கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 6, 2022

தப்பிச்சேண்டா சாமி

 தப்பிச்சேண்டா சாமி

நாங்கள் பெங்களூர் வந்த புதிது, ஹொரமாவு என்னும் இடத்தில் இருந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகில் மெயின் ரோடில் ஒரு‌ கடையில் ஃப்ரெஷ் காய்கறிகள் புதன்கிழமையன்று வரும். நான் புதனன்று அங்கு சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பக்கத்தில் ஒரு கடையில் மங்கையர் மலர், சிநேகிதி போன்ற புத்தகங்களையும் வாங்கி வருவேன்.
எங்கள் அப்பார்ட்மெண்டிலேயே என் நாத்தனாரின் பெண்ணும் இருந்தாள். அவளுடைய ஸ்கூட்டரில் தான் செல்வேன். அப்பொழுது அங்கு அண்டர் பாஸ்(நாம் சப்வே என்பதை பெங்களூரில் அண்டர்பாஸ் என்கிறார்கள்) கட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான் எப்போதும் போல் ஒரு பெரிய கட்டைப் பை நிறைய காய்கறிகள் வாங்கி அதை ஸ்கூட்டியின் முன் பக்கத்தில் வைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தேன். அண்டர்பாஸ் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த இடமே குண்டும் குழியுமாக இருந்தது. இடது பக்கம் பெரிய பள்ளம். தோண்டப்பட்டிருந்தது. என்னைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. நான் ப்ரேக் போட்டு இடது காலை ஊன்றிக் கொள்ளலாம் என்றால் பள்ளம், வலது காலை ஊன்றினேன். இடது பக்கம் அளவிற்கு பள்ளமாக இல்லாவிட்டாலும் பள்ளம்தான். வலது பக்கம் அதிகமாக சரிய, பேலன்ஸ் இழந்த நான் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோவிற்குள் விழுந்து விட்டேன். ஆட்டோ டிரைவர் ப்ரேக் பிடித்து வண்டியை நிறத்தியதால் தப்பித்தேன். ஆட்டோவில் பயணித்த பெண்மணி என்னை தாங்கி கொண்டதாலும் அடி படாமல் தப்பித்தேன்.
நான் ஆட்டோவிற்குள் விழாமல் அதற்கு முன்னால் விழுந்திருந்தாலோ, வந்தது ஆட்டோவாக இல்லாமல் காராக இருந்திருந்தாலோ மிகப் பெரிய விபத்தை சந்தித்திருப்பேன். இறையருளால் தப்பித்தேன்.