சாருவும் நானும் - 4
"இருக்கலாம், ஆனா எங்களுக்கு வந்து சேரல.. வேணும்னா பாருங்க, இதுலதான் லெட்டர்ஸ், டெலெக்ரா எல்லாம் பின் பண்ணி வச்சிருக்கோம்.." அவன் ஒரு நோட்டை தூக்கிப் போடா, அதில் நான் கொடுத்திருந்த டெலெக்ராம் இல்லை."
"எங்க ஆபிஸுக்குனு ஒரு ரூம் உங்க ஹோட்டலில் உண்டு இல்லையா"?
"உண்டு சார், ஆனா அதுக்கு நீங்க முன்னாலேயே இன்பார்ம் பண்ணனும். இப்படி திடீர்னு வந்து நின்னா எங்களால எதுவும் செய்ய முடியாது. "
"வேற ரூம் இருந்தா குடுங்க.."
"இப்போ சீசன் சமயம், ஒரு ரூம் கூட காலி இல்ல, வெரி சாரி!"
வேலையாக எதற்கும் கையோடு வைத்துக் கொள் என்று மேனேஜர் கொடுத்திருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினேன். அதைப் படித்தவன் சற்று யோசித்தான்.
"லேடீஸோடு வந்திருக்கீங்க, ஒன்னு வேணா செய்யுங்க, ஸ்டாப் ரூம்ல இன்னிக்கு நைட் தங்கிக்குங்க, காலைல, வேறு ரூம் பார்த்துக்கங்க..நா ரூமை க்ளீன் பண்ணி வைக்க சொல்றேன், நீங்க போய் கீழ இருக்கற ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க, அப்புறம் சாப்பாடு தீர்ந்துடும். "
ஏற்கனவே தீர்ந்து விட்டது. நாங்கள் போன பொழுது பாத்திரங்களை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தவரேங்களை பார்த்ததும் முகச் சுளிப்போடு தண்ணீர் கொண்டு வைத்தார். "வெஜிடேரியன், சைவம் என்றெல்லாம் சொல்லியும் மீண்டும் மீண்டும் சிக்கன் இருக்கு, மட்டன் இருக்கு என்றான். கடைசியில் எவர்சில்வர் முறத்தில் கொண்டு வந்த சாதத்தை எங்கள் இருவர் இலையிலும் பாதிப் பாதியாக கொட்டி விட்டு, அதன் மீது தயிரை மீண்டும் கொட்டி விட்டு திரும்பியே பார்க்காமல் போய் விட, உப்பு கூட போடாமல் விரைத்துக் கிடந்த அந்த சாதத்தை சாப்பிட்டு விட்டு ரிசப்ஷனுக்கு திரும்பினோம்.
"சூரி, சாருக்கு ஸ்டாப் ரூமைத் திறந்து விடு.."
அந்த சூரி பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்து,நடந்து,நடந்து ஹோட்டலின் ஒரு மூலையில் இருந்த ஸ்டாப் ரூமைத் திறந்து விட்டான். அதை ஸ்டாப் ரூம் என்பதை விட, ஸ்டோர் ரூம் என்பது பொருத்தமாக இருக்கும்.சற்றே பெரிதான அந்த அறை அங்கு போடப் பட்டிருந்த சாமான்களினால் சிறியது போலத் தோன்றியது.
ஒரு பக்க சுவற்றை ஒட்டி போடப்பட்டிருந்த டேபிள் மீதுஒட்டை, உடைசல் நாற்காலிகள் கவிழ்த்து போடப்பட்டிருந்தன. அதன் எதிர் பக்க சுவரை ஒட்டி ஒரு த்ரீ சீட்டர் சோபா, அதை ஒட்டி ஒரு குட்டி மேஜை, அதன் மீது டெலிபோன்(வேலை செய்யுமா?), நடுவில் ஒரு வட்ட டீபாய் அதன் மீது சாம்பல் தட்டப்படாத ஆஷ் டிரே. சூரி டீப்பாயை நகர்த்தி விட்டு ஒரு மடக்கு கட்டிளைப் பிரித்து நடுவே போட்டான்.
"எதுனா வேணுமா சார்"?
"கொஞ்சம் தண்ணீ , தலகாணி, போர்வை"
"தண்ணீ கொண்டாறேன், தலகாணி..,போர்வ.."? என்றபடி வெளியே போனவன், சற்று நேரத்தில் ஒரு ஜக்கில் தண்ணீரும், ஒரு தலகாணியும், ஒரு படுக்கை விரிப்பை போர்வை என்றும் கொண்டு வந்தான்.
ஒரு பொறுப்புள்ள லட்சிய கணவனாக இருந்த ஒரு போர்வை தலைகாணியையும் சாருவுக்கு கொடுத்து விட்டு நான் சோபாவில் படுத்துக்க கொண்டேன். ஜன்னல் வழியாக ஹலோ சொன்ன குளிர் காற்று என்னை தூங்க விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. எழுந்து ஜன்னல் கதவை சார்த்த முயன்ற போதுதான் ஜன்னல் கதவிற்கு கொக்கி இல்லாதது தெரிந்தது. சாருவோ ஒரு ஞானியைப் போல புது இடம், வசதிக்கு குறைவான படுக்கை, வாடை காற்று இவை எதனாலும் பாதிக்கப் படாமல் நிம்மதியாக தூங்கினாள்.
காலையில் ரூமை(??)காலி செய்து விட்டு டிஸப்ஷனுக்கு வந்த பொழுது, டிசப்ஷனிஸ்ட்,"நீங்க ரூமுக்கு வாடகை ஒன்னும் குடுக்க வேணாம், நேற்று ராத்திரி சாப்பிட்டதுக்கு மட்டும் பணம் குடுங்க" என்று பிள்ளை நீட்டினான். அதைப் பார்த்து விட்டு கிறுகிறுத்து வந்ததற்கு ஒரு சோடா குடிக்கலாம் போல் இருந்தது. அப்புறம் அதற்கும் அல்லவே மூன்று மடங்கு விலை கொடுக்க வேண்டும்!
கொடைக்கானலில் சில்வர் காஸ்கேட் பின்னணியிலிசாருவை அணைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள ரூம் காலி இல்லை. ஏரியின் விஸ்தீரணத்தை பெடல் போட்டால் அளக்க ரூம் காலி இல்லை, குதிரைச் சவாரி செய்ய ரூம் காலி இல்லை, கோக்கர்ஸ் வாக்கில் கிடைக்கும் சுடுசுடு இட்லி வடையை சுவைக்க ரூம் காலி இல்லை. எனக்கு தற்கொலை முனையிலிருந்து குதித்து விடலாம் போல எரிச்சல் வந்தது.
"என்ன சார் நேத்துதான் வந்தீங்க, அதுக்குள்ள கிளம்பிடீங்க.."? நேற்று வந்த டாக்ஸி டிரைவர்.
"இல்லைப்பா ரூமே கிடைக்கல, என்ன பண்ரதுன்னு தெரியல"
"நாதான் அப்பவே சொன்னேனே.? இப்போ சீசன் சமயம், ரூம் கிடைக்காதுனு.. ஒண்ணு பண்ணுங்க சார், இந்த கொடைகானல ஒரு வாரமும் பாக்கலாம், ஒரு நாளிலும் பாக்கலாம், ஒன் அவர்லேயும் பாக்கலாம், எல்லாம் ஒண்ணுதான், பேசாம ஒரு டாக்ஸி அரேஞ்ஜ் பண்ணிகிட்டு, சுத்தி பார்த்துட்டு கீள எறங்கிடுங்க, அதன் பெஸ்ட். நம்ம பிரென்ட் ஒருத்தர் இருக்காரு."
அவன் அறிமுகப்படுத்திய ட்ரைவர் அப்படி சொல்ல முடியாமல் சோப்பு விளம்பரத்தில் வருவது போல வெள்ளை வெளேர் வேட்டி, சட்டை அணிந்து, மரியாதைக்குரிய தோற்றத்தில் நடு வயதினராக இருந்தார்.
"டிபன் சாப்டீங்களா சார்.."?
இன்னும் இல்லை, முதல்ல ஒரு நல்ல ஹோட்டலுக்கு போங்க, பயங்கர பசி." அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் கும்பல் நெரிந்தது. அன்றைய ஸ்பெஷல் ரவா பொங்கலாம். அதை நாங்கள் சாப்பிட துவங்கிய பொழுது "ஊ ஊ,ஊ " என்று ஒரு பெரிய சைரன் ஒலி கேட்டு ஹோட்டலே திடுக்கிட்டது. ஒலித்தது எங்கள் டேபிளுக்கு எதிர் டேபிளில் இருந்த ஒரு ஐந்து வயது சிறுவன். அந்த நிமிடமே எங்கள் தட்டு அவன் டேபிளுக்கு வந்தாக வேண்டும் என்று அவன் அலறிய அலறலுக்கு பணி(ய)ந்து ரவாப் பொங்கலை அவனிடம் சமர்ப்பித்து விட்டு லெமெனே இல்லாத ஒரு லெமன் ரைஸை சாப்பிட்டு விட்டு மஞ்சளாக இருந்த தண்ணீரை கடவுள் பெயரைச் சொல்லி முழுங்கி விட்டு 'கொடை' வலத்தை துவங்கினோம்.
-தொடரும்
சைரன் ஒலி சிறுவனிடமிருந்தா.... ஹா... ஹா.... ஹா... தொடர்கிறேன்.
ReplyDeleteஹா... ஹா... செம அனுபவம் தான் அவர்களுக்கு.
ReplyDeleteதொடர்கிறேன்.
எங்களோட கல்கத்தா அனுபவங்களை மிஞ்சிடும் போல இருக்கே! எங்களுக்கும் கொடைக்கானல் போன அனுபவங்கள் இருக்கு! எழுதலை! :)
ReplyDeleteசெம அனுபவம் போல ....ஹஹஹ்ஹஹ் அதுவும் அந்த சைரன் ஒலி ...ஹஹஹ்
ReplyDelete