலக கார் வந்தது. அது கார்னிஷ் என்னும் பகுதியில் சென்ற பொழுது என் கனவில் வந்த இடம் அதுதான் என்று புரிந்து கொண்டேன்.

மஸ்கட்டில் இருந்த பொழுது ஒரு முறை வளைகுடா நாடு ஏதோ ஒன்றில் இருக்கும் இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக நாடு திரும்புவது போலவும், ஏர் இந்தியா அலுவலகத்தை டிக்கெட்டிற்க்காக முற்றுகை இடுவது போலவும், ஒரு ஏர் இந்தியா விமானத்தில் ஆசனங்களை நீக்கி விட்டு, கீழே பயணிகளை உட்கார வைத்து அழைத்து வருவது போலவும் கனவு வந்தது. என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான கனவு? இப்படி எல்லாம் நடக்குமா? என்று நானே அதை நம்பவில்லை. ஆனால் அந்த கனவு வந்து சில நாட்களுக்குள் சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமிக்க, கூட்டம் கூட்டமாக இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். என் கனவில் வந்தது போலவே ஒரு ஏர் இந்தியா விமானம் ஆசனங்களை எடுத்து விட்டு பயணிகளை கீழே உட்கார வைத்து அழைத்து வந்ததாக கலீஜ் டைம்ஸ் என்னும் பத்திரிகையில் புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள். அதிர்ந்து போனேன்!

எட்டு வருடங்களுக்கு முன்பு என் கணவருக்கு இதய வால்வில் அடைப்பு இருந்து ஸ்டென்ட் போட வேண்டி வந்தது. அந்த சமயத்தில் நானும் குழந்தைகளும் சென்னையில் செட்டிலாகி விட்டோம், அவர் மட்டும் மஸ்கட்டில் தனியாக இருந்தார். என் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் எங்களிடம் சொல்லவில்லை. எனக்கு ஒரு நாள் கனவில்," வெங்கிக்கு உடம்பு சரியில்லை" என்று ஒரு குரல் கேட்டது. அவரிடம் கேட்ட பொழுது, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று  கூறி விட்டார். ஒரு வாரத்திற்குள் மீண்டும், வெங்கிக்கு உடம்பு சரியில்லை, அவன் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறான்" என்று கனவில் குரல். இந்த கனவு வந்து சில நாட்கள் கழித்து, பகல் உணவு முடித்து, ஈஸி சேரில் சாய்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள் அப்படியே கண்ணயர்ந்து விட்டேன். அப்போது வந்த கனவில் ஈஸி சேரில் சாய்ந்து தூங்கி கொண்டிருக்கும் என் காலடியில் வலது புறம் ஒருவரும் இடது புறம் ஒருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். வலது புறம் இருப்பவர் டீசென்டாக உடை அணிந்து கொண்டிருக்கிறார். ஆனால் சற்று கவலையோடு ஏதோ யோசித்தபடி இருக்கிறார். இடது புறம் இருப்பவர் வயலில் வேலை செய்பவரைப் போல வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக்க கொண்டு முண்டாசு அணிந்து கொண்டு குந்தியபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் என்னிடம்," வெங்கி அவ்வளவுதான், போயாச்சு.." என்கிறார், உடனே வலது புறம் இருப்பவர், "சீ! சீ! இவன் சொல்றதை நம்பாதே, நான் அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன்" என்கிறார். உடனே இடது புறம் இருப்பவர், அப்படினா இதுக்கு பதிலா எனக்கு வேற உசிரை காட்டுங்க, நான் என்ன பண்ண முடியும்?" என்கிறார். நான் திடுக்கிட்டு முழித்துக் கொண்டேன். உண்மையில் எனக்கு அதன் பொருள் விளங்கவே இல்லை. 

அடுத்த நாளே என் கணவரிடமிருந்து போன் வந்தது. அவருக்கு மாடிப்படி ஏறும் போது மார் வலிப்பதாகவும், அனீஸியாக இருப்பதால் அங்கிருக்கும் அப்போல்லோ மருத்துவமனையில் காண்பித்ததாகவும்,அங்கு ஈ.சி.ஜி. எடுத்து பார்த்து விட்டு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதால் உடனடியாக பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள் என்றும், ஆகவே இங்கு(சென்னையில்) ஒரு நல்ல மருத்துவ மனையில் அப்பாயிண்ட்மென்ட் வாங்கு நான் நாளையே புறப்பட்டு வருகிறேன் என்றார்.  அதன்படி எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் காண்பித்ததில் ஸ்டென்ட் போடப்பட்டு என் கணவர் உடல் நலம் தேறினார். அவசரப் படாதீர்கள், கதை சாரி கனவு இங்கே முடியவில்லை..

Tuesday, November 8, 2016

காலங்களில் அவள்......

நேற்று டி.வியில் ஏதோ ஓரு சானலில் "காலங்களில் அவள்  வசந்தம்" என்னும் பாடலை ஓளி பரப்பினார்கள். அருமையான பாடல்! காதலியை நினைத்து, காதலன் பாடும்  பாடல். அதே காதலி மனைவியான பின் முன்னாள் காதலன், இன்னாள் கணவன் எப்படி வர்ணிப்பான் என்று கற்பனை இக்னிஷனை ஆன் செய்தேன்(எத்தனை நாட்களுக்குத்தான் கற்பனை குதிரையையே தட்டிக் கொண்டிருப்பது?)

காலங்களில் அவள்......

காலங்களில்  அவள் கடும் கோடை
கலைகளிலே அவள் மாடர்ன் ஆர்ட்
மாதங்களில் அவள் மே மாதம்
மலர்களிலே அவள் எருக்கம் பூ

பறவைகளில் அவள் பருந்து
பாடல்களில் அவள் ஓப்பாரி
கனிகளிலே அவள் வேப்பம்பழம்
காற்றினிலே அவள் சண்டமாருதம்

Friday, November 4, 2016

முருகன் அவதாரம் - தெரியாத கதை

முருகன் அவதாரம் - தெரியாத கதை 
பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் நால்வரில் ஒருவர் சனத் குமாரர்.(மானஸ புத்திரர் என்றால் ஆண், பெண் சங்கமம் இன்றி மனதால் சங்கல்பித்ததால் பிறந்தவர் என்று பொருள்).  அந்த நால்வருமே  இறை உணர்வையும் தாண்டி அத்வைத உணர்வாகிய  ப்ரம்மத்திலேயே நிலைத்திருப்பவர்கள். 

அப்படிப்பட்ட அவருக்கு ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் தேவர்களின் சேனாதிபதியாக அவர் நின்று போரிட்டு அசுரர்களை அழிப்பது போன்ற ஒரு கனவு வந்தது. இதற்கு என்ன பொருள் என்று தன் தந்தையாகிய பிரம்மாவிடம் கேட்டார். அதற்கு பிரம்மா, "நீ உன் முன் ஜென்மத்தில் வேத அத்யாயனம் செய்தாய், அதில் தேவாசுர யுத்தத்தை பற்றிய விஷயத்தை படித்த பொழுது வேதத்தை அழிக்க நினைக்கும் அசுரர்களை சம்ஹராம் செய்ய வேண்டும் என்று உன் மனதில் தோன்றியது. அந்த எண்ணமே இப்போது கனவாக வந்திருக்கிறது. இப்பொழுது நீ அத்வைத சிந்தனையில் லயித்து இருப்பதால் உன் கனவு இப்பொழுது பலிக்காது. ஆனால் உன்னுடைய மறு பிறவியில் தேவாசுர யுத்தத்தில் நீ தேவர்களின் சேனாதிபதியாக நின்று அசுரர்களை போரிட்டு அழிப்பாய்" என்றார். தந்தையின் பதிலால் திருப்தி அடைந்த சனத் குமாரர் மீண்டும் தன்னுடைய த்யான நிலையை தொடர்ந்தார். 

இதற்கு சில காலங்கள் கழித்து  பிரம்மாவை காண்பதற்காக சிவ பெருமானும் பார்வதி தேவியும் சத்யலோகம் வருகிறார்கள். அங்கு தியானத்தில் நிலைத்திருக்கும் சனத் குமாரரை காண்கிறார்கள். அவர் தங்களை வணங்கி வரவேற்பார் என்று எதிர்பார்க்கும் சிவ பெருமானுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சனத் குமாரரிடம்," நீ ப்ரம்மஞானி என்ற கர்வத்தால்தானே ஆதி தம்பதியாகிய எங்களை அவமதிக்கிறாய், உன்னை சபிக்க போகிறேன்," என்கிறார். ஸநத்குமாரரோ சிவனின் கோபத்திற்கெல்லாம் அஞ்சாமல், உங்களுடைய சாபம் ஆத்மாவை ஒன்றும் செய்யாது" என்று கூறி விடுகிறார். ஸநத்குமாரரின் தெளிவு சிவ பெருமானை ஆச்சர்யப்படுத்துகிறது. "வயதால் சிறியவனாக இருந்தாலும் ஞானத்தால் மேம்பாட்டிற்கும் உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்கிறார். 

சிவனின் கோபம் எப்படி சனத் குமாரரை பாதிக்கவில்லையோ, அப்படி இப்போது இந்த வாத்சல்யமும் அவரை பாதிக்கவில்லை. எனக்கு எந்த வரமும் தேவை இல்லை. நீங்கள் பேசுவதை கேட்டால், இந்த வரம் சாபம் இதிலெல்லாம் உங்களுக்குத்தான் அதிக நம்பிக்கை இருக்கும் போல தெரிகிறது, எனவே உங்களுக்கு வேண்டுமானால் கேளுங்கள் நான் ஒரு வரம் தருகிறேன் .." என்று கூறி விடுகிறார். 

இத்தனை ஞானத்தோடு ஒரு பிள்ளையா? என்று வியந்து போன சிவ பெருமான், "ப்ரம்மாவுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எனக்கும் கிடைக்க வேண்டும். நீ எனக்கு மகனாக பிறக்க வேண்டும். இந்த வரத்தை எனக்கு அளித்தால் போதும் " என்று வேண்டுகிறார். 

"சரி, அப்படியே ஆகட்டும். உங்களுடைய மகனாக நான் பிறக்கிறேன்" என்று ஒப்புக் கொண்ட சனத்குமாரர்,  "ஆனால் ஒரு நிபந்தனை, என்னிடம் வரம் கேட்டது நீங்கள் மட்டும்தான். பார்வதி தேவி அந்த வரத்தை கோரவில்லை எனவே, உங்களுக்கு மட்டுமே நான் மகனாக பிறப்பேன்" என்று ஒரு சப் கிளாசை போட்டு விடுகிறார்.

"கணவன் அடையும் விஷயங்களில் மனைவிக்கும் அதிகாரம் உண்டு" என்று பார்வதி தேவி  வாதிட, என்னதான் பிறவி எடுக்க ஒப்புக் கொண்டாலும், ஸ்த்ரீ புருஷ சங்கமம் மூலமாக கீழ் முகமாக பிறப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்றுஸனத் குமாரர் மறுதலிக்க, இறுதியில் சிவபெருமானின் தேஜஸாக நெருப்பு பொறிகளாக அவர் வெளிப்பட்டதும்,அந்த பொறிகள் அம்பாளின் அம்சமான சரவண பொய்கயிலே உருக் கொள்ளும்  என்று தீர்மானம் செய்தனர். அதன் படியே சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆறு பொறிகளும் முன் முதலில் கங்கையில்தான் விடப்படுகின்றன, கங்கையால் அதன் வெப்பத்தை தா ங்க முடியாததால் அவை சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டு கார்த்திகை பெண்களால் வளர்க்கப் பட்டு முருகனாக உருக்கொண்டு தேவாசுர யுத்தத்தில் தேவா சேனாதிபதியாக பங்கேற்று அசுரர்களை சம்ஹாரம் செய்கிறார்,.

அந்த முருகனை கந்த சஷ்டியாகிய இன்று வழிபட்டு வீரமும்,வெற்றியும், ஞானமும் பெறுவோமாக! வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா!பி.கு.
தெய்வத்தின் குரல் ஒன்றாம் பாகத்தில் படித்ததை கொஞ்சம் எளிமையாக தர முயற்சி செய்திருக்கிறேன். படங்களுக்கு கூகுளார்க்கு நன்றி!