கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, April 19, 2021

அறியாமையும், அலட்சியமும்

 அறியாமையும், அலட்சியமும் 

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நன்கு குறைந்திருந்த தீ நுண் கிருமி தொற்று மார்ச்சிலருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது பழைய தீவிரத்தை அடைந்துள்ளது. இதற்கு மக்களின் அறியாமை மட்டுமல்ல அரசியல் தலைவர்களின் அலட்சியமும்தான் காரணம். 

தேர்தல் அறிவித்து, நடத்தியது தவறு என்று கூற முடியாது. ஆனால் பிரச்சாரத்தை ஊடகங்கள் மூலம் மட்டுமே நடத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வந்திருந்த மக்களில் பெரும்பான்மையோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை, சமூக இடைவெளியா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும்படியாகத்தான் இருந்தது நிலைமை.

நான் சென்னையிலிருந்து ஊர் திரும்பி, வீட்டிற்கு வந்த ஆட்டோ டிரைவரிடம், "இங்கு(பெங்களூர்) கொரோனா தீவிரம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நானும் ஒரு வருஷமா தேடிக்கொண்டிருக்கிறேன் மேடம், எங்க இருக்கு கொரோனா?" என்றாரே பார்க்கலாம். 

"என்னங்க இப்படி சொல்றீங்க? உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், இப்படி கேட்கிறீர்களே?"

"இதுக்கு முன்னால வியாதி வந்து யாரும் சாகலையா? அவங்க கொரோனாவினால்தான் செத்தார்கள் என்று என்பது என்ன நிச்சயம்?" கடவுளை கண் முன் வரச்சொல் அப்போதுதான் நம்புவேன் என்பது போல கூறினார். மேலும் இது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க செய்த சதி என்று அபாண்டமாக பழி கூறினார். 

"எல்லாத்தையும் முடக்கிப் போட்டு எங்கள பிச்சை எடுக்க வைத்ததுதான் மிச்சம் இன்னிக்கு கார்த்தாலேர்ந்து இதுதான் ரெண்டாவது சவாரி"  என்ற அவரின் ஆத்திரத்தைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் படித்தவர்கள் செய்யும் அட்டூழியம்..!

வீட்டில் சில பொருள்களை மாற்ற வேண்டியிருந்தது. என் மகன் ஆன் லைனில் தேடி ஒரு கடையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.   அந்த ஷோ ரூம் இருக்கும் சந்தில் ஒன்றிரண்டு பப்கள்(Pub) இருந்தன. அவற்றிலிருந்து இரைச்சலான இசை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. தெரு முழுவதும் இளைஞர்கள்.. ஒன்றிரண்டு இளைஞிகளும்.. ஒருவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் படித்து வேலையில் இருபவர்களாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் பப்பிற்கு செல்ல வேண்டியது ரொம்ப அவசியமா?   

நடிகர் விவேக் மரணமடைந்தது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான். ஆனால் அதற்காக அவருடைய இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? இவர்களில் எத்தனை பேர்கள் தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருப்பார்கள்? இங்கிலாந்து ராணியின் கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முப்பது பேருக்குத்தான் அனுமதியாம். எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். 

இதற்கிடையில் மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தாமல் அதனால்  பலன் ஏதும் கிடையாது என்பது போல மீம்ஸ்! இவர்களையெல்லாம் என்ன செய்தால் தேவலை? நல்ல புத்தியைக் கொடு கடவுளே என்று வேண்டிக் கொள்ளகிறேன். சப்பகோ சன்மதி தோ பகவான்! 


    
33 comments:

 1. ///கடவுளை கண் முன் வரச்சொல் அப்போதுதான் நம்புவேன் என்பது போல கூறினார். மேலும் இது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க செய்த சதி என்று அபாண்டமாக பழி கூறினார்.//வேதனை ..உண்மையில் எனக்கு தெரிந்த மேற்பட்டபடிப்பு படித்த ஒருவர்  இப்படி சொல்றார் இன்னும் வேக்சினும் போடல்லை .இன்னும் எழுதினா மானம் போகும் :( இதுக்கு ஸ்க்ரிப்ச்சர் quote வேறே அவரிடம் நான் வேக்சின் போட்டதை உடனே சொல்லவில்லை .இதெல்லாம் அறியாமை என்பதை விட அடி முட்டாள்தனம் என்றுதான் சொல்லணும் .எலெக்ஷன் பேரணி campaign  காட்சிகளை நானும் பார்த்து நொந்தேன் .
  மறைந்த நடிகர் விவேக்கின் இறுதி கிரியையில் அலை மோதிய கூட்டம்  பார்த்து வேதனை படுவதை தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியாது .உண்மையில் அவர் இழப்பு மிகவும் வருத்தமான விஷயம் .இங்கே கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 5 பேர் மட்டும்பிறகு 15 அப்புறம்   .இப்போ 25 -30 பேர்கள் வரை அனுமதியுண்டு .மக்களாய் திருந்தலைன்னா ஒன்னும் செய்ய முடியாது 

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல். உண்மையில் அடி முட்டாள்தனம்தான். அப்படி சொன்னால் ஹார்ஷாகப்படும் என்பதால் தவிர்த்தேன்.

   Delete
  2. விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அவருடைய தீவிர அபிமானிகள் கிடையாது. நான் அவனைப் பார்த்தேன், இவளைப் பாத்த்தேன் என்று பீத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. ஹீம்!
   முதல் ஆளாக வந்து கமெண்ட் போட்டதற்கு நன்றி ஏஞ்சல்.

   Delete
 2. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.. நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுமாக - நம்மை நாமே தற்காத்துக் கொள்ளவோம்..

  ReplyDelete
  Replies
  1. நமக்கு நாமேதான். வேறு வழியில்லை. நன்றி.

   Delete
 3. ம்ம்ம் ..என்ன சொல்வது ...

  அவருக்காக அங்கு வந்து நின்ற மக்களை கண்ட பொழுது ...ஐயோ என்ன இப்படி என்ற எண்ணமே எங்களுக்கும் ...


  வருத்தங்களும் , வேதனைகளும் ...

  ReplyDelete
  Replies
  1. //அவருக்காக அங்கு வந்து நின்ற மக்களை கண்ட பொழுது// நீங்க வேற, அவருக்காகவெல்லாம் வரவில்லை.
   நன்றி அனு.

   Delete
 4. எதிர்பாராமல் கொரோனா இரண்டாவது அலை ஏறவில்லை.  சென்ற செப்டம்பரில் உச்சம் என்றால் இந்த ஏப்ரல் மேயில் இரண்டாவது அலை உச்சம் தொடும் என்று எல்லோருமே அறிந்திருந்தார்கள்.    ஆனால் தேர்தல் பிரச்சாரங்கள் அநியாயத்தின் உச்சம்.

  ReplyDelete
  Replies
  1. அதேதான். தேர்தல் கூட்டங்கள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.

   Delete
 5. முதலாவது அலையைவிட இரண்டாவது அலை வேகமாகவும் தீவிரமாகவும் இருக்கிறது என்று இப்போது சிலர் உணரத்தொடங்கி இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Late realisation.
   நன்றி ஶ்ரீராம்

   Delete
 6. ஆட்டோ டிரைவர் போல் பலர்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். இந்த உலகத்தில் எது ஆச்சர்யம்? என்ற யஷனின் கேள்விக்கு."தன்னைச்சுற்றி தினமும் மக்கள் இறந்து கோண்டேயிருக்க, தான் மட்டும் சாஸ்வதம் என்று மனிதன் நினைக்கிறானே. அதுதான் ஆச்சர்யம்" என்ற தர்மபுத்திரரின் பதில்தான் நினைவுக்கு வருகிறது.

   Delete
 7. வணக்கம் சகோதரி

  தாங்கள் பயணித்து வந்த ஆட்டோ டிரைவரை போல நிறைய பேர்கள் (உறவில் கூட) இப்படித்தான் நினைக்கிறார்கள்... சொல்கிறார்கள்... என்ன செய்வது? இதோ...! எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இரு பேஷண்ட் என்ற செய்தி வந்ததும் சற்று பயமாக உள்ளது. யார் என்ன சொன்னாலும், நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் கவனமாக பாதுகாத்து கொள்வோம். பிறகு நடப்பது இறைவன் கையில். பிரார்த்தனை ஒன்றே நம் செயல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு தடுப்பூசியும் எடுத்துக் கொண்டு விட்டேன், இருந்தாலும் பயமாகத்தான் இருக்கிறது.
   நன்றி.

   Delete
 8. அட! நீங்க வேறே! இது மோதி கொண்டு வந்தது இல்லையோ? அவர் தானே பொறுப்பேத்துக்கணும்! மக்களைச் சொல்றீங்க? அவங்க அப்படித்தான் கூட்டமாகக் கல்யாணங்கள், இறுதி யாத்திரை எனக் கலந்து கொள்வார்கள். அவங்க உரிமை அது! மோதி வெளிநாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் கொரோனா தடுப்பு ஊசிகளை அனுப்பினதால் தான் இன்னிக்குக் கொரோனா உச்சத்தில் இருக்கு! இல்லைனா எல்லோரும் போட்டுக் கொண்டிருப்பாங்க! கொரோனாவும் இருந்திருக்காது! அது சரி! கொரோனா இருக்குனு யார் சொன்னாங்க? எல்லாம் இந்தத் தேர்தலுக்காகச் செய்த விஷமப் பிரசாரம்! கொரோனாவே இல்லை!

  ReplyDelete
  Replies

  1. மோடியைப் போய் இதற்கு எல்லாம் குறை சொல்ல முடியுமா அந்த சிங்கள் சோர்ஸ் மட்டும் முதலில் பரப்பாமல் இருந்தால் நிலைமை இப்படி ஆயிருக்குமா என்ன?

   Delete
  2. எல்லாம் சரி கீதா அக்கா, அவர் தேர்தல் பிரசார கூட்டங்களை அனுமதிக்காமல் இருந்திருக்கலாம். தைரியமாக பல விஷயங்களை செயல் படுத்தியவருக்கு இது கஷ்டமா என்ன? அதில் கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டார்.

   Delete
  3. சொல்லுவது எளிது பானுமதி! தேர்தல் பொதுத் தேர்தல் எனில் நீங்க சொன்னபடி செய்திருக்கலாமோ என்னமோ! ஆனால் இது மாநிலங்களின் தேர்தல். அந்த அந்த மாநிலமே பொறுப்பு. இதில் மத்திய அரசு ஓர் அளவுக்குத் தலையிடலாம். தேர்தல் பிரசாரங்களைக் கட்டுப்படுத்தவும் நிறுத்தி வைக்கவும் தேர்தல் கமிஷனுக்கே அதிகாரம். அதை மீறி மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது. தேர்தலுக்கு முன்னரே அறிவுறுத்தி இருக்கலாம். மற்றபடி இதை அனுமதித்தது தேர்தல் கமிஷன்.

   Delete
  4. கீதா சாம்பசிவம் மேடம் பின்னூட்டங்களைப் பார்த்தால் எனக்கு ஏன் ரொம்பவே காது வலிக்கிறது? கொஞ்சம் தள்ளி நின்னு ஜிங் சக்கா போடக்கூடாதோ?

   Delete
  5. என்ன வேணா சொல்லிக்கோங்க நெல்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பே இப்போதுள்ள நிலையில் தேர்தலை அறிவிப்பதில் பிரச்னைகள் வரும் எனவும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற முடியுமா என்பது பற்றியும் மத்திய, மாநில அரசுகளிடையே ஆலோசனைகள்/வாத/விவாதங்கள் நடந்ததையும் அப்போது தேர்தல் கமிஷன் பிஹாரில் நடத்தி இருக்கோம்/அங்கே நடத்தி இருக்கையில் இது தேவையற்ற கவலை என்று சொன்னதையும் செய்திகளில் படித்திருந்தால் நான் சொல்வது ஜால்ராவா/உண்மையா என்று புரிந்திருக்கும். மேலும் ஒரு மாநிலத்தில் தேர்தலை அறிவித்துவிட்டால் அதன் பின்னர் அந்த மாநில நிர்வாகம்/அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே! இது நான் படித்தப்போ பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் திரு சேஷன் தேர்தல் கமிஷனராக ஆன பின்னரே இவை நடைமுறைக்கு வந்தன.

   Delete
 9. விவேக்கின் இறுதி யாத்திரையை எல்லாம் நான் பார்க்கவில்லை. ஆனால் பலரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதால் தான் அவர் இறந்துவிட்டார் எனப் பேசிக் கொள்வதை அறிய நேர்ந்தது. என்னவோ போங்க! :(((((

  ReplyDelete
  Replies
  1. என்னதான் சொன்னாலும், எனக்கு இரண்டாவது ஊசி போட்டுக்கொள்ள இன்னும் தைரியம் வரவில்லை. வெறும்ன சொல்லிக்கலாம்...இருந்தாலும் மனசுல பயம் இருக்கு.

   Delete
  2. பயப்பட எதுவுமில்லை நெல்லை, தைரியமாக போட்டுக் கொள்ளுங்கள்.

   Delete
 10. நானும் பார்க்கவில்லை. செய்திகள் பார்த்தபொழுது கண்ணில் பட்டது. கொரோனா தடுப்பூசி பற்றி தவறான செய்திகள் பரப்பப்படும் பொழுதெல்லாம் இந்த ஊடகங்களை விட்டு வெளியேறி விடலாம் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 11. இங்கே எல்லாமும் அரசியல். சகமனிதர்களிடம் நாம் சொன்னாலும் நம்மையே குறை சொல்ல மட்டுமே முயல்கிறார்கள். நான் இங்கே தினம் தினம் கேட்கும், பார்க்கும் விஷயங்கள் பதற வைக்கிறது. இந்த இரண்டாவது அலை நம் நாட்டை ஒரு வழி செய்து விட்டு தான் போகும் என்பதே உண்மை. அரசியல் கூட்டங்கள், இறுதி ஊர்வலங்களில் கூட்டம், விழாக்களில் கூட்டம் என எல்லாமே தவிர்க்க வேண்டியவையே.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் அரசியல்தான். அரசியல்வாதிகள் வியாபாரிகளாக இருக்கிறார்கள். பொது நலத்தை விட சுய லாபம் முக்கியமாக போய் விட்டது.

   Delete
 12. தேர்தல் கூட்டங்கள் ஒரு கண்ட்ரோலும் இல்லாமல் அனுமதித்துவிட்டு, தேர்தல் முடிந்த உடனேயே, பயமுறுத்தி மாஸ்க் போட்டுக்கோங்கோ என்று சொன்னால் யார் அதனை நம்புவாங்க? அதுதான் கொரோனா பரவ இன்னொரு பெரிய காரணம்.

  இது (இரண்டாவது அலை) பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரப்போகுது. இந்த வருடம் எப்படி மோசமாக ஆகப்போகுதோ... பயமா இருக்கு.

  ReplyDelete
 13. முதல் அலையில் வராத பயம் இப்போது வந்திருப்பது உண்மை.

  ReplyDelete
 14. கொரோனா இரண்டாவது அலை மிகவும் வருந்த வைக்கிறது. பார்க்கும் காட்சிகளும், கேட்கும் செய்திகளும் மனதை வருந்த செய்கிறது.  இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கவனமாகத்தான் இருக்கவேண்டும். விவேக் மரணம் நிறைய பேரை அச்சம் கொள்ள வைத்து இருக்கிறது.

  மருத்தும் போதுமானது இல்லை அரசு மருத்துவமனையில் போட போனவர்கள் கை இருப்பு இல்லை என்று திரும்பி வந்து விட்ட செய்திகளை படித்தேன்.

  இறைவன் தான் எல்லோரையும் காக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா. பயப்படுகிறார்கள், ஆனால் அதற்காக எதுவும் செய்வது கிடையாது என்பதுதான் வேதனை. 

   Delete
 15. இந்த அலை மிகவும் மோசமாக இருக்கு அக்கா. அரசியல் கூட்டம், விழாக்கள், தனிப்பட்ட கூட்டம் எலலமே தவிர்க்கப்பட வேண்டியவை.

  நீங்கள் சொல்லியிருப்பது போல் கொரோனா என்று ஒன்று இருப்பதாகப் பலர் நம்புவதில்லை. படித்தவர்களே....அதுவும் என் மருத்துவ நண்பர் உட்பட!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா. நலம்தானே? //அதுவும் என் மருத்துவ நண்பர் உட்பட!!// இந்த கொடுமையை என்ன சொல்வது? 

   Delete