கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 8, 2016

அதிர்ஷ்டம் VS போராட்டம்

அதிர்ஷ்டம் VS போராட்டம் 



















வாழ்நாள் முழுவதும் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாத ஒருவரும், வாழ்க்கை முழுவதும் தான் சொல்ல விரும்பியதை சொல்லி, செய்ய விரும்பியதை செய்த ஒருவரும்(நல்ல விதமாகத்தான்) நண்பர்கள். அந்த இருவரும் அடுத்தடுத்த நாட்களில் மரணத்தை தழுவியது ஆச்சர்யமாக இருக்கிறது. கதைகளில்தான் இப்படி கேள்விப்பட்டிருக்கிறோம். 

அவர்கள் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் கூறியுள்ளதை பார்ப்போமா?

தன்னுடைய 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' என்னும் நூலில், ஜெயலலிதாவைப் பற்றி சோ எழுதியிருப்பது.

ஜெயலலிதாவிற்கு அப்போது பத்து வயதிருக்கும். ஒய்.ஜி.பி. ட்ரூப்பில் அப்போது ஒரு ஆங்கில நாடகம் ஒன்று போட்டார்கள். அதில் நான் ஜெயலலிதாவின் கழுத்தை  நெரித்து கொலை செய்வதைப் போல காட்சி. ஒத்திகையின் போது நான் கழுத்தை நெரிப்பது போல நடிக்கும் பொழுது பயப்படுவதற்கு பதிலாக பகபகவென்று சிரிப்பார். எல்லோரும் அவரிடம் பயப்பட வேண்டும் என்று கூறினால், இந்த சோ முழிப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது" என்பார். ஒரு வழியாக நான் கொஞ்சம் முழிப்பதை குறைத்துக் கொண்டு, அவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு எப்படியோ நடித்து முடித்தோம். 

நான் நாடகங்களில் நடிக்கும் பொழுது எனக்காக கொடுக்கப்பட்ட டயலாக்கைத் தவிர அவ்வப்பொழுது எனக்குத் தோன்றும் என் சொந்த வசனங்களை பேசி விடுவேன். இதைக் குறித்து ஜெயலலிதாவின் தாயார் சந்தியா ஒய்.ஜி.பி.யிடம் புகார் செய்வார். நான் என் சொந்த வசனங்களை பேசக் கூடாது என்று அவர் கூறும் பொழுது "சரி, சரி" என்று தலை ஆட்டி விட்டு, மேடையில் எனக்கு தோன்றுவதைத்தான் பேசுவேன். ஜெயலலிதா நடிக்க வந்த பொழுது, நான் இப்படி என் சொந்த வசனங்களை பேசினால் அவர் அம்மா சந்தியாவைப் போல அசந்து விட மாட்டார், தானும் அதற்கேற்றார்போல் பேசி சமாளித்து விடுவார். ட்ரூப்பில் மற்றவர்களை விட என்னிடம் அதிக நட்போடு இருந்தார்".  

ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து பத்து வருடங்கள் தமிழகத்தை ஆண்டால், தமிழ் நாடு சிறப்பான நிலை அடையும் என்று நம்பினார்.

1979 அல்லது 1980 இல் குமுதத்தில் 'மனம் திறந்து பேசுகிறேன்' என்ற தொடரை(சுயசரிதம்?) ஜெயலலிதா எழுத ஆரம்பித்தார், ஆனால் சில வாரங்களிலேயே 'மனம் திறந்து பேச முடியவில்லை' என்று கூறி நிறுத்தி விட்டார். அதில் "என் வாழ்க்கையில் முக்கியமான நான்கு ஆண்கள், ஒய்.ஜி.பார்த்தசாரதி. முக்தா ஸ்ரீனிவாசன், சோ, சோபன் பாபு". சோபன் பாபுவைப் பற்றி தனியாக எழுதுகிறேன். சோ என் உடன் பிறவா சகோதரர், என் வாழ்க்கையின் எந்த முடிவையும் இவரை கலக்காமல் எடுக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

அப்படிப்பட்டவரையே கூட ஒரு சமயம், "இவர் ஒன்றும் என் நண்பர் இல்லை" என்று கத்தரித்தார், பின்பு தேர்தல் சமயத்தில் அழைத்து ஆலோசனை பெற்றார். அதன் பிறகு இறுதி வரை அந்த நட்பு நீடித்தது. 

ஜெயலலிதாவிற்கு வேண்டுமானாலும் மாற்று கருத்து வந்து சென்றிருக்கலாம், ஆனால் சோ அவரை தன் சகோதரியாகவே பாவித்திருக்கிறார் போலிருக்கிறது. தன் இளைய சகோதரி தன் மீது எத்தனை கோபம் கொண்டிருந்தாலும், அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் மன்னிக்கும் மூத்த சகோதரனைப் போல ஜெயலலிதாவிற்காக தன் உயிரை பிடித்து வைத்துக் கொண்டிருந்தாரோ என்று தோன்றுகிறது.  

சோவை விட வெற்றிகரமான வழக்கறிஞர்கள் உண்டு. அவரைவிட மேன்மையான பத்திரிகை ஆசிரியர்கள் உண்டு. அவரை மிஞ்சும் நடிகர்கள் நிறைய பேர் உண்டு. இதெல்லாம் அவர் பலம் அல்ல. அவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. தனக்கு கிடைத்த புகழுக்கு அதிர்ஷடம் ஒரு பலமான காரணம் என்று உணர்ததால்தான் அவரால் பூமியில் காலூன்றி நிற்க முடிந்தது. அவருடைய நேர்மைதான் அவர் பலம். 

ஜெயலலிதா அழகும், திறமையும், நளினமும் கொண்ட நடிகையாக பொது வாழ்விற்கு வந்தார். பாடல் காட்சிகளில் அவரின் துள்ளல் ஒரு ப்ளஸ். அது அவருக்கு முன்பும் யாரிடமும் கிடையாது, அவருக்கு பின்பும் யாரிடமும் கிடையாது. அவருடைய நினைவாற்றலை பலர் புகழ்ந்திருக்கிறார்கள். மேக்கப் போட்டுக் கொண்டபடியே வசனங்களை உதவி இயக்குனர்கள் படிக்க ஒரு முறை கேட்டுக் கொள்வாராம், பின்னர் செட்டில் போய் அப்படியே பேசி ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கி விடுவாராம். என்றாலும் திரை உலகில் அவர் பெரிய அளவில் சாதித்தார்  என்று கூற முடியாது. வெற்றி படங்களில் நடிப்பதையோ, பெரிய ஹீரோக்களோடு நடிப்பதையோ, அதிக சம்பளம் பெறுவதையோ இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. நடிப்பு என்றால் ஒரு சாவித்திரி, லட்சுமி, சரிதா, ரேவதி என்றெல்லாம்  கூறுகிறோமே அந்த வரிசையில் வர மாட்டார். ஆனால் அரசியல் வாழ்க்கையில் இவர் சாதித்தது மிக அதிகம். 

இவரால் என்ன செய்து விட முடியும்? என்ன தெரியும்? வசந்த சேனா.. என்றெல்லாம் இவரை இழித்தும், பழித்தும் பேசியவர்களின் வாயை அடைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. எம்.ஜி.ஆர். இவரை அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம். ஆனால் அவர் இவருக்கு ஒரு பாதுகாப்பான களத்தை அமைத்து தரவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் சந்தித்த அவமானங்களும், சோதனைகளும் வேறு யாருக்காவது நேர்ந்திருந்தால் தாக்குப் பிடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். நெருப்பு ஆற்றில் நீந்தி வந்தேன் என்று அவரே குறிப்பிட்டது போல இத்தனை சோதனைகளை சந்தித்து மக்களின் தலைவராக உயர்வது என்பது மிகப் பெரிய சாதனை.  அவருக்கு நன்கு பரிச்சயமான, ஒரு துறையில் சாதித்ததை விட, அனுபவமே இல்லாத மிகக் கடினமான ஒரு துறையில் சாதித்ததுதான் ஜெயலலிதாவின் சிறப்பு.

இரண்டு துணிச்சல்கார புத்திசாலிகளை ஒரே சமயத்தில் பறி கொடுத்திருக்கிறது தமிழகம்.

9 comments:

  1. ஆம், அடுத்தடுத்த நாட்களில் இருவரையும் இழந்தது இழப்புதான்.

    ReplyDelete
  2. மிக அருமையாக நுணுக்கமான
    விஷயங்களைப் பதிவு செய்து
    இரங்கற்பதிவு பதிந்த விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. இரண்டு ஆளுமைகள் தொடர்ந்து மறைந்தது ஒரு பேரிழப்பு.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. வருகை தந்து, ரசித்து, பாராட்டிய எல்லோருக்கும் நன்றி!
    ஒரு சிறிய பயணம், கொஞ்சம் உடல் நலக்குறைவு காரணமாக வலைப்பூ பக்கம் வர முடியவில்லை.

    ReplyDelete
  6. நல்ல மிக அழகான தெளிவான கட்டுரை...இரு ஆளுமைகள் அதுவும் நண்பர்கள் அடுத்தடுத்து மறைந்தது மிகப் பெரிய வியப்பே!!!!

    ReplyDelete
  7. வருக! முதல் முறையாக வருகை தந்திருக்கிறீர்கள். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    ReplyDelete