கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 1, 2021

பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்

பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்


ஒரு முறை கணவராகிய திருமால் மீது ஊடல் கொண்ட திருமகள் கீழே இறங்கி வந்து நின்றதால் இந்த இடம் திரு நின்றவூர் எனப்படுகிறது. 

தன்  மகளாகிய ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி மீண்டும் கணவரோடு சேர்த்து வைக்க சமுத்திர ராஜன் முயல்கிறார். "நீ என்னுடைய மகள் இல்லையம்மா, எண்ணெய் பெற்ற தாயாரே நீதான்" என்று புகழ்ந்ததில் மனம் மாறி தாயார் வைகுந்தம் திரும்புகிறாள். அதனால் இங்கு உறையும் தாயாருக்கு 'என்னைப் பெற்ற தாயார்' என்று வாத்சல்யமான பெயர். பெயருக்கு ஏற்றாற்போல் குபேரன் இழந்த செல்வங்களை அவனுக்கு மீட்டுத் தந்த வைபவ லட்சுமி.  தாயார் இத்தனை கருணையோடு இருக்கும் பொழுது, பெருமாள் பக்தர்களுக்கு அருள் செய்யும் பக்தவத்சல பெருமாளாகத்தானே இருக்க முடியும்?


சிறிய கோவில். கொடிமரத்தையும், பலி பீடத்தையும் தாண்டி, நான்கு படிகள் ஏறி கருடனை வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீதேவி,பூதேவி தாயார்களோடு நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழும் வதனத்தோடு நம் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார் பக்தவத்சல பெருமாள். உற்சவர் பக்தராவி பெருமாள் என்று அழைக்கப் படுகிறார். 


எல்லா வைணவக்  கோவில்களையும் போல ஆஞ்சநேயர், ஆண்டாள் சன்னதிகளோடு மற்ற கோவில்களில் காணப்படாத அதிசயமாக ஆதிசேஷனுக்கு தனி சந்நிதி இருக்கிறது. அங்கு புதன் கிழமைகளில் நெய் விளக்கேற்றி பால் பாயசம் நைவேத்தியம் செய்ய ராகு,கேது, தோஷங்களும், சர்ப்ப தோஷமும் நீங்குமாம். ஆதிசேஷனுக்குரிய ஆயில்ய நட்சத்திரத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் வயிற்று வலி, பல் வலி, கால் வலி போன்ற உபாதைகள் நீங்குமாம். 


108 வைணவ திருப்பதிகளுள் 58வது திருப்பதி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இந்த வழியே சென்ற திருமங்கையாழ்வார் இந்த கோவிலில் குடி கொண்டிருக்கும் பெருமாளை பாடாமல் தாண்டிச் சென்று விடுகிறார். தாயார் அவரிடம் பாடல் பெற்று வரும்படி பெருமாளை பணிக்கிறார். பெருமாள் அவரைத்  தேடி செல்வதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை தாண்டி, மாமல்லபுரம் சென்று விடுகிறார். அவரிடம் பெருமாள் பாடலை வேண்ட, அவர் ஒரே ஒரு பாடல் எழுதிக் கொடுக்கிறார். அதை பெருமையோடு தாயாரிடம் காட்ட, தாயாரோ,"ஐயோ இவ்வளவு அசடாகவா இருப்பீர்கள்? எல்லா தலங்கள் மேலும் பத்து பாடல்கள் இயற்றும் கலியன், இந்தக் கோவில் மீது ஒரே ஒரு பாடல்தான் எழுதிக் கொடுத்திருக்கிறான், நீங்களும் மறு பேச்சில்லாமல் வாங்கி கொண்டு வந்திருக்கிறீர்கள்.. உங்களை என்ன செய்தால் தேவலை? கலியனிடமிருந்து மிச்ச ஒன்பது பாசுரங்களையும் வாங்கி வாருங்கள்" என்று பெருமாளை துரத்த, அப்பாவி பெருமாள் திருமங்கை மன்னனைத் தேடிச் செல்லும் பொழுது அவர் திருக்கண்ணமங்கை சென்று விடுகிறார். அங்கு பக்தவத்சல பெருமாள் நிற்பதை ஓரக்கண்ணால் பார்த்து விட்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் மங்களாசாசனம் செய்தாராம். 

பக்தவத்சலப்பெருமாளையும், என்னைப் பெற்ற தாயாரையும் வணங்கி நம் விருப்பங்கள் ஈடேறப்  பெறுவோம். 



25 comments:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. அழகான கோவிலைப்பற்றிய விளக்கங்கள் படிக்கவே மனதில் பக்தி கலந்த ஆனந்தம் மேலிடுகிறது. படங்கள் அனைத்தும் அருமை. அழகான கோபுர தரிசனம் கண்டு கொண்டேன். அன்னையின் "என்னைப் பெற்ற தாயார்" என்ற பெயரே ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

    திருமங்கையாழ்வரிடம் பெருமாள் கேட்டுப் பெற்ற பாடல்கள் கதை இனிமையாக உள்ளது. அறிந்து கொண்டேன். இறைவனால் ஆட்கொள்ளப்பட அவர் எத்தனை பிறவிகளில் தவமியற்றி இருக்க வேண்டும். இந்தக் கோவில்களை எப்போது பார்ப்போம் என நினைக்கிறேன். "பக்தவத்சல பெருமாள்" பரிவுடன் அழைக்க வேண்டும். அதற்கு "என்னைப் பெற்ற தாயாரும்" இசைய வேண்டும். விரைவில் தரிசிக்க சமயம் கிடைக்க வேண்டுமென பயபக்தியுடன் வேண்டிக் கொள்கிறேன். தங்களின் அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. முன்பு ஒரு முறை திருநின்றவூர் சென்ற பொழுது, ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் மட்டும் சென்று விட்டு வந்து விட்டோம். இந்த முறைதான் பெருமாளின் திருவுளம், தரிசனம் கிடைத்தது. நன்றி.

      Delete
  2. கோவிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.  நானும் தரிசித்துக் கொண்டேன்.  எனக்கும் என் பிரார்த்தனையை தாயார் நிறைவேற்றிக் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நிறைவேற்றித் தருவாள்.

      Delete
  3. தாயார் அனைவருக்கும் அவரவர் விருப்பத்தை நிறைவேற்றித் தரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்னமோ தெரியலை, இந்த ஊர்க் கோயில்களுக்குப் போகவே இல்லை. திருவள்ளூர் போனோம், 2,3 தரம். அரக்கோணம் தாண்டித் திருவாலங்காடு போனோம். இந்த ஊரைத் தாண்டிக்கொண்டு சென்றிருக்கோம். இங்கே இறங்கிப் பார்த்ததே இல்லை. படங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தரிசனம் கிடைக்கும்,கவலைப் படாதீர்கள்.

      Delete
  4. கமென்டே காணாமல் போச்சே! செல்லுமிடமெல்லாம் ரோபோ தொந்திரவு. பேசாமல் மாடரேஷனில் வைங்க. ரோபோ வரதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ரோபோ ரோபோ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.. எனக்கு புரியவில்லை. எனக்குத் தெரிந்த ரோபோ,ரோபோ சங்கர்(காமெடியன்)

      Delete
    2. நான் ஒரே ஒரு முறைதான் மாடரேஷனில் வைத்தேன், அப்போது என் பின்னூட்டத்தை காணோமே? என்று சிலர் கம்ப்ளெய்ண்ட்(வருவதே சிலர்தான்). எனவே எடுத்து விட்டேன்.

      Delete
  5. ஒரு கமென்டுக்கு மேல் ஏத்துக்காதா உங்க வலைப்பக்கம். இத்தனை நேரம் ஐந்தாறு கொடுத்தும் போகலை.

    ReplyDelete
    Replies
    1. மூன்று கமெண்டுகள் வந்திருக்கின்றன.

      Delete
    2. மிச்சமெல்லாம் எங்கே? கோமதியின் பதிவில் 2,3 கருத்துரை சொல்லியும் எதுவும் வரலை. முன்னரும் இப்படி ஆச்சு! இத்தனைக்கும் அவங்க மாடரேஷன்ல வைச்சிருக்காங்க. அப்போவும் ரோபோ வந்தது! என்னவோ போங்க! தொந்திரவு தாங்கலை.

      Delete
  6. கோவிலைக் குறித்த விடயங்கள் சுவாரஸ்யம் படங்கள் நன்று.

    ReplyDelete
  7. அந்த ஊரிலேயே இராமர் கோவிலைத் தரிசனம் செய்தீர்களா? கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்திருப்பீர்கள்.

    ReplyDelete
  8. அழகான கோவில். கோவில் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. கோவில் பற்றிய தகவல்கள் அருமை...

    ReplyDelete
  10. கோவில் பற்றி மிகச் சிறப்பான தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  11. பார்க்கவேண்டிய கோயில். பதிவு மூலமாக அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. எபியில் நானெழுதிய கதை ஒன்று நினைவுக்கு வந்து இங்கும் நினைவு படுத்திப் பதிந்தேன். உங்களுக்கு வந்து சேரவில்லை போலிரூக்கு.

    ReplyDelete
  13. அட பானுக்கா திருநின்றவூர்! நான் அடிக்கடி சென்ற கோயில். என்னைப் பெற்றத் தாயார். இப்போதும் அங்கு கொடுத்த ஒரு சார்ட் இருக்கிறது. மிகவும் பிடித்த சன்னிதி

    ஹ்ருதயாலீஸ்வரர் கோயிலும் போயிருக்கிறென்.. நல்லாருக்கு பதிவு

    கீதா

    ReplyDelete