கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 28, 2019

என்ன என்ன வார்த்தைகளோ...?

என்ன என்ன வார்த்தைகளோ...?

என்னுடைய சென்ற பதிவில் காத்திருப்பதைப் பற்றி எழுதும் பொழுது சதாசிவ ப்ருமேந்திரரைப்பற்றி எழுதியிருந்தேன். "பசிக்கிறது சாப்பாடு போடு" என்று கேட்ட அவரிடம் அவருடைய தாய், "பத்துநிமிடம் பொறுத்துக் கொள்" என்று கூறிய வார்த்தை ஏற்படுத்திய தாக்கத்தையும் அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும் சிந்தித்த பொழுது, வேறு சில மகான்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு வார்த்தை, அல்லது ஒரு வாக்கியம் ஏற்படுத்திய மாற்றங்கள் நினைவுக்கு வந்தன.

சதாசிவ ப்ருமேந்திரரிடமே தொடங்கலாம். மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான புலவராக சதாசிவம் இருந்த பொழுது, தமிழ் நாட்டிலிருந்து வரும் புலவர்களுக்கு ஒரு தலைவலியாக விளங்குகிறார். மைசூர் மகாராஜாவை சந்தித்து, அவரிடம் தங்கள் புலமையை காட்டி, பரிசுகள் பெறலாம் என்று நோக்கத்தோடு வரும் புலவர்களை மெச்சி அரசன் பரிசு கொடுக்க முன் வந்தாலும், அங்கிருக்கும் சதாசிவம் அவர்கள் இயற்றிய செய்யுளில்  குற்றம் கண்டு பிடித்து, கேள்விகள் கேட்டு, பரிசுகள் பெறவொட்டாமல் செய்து விடுகிறார். இதனால் எரிச்சலடைந்த புலவர்கள், அப்போதைய காமகோடி பீடாதிபதியிடம் சென்று, "இந்த சதாசிவத்தால் எங்கள் பிழைப்பில் மண் விழுகிறது. அரசன் பரிசு கொடுக்க தயாராக இருந்தாலும், இவன் குறுக்கே பேசி எங்களுக்கு அது கிடைக்காமல் செய்து விடுகிறான்"  என்று குற்றம் சொல்கிறார்கள். பீடாதிபதி சதாசிவம் அவர்களை அழைத்து," உன்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாதா?" என்று கேட்கிறார். குருவின் அந்த கேள்வியை அவருடைய கட்டளையாக பாவித்து அன்றிலிருந்து மௌன விரதத்தை மேற்கொள்கிறார். வாயால் மட்டுமல்லாமல் மனதாலும் பேசாமல், மந்திரத்தை மட்டும் ஜபித்தபடி இருக்க, அது அவருக்கு சித்தியாகிறது.



திருச்சுழியில் பிறந்து, மதுரையில் வாழ்ந்த வெங்கடரமணன் என்னும் அந்த சிறுவனுக்கு பதிமூன்று வயதாகும் பொழுது அவனுடைய பக்கத்து வீட்டுக்காரர் இறந்து விடுகிறார். மரணம் என்றால் என்ன? என்னும் கேள்வி அவனுக்குள் பிறக்கிறது. அப்பொழுது அவன் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர், "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்று கூறியதை கேட்ட அந்த நொடியில், தான் திருவண்ணாமலை செல்ல தீர்மானித்து விடுகிறான். திருவண்ணாமலை எங்கு இருக்கிறது? அதற்கு எப்படி செல்ல வேண்டும்?  என்பது எதுவும் தெரியாத அந்த குழந்தை விழுப்புரம் வரை ரயிலில் வந்து, அங்கிருந்து கால்நடையாகவே திருவண்ணாமலையை அடைந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து, ஓடிப்போய், அந்த லிங்கத்தை,"அப்பா,வந்துட்டேன்ப்பா" என்று கட்டிக் கொண்டதாம்.  அந்த சிறுவனைத்தான் பகவான் என்றும், ரமண மகரிஷி என்றும் உலகம் கொண்டாடுகிறது. அவரை செலுத்தியது உறவினர் கூறிய "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்னும் வாசகம்.



அதே திருவண்ணாமலையில் இசை வேளாளர் மரபில் பிறந்த அவன் ஆணழகன், இசையிலும், தாளத்திலும் விற்பன்னன். பெண்கள் மீது அவனுக்கும், அவன் மீது பெண்களுக்கும் மோகம் அதிகம். இளமை, செல்வம் இரண்டும் இருக்கும் வரை உல்லாசத்திற்கு குறைவில்லை. இரண்டும் குறைந்து, நோயும் வந்தவுடன் அவனை விரும்பிய அதே பெண்கள் அவனை புறக்கணிக்கிறார்கள். இதனால் மனம் வெதும்பும் அவனிடம் அவன் சகோதரி,"பெண் சுகத்திற்குத்தானே ஏங்குகிறாய்? நானும் ஒரு பெண்தான், என்னிடம் தணித்துக் கொள் உன் வேட்கையை" என்று கூற, அதிர்ந்து போகும் அவன், தன்னை வெறுத்து, உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்து அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் வெள்ளாள கோபுரத்தின் மேலேறி, அதிலிருந்து குதித்து உயிரை விட துணிந்த பொழுது, முருகப் பெருமானால் காப்பாற்றப் பட்டு அருணகிரிநாதராக மலர்ந்தது நாம் அறிந்ததுதானே.

கஞ்சக்கருமியாக இருந்த பட்டினத்தாரை மாற்றியது அவருடைய மகனாக வந்த சிவ பெருமான் ஓலை நறுக்கில் எழுதி அனுப்பிய, "காதறுந்த  ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்னும் வாசகம்.

குயவரான அவர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டிலே அழகான மனைவி இருந்தாலும் மற்ற பெண்களை நாடுவதிலும் அதிக விருப்பம் கொண்டவர். ஒரு நாள் வேறொரு பெண்ணோடு இருந்து விட்டு வீட்டிற்க்கு வரும் அவரிடம் அவர் மனைவி கோபமாக,"எம்மைத் தீண்டாதே திருநீலகண்டம்" என்று சிவன் மீது ஆணையிட்டு கூறுகிறாள். அவள் என்னைத் தீண்டாதே என்று கூறியிருந்தால் தன்னை மட்டும் இனிமேல் தீண்டக்கூடாது என்று எடுத்துக் கொள்ளலாம், ஆனால், எம்மை என்று பன்மையில் கூறியதால் பெண்கள் யாரையுமே தீண்டக் கூடாது என்று அவள் கூறியிருப்பதாக கொண்டு அன்று முதல் பிரும்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு திருநீலகண்ட நாயனாராக உருவெடுக்கிறார்.

இதே போல வேறொருவரையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது அவர் மனைவி கூறிய வார்த்தைதான். மனைவி மீது அதீத காதல் அவருக்கு. ஒரு நாள் கூட, அல்லது ஒரு இரவு கூட மனைவியை பிரிந்து இருக்க முடியாது. ஒரு முறை மனைவி அவருடைய பெற்றோர்களில் ஒருவருடைய திதிக்காக பிறந்த வீடு சென்றிருக்கிறார். அன்று இரவு இவர் மனைவியைத்  தேடிக்கொண்டு செல்கிறார். வழியில் ஒரு ஆற்றினைத் தாண்ட வேண்டும், நதியில் ஏதோ மிதக்கிறது,அதை மரக்கட்டை என்று நினைத்து நதியில் மிதக்கும் பிணத்தை பற்றிக்கொண்டு கடக்கிறார். அர்த்த ராத்திரியில் கதவைத்தட்டி மற்றவர்களை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து, ஓட்டிலிருந்து தொங்கும் பாம்பினை மரத்தின் விழுது என்று கருதி, அதை பற்றிக் கொண்டு மேல் ஏறி, ஓட்டினை பிரித்து உள்ளே குதிக்கிறார். அவரைக்  கண்ட அவர் மனைவிக்கு மிகுந்த கோபம் வந்து விடுகிறது. "சீ! ஒரு நாள் கூடவா உங்களால் நான் இல்லாமல் இருக்க முடியாது? அழியக்கூடிய இந்த உடலின் மேல் அப்படி என்ன விருப்பம்? இந்த பற்றினை பரம்பொருளான ராமன் மீது வைக்கக்கூடாதா?" என்ற அவளின் கேள்விதான் அவருடைய அகக்கண்களை திறக்கிறது.  ராம நாமத்தை விடாமல் ஜபித்து, ராமாயணத்தை ஹிந்தியில் ராம சரித மானஸ் என்னும் காப்பியமாக நமக்கு கொடுத்த துளசிதாஸரின் வாழ்க்கையை மாற்றியது மனைவியின் வசனங்கள்தான்.

மகான்களின் வாழ்க்கையில்தான் இம்மாதிரி நடக்குமா? இல்லை சாதாரண மனிதர்கள் வாழ்க்கையிலும் இம்மாதிரி சம்பவங்கள் நடந்து அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடலாம். அந்த இளம் வக்கீலுக்கு அதுதான் நிகழ்ந்தது. நாடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக தலைகாட்டிக் கொண்டிருந்தார். ஒரு முறை நண்பர்களோடு காரில் வந்து கொண்டிருந்த பொழுது அவர் அப்போதைய பத்திரிகைகளை கேலி செய்து ஏதோ கூறியிருக்கிறார். உடனே அவர் நண்பர் ஒருவர்,"எல்லோரையும் கிண்டல் செய்கிறாய். கேலி செய்வது எளிது.  இந்த அம்சங்கள் இல்லாமல் ஒரு பத்திரிகை ஆரம்பித்து, உன்னால் வெற்றிகரமாக நடத்த முடியுமா?" என்று கேட்டிட்டிருக்கிறார்.
"அப்படி நடத்தி காண்பித்தால் என்ன தருவாய்? "
"ஐம்பது ரூபாய் தருகிறேன்"
"நான் நடத்தி காண்பிக்கிறேன்" என்று நண்பரிடம் சவால் விட்டு ஐம்பது ரூபாய்க்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை  ஐம்பதாவது ஆண்டான பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்திரிகை எது என்று யூகித்திருப்பீர்களே.. ஆமாம், துக்ளக் தான் அந்த பத்திரிகை.













Tuesday, December 24, 2019

மசாலா சாட் - 14

மசாலா சாட் - 14

இந்த முறை என்ன பதிவிடலாம் என்று யோசித்த பொழுது இரண்டு பேர் அதற்கு வழி காட்டினார்கள். முதலில் திரு. வெங்கட், அவர் தன் 17,டிசம்பர் பதிவில் இனி நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழக தினமாக கொண்டாட தமிழக அரசு முடிவு  செய்திருப்பதை  குறிப்பிட்டிருந்தார். எனக்கு என்னவோ அது தேவையில்லாத செயல் என்று தோன்றுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளை 'மெட்ராஸ் டே'  என்று கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட பொழுது மெட்ராஸ் ராஜதானி என்றழைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் நாட்டில் தமிழகம்(அப்போதைய சென்னை), கர்னாடகா(அப்போதைய மைசூர்), கேரளா, ஆந்திரா எல்லாமே இணைந்திருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது  ஆந்திரா, கர்நாடகா, போன்றவை தமிழகத்திலிருந்து பிரிந்து புது மாநிலமாக உருவானதால் நவம்பர் ஒன்றாம் தேதியை அந்தந்த மாநிலங்கள் கொண்டாடுவதில் ஒரு பொருள் உண்டு. நாம் அப்படியேதானே இருக்கிறோம்? எதற்கு தமிழ் நாடு தினம்? ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். "தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு உலக தொலைக்காட்சியில் முதன் முதலாக..."என்று ஏதாவதொரு போணியாகத திரைப்படத்தைப்  பார்க்கலாம். இதைத்தவிர வேறு என்ன லாபம்?  என்று யாராவது கூறுங்களேன்.



அதன் பிறகு சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் தன் 'வெண்டைக்காய் பிட்லை' பதிவில் காத்திருப்பதை பற்றி எழுதியிருந்த விஷயம் என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது.

காத்திருத்தலோடு மிகவும் சம்பந்தப்பட்டது காதல். காதலைப் பற்றி பாடியவர்கள் எல்லோரும் காத்திருத்தலைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள் பாரதி உட்பட.  பாலகுமாரனின்
உனக்கென்ன சாமி, பூதம்
கோவில் பூஜை
ஆயிரம் ஆயிரம்
வலப்பக்கத்து மணலை
இடப்பக்கம் இரைத்திரைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே!
நாளையேனும் மறக்காமல் வா
என்னும் புதுக்கவிதை பெரிதும் கொண்டாடப்பட்ட ஒன்று.

இந்த அவஸ்தை எல்லாம் வேண்டாம் என்று துறவறம் பூண்ட ஒருவர் உண்டு. அவர் இளைஞராக இருந்த பொழுது ஒரு நாள் தன் அம்மாவிடம்,"பசிக்கிறது அம்மா, சாதம் போடு" என்றார். அவர் அம்மா," இப்பொழுதுதான் சாதத்தை வடித்து இறக்கியிருக்கிறேன், சாதம் உலைப்புர வேண்டும்,ஒரு பத்து நிமிடம் காத்திரு" என்கிறாள். இந்த வார்த்தைகள் அவருள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. " எனக்கு இப்போது பசிக்கிறது, சாப்பிட வேண்டும், ஆனால் அம்மாவோ பத்து நிமிடம் காத்திரு என்கிறாள், நான் இந்த லோகாயுத வாழ்க்கையில் தொடர்ந்து இருந்தேன் என்றால் எத்தனை விஷயங்களுக்கு எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?" என்று நினைத்த அவர் வீட்டை துறந்து சென்று விடுகிறார். அவர்தான் சதாசிவ ப்ருமேந்திரர் ஆக பரிணமித்தார் .



நம்முடைய புராணத்தில் காத்திருப்பிற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
கடோபநிஷத் பிறந்ததே இந்த காத்திருப்பால்தானே? ஒரு ரிஷி குமாரனாக பிறந்த நசிகேதஸ் தன்னுடைய தந்தை அவர் செய்த யாகத்தில் பால் வற்றிய பசு போன்ற உபயோகம் அற்ற பொருள்களை தானம் செய்வதை பார்த்து, அவரிடம், "எதற்காக இந்த தானங்கள்?" என்று கேட்கிறான். அவர் "நாம் வேண்டியதைப் பெற" என்கிறார். என்னை யாருக்கு தானம் கொடுக்கப் போகிறீர்கள்?" என்று மீண்டும் மீண்டும் கேட்கிறான். எரிச்சல் அடைந்த அவர்,"உன்னை எமனுக்கு தானம் கொடுக்கிறேன்" என்று கூறி விடுகிறார். நசிகேதஸ் அவர் தந்தையை வற்புறுத்தி தன்னை எமனுக்கு தானம் கொடுக்கச் செய்கிறான்.  அவனுடைய தந்தை அப்படியே செய்ய, அவன் எமலோகம் சேர்ந்து விடுகிறான். அவனுடைய ஆயுள் முடியாததால், அவனை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றனர். அவனோ,தான் எமனை காணாமல் போக மாட்டேன் என்று எமனுடைய அரண்மனை வாசலிலேயே காத்திருக்கிறான். மூன்று நாட்கள் காத்திருந்த பின்னரே எமனுக்கு இந்த விஷயம் தெரிகிறது. ஒரு அந்தணச் சிறுவனை மூன்று நாட்கள் காக்க வைத்து விட்டோமே என்று பதறி ஓடி வரும் எமதர்ம ராஜா அவனுக்கு மூன்று வரங்கள் தர முன் வருகிறான். ஆனால் நசிகேதஸோ, இக லோக சுகங்களைத்தாண்டி ஆன்மா என்பது என்ன? மரணம் என்றால் என்ன? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே ஆர்வம் காட்டி அதை தெரிந்து கொள்கிறான். எமன் நசிகேதஸுக்கு செய்த உபதேசங்களே கடோபநிஷத் ஆகும். 


காத்திருந்து பயனடைந்த இரண்டு ராமாயண கதா பாத்திரங்கள் அகலிகையும், சபரியும். அகலிகையாவது தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறாள். சபரிக்கோ ராமன் யார் என்று தெரியாது, தன்னுடைய குருவின் வாக்கை நம்பி ராமன் ஒரு நாள் நிச்சயம் வருவான் என்று  காத்திருந்த அவளுடைய குரு பக்தியும், அசையாத நம்பிக்கையும் காத்திருத்தல் என்பதற்கு முழுமையாக நியாயம் செய்கின்றன.

இதற்கு மாறாக தன் கணவனால் தன்னிடம் அளிக்கப்பட்ட முட்டை பொரியும் வரை காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு அதை உடைத்து விடுகிறாள்  காஷ்யபரின் மனைவி வினதை. அதனால் அதிலிருந்து வெளி வந்த அருணன்(சூரிய பகவானின் தேரோட்டி) என்னும் பறவை ஊனமாக பிறக்கிறது. தன் தாயாரின் அவசர புத்தியே இதற்கு காரணம் என்று கோபம் கொண்ட அருணன் அடிமையாக போகும்படி தன் தாயை சபிக்கிறார். அதன் விளைவாகவே காஷ்யபரின் மற்றொரு மனைவியாகிய கத்ருவுக்கு அடிமையாகிறாள் வினதை.


சிவன் கோவில்களில் சிவ பெருமானுக்கு முன்  அமர்ந்திருக்கும் நந்தி கூட காத்திருப்பதைத்தான் குறிக்கிறது என்பார்கள். ஜீவாத்மாவைக் குறிக்கும் நந்தி பரமாத்மாவோடு ஒன்றும் நோக்கத்தோடு ஒருமுகப்பட்ட சிந்தனையோடு காத்திருப்பதாக சொல்வதுண்டு.

நம் புராணங்களில் தவம் புரிபவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் புரிந்தார்கள் என்று வருவது கூட, ஒரு நல்ல விஷயத்திற்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறதோ?

இவை அத்தனையையும் சொல்லிவிட்டு 'THEY ALSO SERVE WHO STAND AND WAIT' என்னும் பாரடைஸ் லாஸ்டில் வரும் மில்டனின் புகழ் பெற்ற வாசகத்தை சொல்லாவிட்டால் இந்த பதிவு முடிவு பெறாது.