கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, April 21, 2021

ஸ்ரீராமநவமி உற்சவம்

ஸ்ரீராமநவமி  உற்சவம் என் சிறு வயதில் திருச்சி உறையூரில் நாங்கள் வசித்த பஞ்சு அய்யர்  ஸ்டோர் என்னும் இடத்தில் வெகு விமரிசையாக ராம நவமியைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உற்சவம், நடத்தப்பட்டு, சீதா கல்யாணமும், கடைசி நாளன்று ஆஞ்சநேய உற்சவமும் நடந்து நிறைவு பெறும். 


ஸ்டோர் என்றதும் ஒண்டு குடித்தனம், காமன்  டாய்லட்  என்றெல்லாம் கற்பனை பண்ணிக்க கொள்ளாதீர்கள். ஒரு காம்பவுண்டுக்குள் பதினேழு தனித் தனி  வீடுகள். ஒவ்வொரு  வீட்டிற்கும் ஒரு குட்டித்திண்ணை, ஒரு பெரிய திண்ணை, ரேழி, முற்றம் எல்லாம் உண்டு. சில்ட்ரன்ஸ் பிளே ஏரியா கூட உண்டு. இப்போதைய பாஷையில் அதை கேட்டட் கம்யூனிட்டி எனலாம். 

ஒவ்வொரு வருடமும் ராம நவமி வருவதற்கு முன் அந்த கொண்டாட்டங்களுக்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு செலவுகள் திட்டமிடப்படுமாம். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. ராம நவமிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே பந்தல் போடுவதற்கு ஆட்கள் வந்து விடுவார்கள். எங்களுக்கு ஒரே சந்தோஷம் தினமும் அந்த பந்தக் காலில் நாலு மூலை தாய்ச்சி விளையாடலாமே! 

செலவுகளை எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்திலும், தெரிந்தவர்களிடமும் வசூல் செய்வதும் உண்டு. ஒரு முறை என் அம்மாவும் அவரின் தோழியான  ஐய்யங்கார் மாமியும் அதிக பட்சம் வசூல் செய்து கொடுத்து பாராட்டு பெற்றார்கள். 

தோரணங்கள் கட்டுவதற்கு என் அப்பா, உஷா என்று ஒரு அக்கா இவர்கள்தான்  பொறுப்பு. அவர்கள் கட் பண்ணி கொடுப்பதை நாங்கள் ஒட்டுவோம்.  எங்கள் வீடு கடைசி வீடு என்பதால் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் சாமி படங்கள் வைக்கப்படும். எங்கள் எதிர் வீட்டில் இருந்த தஞ்சாவூர் ராமர்  பட்டாபிஷேக  படம் பிரதான இடத்தைப் பிடிக்கும். இன்னொருவர் வீட்டிலிருந்து ராதா,ருக்மணி சமேத கிருஷ்ணர், இதுவும் தஞ்சாவூர் படம்தான்.எங்கள் வீட்டு ராமர் படமும் இரண்டாவது படியில் இடம் பெறும். 

தினசரி காலையும்,மாலையும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் உண்டு.  அதை தவிர தினசரி பூஜை நைவேத்தியமாக பாயசம், வடை. அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் ஏற்றுக் கொண்டு செய்வார்கள். அந்த பாயசத்தை போன்ற ஒரு பாயசத்தை வேறு எங்கும்  இன்று வரை நான் சாப்பிட்டதில்லை.  

நடுவில் ஒரு நாள் அகண்ட ராம நாமம் இருக்கும். எங்கள் வீட்டுத்  திண்ணையில் சுவாமி வைத்திருப்பதால், அதற்கு எதிர் திண்ணையில் அமர்ந்து பேட்ச் பேட்ச்சாக ராம நாமம் சொல்வோம். அலுவலகம் பள்ளி செல்ல வேண்டியவர்களுக்கு காலை நேர பேட்ச் ஒதுக்கப்படும். பின்னர் குடும்பத்தலைவிகள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ராம நாமம் கூறுவார்கள். அதில் மதிய நேர பேட்ச்தான் கொஞ்சம் டல் அடிக்கும் என்று கேள்விப்  பட்டிருக்கிறேன். மாலை மீண்டும் சூடு பிடிக்கும். இரவில்  இளைஞர்கள் பங்கேற்பார்கள். ஒரு வருடம் என் மூத்த சகோதரி பொறுப்பு எடுத்துக் கொண்டு  வெவ்வேறு ராகங்களில் ராம  நாமத்தை சொல்ல வைத்ததை பாராட்டி ராமைய்யா மாமா என்றவர் என் அக்காவுக்கு ராம நாமம் பொறிக்கப்பட்ட ஒரு வெள்ளி மை கூடு பரிசளித்தார். 

சீதா கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு பூப்பந்தல் போடுவது எங்கள் கடைசி மாமா, எங்கள் அம்மா, பஞ்சு வாத்தியார் என்னும் ஒருவர் இவர்களின் வேலை. சீதா கல்யாணத்தன்று முத்து குத்துதல் என்னும் ஒரு நிகழ்ச்சியில் சிறு பெண்களின் கையில் தங்க மோதிரம் அணிவித்து அரிசியை ஒரு உரலில் போடச் சொல்வார்கள். நாங்கள் ஆவலாக காத்திருப்போம். தங்க மோதிரம் அணிந்து கொள்ளலாமே..!

அன்று எல்லோருக்கும் கல்யாண விருந்து. அன்றைய சாப்பாடு எங்கள் வீட்டு உபயம். எங்கள் வீட்டில்தான் சமையல். சமைப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது என்று அத்தனை வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்வார்கள். 

தினமும் மாலையில் கச்சேரி இருக்கும். பாடகர்களுக்கு டிபன்,காபி பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான்.  பஞ்சு வாத்தியார் என்பவர் என் அம்மாவிடம்,"மாமி கச்சேரி பார்ட்டி வந்து விட்டது, அவர்களுக்கு டிபன்,காபி கொடுக்க வேண்டுமே"  என்பார்.  எங்கள் அம்மா உடனே அவல் கேசரி, உப்புமா, ரவா கேசரி, கிச்சடி, சேமியா கேசரி பஜ்ஜி + தேங்காய் சட்னி செய்து விடுவார். அதை சாப்பிடுபவர்கள் எங்களிடம்,"நீ சாப்பிடலையா?" என்றால் நாங்கள் " நாங்கள் அப்பொழுதே சாப்பிட்டு விட்டோமே" என்று சமத்தாக பொய் சொல்லுவோம்.  

கடைசி நாள் மாலை குழந்தைகள் பங்கு பெரும் நடனம், நாடகம், மகளிர் பங்கேற்கும் பின்னல் கோலாட்டம் போன்றவை நடக்கும். எங்களுக்கு நடனம் பயிற்றுவிப்பது உஷா அக்காதான். இதில்  என்ன ஒரு விஷயம் என்றால் அப்போது முழு பரீட்சை(annual exam) சமயமாக இருக்கும். ஒரு பக்கம் பரிட்சைக்கு படித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் இவை எல்லாவற்றிலும் பங்கேற்போம். எங்கள் பெற்றோர்கள், "பரீட்சை சமயத்தில் என்ன பாட்டும், டான்ஸும்" என்று எங்களை கோபித்ததில்லை. 

வீடு விருந்தினர்களால் நிரம்பி வழியும். மாமாக்கள், அத்தைகள், அவர்கள் குழந்தைகள், இன்னும் தூரத்து சொந்தங்கள், நண்பர்கள், என்று எத்தனை பேர்கள்!.  எங்கள்  மட்டுமல்ல அந்த ஸ்டோரில் வசித்த எல்லோரும் ஏதோ தங்கள் வீட்டு பெண்ணுக்கு கல்யாணம் என்பது போல் தினசரி புத்தாடை அணிந்து, அலங்கரித்துக் கொண்டு,பக்தியோடு சந்தோஷமாக  அனுபவித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. 

ஒவ்வொரு வருடமும் சீதா கல்யாணம் முடிந்த பிறகு அந்த ஸ்டோரில் திருமண வயதில்  இருந்த பெண்களுக்கு திருமணம் நடந்தததாக அம்மா சொல்லியிருக்கிறார்.  அங்கு பாராயணம் செய்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கேட்டதனாலேயே அது மனப்பாடம் ஆனவர்கள் உண்டு. என் மூன்றாவது அக்கா ஐந்து வயதிலேயே விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பிழையில்லாமல் சொல்வாளாம். என் சகோதரிகளுக்கு அஷ்டபதி  பந்ததியும்  இதனால்தான் தெரிந்தது. 

அவையெல்லாம் பொற்காலங்கள். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது.  சீதாராமன் அருளால் அப்போது கிடைத்தது. ஜெய் ஸ்ரீ ராம்!

36 comments:

 1. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. நீங்கள் உங்கள் சிறுவயதில் உங்கள் வீட்டில் நடைபெற்ற ஸ்ரீராமநவமி உற்சவத்தையும், சீதா கல்யாண நிகழ்ச்சியையும் விவரிக்க விவரிக்க எனக்குள்ளும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது நானும் கற்பனையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களித்து விட்டேன். ராம நாமமே பரவசத்தில் ஆழ்த்துவதுதானே.. உங்கள் மலரும் நினைவுகளை அழகாக ரசித்து சொல்லியுள்ளீர்கள்.

  /அவையெல்லாம் பொற்காலங்கள். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது. சீதாராமன் அருளால் அப்போது கிடைத்தது/

  உண்மைதான்.. அவன் அருள் இல்லாவிட்டால் இதெல்லாம் நமக்கு கிடைப்பதேது...? ஸ்ரீராம நவமி வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் படித்து சந்தோஷமாக அனுபவித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் பின்னூட்டத்தை படிக்கும் பொழுது உணர முடிகிறது. ரொம்ப சந்தோஷம். நன்றி

   Delete
 2. உண்மைதான்... அந்தக் காலத்தை அப்படியே கொண்டுவந்திருக்கிறீற்கள்.

  // " நாங்கள் அப்பொழுதே சாப்பிட்டு விட்டோமே" // - எந்த வீட்டிற்குச் சென்றாலும் நாங்கள் இதையே சொல்லுவோம். இதையெல்லாம் நம்ம ஜீன்லயே கடத்திடுவாங்களோ?

  //அந்த பாயசத்தை போன்ற ஒரு பாயசத்தை வேறு எங்கும்// - இந்த மாதிரி தோன்றுவது எதனால்?

  ReplyDelete
  Replies
  1. //நாங்கள் இதையே சொல்லுவோம். இதையெல்லாம் நம்ம ஜீன்லயே கடத்திடுவாங்களோ?//அது தெரியவில்லை,இங்கிதம் தெரிந்திருந்தது.

   Delete
  2. அந்த பாயசத்தை போன்ற ஒரு பாயசத்தை வேறு எங்கும்// - இந்த மாதிரி தோன்றுவது எதனால்?// அடுத்த புதனுக்கான கேள்வி விலாசம் மாறி வந்து விட்டதோ??

   Delete
 3. அன்பு பானுமா,
  அருமையான நினைவலைகள். ஆமாம் முந்தைய நாட்களின் ஸ்டோர் வீடுகளில் நாங்களும் வசித்திருக்கிறோம்.
  திண்டுக்கல்லில், மற்றும் புரசவாக்கம் பாட்டி வீட்டில்
  இந்த அன்யோன்யத்தை அனுபவித்தது உண்டு.
  எத்தனை ஒற்றுமை அந்த நாட்களில்.
  பிள்ளையாரும் ,ராமரும் விசேஷமாகக்
  கொண்டாடப் படுவார்கள்.
  மிக அருமையாகப் பதியப்பட்ட சமாசாரங்கள்.
  முக்கியமாகப் பிரதிபலிப்பது நடுத்தர வர்க்கத்தின் தாராளம்.
  உங்கள் அம்மா,அக்கா,அப்பா எல்லோரையும் நினைத்துப்
  பெருமையாக இருக்கிறது.

  அன்பு ராம நவமி வாழ்த்துகள்.ஜெய் ஸ்ரீராம்.
  ஜெய் ஹனுமான்.

  ReplyDelete
  Replies
  1. //முக்கியமாகப் பிரதிபலிப்பது நடுத்தர வர்க்கத்தின் தாராளம்.//அங்கிருந்த பெண்களில் யாருக்காவது திருமணம் நிச்சயமானால், மற்ற எல்லா வீட்டு பெண்களும சீர் கொடுப்பதற்காக அப்பளம்,இடுவார்கள்.அப்படி ஒரு பாந்தவ்யம். அப்படிப்பட்ட சூழலில் வாழ முடிந்தது ஒரு பாக்கியம்தான்.

   Delete
 4. //அவையெல்லாம் பொற்காலங்கள். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது//.
  உண்மை தான்! ஒரு முறை கிடைத்த பொக்கிஷங்கள் திரும்பக் கிடைப்பதில்லை! பொக்கிஷங்கள் என்பதால் தான் நினைவுப்பெட்டகத்தில் வைத்து இத்தனை நாள் ஆகியும் பாதுகாக்கின்றோம்!
  அருமையான பதிவு! சுவாரஸ்யமான நிகழ்வுகள்!!

  ReplyDelete
  Replies
  1. மறக்கவியலாத இனிய நினைவுகளை ரசித்ததற்கு நன்றி மனோஜி.

   Delete
 5. சுவாரஸ்யமான நினைவுகள்.  நிஜமாகவே ஸ்டோர் என்றதும் நீங்கள் சொன்னது போலதான் நினைத்துக்கொண்டேன்.  அப்புறம் நீங்கள் விளக்கம் சொன்னதும் காட்சி புரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. திருச்சியில் ஸ்டோர்கள் அதிகம். எல்லாமே ஒண்டு குடித்தனங்கள் கிடையாது. மணிரத்தினத்தின் அப்பா கூட அப்படி ஒரு ஸ்டோரில்தான் வசித்தாராம்.

   Delete
  2. மதுரையிலும் ஸ்டோர்கள் எனப்படும் குடியிருப்புக்கள் நிறைய உண்டு. கோபால கொத்தன் தெருவில் 2, 3 பெரிய ஸ்டோர்கள் இருந்தன. அதே போல் சிம்மக்கல்லுக்கு அருகேயும், கல்பனா தியேட்டருக்கு அருகேயும் பல ஸ்டோர்கள் உண்டு. லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம், வெங்குடுசாமி நாயுடு அக்ரஹாரம், ஆதிமூலம் பிள்ளைத் தெரு ஆகிய தெருக்களில் பல ஸ்டோர்கள் வரிசையாக அமைந்திருந்தன. இப்போல்லாம் அந்தப் பக்கம் போகாததால் தெரியலை.

   Delete
 6. பக்திபூர்வமான இளமைக்காலம்!  வாய்மையிடத்து பொய்யும் பகர்ந்திருக்கிறீர்கள்... 

  ReplyDelete
 7. இப்போதெல்லாம் பிளாக்கிலும் பேஸ்புக்கிலும் ஒரேசமயத்தில் ரிலீஸா?

  ReplyDelete
  Replies
  1. இது மத்யமரில் முன்பே பகிர்ந்து விட்டேன். அங்கு படிக்காதவர்களுக்காக இன்று ஃபேஸ்புக்கிலும், ப்ளாகிலும் ராமநவமி ரிலீஸ்.

   Delete
  2. அதானா? நேற்று ஃபேஸ்புக்கில் படிச்சப்போ முன்னாடியே படிச்ச நினைவு வந்தது. ஆனால் கருத்துச் சொல்லவில்லை.

   Delete
 8. மிக இனிய நினைவுகள் ....வாசிக்கும் பொழுதே கண் முன் வருகிறது ...

  ஜெய் ஸ்ரீராம்

  ReplyDelete
 9. இனிமையான மலரும் நினைவுகள்.
  ராமநவமி உற்சவம் கண் முன்னால் பார்த்த அனுபவம் கிடைத்தது.

  //சீதா கல்யாணம் முடிந்த பிறகு அந்த ஸ்டோரில் திருமண வயதில் இருந்த பெண்களுக்கு திருமணம் நடந்தததாக அம்மா சொல்லியிருக்கிறார்.//

  இவை எல்லாம் கேட்ட பெண்களுக்கு (திருமண வயதில் இருப்பவர்களுக்கு ) விரைவில் திருமணம் நடக்கும் என்று அம்மா சொல்வார்கள். கோவையில் ராமர் கோவிலில் ராம நவமி விழாவில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கு அழைத்து செல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சிலர் தங்கள் பெண்ணிற்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக சீதா கல்யாணத்திற்கு, புடவை, திருமாங்கல்யம் வாங்கித்தருவதும் உண்டு.

   Delete
 10. மிக அருமையான நினைவு மீட்டல்.. சின்ன வயதில் சாப்பிட்ட சில உணவுகள் நம் வாயில் ஒட்டியிருக்கும், அதைவிடத் திறமாகச் செய்து தந்தாலும், அதுதான் சூப்பர் என்பது போல இருக்கும்.. இந்த ஃபீலிங்ஸ் எனக்கும் சிலசமயம் வருவதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா. நெல்லைக்கு பதில் தந்து விட்டீர்கள்.

   Delete
 11. மதுரையிலும் வைதிக சமாஜத்தின் ஆதரவில் ஶ்ரீராமநவமி உற்சவம் விமரிசையாக நடக்கும். பெரிய பெரிய சங்கீத வித்வான்களெல்லாம் வந்து பாடுவார்கள். நாங்க எம்.எஸ். எம்.எல்.வி. மதுரை மணி ஐயர் ஆகியோரின் கச்சேரிகளுக்கும் ஶ்ரீவாஞ்சியத்தின் அஷ்டபதி/சீதா கல்யாண பஜனைகளுக்கும் விடாமல் போவோம்.

  ReplyDelete
  Replies
  1. இப்போது ஈரோடு ராஜாமணி, கோவை ஜெயராமன் போன்று அப்போது ஸ்ரீவாஞ்சியம்.

   Delete
 12. நீங்க சொல்றாப்போல் எங்க பள்ளியில் எல்லாம் முழுப் பரிட்சை நடந்து கொண்டிருக்கும். ஆனாலும் போவேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்போதெல்லாம் நன்றாக படிக்க வேண்டும் என்பார்கள்,ஆனால் மற்ற விஷயங்களுக்கு தடை போட மாட்டார்கள். பிரஷர் கொஞ்சம் குறைச்சல்தான்.

   Delete
 13. இனிமையான நினைவுகள். அனைத்து குடும்பங்களும் ஒற்றுமையாக பண்டிகைகளைக் கொண்டாடியது சிறப்பு. எனக்கு எங்கள் உறவினர் வீட்டில் நடக்கும் நான்கு நாள் ராதா கல்யாணம் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. //அனைத்து குடும்பங்களும் ஒற்றுமையாக பண்டிகைகளைக் கொண்டாடியது சிறப்பு.// அதுதான் சிறப்பு. நன்றி.

   Delete
 14. மிகவும் உன்னதமான நாட்கள் அவை.

  ReplyDelete
 15. மிக மிக அருமையான பதிவு

  ReplyDelete
 16. //கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது//

  ஆம் இதுதான் பலரது கடந்த காலத்து பொற்காலங்கள்.

  ReplyDelete