கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, February 10, 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2020
தொடர்ச்சி  


ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் அமைக்கப் பட்டிருந்த சில ஸ்டால்கள். 
கீழே காணப்படுவது ஃபைபரினால் செய்யப்பட்டிருந்த பொம்மைகள். 




வாயிலில் வைக்கப்பட்டிருந்த சமயபுரம் மாரியம்மன்.


மேலும் சில ஃபாய்பர்  பொம்மைகள்.


அயோத்தியில் அமையப்போகும் ஸ்ரீராமர் கோயிலின் மாடல்.



கீழே காணப்படுவது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட பொம்மைகள். 


மாதா அமிர்தானந்தமயி மடங்களில் காணப்படும் பிரும்மஸ்தானங்களின் மாடல். 









வேலூரைசேர்ந்த ஜெய்சங்கர் என்னும் இவர் ஒரு பாசிட்டிவ் மனிதர்.  அனாதை பிணங்களை அடக்கம் செய்வதை ஒரு சேவையாக செய்து வருகிறாராம். பழைய பேப்பர் வியாபாரியாக இருந்த இவருக்கு தினமும் நிறைய அழைப்புகள் வருவதால் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டு விட்டாராம். திருமணமும் செய்து கொள்ளவில்லை. எல்லோரிடமும் உதவிகள் பெற்று அனாதை பிணங்களை அடக்கம் செய்வதாக கூறினார். 



கை குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இடம். 


இதோ இங்கே வருகிறது நம்ம ஏரியா! Multi cuisine food court!



அதிராவின் அரிசி அல்வா!





ஜவ்வரிசி கொழுக்கட்டை! முதல் முறையாக சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. பாண்டிச்சேரி ஸ்பெஷலாம். ஜவ்வரிசிக்குள் தேங்காயை வைத்து ஆவியில் வேகவைத்து, அதன் மீது பனங் கல்கண்டை தூவி தந்தார்கள். நன்றாக இருந்தது. 

Sunday, February 9, 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 2020



ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி இந்த வருடம் சென்னை வேளச்சேரியில் இருக்கும் குருநானக் கல்லூரியில் ஜனவரி 28ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 03ஆம் தேதி வரை நடந்தது.

தென்னகத்தில் இருக்கும் பல்வேறு ஆன்மீக இயக்கங்கள் தங்கள் அமைப்புகள் குறித்தும், அவை செய்யும் சேவை குறித்தும் காட்சி படுத்தியிருந்தார்கள். ருத்திராட்சம், ஆன்மீக புத்தகங்கள், விபூதி, குங்குமம், ஸ்படிக மாலை போன்றவை விற்பனைக்கிருந்தன. சென்ற வருடங்களை விட இந்த வருடம் கோ சம்ரக்ஷணை செய்யும் அமைப்புகள் நிறைய கண்ணில் பட்டன. சுத்தமான பசு நெய், கோமியம், வரட்டி, இயற்கை உரம் போன்றவை விற்கப்பட்டன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், தினத்தந்தி, தினமலர், குமுதம், ஆனந்த விகடன், தி ஹிந்து போன்ற ஊடகங்களும் ஸ்டால்கள் போட்டிருந்தன.  அவை தங்கள் யூ ட்யூபிற்காக கவரேஜ் செய்தன.

இவை தவிர இந்தியா போஸ்ட்டும் ஸ்டால் அமைத்திருந்தது. அதில் முன்னூறு ரூபாய்க்கு நம்முடைய ஃபோட்டோவோ, அல்லது நமக்கு பிரியமானவர்களின் புகைப்படமோ கொடுத்தால் உடனடியாக 10 ஸ்டாம்புகள் தயாரித்து கொடுப்பதாக சொன்னார்கள்.  நான் செய்து வரும் இலக்கிய பணிக்காக அரசாங்கமே என் தபால் தலையை வெளியிடலாம். அதனால் வேண்டம் என்று சொல்லி விட்டேன்.  ரூபாய் 65க்கு ராமாயண காட்சிகள் தபால் தலைகளாக வந்திருக்கின்றன. அவைகளை நாம் பயன் படுத்தலாம், யாருக்காவது பரிசளிக்கலாம், அல்லது அப்படியே சேமிப்பாகவும் வைத்திருக்கலாம். என் சகோதரி தன் பேரனுக்காக ஒன்று வாங்கினார். அதைப்போல சென்ற வருடத்தின் சிறப்பு நிகழ்வான அத்தி வரதரின் வருகையை முன்னிட்டு ஒரு சிறப்பு என்வெலப் கூட வெளியிடபட்டிருக்கிறது. அதையும் நாம் பயன் படுத்தலாம் அல்லது நினைவாக வைத்துக் கொள்ளலாம்.

Athi Varadhar envelope 
 


இந்த வருடம் ஆன்மீக கண்காட்சிக்காக எடுத்துக் கொண்ட பொருள் 'பெண்மையை போற்றுவோம்' அதனால் நம் தேசத்தில் வாழ்ந்த பெருமை மிகு பெண்களைப் பற்றிய ஓவியங்கள் நுழையும் பொழுது வரவேற்றன.  ஆரம்பத்தில் நுழை வாயிலில் வைத்திருந்த கண்ணகி சிலையை பின்னர் மத்தியில் வெளியேறும் வழியைப் பார்த்தவாறு மாற்றி விட்டார்கள். கண்ணகி சிலையில் முகத்தில் ஆக்ரோஷத்திற்கு பதிலாக சிரிப்பு!!



கண்காட்சியை தொடங்கி வைத்தது மாதா அமிர்தானந்தமயி. அன்று மேடையில் ஹிந்து ஆன்மீக, சேவை நிறுவனத்தின் தலைவி திருமதி.ராஜலக்ஷ்மி, பத்மா சுப்பிரமணியம், ஷீலா ராஜேந்திரன் என்று அனைவரும் பெண்கள்தான்.

கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய அமிர்தானந்தமயி அவர்கள் மலையாளத்தில் உரையாற்றியதை அவருடைய சீடர் ஸ்வாமிஜி ராமக்ரிஷ்ணானந்தபுரி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். ராஜலக்ஷ்மி அவர்களும், பத்மா சுப்பிரமணியம் அவர்களும் நீண்ட உரை நிகழ்த்தினார்கள். இதில் ராஜலக்ஷ்மி அவர்கள் மேலை நாட்டில் பெண்ணை வீக்கர் செக்ஸ் என்று கூறும் பொழுது, நம் நாட்டில் பெண்ணை சக்தி என்கிறோம் என்றார். பத்மா சுப்பிரமணியம் நம்முடைய ஹிந்து ஆன்மீக அமைப்புகள் செய்யும் சமூக சேவைகளை பட்டியலிட்டு பிரமிக்க வைத்தார். உதவி செய்து விட்டு அதனால் மதம் மாற்றுவது நம் நோக்கமல்ல,வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்னும் கொள்கையை நாம் பின்பற்றுவதால் நம்முடைய சேவைகளை நாம் பிரகடனப் படுத்திக்க கொள்வதில்லை என்றார்.  உண்மையில் இந்த கண்காட்சியில் சென்று பார்த்த பொழுதுதான் ஹிந்து அமைப்புகள் எத்தனையெத்தனை சேவைகளை சத்தம் போடாமல் செய்து கொண்டிருக்கின்றன என்பது புரிகிறது.



வருகை புரிந்த ஆயிரக்கணக்கானவர்களில் பெரும்பாலும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள். அல்லது பள்ளிக்குழந்தைகள். இளைஞர்களும், மத்திம வயதினரும் குறைவாகத்தான் இருந்தார்கள். இந்த வருடம் இதை தவற விட்டவர்கள், அடுத்த முறை கண்டிப்பாக வருகை தாருங்கள். ஒரு அருமையான, பெருமிதம் கொள்வீர்கள்.

கல்யாணமாலை நிகழ்ச்சிக்கான பேச்சரங்கம் சனி அன்று நடை பெற்றது. காலம்தோறும் பெண் என்பதில் பக்தியில் பெண் என்னும் தலைப்பில் டாக்டர்.சுதா சேஷய்யன் ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். குடும்பத்தில் பெண் என்பதைக் குறித்து திருமதி.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் 
பேசி கை தட்டல்களை அள்ளினார். அவரைத் தொடர்ந்து திருமதி.கவிதா ராமானுஜம் என்னும், மும்பையில் வருமானவரித்துறையில் உயரதிகாரியாக பணியாற்றும்  இளம் பெண், நிர்வாகத்தில் பெண் என்னும் தலைப்பில்  மேடைப் பேச்சில் ஜாம்பவான்களுக்கு ஈடு கொடுத்தார். இறுதியில் இலக்கியத்தில் பெண் என்பது பற்றி திருமதி பாரதி பாஸ்கர்,  நேரம் சற்று குறைவாக இருந்தாலும் உரையாற்றி அசர அடித்தார். மறக்க முடியாத மாலையாக அது அமைந்தது. 

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனோடும், பாரதி பாஸ்கரோடும் நானும் என் அக்கா பெண்ணும்.

மேலும் சில தகவல்களும் புகைப்படங்களும் அடுத்த பதிவில்.