கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 12, 2026

கனடா டைரி

 கனடா டைரி

நம் நாட்டில் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் என்னவோ நம் நாட்டில் மட்டும்தான் மூட நம்பிக்கைகள் அதிகம், மேலை நாடுகளில் மூட நம்பிக்கைகளே கிடையாது என்பார்கள். இது "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்'' என்பது போன்ற ஒரு மூட நம்பிக்கைதான். உண்மையில் எல்லா நாடுகளிலும் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் நிலவத்தான் செய்கின்றன. 

கனடாவில் பிப்ரவரி 2ஆம் தேதியை 'க்ரெளண்ட்ஹாக் டே(groundhog day) எங்கிறார்கள். groundhog என்பது ஒரு நாலுகால் பிராணி. ஹைபர்நேஷன் எனப்படும் குளிர்கால தூக்கத்தில் இருக்கும் க்ரெளண்ட்ஹாக் அன்றைக்கு முழித்துக் கொண்டு வெளியே வருமாம். வெளியே வந்த அது தன் நிழலைப் பார்த்தால் குளிர்காலம் இன்னும் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், அது தன் நிழலைப் பார்க்காவிட்டால் வசந்தம் விரைவில் வந்து விடும் என்றும் ஒரு நம்பிக்கையாம். இந்த வருடம் க்ரௌண்ட்ஹாக் தன் நிழலை பார்க்காததால் இந்த வருடம் வசந்தம் விரைவில் வந்து விடும் என்கிறார்கள். க்ரௌண்ட்ஹாக் வெளியே வருவதை கண்காணிக்க ஒரு குழுவே உண்டாம்.

இதை நான் தவறுதலாக என்னுடைய சென்ற பதிவில் எழுதிவிட, அதைப் படித்த கமலா ஹரிஹரன், தன்னுடைய கருத்தில், "அழகர் (வைகை)ஆற்றில் இறங்கும் வைபவத்தன்று பச்சை நிற பட்டு உடுத்திக் கொணிடிருந்தால் வரும் வருடம் செழிப்பாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு என்று குறிப்பிட்டிருந்தார். இப்போதெல்லாம் எல்லா வருடங்களும் பச்சை பட்டாடையே உடுத்தி விடுகிறார்களாம் என்றும் கூறியிருந்தார். அவருக்கு நன்றி.

இந்த வருடம் நிஜமாகவே வெய்யில் சீக்கிரம் துவங்கி விட்டதோ என்றுதான் தோன்றியது. நேற்று பளீரென்று வெய்யில் அடிக்க. "ஆஹா! இன்னிக்கு வெதர் பிரமாதம்! நீ கண்டிப்பாக கொஞ்ச நேரம் வெளியில் நிற்கத்தான் வேண்டும்" என்று என் மகள் என்னை வற்புறுத்தி வெளியில் நிற்க வைத்தாள். அக்கம் பக்கத்து குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அதிகாலையிலிருந்து மழை. இதுவரை(பிற்பகல் 2:30) சூரிய பகவான் தலைகாட்டவில்லை. ஹூம்!

இன்று என் பேத்தி என்னிடம்,"இந்தியாவில் குளிர்காலத்தில் எவ்வளவு டெம்பரேச்சர் இருக்கும்?" என்று கேட்டாள். நான், "20 டிகிரியிலிருந்து 23 வரை செல்லும் என்றேன்."

"வாட் அபவுட் சம்மர்?"

"அது 40, 42 வரை செல்லும்"

"அப்போ நீ லீவ் போட்டு விடுவாயா?"

"லீவா..? சம்மரில் சென்னைக்கு வா, டி.நகருக்கு அழைத்துச் செல்கிறேன். ஜே ஜேன்னு மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார்கள் அதுதான் இந்தியா" என்றேன்.

 


இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சம்பிரதாய பஜனைக்குச் சென்றிருந்தோம். முடித்து விட்டு மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். எல்லோரும் ஐஸ்க்ரீம் சாப்பிட முடிவெடுத்தார்கள். ஓட்மில்க் ஐஸ்க்ரீமாம்(ருசி அப்படி ஒன்றும் பிரமாதமில்லை) ஏற்கனவே குளிர், இதில் ஐஸ்க்ரீம் வேறு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் பனி பொழிய தொடங்கி விட்டது. நான் நிஜமாகவே நடுங்க ஆரம்பித்து விட்டேன். காரில் என் மகளை பின் சீட்டில் உட்காரச் சொல்லி விட்டு, நான் முன் சீட்டுக்கு வந்தேன். அதில் சீட் வார்மர் இருக்கும். அந்த சீட்டில் உட்கார்ந்து வந்த பிறகுதான் என் நடுக்கம் குறைந்தது.

என் மகள் தொலைகாட்சியில் ஒரு ஆஸ்திரேலியன் சீரியலை விரும்பி பார்ப்பாள் அதன் பெயர் 'Married at first sight'. திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் தங்கள் விருப்பங்களை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை பரிசீலிக்கும் பேனல் யார், யாருக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்று கருதுகிறதோ அந்த ஜோடிகளை முதலில் பேசச் சொல்கிறது. பேசி, பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் மூன்று மாதங்கள் கண்டிப்பாக சேர்ந்து வாழ வேண்டும், அதன் பிறகும் விருப்பமிருந்தால் திருமண பந்தத்தை தொடரலாம் அல்லது முறித்துக் கொள்ளலாம். இந்த மூன்று மாதங்களில் அந்த ஜோடிகளுக்கு அவ்வப்பொழுது விருந்து, வெளியே அழைத்துச் செல்வது போன்றவைகளும், அந்த ஜோடிகளின் அனுபவங்களும் கேட்டு அறியப் படுகின்றன. பெரும்பான்மையான ஜோடிகள் சேர்ந்து வாழ முடிவெடுக்க, ஒரு ஜோடி மட்டும் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டி பிரிய முடிவெடுத்தனர்.

நல்ல கூத்து என்று தோன்றுகிறதோ? இப்படிப்பட்ட விஷயங்கள் நம் நாட்டிற்குள்ளும் வராது என்று சொல்ல முடியாது.  

 

No comments:

Post a Comment