கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 26, 2021

ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர்

 ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர் 


கோவிலின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. தான் நினைத்தபடியே சிறப்பாக கோவில் அமைந்து விட்டதில் மகிழ்ந்த மன்னன் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து விட்டு மகிழ்ச்சியோடு  உறங்கச் சென்றான் பல்லா அரசனான ராஜ சிம்மபல்லவன்.  அவன் கனவில் வந்த சிவ பெருமானோ அவன் கும்பாபிஷேகத்திற்கு குறித்திருக்கும் நாளில் பூசலார் என்னும்  தன்னுடைய பக்தன் திருநின்றவூரில் கட்டியிருக்கும் கோவிலில்  தான் எழுந்தருளப் போவதால் இங்கே காஞ்சிபுரத்தில் அவன் கட்டியிருக்கும் கோவிலில் அன்று எழுந்தருள இயலாது என்று கூறி விடுகிறார். 

மன்னனுக்கு அதிர்ச்சி. அரசனான தான் கட்டிய கோயிலை விட சிறப்பாக வேறு ஒரு கோவிலா? அப்படி என்ன சிறப்பு அந்தக் கோவிலில்? என்று அதைக் காண விரும்பி திருநின்றவூருக்கு வருகிறார். எதிர்பாராமல் மன்னனைக் கண்ட ஊர் மக்கள் திகைக்கிறார்கள். பூசலார் கட்டிய கோவில் எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டதும் மேலும் திகைக்கிறார்கள். பூசலார் கோவில் கட்டியிருக்கிறாரா? இது என்ன புது கதை? கோவில் காட்டும் அளவிற்கு எந்த வசதியும் இல்லாதவராயிற்றே?    ஊருக்கு வெளியே இருக்கும் இலுப்பை மரக்காட்டில் காட்டில் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அவர் எங்கே எப்படி  கோவில் கட்டுவார்? என்று ஊர் மக்கள் பயத்தோடும், தயக்கத்தோடும், கூற மன்னன் அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று அவரைத் தேடிச் செல்கிறான். அங்கு ஊர் மக்கள் சொன்னபடி கண்களை மூடி  அமர்ந்திருக்கிறார் பூசலார். மன்னர் வந்திருப்பதைக் கூறி அவரை உலுக்கி எழுப்புகின்றனர் மக்கள். 

பூசலாரைப் பார்த்ததுமே அவர் சாதாரண மனிதர் இல்லை என்பது புரிந்து விட, அவரைப் பணிந்து," ஐயா, தாங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கே? நீங்கள் நாளை அதற்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களாமே? நான் கட்டிய கோவிலை புறக்கணித்து, உங்களுடைய கோவிலில் எழுந்தருளுவதில்தான் சிவ பெருமானுக்கு விருப்பம், நான் அந்தக் கோவிலை கான் முடியுமா?" என்று வினவ, பூசலார் விக்கித்துப் போய் விடுகிறார். கண்கள் நீரைப் பெருக்க, "நான் கோவில் கட்டியது என் மனதில் அல்லவா? அதை என் சிவன் ஏற்றுக் கொண்டு விட்டாரா?" என்று புளகாங்கிதத்துடன் தான் மனதில் கோவில் கட்டிய விவரத்தைக் கூற, மானசீகமாக கட்டிய கோவிலை இறைவன் அங்கீகரிக்கிறார் என்றால் அவர் எத்தனை விசுவாசத்தோடு அதை செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மன்னன் அவர் விரும்பிய வண்ணம் ஒரு கோவிலை நிர்மாணித்து தருகிறான். பூசலார் தன்  இதயத்தில் கோவில் கட்டியதால், இக்கோவில் ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் என்று அறியப் படுகிறது. சென்னையிலிருந்து முப்பத்திமூன்று கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. சிறிய கோவில்தான். கிழக்கே பார்த்த ஸ்வாமி சன்னதியும், கருவறைக்குள்ளேயே பூசலாரின் சிலையும் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. மரகதாம்பாள் என்ற திரு நாமத்தோடு தனி சன்னிதியில்  தெற்கு நோக்கி குடிகொண்டிருக்கும் அம்பிகை.  மூலவர் ஹ்ருதயாலீஸ்வரர் என்பதால் இங்கு வந்து வழிபட இதயக் கோளாறுகள் சரியாகும் என்பது நம்பிக்கை. 

தொண்டை மண்டல கோவில்களுக்கே உரிய கஜபிருஷ்ட விமானம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி,  மஹா விஷ்ணு, மற்றும் பிரும்மா.  பிரதான வாயிலின் இரு புறங்களிலும் சூரிய சந்திரர். நவகிரக சந்நிதியை ஒட்டி பல்லவ ராஜாவான ராஜசிம்மனுக்கும் சிலை இருக்கிறது. வெளி பிரகாரத்தில் மேற்கு வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் விநாயகர் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார். 
ஒரு முறை சென்று வணங்கிவிட்டு வாருங்களேன். 17 comments:

 1. சென்ற வாரம்தான் என் நண்பர் பாலாஜி -திருநின்ற ஊரில் குடி இருப்பவர் - என்னைப் பார்க்க வந்தார்.  அங்கு வீடு வாங்குவது குறித்தெல்லாம் பேசிக் சென்றார்.  அப்போது கோவில் பற்றியும் பேச்சு வந்தது. 

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் பல வருடங்களுக்கு முன் சென்ற பொழுது திருநின்றவூர் ஒரு கிராமமாக இருந்தது. திருநின்றவூர் என்று கேட்டபொழுது யாருக்கும் தெரியவில்லை. திண்ணனூர் என்று சொல்ல வேண்டியிருந்தது. இப்போது சிறு டவுனாகி விட்டது. மேம் பாலம் வந்து விட்டது. திருநின்றவூர் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். கோவிலும் முன்பை விட சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. 

   Delete
 2. இந்தக் கோயில் என்னமோ போக வாய்ப்புக் கிட்டவே இல்லை. இத்தனைக்கும் அம்பத்தூரில் இருந்தோம். அப்பொக் கூடப் பல கோயில்கள் போனோம். இங்கே போகலை.

  ReplyDelete
  Replies
  1. ஒரு கோவிலுக்கு நாம் செல்ல  கோவிலில் இருக்கும் தெய்வம் நம்மை அழைக்க வேண்டும் என்பார்கள். நானும் ஸ்ரீரங்கம் வரும்பொழுதெல்லாம் கோவிலடி சென்று அப்பக்குடத்தானை சேவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனோ அந்த எண்ணம் ஈடேறவில்லை. சிறு வயதில் சென்றிருக்கிறேன். 

   Delete
  2. எங்களுக்கும் அந்த வழியாகவே போய் வந்தும் அப்பக்குடத்தானைத் தரிசிக்கும் பேறு கிட்டவில்லை.

   Delete
 3. நான் இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன் (அன்று ப்ரதோஷம் வேறு.... ஆனால் பக்தவத்சலப் பெருமாளை தரிசனம் செய்ய வந்துவிட்டு, இந்தக் கோவிலுக்கு நான் அழைத்துச் சென்றதை மனைவி ரசிக்கவில்லை)

  ReplyDelete
  Replies
  1. ஆனால் பக்தவத்சலப் பெருமாளை தரிசனம் செய்ய வந்துவிட்டு, இந்தக் கோவிலுக்கு நான் அழைத்துச் சென்றதை மனைவி ரசிக்கவில்லை//ஓ..!! நாங்கள் பக்தவத்சல பெருமாளையும் சேவித்தோம்.  

   Delete
 4. ஹிருதயம் - (இதயம்) என்பது சுத்தமான மலையாள வார்த்தை ஆயிற்றே...

  தரிசனம் நன்று.

  ReplyDelete
  Replies
  1. ஹ்ருதயம் என்பது சமஸ்க்ருத வார்த்தை. மலையாளத்தில் நிறைய சமஸ்க்ருத சொற்கள் உண்டே. 

   Delete
 5. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை பூசலார் நாயனாரின் கதை அருமை. அவர் பக்திக்கு முன் இறைவன் முதலில் கட்டுப்பட்டது சிறப்புத்தானே... கோவில் படங்கள் நன்று.

  சென்னையிலிருக்கும் போது திருநின்றவூரில் இருக்கும் உறவினரை ஒரிரு முறை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது இந்த கோவிலுக்கு போனோமா என்பது நினைவிலில்லை. இப்போது தரிசித்து கொண்டேன். சமயம் வாய்க்கும் போது அவன் அழைக்க காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. பூசலாரின் பக்தியை சிறப்பிக்கவே எங்கும் நிறை பரம்பொருள் தன்னால் அரசன் கட்டிய கோவிலில் பிரவேசிக்க இயலாது என்று நாடகம் ஆகியிருக்கிறது. விரைவில் உங்களுக்கு இங்கு செல்ல இறைவன் அருளட்டும். 

   Delete
 6. வியாபார பயணத்தில் இந்த ஊரும் உண்டு...

  ReplyDelete
 7. அப்படியா? கோவிலுக்குச் சென்றிருக்கிறீர்களா?

  ReplyDelete
 8. பூசலாரைத் தொடர்பு படுத்தி திருநின்றவூரிலிருந்து காஞ்சி கைலாசநாதர் கோயில் சென்று வினோத அனுபவங்கள் பெறுவதாய் என் கதையொன்று எங்கள் பிளாக் கே.வா.போ. கதைப் பகுதியில் மூன்று பகுதிகளாக பிரசுரமாகியிருக்கிறது. ஜனவரி 28, 2020-ல் கதை துவங்குகிறது. இப்பொழுது அதை வாசித்துப் பார்த்தால் புது அனுபவமாய் இருக்கும். பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. படித்த நினைவு வருகிறது. என்றாலும் கதையின் தலைப்பு கூறினால் தேடுவது சுலபமாக இருக்கும். நன்றி.

   Delete
 9. பூசலார் கதை படித்த ஒன்று. கோவில் இது வரை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் பதிவு வழி கோவில் குறித்த தகவல்கள் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி.

  தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete
 10. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete