கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 1, 2021

பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்

பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்


ஒரு முறை கணவராகிய திருமால் மீது ஊடல் கொண்ட திருமகள் கீழே இறங்கி வந்து நின்றதால் இந்த இடம் திரு நின்றவூர் எனப்படுகிறது. 

தன்  மகளாகிய ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி மீண்டும் கணவரோடு சேர்த்து வைக்க சமுத்திர ராஜன் முயல்கிறார். "நீ என்னுடைய மகள் இல்லையம்மா, எண்ணெய் பெற்ற தாயாரே நீதான்" என்று புகழ்ந்ததில் மனம் மாறி தாயார் வைகுந்தம் திரும்புகிறாள். அதனால் இங்கு உறையும் தாயாருக்கு 'என்னைப் பெற்ற தாயார்' என்று வாத்சல்யமான பெயர். பெயருக்கு ஏற்றாற்போல் குபேரன் இழந்த செல்வங்களை அவனுக்கு மீட்டுத் தந்த வைபவ லட்சுமி.  தாயார் இத்தனை கருணையோடு இருக்கும் பொழுது, பெருமாள் பக்தர்களுக்கு அருள் செய்யும் பக்தவத்சல பெருமாளாகத்தானே இருக்க முடியும்?


சிறிய கோவில். கொடிமரத்தையும், பலி பீடத்தையும் தாண்டி, நான்கு படிகள் ஏறி கருடனை வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீதேவி,பூதேவி தாயார்களோடு நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழும் வதனத்தோடு நம் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார் பக்தவத்சல பெருமாள். உற்சவர் பக்தராவி பெருமாள் என்று அழைக்கப் படுகிறார். 


எல்லா வைணவக்  கோவில்களையும் போல ஆஞ்சநேயர், ஆண்டாள் சன்னதிகளோடு மற்ற கோவில்களில் காணப்படாத அதிசயமாக ஆதிசேஷனுக்கு தனி சந்நிதி இருக்கிறது. அங்கு புதன் கிழமைகளில் நெய் விளக்கேற்றி பால் பாயசம் நைவேத்தியம் செய்ய ராகு,கேது, தோஷங்களும், சர்ப்ப தோஷமும் நீங்குமாம். ஆதிசேஷனுக்குரிய ஆயில்ய நட்சத்திரத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் வயிற்று வலி, பல் வலி, கால் வலி போன்ற உபாதைகள் நீங்குமாம். 


108 வைணவ திருப்பதிகளுள் 58வது திருப்பதி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இந்த வழியே சென்ற திருமங்கையாழ்வார் இந்த கோவிலில் குடி கொண்டிருக்கும் பெருமாளை பாடாமல் தாண்டிச் சென்று விடுகிறார். தாயார் அவரிடம் பாடல் பெற்று வரும்படி பெருமாளை பணிக்கிறார். பெருமாள் அவரைத்  தேடி செல்வதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை தாண்டி, மாமல்லபுரம் சென்று விடுகிறார். அவரிடம் பெருமாள் பாடலை வேண்ட, அவர் ஒரே ஒரு பாடல் எழுதிக் கொடுக்கிறார். அதை பெருமையோடு தாயாரிடம் காட்ட, தாயாரோ,"ஐயோ இவ்வளவு அசடாகவா இருப்பீர்கள்? எல்லா தலங்கள் மேலும் பத்து பாடல்கள் இயற்றும் கலியன், இந்தக் கோவில் மீது ஒரே ஒரு பாடல்தான் எழுதிக் கொடுத்திருக்கிறான், நீங்களும் மறு பேச்சில்லாமல் வாங்கி கொண்டு வந்திருக்கிறீர்கள்.. உங்களை என்ன செய்தால் தேவலை? கலியனிடமிருந்து மிச்ச ஒன்பது பாசுரங்களையும் வாங்கி வாருங்கள்" என்று பெருமாளை துரத்த, அப்பாவி பெருமாள் திருமங்கை மன்னனைத் தேடிச் செல்லும் பொழுது அவர் திருக்கண்ணமங்கை சென்று விடுகிறார். அங்கு பக்தவத்சல பெருமாள் நிற்பதை ஓரக்கண்ணால் பார்த்து விட்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் மங்களாசாசனம் செய்தாராம். 

பக்தவத்சலப்பெருமாளையும், என்னைப் பெற்ற தாயாரையும் வணங்கி நம் விருப்பங்கள் ஈடேறப்  பெறுவோம்.