சில நெருடல்கள்
சமீபத்தில் நான் பார்த்த, கேள்விப்பட்ட சில விஷயங்களில் நான் உணர்ந்த நெருடலான விஷயங்களைத்தான் பகிர ஆசைப்படுகிறேன்.
சமீபத்தில் எங்கள் உறவினர் அவருடைய மகனோடு திருப்பதிக்குச் சென்றிருக்கிறார். அவருடைய வயது 77, அவர் மகனுக்கு 47, அவர் உடல் ஊனமுற்றவர். இவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளாமல் திடீரெனெ கிளம்பி சென்றிருக்கிறார்கள். அதனால் பொது தரிசன வரிசையில்தான் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. பெருமாளை தரிசனம் செய்ய எட்டு மணி நேரம் ஆனதாம். முதியவரான அவர் கீழே உட்கார்ந்தால் எழுந்திருப்பது கஷ்டம் என்பதால் எட்டு மணி நேரம் நின்று கொண்டே இருந்திருக்கிறார். திருப்பதிக்கு செல்லும் எல்லோரும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொண்டுதான் செல்ல வேண்டும் என்பது சரியா? எல்லோருக்கும் அது சாத்தியமா? TTD ஏதாவது மாற்று ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
Z தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா என்று ஒரு பேச்சரங்கம் வருவது பலருக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பக்கம் வெளிநாட்டில் வேலை செய்யும் சிலர் இந்தியாவிற்கு வரும்பொழுது செய்யும் அலப்பறைகளைப் பற்றி அவர்களுடைய சொந்தங்களும், நண்பர்களும் பரிகசிக்க, எதிர் பக்கத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அதற்கான காரணத்தை விளக்கினார்கள்.
அதில் ஒரு பெண்மணி, "மலேஷியாவில் வேலைபார்க்கிறார் என்பதால்தான் என் தங்கையை அவருக்கு மணமுடித்துக் கொடுத்தோம், என் தங்கையை மணந்து கொண்டு சில மாதங்கள் வாழ்ந்து விட்டு மலேஷியா சென்றவர் என் தங்கையை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்வதாக கூறினாரேயொழிய எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதற்கிடையில் என் தங்கை கர்பமாக இருப்பதாக தெரிய வர, குழந்தை பிறந்ததும் அழைத்துச் செல்கிறேன் என்றார். குழந்தை பிறந்ததும், குழந்தைக்கு ஐந்து மாதங்களாவது ஆகட்டும் என்றார். குழந்தைக்கு ஒரு வயது ஆகி விட்டது. இந்தியாவுக்கு வந்தவர் என் தங்கையை மீண்டும் கர்ப்பமாக்கினார். குழந்தை பிறந்ததும், இரண்டு குழந்தைகளையும் சேர்த்து அழைத்துச் செல்கிறேன் என்றார். பிறகு அவரே இந்தியா வந்து விட்டார்". என்றார்.
இதற்கு பதில் சொன்ன அந்த் எக்ஸ் மலேஷியாவாசி, "சார் நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் மலேஷியா போனேன். ஏன்னா இந்த பன்னிங்கெல்லாம்(வார்த்தையை கவனியுங்கள்) பையன் இந்தியாவில் இருக்கான்னா பொண்ணு குடுக்க மாட்டாங்க, ஃபாரின்ல இருக்கான்னா பொண்ணு கொடுத்துடுவாங்க" என்றார். திருமணம் செய்து கொண்டதும் இந்தியா திரும்பி விவசாயத்தை கவனிக்கிறாராம்.
ஆவுடையப்பன்(Anchor) அவரிடம், "நீங்கள் ஏமாற்றியிருக்கிறீர்கள்" என்றதற்கு, "நான் ஏமாத்தல சார், அவங்க ஏமாந்தாங்க" என்று இரண்டு மூன்று முறை எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி சொன்னார். இதற்கும் சரி, பெண்களைப் பெற்றவர்களை பன்னிங்க என்று கூறியதற்கும் சரி, ஆவுடையப்பன் அவரை கண்டிக்கவே இல்லை என்பதுதான் வருத்தம்.
முஸாஃபிர் கஃபே என்னும் ஹிந்தி வெப் சீரீஸை பார்த்தேன். மும்பை ஹை கோர்ட்டில் பிராக்டீஸ் செய்ய வேண்டும், கணவனை இழந்து கூட்டுக் குடும்பத்தில் சிரமப்பட்ட தன் தாயை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற இலட்சியங்களை வைத்திருக்கும் சுதா என்னும் லாயருக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. திருமணம் தன்னுடைய அந்தக் கனவுகளுக்குத் தடையாக இருக்கும் என்று நினைக்கும் அவள் அம்மா காட்டும் வரன்களை தட்டிக் கழிக்கிறாள். ஆனால் சந்தர் என்னும் ஐ.டி. இளைஞன் மீது காதல் வசப்பட்டு, அவனோடு சேர்ந்து வசிக்கிறாள். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஹனிமூன் செல்கிறர்கள்(என்ன ஒரு முற்போக்கு சிந்தனை!).
சந்தருக்கும், அவனுடைய அம்மாவுக்கும் கூட அவளைப் பிடிக்கிறது. இந்த நேரத்தில் மும்பையில் இருக்கும் ஒரு சட்ட நிறுவனத்திற்கு அவளை சீனியர் லாயர் சிபாரிசு செய்ய, அந்த நிறுவனம் அவளுக்கு ஆஃபர் லெட்டர் அனுப்புகிறது. ஹனிமூன் சென்ற இடத்தில் அவள் தான் மும்பைக்கு செல்லப் போவதாக சொல்கிறாள். சந்தருக்கு பதவி உயர்வு கொடுத்து அவனை டில்லிக்கு போகச் சொல்கிறது அவன் வேலை பார்க்கும் நிறுவனம். ஆனால் அவன் தான் காதலிக்கும் பெண்ணுக்காக அதை ஏற்றுக் கொள்ளாமல் அந்த வேலையை உதறி விட்டு, மும்பை வர விரும்புகிறான். "இதுதான் சரியான நேரம், நாம் திருமணம் செய்து கொள்ளலாம், ஒரு வருடம் நான் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறேன், நீ உன் வேலையில் கவனம் செலுத்து" என்று அவன் கூற, அதை ஏற்றுக் கொள்ள மறுத்து,"ஏன் கல்யாணம் ,கல்யாணம் என்கிறாய்? அவரவர் கனவைத்தான் அவரவர் துரத்த வேண்டும், மும்பைக்குச் செல்ல வேண்டும் என்பது என் கனவு. ஏதாவது ஒரு மலை வாசஸ்தலத்தில் ஒரு கஃபே ஆரம்பிக்க வேண்டும் என்பதுதானே உன் கனவு? நீ அதைத் தேடிச் செல்" என்று கூறுகிறாள்.
ஏமாற்றத்தில், குடித்து விட்டு, சுதாவின் அம்மாவிற்கு ஃபோன் செய்து, "உங்களால்தான் சுதா திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள்" என்றெல்லாம் அவன் பேசுவதை கேட்ட சுதா கோபத்தோடு அவர்கள் உறவை முறித்துக் கொள்கிறாள். அவள் மும்பைக்குச் செல்ல, அவன் முசோரியில் ப்ரீதி என்னும் பெண்ணோடு அவன் ஆசைப்படி ஒரு தேனீர் விடுதி தொடங்கி, சிறப்பாக நடத்துவதோடு ப்ரீதியோடும் லிவ் இன் ரிலேஷன்ஷிப். அவனிடம் ப்ரீதி, "என்றாவது ஒரு நாள் சுதா திரும்பி வந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்க, "அது முடிந்து போன கதை" என்கிறான்.
போபாலில் வெறும் டைவர்ஸ் வக்கீலாக இருந்த சுதா மும்பைக்குச் சென்ற பிறகு கிரிமினல் வழக்குகளில் தேர்ச்சி அடந்து, இன்டர்நேஷனல் லா படித்து, சிங்கப்பூரில் ஒரு லா ஃபர்ம் தொடங்கும் முன் முசோரியில் முசாஃபிர் கஃபேக்கு வருகிறாள். அங்கு சந்தரை சந்தித்து பேசும் சுதா, "நீ ஏன் இன்னும் ப்ரீத்தியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?" என்று கேட்க, "இன்னும் உன்னிடமிருந்து விவாகரத்து கிடைக்கவில்லையே?' என்பவன், அவள் தான் சிங்கப்பூர் செல்லப் போவதாக சொன்னதும், "உனக்கு தேவைனா வருவ, வேண்டாம்னா போவ.. எல்லா முடிவுகளையும் நீதான் எடுக்கற, இனிமேல் நான் விட மாட்டேன், உனக்காக, நமக்காக" என்று டயலாக் அடித்துக் கொண்டிருக்க, அவன் விடுதிக்கு, தன் கர்ல் ஃப்ரெண்ட் சுதா இங்கேதான் தங்கியிருக்கிறாள் என்று கூறிக் கொண்டு ஒரு ஆண் வருவதோடு சீரீஸ் முடிகிறது. என்ன கொடுமடா இது!
என்ன சொல்ல வருகிறார் இவர்? எதை நிறுவ நிணிக்கிறார்? இதை இயக்கியவர்? இந்த சீரிஸில் முசோரியில் சுதாவும், சந்தரும் வந்து தங்கும் வீட்டில் சேர்ந்து வாழும் இருவர் கணவன்,மனைவி என்று நினைத்துக் கொள்வார்கள் ஆனால் அந்தப் பெண்மணி, "சேர்ந்து வாழ வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?" என்று கேட்பார்.
என் வாழ்க்கையில் சுதா என்று ஒரு பெண் உண்டு என்று தெரிந்த பிறகும் என்னை எப்படி காதலிக்கிறாய்?" என்று வினவும் சந்தரிடம் ஒரே நேரத்தில் இரண்டு பேர்களை காதலிக்கக் கூடாது என்று எதில் சொல்லியிருக்கிறது?" என்கிறாள் ப்ரீத்தி.
சுதாவின் கதாபாத்திரம் மிகவும் அருவருப்பூட்டுகிறது. எனக்கு தொழில், அதில் முன்னேறுவது முக்கியம், அதனால் திருமணம் செய்து கொள்வதில் ஈடுபாடு இல்லை என்று ஒரு பெண் சொல்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் என் உடல் இச்சையை பூர்த்தி செய்து கொள்ள ஒரு ஆணை பயன்படுத்திக் கொள்வேன், அது முடிந்ததும் அவனை உதறி விட்டுச் செல்வேன் என்பது நியாயமா? 30, 40 வருடங்களுக்கு முன் இதை திரைப்படங்களில் ஆண் அதுவும் வில்லன் கதாபாத்திரம் செய்யும். அவன் காலைக் கட்டிக் கொண்டு பெண்,"அத்தான் என்னை கை விட்டு விடாதீர்கள்" என்று கதறுவாள். இதில் அதை ஆணை செய்ய சொல்லியிருப்பது பெண்கள் விடுதலையா? என்ன கன்றாவி இது? இப்படி சொல்லும் என்னை பூமர் என்பார்கள்.
சமீப காலங்களில் டாஸ்மாக் காட்சி இடம்பெறாத திரைப்படங்களே இல்லை. அதிலும் பெண்களே புகைப்பதாகவும், குடிப்பதாகவும் காட்சிகளை அமைத்து, வெகு சகஜமாக்கி அவை ஒரு தவறே கிடையாது என்று நிறுவ முயல்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழ்வதைப் போல காண்பிப்பதும் அதிகமாகித்தான் வருகிறது. இது அடுத்த கட்டம். என்னவோ போடா மாதவா!