கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 23, 2016

சீக்ரெட் சாண்டாவும், பிராமின்ஸ் டாமினேஷனும்

சீக்ரெட் சாண்டாவும், 
பிராமின்ஸ் டாமினேஷனும் 




என் மகனும் மருமகளும் அன்று ஷாப்பிங் கிளம்பினார்கள். 'சீக்ரெட் சாண்டா' விற்காக பரிசுகள் வாங்க வேண்டும் என்றான். அதென்ன சீக்ரெட் சாண்டா? கார்ப்பரேட் கல்ச்சரில் இதுவும் ஒன்று. க்ரிஸ்மாஸுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக ஒரு நாளைக்கு ஒரு பரிசு என்று அலுவலகத்தில் நம்மோடு பணிபுரியும் ஒருவருக்கு அவருக்குத் தெரியாமல் தினம் ஒரு பரிசு அவர் மேஜையில் வைத்து விட வேண்டுமாம். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை கம்பெனியின் ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மெயில் அனுப்பி விடுவார்களாம். கடைசி நாளன்றுதான் யார் அந்த சாண்டாக்ளாஸ் என்று தெரிவிப்பார்களாம். தினசரி பரிசு ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் வாங்க வேண்டுமாம், கடைசி நாள் பரிசு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கலாமாம். உங்களில் யாருக்காவது இப்படி சீக்ரெட் சாண்டா சுவாரஸ்யமாக ஏதாவது பரிசு கொடுத்திருக்கிறாரா?   

இரண்டு நாட்களுக்கு முன் நானும் என் எதிர் வீட்டில் வசிக்கும் பெண்மணியும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு டீ மானிடைசேஷன், மோடி, என்று சுற்றி கலைஞரின் உடல் நிலையில் வந்து நின்றது. கலைஞரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு அத்தனை உடன்பாடு இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மரியாதையும், மதிப்பும் உண்டு. எங்கள் உரையாடலை அப்படியே தருகிறேன்..
எ.வீ.: அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. 

நான்: ஆமாம். அவருடைய நிர்வாக திறமையை விட என்னைக் கவர்ந்தது அவருடைய உழைப்பு. இந்த வயதில் எத்தனை உழைப்பு? வேறு யாராவது இப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான். பிறகு அவருடைய இலக்கிய திறன்

எ.வீ.: அதில் என்ன விசேஷம் என்றால் அவர் முறையாக பள்ளி,கல்லூரி சென்று பயிலவில்லை. தானாகவே எல்லாவற்றையும் கற்றிருக்கிறார்..

நான்: அதற்கு அவர் பிறந்த குலம் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இசை, நாட்டியம் மட்டுமல்ல,இலக்கியத்திலும் அவர்களுக்கு புலமை அதிகம் இருக்கும். நான் தேவரடியார்களைப்பற்றி ஒரு கட்டுரை வாசித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பெண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் இருந்தது தேவரடியார்கள் குலத்தில் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்த அந்த கட்டுரை ஆசிரியர் தேவதாசி முறையை தடை செய்ததன் மூலம் பல நல்ல கலைகளை நாம் இழந்து விட்டோம் என்று எழுதியிருந்தார்.

எ.வீ.: அதற்கு காரணம், தே வேர் எக்ஸ்பிளாய்டெட். சின்ன வயதில் வேண்டுமானால் அவர்களுக்கு டிமாண்ட் இருந்திருக்கும், அதற்குப் பிறகு வறுமையிலும், வியாதியிலும் 
எத்தனை பேர் இறந்திருப்பார்கள்?

நான்: உண்மைதான். நான் சொல்ல வந்தது. அவர்களுடைய கலைத்  திறமையை பற்றி மட்டும்தான். தேவதாசிகளின் நடனத்தில் வேகம் அதிகம் இருக்குமாம். அவர்கள் ஆறு காலம் பயிற்சி செய்வார்கள். இப்போதெல்லாம் மூன்று காலம்தானே பயிற்சி செய்கிறார்கள்? ஏன் கருணாநிதியே தன்னுடைய பேத்தியின் நடன அரங்கேற்றத்தை பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் வேகம் வேண்டும் என்று சொன்னாராம்

எ.வீ.: ஓ! அப்படியா? அது சரி, நடனமும் பாட்டும் எப்படி பிராமணர்களின் ஆதிக்கத்தில் வந்தது?

நான்: பிராமணர்களின் ஆதிக்கமா? அப்படி எல்லாம் கிடையாதே? எல்லாரும்தானே பாட்டும், நடனமும் கற்றுக் கொள்கிறார்கள்?

ஏ.வீ.: இல்லை இல்லை நீங்கள் கண்டிப்பாக பாட்டு க்ளாசில் சேர்த்து விடுவதைப்போல நாங்கள் செய்வதில்லை(அவர் சைவப் பிள்ளை).இசை உலகில் பிராமின்ஸ் டாமினேஷன் எப்படி வந்தது? 

அவருடைய கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

17 comments:

  1. மனசுதான் காரணம். செய்யவேண்டும் என்கிற உத்வேகமும், ஆர்வமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பயிலலாம். அவரவர் வாழ்க்கைமுறை, தேவைகள் பொறுத்தது.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கை முறை ஒரு முக்கிய காரணம்.

      Delete
  2. நல்ல உரையாடல்.... தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  3. Nammaloda vazhimurai nu ninaikiren..Adhu blood laye oorina vishayam aayiduthu...

    ReplyDelete
  4. Interstdan karanam endru nenikeren

    ReplyDelete
  5. கலைஞரின் தமிழ் எனக்குப் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. வருக! இதைப்பற்றி விரிவாக அலசுவீர்கள் என்று நினைத்தேன்.

      Delete
  6. எப்போவுமே பாட்டு என்பது இருந்திருக்கிறது. அந்தக்காலங்களில் நன்றாகப் பாடத் தெரிந்திருந்தால் மட்டுமே தமிழ் கற்கலாம் என்றிருந்திருக்கிறது. ஆகையால் பிராமணர்களில் பாடத் தெரிந்தவர்கள் இருந்திருப்பது அதிசயமில்லை. உ.வே.சாமிநாதய்யரின் சுய சரிதையில் இது குறித்து வரும். அவரவர் எழுதும் கவிதைகளைக் கூட ராகத்தோடு இசைத்தே அரங்கேற்றுவார்கள் என்பார்கள். இந்த அருமையான கல்வி முறை எப்போதிலிருந்து மாறியது என்பது தான் தெரியவில்லை. தேவாரம், திருவாசகம் போன்ற அனைத்துமே முறைப்படி பண் இசைக்கப்பட்டே கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.

    ReplyDelete
  7. //அந்தக்காலங்களில் நன்றாகப் பாடத் தெரிந்திருந்தால் மட்டுமே தமிழ் கற்கலாம் என்றிருந்திருக்கிறது. ஆகையால் பிராமணர்களில் பாடத் தெரிந்தவர்கள் இருந்திருப்பது அதிசயமில்லை. உ.வே.சாமிநாதய்யரின் சுய சரிதையில் இது குறித்து வரும். அவரவர் எழுதும் கவிதைகளைக் கூட ராகத்தோடு இசைத்தே அரங்கேற்றுவார்கள் என்பார்கள்.//

    புதிய தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  8. இசை, நடனம், இதற்கெல்லாம் மொழியேது? சாதி ஏது? குலம் ஏது? எல்லாம் நாம் வாழும் சூழல்,முறை, பொருளாதாரம் இவை சார்ந்துதான். மனம் இருந்தால் மார்கமுண்டு. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் கற்கலாம்!

    தொடர்கிறோம்

    ReplyDelete
  9. நீங்கள் சொல்வது உண்மைதான். இப்பொழுது எந்த தடையும் யாருக்கும் இல்லை. ஆர்வம் இருப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம்.

    வாழ்க்கை முறையும், சூழலும் பிராமணர்களுக்கு தோதாக இருந்திருக்கின்றன. வேதம் ஓதுதல், இசை பயிலுதல் இரண்டிற்குமே பயிற்சி முக்கியம். வேதம் ஓத தினசரி நேரம் ஒதுக்கி, பயின்றதால் இசைக்கும் நேரம் ஒதுக்கி தினசரி சாதகம் செய்வது பிராமணர்களுக்கு எளிதாக இருந்திருக்கலாம். மற்றவர்களுக்கு இந்த முறையான பயிற்சி கொஞ்சம் கடினமாக அந்த காலத்தில் இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //வேதம் ஓத தினசரி நேரம் ஒதுக்கி, பயின்றதால் இசைக்கும் நேரம் ஒதுக்கி தினசரி சாதகம் செய்வது பிராமணர்களுக்கு எளிதாக இருந்திருக்கலாம். மற்றவர்களுக்கு இந்த முறையான பயிற்சி கொஞ்சம் கடினமாக அந்த காலத்தில் இருந்திருக்கும்//

      வேதம் ஓதுவதும் சம்ஸ்கிருதம் கற்பதும் பிராமணர்களுக்கு மட்டும் உரித்தானதே அல்ல! அனைத்துத் தரப்பினரும் கற்றனர். வால்மீகி பிராமணர் அல்ல! வியாசர் ஓர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர். காளிதாசன் பிராமணர் அல்ல! இப்படி எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். சமீபத்திய உதாரணம் தேவை எனில் பல ஸ்தபதிகளும், சிற்பிகளும் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டே கோயில்களை ஆகம முறைப்படி கட்டினார்கள். ஆயுர்வேத மருத்துவம் கற்க சம்ஸ்கிருத அறிவு நிச்சயம் தேவை. எல்லா ஆயுர்வேத மருத்துவர்களும் பிராமணர்கள் அல்ல! ஜோசியம் கற்கவும் வடமொழி அறிவு தேவை! அதிலும் பிராமணரல்லாதோர் நிறைய உண்டு.

      Delete
  10. மீள் வருகைக்கு நன்றி!

    நீங்கள் சொல்லியிருப்பது ரொம்ப சரி! நான்கு வர்ணத்தவர்களில் நான்காம் வர்ணத்தினரை தவிர மற்ற மூன்று வர்ணத்தாரும் வேதம் பயின்றவர்கள்தான். கற்றறிந்தவர்களாக இருந்ததால்தான் அரசர்கள் புலவர்களையும், கலைஞர்களையும் ஆதரித்தார்கள். ஆனால் நான் குறிப்பிட்டிருந்தது பயிற்சியைப் பற்றி. பிராமணர்களுக்கு மட்டுமே கற்ற வேதத்தை தினசரி ஓத வேண்டும் என்பது கட்டாயம். வேதம் ஓதுதல்,ஓதுவித்தல் என்பது அந்தணர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட கடமை. பிராமணர்களுக்கு முக்கியமான பண்டிகையான ஆவணி அவிட்டம் என்பதற்கு உபாகர்மா என்பதே பெயர். உபாகர்மா என்பதற்கு ரிவிஷன் என்று பொருள். தாங்கள் எந்த வேதத்தில் எந்த சாகையை படித்திருக்கிறார்களோ அதை ஆவணி அவிட்டம் அன்று தொடங்கி தினசரி ரிவைஸ் செய்து போகி பண்டிகை அன்று முடிக்க வேண்டும். சாம வேதத்தை சார்ந்தவர்கள் விநாயக சதுர்த்தி அன்று தொடங்கி தைப்பூசத்தன்று முடிப்பார்கள்.

    நாட்டை காப்பதையும், போர்த்தொழிலையும் கொண்ட க்ஷத்ரியர்களும், வியாபாரத்தை தொழிலாக கொண்ட வைஸ்யர்களும், விவசாயமும் மற்ற தொழிலையும் பிழைப்பாக கொண்டவர்களும், தினசரி பயிற்சிக்காக நேரம் ஒதுக்கி கற்ற வேதத்தை ப்ராக்டீஸ் பண்ண முடியுமா?

    ஸ்தபதிகளுக்கு சமஸ்க்ருதம் தெரியும் என்பதில் இரண்டாம் கருத்து கிடையாது. அவர்களுடையதும் ரெஃபெறல் அறிவு.

    வால்மீகியையும், வேதா வியாஸரையும் உதாரணம் காட்டி இருக்கிறீர்கள். விதி விலக்குகள் உதாரணங்கள் ஆக முடியாது. தவிர வியாசரின் தாய்தான் மீனவப் பெண், தந்தை பராசர முனிவர் ஒரு குறிப்பிட்ட நாளில் அப்போது இருக்கும் கிரக நிலைமைகளை பார்த்து அன்று பிறக்கும் குழந்தை சிறந்த புத்திமானாகவும், ஞானியாகவும் விளங்குவான் என்று அறிந்து உடனே ஒரு குழந்தையை பிறப்பிக்க வேண்டும் என்று விரும்பி அப்போது கங்கையில் படகோட்டிக் கொண்டிருக்கும் மச்சகந்தியோடு கூடி அதற்காக கங்கை ஆற்றின் நடுவில் ஒரு தீவினை உருவாக்கி பெற்றதுதான் வியாசர். அதனால்தான் அவருக்கு (கிருஷ்ண)த்வைபாயனர் என்ற பெயர் உண்டு என்பதையெல்லாம் கண்ணனுக்காக என்னும் அருமையான பதிவு எழுதும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா? ஆகவே அவரை விட்டு விடலாம். சாதாரண மனிதர்களை மட்டும் கருத்தில் கொள்ளலாம்.

    ReplyDelete
  11. http://sivamgss.blogspot.com/2010/09/blog-post_10.html

    காளிதாசனையும் சொல்லி இருக்கேனே! :) சாமவேதிகளுக்கு ஹஸ்தமும் பஞ்சமியும் சேர்ந்து வரணும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி வருவதில்லை. த்ரிதியை திதியிலேயே வந்துடுது. ஆகவே பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னாடியே ஆவணி அவிட்டமும் வந்துடும். :)

    ReplyDelete
  12. என்னோட கருத்து சம்ஸ்கிருதம் பிராமணர்கள் மட்டுமே கற்கவில்லை என்பது மட்டுமே! பலருக்கும் சம்ஸ்கிருத அறிவு இருந்திருக்கிறது. இப்போதைக்கு இது மட்டும். :) அப்புறமா க்ஷத்திரியர்கள், வைசியர்கள் னு எல்லோரும் நித்யகர்மானுஷ்டானங்களைக் காலையிலேயே எழுந்து செய்து வந்ததாகத் தான் தெரிய வருகிறது. காலை, மாலை இருவேளையும் சூரியனுக்கு அர்க்யம் விடுவதைத் தவற விட்டதில்லை. :) பிரயாணத்தில் இருந்தாலும் நதிக்கரை, குளக்கரைகளில் நின்று அனுஷ்டானங்களை முடித்த பின்னரே கிளம்புவார்களாம்.

    ReplyDelete
  13. காளிதாசனும் கூட விதிவிலக்குதான்.

    நித்ய கர்மானுஷ்டானம் வேறு, படித்ததை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது வேறு. அந்த பயிற்சி பிராமணர்களுக்கு மட்டுமே கட்டாயம். இதை மஹா பெரியவாளே உறுதிப்படுத்தி இருக்கிறார். இன்றைக்கும் வைதீகத்தை தொழிலாக கொண்டவர்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பாருங்கள் நான் வைதீகத்தை தொழிலாக கொண்டவர்கள் என்று கூறுகிறேன். இன்று பிராமணர்களில் பெரும்பான்மையோர் வைதீகத்தை தொழிலாக கொள்ளவில்லை. அந்நாளில் பிராமணர்கள் என்றால் வைதீகர்கள்தான். எனவே பயிற்சி செய்து செய்து பழக்கம்.

    அதைப்போல இசை வேளாளர்கள்தான் இசையையும், நாட்டியதையும் தொழிலாக கொண்டிருந்தார்கள்.

    வைதீகம், சங்கீதம் நாட்டியம் எல்லாவற்றுக்குமே பயிற்சி முக்கியம். அப்போதெல்லாம் இந்தக் காலத்தைப் போல வாரத்தில் இரண்டு நாட்கள் மியூசிக் கிளாஸ் போய் விட்டு, வர்ணம் முடித்து,ரெண்டு கீர்த்தனை பாடம் ஆனவுடனேயே பாட்டு நோட்டை (தற்பொழுது அதுவும் கிடையாது செல் போன் வந்து விட்டது) முன்னால் வைத்துக் கொண்டு கும்பலோடு கோவிந்தா போட முடியாது. உழைப்பு, அசுர சாதகம் என்றே சொல்வார்கள். அதை செய்வது பிராமணர்களுக்கு அவர்கள் வாழ்க்கை முறையால் சாத்தியம் என்று நினைத்தேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்.

    எல்லோரும் சமஸ்க்ருதம் கற்றார்கள், வேதம் பயின்றார்கள் என்பதை நான் இல்லையென்று கூறவில்லையே. பிராமணர்கள் அதை தடுக்கவுமில்லை, கற்று கொடுப்பவர்களே அவர்கள்தானே.

    ஒரே ப்ளாகில் எல்லாவற்றையும் எழுதுகிறேனே இன்னொன்று தொடங்கலாம் என்று முயற்சி செய்கிறேன், சரியாக வரவில்லை, கொஞ்சம் உதவுங்களேன்.

    மீள் வருகைக்கு மீண்டும் நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete