கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 31, 2019

பேட்ட(விமரிசனம்)

பேட்ட(விமரிசனம்) 


கபாலியும், காலாவும் தந்த ஏமாற்றங்களுக்குப் பிறகு 'பேட்ட' பார்ப்பதில் கொஞ்சம் பயம் இருந்தது. நீலச்சட்டை வேறு தன் விமர்சனத்தில் கலாய்த்திருந்தார். மணிகர்ணிகா செல்லலாம் என்றேன், ஆனால் என் கணவருக்கு என்னவோ பேட்ட தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் ஒரு ரிஸ்க் எடுத்தோம்.

மலைவாச ஸ்தலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் வார்டனாக வந்து சேரும் முதல் காட்சியிலிருந்து, "போட்றா நம்ம பாட்டை.."என்று 'ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.." என்று ஆடும் இறுதி காட்சி வரை அவுட் அண்ட் அவுட் ரஜினி படம். எத்தனை நாட்களாயிற்று ரஜினியை இப்படி பார்த்து? 

கல்லூரியில் வம்பு செய்யும் பையன்களை அடக்குவது, மற்ற மாணவர்களோடு ஆட்டம் போடுவது, என்று சம்பவங்கள் எதுவும் இல்லாமல் டிரைலர் போல முதல் பாதி படம் ஓடுகிறது. இரண்டாவது பாதியில்தான் கதை துவங்குகிறது. முதல் பாதியில் ஆங்காங்கே அரசியல் பேசுகிறார். 

விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா,பாபி சிம்ஹா,ஒய்.ஜி.மகேந்திரன் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். இதில் பாபி சிம்ஹாவும், விஜய் சேதுபதியும் தவிர மற்றவர்கள் ஓரிரெண்டு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர். இயக்குனர் மகேந்திரனும் சில காட்சிகளில் வந்து இறந்து போகிறார்.

மற்ற படங்களைப் போல் இல்லாமல் பாபி சிம்ஹா ட்ரிம்மாக ஒரு கல்லூரி மாணவன் என்று சொல்லலாம் போல இருக்கிறார். ரஜினியின் தோழனாக சசிகுமார், உணர்ந்து, அழகாக பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார். விஜய் சேதுபதி நன்றாகத்தான் நடித்திருக்கிறார், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறாரோ? என்று தோன்றுகிறது. 

ரஜினியின் மனைவியாக வரும் திரிஷா, வரும் காட்சிகளிலெல்லாம் புடவை உடுத்தி, தலையை இழைத்து வாரி, பின்னலிட்டு குடும்ப பாங்காக வந்து பரிதாபமாக இறந்து போகிறார். வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் பஹுத் அச்சா ஹை!

இதற்கு முன் சில படங்களில் வந்திருந்தாலும், அவைகளைப் போல் இல்லாமல், கல்லூரியில் படிக்கும் பெண்ணின் தாயாராக இருந்தாலும் டி.எல்.ஜே. அணிந்து, வாலி படத்தை நினைவு படுத்தும்படியாக வரும் சிம்ரனுக்கு ஒரு 'ஓ' போடத்தோன்றுகிறது. ஆனால் மிக சொற்பமாகத்தான் வருகிறார் என்பது கொஞ்சம் வருத்தம்.  அவருக்கும் சரி, ரஜினிக்கும் சரி இளமையை மீட்டுத் தந்திருப்பது ஒப்பனையாளரா? போட்டோஷாப்பா? எதுவாக இருந்தாலும் குட் ஜாப்!

முழு க்ரெடிட் கொடுக்கப்பட வேண்டிய இன்னும் இருவர், இசையமைத்திருக்கும் அனிருத்தும், காமிராவை கையாண்டிருக்கும் திருவும். 'ஊலாலா.' 'மரண மாஸ்..' போன்ற பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார் அனிருத் என்றால், காட்சிக்கேற்ற கோணம், லைட்டிங் இவற்றில் 'திரு'வின் பணி திருத்தம்!

தனக்கே உரிய ஸ்பெஷல் டச்சோடு இறுதி காட்சியை வைத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. வயலென்ஸ் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், "நான் வீழ்வேன் என நினைத்தாயோ?" என்றபடி அறிமுகமாகும் ரஜினியை தூக்கி நிறுத்தி விட்டார். 

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் கட்டு பிரியாணி.