கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 30, 2023

Mrs Chatterjee vs Norway(திரை விமர்சனம்)

 Mrs Chatterjee vs Norway

(திரை விமர்சனம்)


ராணி முகர்ஜி முக்கிய ரோலில் நடித்து, ஆஷிமா சிப்பெர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். உண்மை சம்பவங்களை அடிபடையாகக் கொண்ட கதை.

நார்வேயில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியினர் அனிருத்தோவும், தீபிகாவும். அவர்களுக்கு சுபா என்னும் மகனும், சுசி என்னும் ஐந்து மாத பெண் குழந்தையும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் நார்வீஜிய குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினர்கள் திடீரென்று ஒரு நாள் தீபிகா,அனிருத்தாவின் வீட்டில் குழந்தைகள் வளருவதற்கான சரியான சூழல் இல்லை கூறி குழந்தைகளை தூக்கிச் சென்று விடுகின்றனர். அதற்கு காரணமாக அவர்கள் “தீபிகா குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுகிறாள் அது ஆரோக்கியமான பழக்கம் கிடையாது, அனிருத்தா வீட்டு வேலைகளில் எந்த உதவியும் செய்வது கிடையாது, சுபாவுக்கு ஆடிஸம் பாதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது ஆனால் அதை குணப்படுத்த எந்த நடவடிக்கையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை” என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். அவர்களுக்காக வாதாடிய இந்திய வக்கீல், முதலில் ஜெயித்தாலும், அவர் இந்தியராக இருப்பதால் இந்த கேஸை உணர்வு பூர்வமாக அணுகுகிறார் என்று ஸ்டே ஆர்டர் வாங்குகிறது குழந்தைகள் நல வாரியம். அதற்குப் பிறகு அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு வக்கீலை அரசாங்கமே நியமிக்கிறது. அந்த சமயத்தில் குழந்தைகள் நல வாரியம் என்ற போர்வையில் இப்படி அப்பாவி தம்பதியரிடமிருந்து குழந்தைகளை பறித்து, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்று விடுகிறார்கள், அரசாங்கம் நியமிக்கும் வக்கீலும் அதன் கையாள் என்ற விவரங்கள் அவளுக்குத் தெரிய வருகின்றன. ஒரு கட்டத்தில் அவள் கணவனே அவளுக்கு எதிராக திரும்பி விடுகிறான். தீபிகா குழந்தையை மீட்டெடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவளுக்கு வெற்றியை தந்ததா? என்பதே திரைப்படம்.  

தீபிகாவாக ராணி முகர்ஜி. அவரது பூனைக் கண்ணும், கரகர குரலும் எனக்குப் பிடிக்கும். கொஞ்சம் பூசினார்போல் ஆகி விட்டார், அதனால் என்ன? மத்தியத்தர குடும்பத் தலைவி பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது  அந்த தோற்றம். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நீதிபதியிடம் வார்த்தைக்கு ஒரு சார் போட்டு பேசும் இடத்தில் மனதை உருக்குகிறார். அவரது கனவராக அனிர்பன் பட்டாசார்யா, வெளியுறவுத் துறை அமைச்சராக நீனா குப்தா.

கதாநாயகன் பாத்திரம் சற்று வீக்காக இருக்கிறது. கதையில் நந்தினி என்றொரு பாத்திரம், அவள்தான் தீபிகாவிடம் குழந்தை நல வாரியம் என்ற பெயரில் நடக்கும் மோசடியை தெரியப்படுத்துகிறாள், ஆனால் அவள் பெயரைச் சொன்னாலே அநிருத்தோவுக்கு எல்லையில்லா கோபம் வருகிறது. தன் மனைவி அவளோடு பேசக்கூடாது என்று தீவிரமாக தடுக்கிறான். யார் இந்த நந்தினி? அவள் மீது அநிருத்தோவுக்கு ஏன் இத்தனை வன்மம்? என்பதெல்லாம் சரிவர தெளிவு படுத்தப்படவில்லை.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஏதோ புண்ணியம் செய்தவர்கள் என்று ஒரு எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு, வெளிநாட்டு வாழ்க்கையின் கடினமான இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கும் படம். இப்படி ஒரு கதையை எடுத்துக்கொண்டதோடு அதை சண்டை, நகைச்சுவை போன்ற இடைச்செருகல்கள் இல்லாமல், பெரும்பாலும் வெளிநாட்டில் படமாக்கப் பட்டிருந்தாலும் ஃப்ளாஷ் பேக்கில் கூட ஒரு டூயட்டை சேர்க்காமல் கதையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

இந்த ஒரு கேஸ் படமாகி விட்டது. இதைப்போல இன்னும் 150 வழக்குக\ள் நிலுவையில் இருக்கிறதாம். கேட்கவே சங்கடமாக இருக்கிறது.