கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, August 6, 2020

கடலைக் கடந்து - 5

கடலைக் கடந்து - 5 

நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்லாம்  கிடையாது.  ஓமானியர்கள், எகிப்தியர்கள் எல்லாம் லெபனீஸ் ரொட்டியில் சீஸ், காய்கறி துருவல், அல்லது சிக்கன் போன்றவை சேர்த்து சுருட்டிய கபூஸ் எனப்படும் ஒரு உணவை பட்டர் பேப்பரில் சுற்றி கடித்துக் கொண்டே வேலை செய்வார்கள். நம்மைப் போன்ற இட்லி, உப்புமா ஆசாமிகளுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். அவர்கள் மேஜையில் எப்போதும் இருக்கும் லைட் பிரவுன் திரவம் பிளாக் டீ என்று தெரியாமல் நான் கொஞ்சம் மிரண்டு போனது உண்மை. 

1991க்குப் பிறகுதான் வாரத்தில் ஐந்து நாட்கள் என்பது நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு வரை   சனி முதல் வியாழன் வரை அலுவலகம் உண்டு. வியாழனன்று ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் முடிந்து விடும். ஆனால் இதை என் கணவர் என்னிடம் சொல்லவே இல்லை. வேலைக்கு சேர்ந்த முதல் வார வியாழனன்று வேலை விஷயமாக மற்றொரு அலுவலகத்திற்கு சென்ற என் கணவர்  அலுவலகம் திரும்பி வரவில்லை.  இரண்டு மணிக்கு, ஒருவர் வந்து, "கீப் எவ்ரிதிங் ஆஸ் தே ஆர் அண்ட் கம் வித் மீ" என்றதும் எனக்கு எதுவும் புரியவில்லை. "மூர்த்தி டிண்ட் கம் எட் .." என்றதும், "நோ, நோ, ஹி வில் நாட் கம், யூ கம் வித் மீ " என்றதும் நான் ரொம்பவே பயந்து போனேன். நல்ல வேளையாக என் கணவர் அப்பொழுது போன் பண்ணி, நேரத்தைப் பற்றி சொல்லி  தான் நேராக வந்து விடுவதாகவும் என்னை அந்த நண்பரோடு செல்லும்படியும் கூறினார். 

அப்பொழுது எங்களுக்கு வீடு அலாட் ஆகவில்லை. விடுமுறையில் இந்தியா சென்றிருந்த ரமணன் என்னும் ஒரு நண்பரின் வீட்டில் தங்கிக் கொண்டிருந்தோம். மதியம் ஸ்ரீதர் வேறொரு நண்பரின் வீட்டில் மதிய உணவருந்துவோம். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, என் கணவர் என்னிடம், "வீட்டு சாவியை என் அலுவலக மேஜை டிராயரில் வைத்திருந்தேனே, எடுத்துக் கொண்டு வந்தாயா?" என்று கேட்டார்? அவர், வீட்டு சாவியை தன் மேஜை டிராயரில் வைத்திருக்கும் விஷயமும் எனக்குத் தெரியாது. நான் "இல்லையே.." என்க, நண்பரின் மனைவி, ''நீங்கள் சாவியை அங்கு வைத்திருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியுமா? என்று எனக்கு சப்போர்டுக்கு வந்தார். உணவு அருந்திய பிறகு என் கணவரும், அந்த நண்பரும் எங்கள் அலுவலகம் சென்று சாவியை எடுத்துக் கொண்டு வந்தனர். 

அந்த நண்பர்தான் எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போதோ மஸ்கட் சிவன் கோவில் ஒன்றுதான் இருந்தது. கிருஷ்ணர் கோவில் கட்டப்படவில்லை. சிவன் கோவிலில் கீழே விநாயகர், சிவன், ஹனுமான் சன்னதிகள் இருக்கும். மாடியில் அம்மன் சன்னதி. பக்கத்தில் ஒரு சிறிய கடையில் எண்ணெய், பால், ஊதுபத்தி, தேங்காய் போன்ற பூஜை சாமான்கள் விற்பார்கள்.  ஆரம்ப நாட்களில் அங்கு அத்தனை கும்பல் இருக்காது. பின்னாளில் இரண்டு கோவில்களிலுமே வியாழன்,வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம் போன்ற நாட்களிலும் பார்க்கிங் கிடைக்கவே கிடைக்காது.  அதுவும் வியாழக் கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் சிவன் கோவிலுக்குச் சென்றால் இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்து விடலாம். ஏனென்றால் ஆஞ்சநேயருக்கு அத்தனை பேர்கள் வடை மாலை சாற்றுவார்கள். 
வடை, கேசரி, தயிர்சாதம், சுண்டல் என்று நிறைய பிரசாதங்கள் கிடைக்கும். 

ஆரம்பத்தில் அந்த ஊரில் கடை வீதிகளுக்கும், மற்ற இடங்களுக்கும் சென்ற பொழுது ஒரு விஷயம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அங்கு சுவரொட்டிகளையோ, விளம்பர பலகைகளையோ பார்க்க முடியவில்லை. 
"இங்கு என்ன இப்படி சுவரெல்லாம் காலியாக இருக்கிறது?" என்று ஆச்சர்யமாக கேட்டேன். "இங்கு அதற்கெல்லாம் தடை. போஸ்டேரெல்லாம் ஒட்டக்கூடாது" என்றார்கள். "அப்படியென்றால் வியாபாரிகள் தங்கள் பொருள்களை எப்படி விளம்பரம் செய்வார்கள்?" என்றேன். "அதற்குத்தான் ஹௌஸ் வைவ்ஸ் இருக்கிறார்களே?" என்றார் நண்பர். 

2005க்குப் பிறகு பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைப்போலவே வெய்யில் கொளுத்தும் அந்த ஊரில் கார்களில் கூலிங் பேப்பர் ஒட்டுவதற்கும் அனுமதி கிடையாது. கோடையில் வெளியில் காரை நிறுத்தி விட்டால், அதை எடுக்கும் பொழுது ஸ்டியரிங்கை தொட முடியாமல் கொதிக்கும். அதனால் பெரும்பாலானோர் ஸ்டியரிங் மீது ஒரு டர்கி டவலை போட்டு வைப்பார்கள். கேசட்டை மறந்து போய் காரிலேயே வைத்து விட்டால் உருகி விடும்.   




 



 

30 comments:

  1. சுவாரஸ்யமான அனுபவங்கள்.  உணவு இடைவெளி இல்லாமல் நீண்ட பணிநேரம் என்பது சற்றே ஆயாசம் தரக்கூடியதோ?  ஆனால் பழகி இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கஷ்டம்தான். நான் டிஃபன் எடுத்துக்கொண்டு போவேன். அல்லது டீயோடு பன், டைஜஸ்டிவ் பிஸ்கெட் என்று சாப்பிடுவோம்.

      Delete
  2. சுவாரசியமான அனுபவங்கள். தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் வேலை செய்வதில் பசிக்காதோ? எனக்கெல்லாம் காலை வேளையில் அதுவும் ஏழரையிலிருந்து எட்டரைக்குள் ஒரு பகாசுரப் பசி வந்து உலுக்கி விடும். மெல்ல மெல்ல இப்போதெல்லாம் பழகிக் கொண்டு விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சாண்ட்விச், பன், பிஸ்கெட் சாப்பிட்டு சமாளிப்போம்.

      Delete
  3. அலுவலகத்திலேயே வீடும் கொடுப்பாங்களா? இங்கே அரசு அலுவலர்களுக்குக் குடியிருப்புப் போல் அங்கேயும் இருக்குமா? அங்கெல்லாம் சொந்த வீடு வாங்க முடியுமா? அனுமதி உண்டா?

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்தில் கொடுத்தார்கள். பிறகு நிறுத்தி விட்டு அலவன்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

      Delete
    2. Expatriatesகள் வீடு வாங்க முடியாது. சிறப்பு அனுமதி பெற்ற மருத்துவர் ஒருவருக்கு அரசே வீடு கட்டி கொடுத்தது.

      Delete
    3. நம் நாட்டினர் அங்கே போய்க் குடிமக்களாக ஆக முடியுமா? திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் இருவரும் அந்த நாட்டுக் குடிமக்கள் எனச்சொல்லி இருந்தார். அப்படி இருந்தால் சொந்த வீடு வாங்கலாம் அல்லவா?

      Delete
    4. யாருடைய சேவை ஓமானுக்குத் தேவையோ அவர்களுக்கு மட்டுமே சிட்டிசன்ஷிப் கிடைக்கும். expatriates வீடு கட்டிக் கொள்வதைப் பற்றி தற்போதய சட்டங்கள் எனக்குத் தெரியவில்லை. முன்பெல்லாம் கட்டிக்கொள்ள முடியாது.

      Delete
  4. //அவர்கள் மேஜையில் எப்போதும் இருக்கும் லைட் பிரவுன் திரவம் பிளாக் டீ என்று தெரியாமல் நான் கொஞ்சம் மிரண்டு போனது உண்மை//

    ஹா.. ஹா.. ஸூப்பர்.

    ஹரிதாஸ் கடை போய் இருக்கிறீர்களா ? போகாதவர்களே இருக்க முடியாது. இருப்பினும் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹரிதாஸ் நான்ஸி போகாமல் இருக்க முடியுமா? இந்தியாவின் அனைத்து மாநிலகாரர்களுக்கு தேவையான எல்லா பொருள்களும் அங்கு கிடைக்குமே.

      Delete
  5. இங்கும் அப்படித்தான்...

    Wax Paper ல் சுற்றப்பட்ட Sandwich ஐ சாப்பிட்டுக் கொண்ட்டெ கணினியில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும்...

    சுலைமானி எனப்படும் வறட்டுத் தேநீர் பிடிக்காது..Bru/ நர்சுஸ் தனியாக வைத்திருக்கிறேன்...

    ReplyDelete
  6. எனக்கும் வறட்டுத் தேனீர் பிடிக்காது. இப்போது அருந்துகிறேன். நன்றி.

    ReplyDelete
  7. வெயிலின் அருமை புரிகிறது...!

    ReplyDelete
  8. //அவர்கள் மேஜையில் எப்போதும் இருக்கும் லைட் பிரவுன் திரவம் பிளாக் டீ என்று தெரியாமல் நான் கொஞ்சம் மிரண்டு போனது உண்மை//

    ஹா ஹா ஹா ஹா ! அமெரிக்கார்களும் ப்ளாக் காஃபி மற்றும் நீங்கள் சொல்லிருக்கீங்களே பட்டர் பேப்பரில் பன் சுருட்டி வைத்துக் கொண்டு என்று அவர்களும் அப்படி வைத்துக் கொண்டு கடித்துக் கொண்டே அல்லது சிப்ஸ், அல்லது ஜம்போ ஜூஸ் கப் வைத்து சிப் செய்து கொண்டே சாப்பிடுவது வழக்கம். பெரும்பா;லும் ஆஃபீஸிலேயே மைக்ரோவேவ் இருக்கும். பாப் கார்ன் பாக்கெட்ஸும். அதிலேயே பொரித்து அதையும் வைத்துக் கொரித்துக் கொண்டே வேலை செய்வார்கள். அவர்கள் நம்மைப் போல டிஃபன் பாக்ஸ் எதுவும் கொண்டுவருவதில்லை. இப்போதும் மகன் சொல்லுகிறான் அப்படியேதான் என்று. வீட்டிற்குச் சென்றுதான் அவர்களது சாப்பாடு ஃபுல் மீல் னு பெரும்பாலும் ராத்திரிதான்...

    உங்கள் அனுபவங்கள் சுவாரசியம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்க மாப்பிள்ளையும் சரி, பிள்ளையும் சரி வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் சென்று விடுவார்கள். அதிலும் மாப்பிள்ளை வத்தக்குழம்பு, துவையல் சாதத்தில் இருந்து எல்லாமும் கொண்டு போயிடுவார். வீட்டுச் சமையல் அதிலும் பாரம்பரியச் சமையல்னா பிடிக்கும். பிள்ளை சப்பாத்தி, சப்ஜி, ஏதேனும் சுண்டல் (அநேகமாய்க் கொள்ளு, இல்லைனா பயறு) கொண்டு போவார். காஃபிக்கும் தேநீருக்கும் குறைவே இல்லை. எங்கே போனாலும் கிடைக்கும்.

      Delete
    2. நன்றி கீதா ரங்கன்.
      மேற் தகவல்களுக்கு நன்றி கீதா அக்கா.

      Delete
  9. உங்கள் அனுபவங்களை வாசிக்க ரொம்பவே சுவாரசியமாக இருக்கின்றது. அட அலுவலத்தில் சாப்பிட்டுக் கொண்டே வேலை செய்யலாம் இல்லையா? அப்படி சில ஆங்கிலப்படங்களில் பார்த்திருக்கிறேன்.

    தொடர்கிறேன் அடுத்து உங்கள் அனுபவங்களை அறிந்து கொள்ள

    துளசிதரன்

    ReplyDelete
  10. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நன்றாக இருக்கிறது.
    கேசட் உருகும் அளவு வெயில் அதிகம் என்றால் மிகவும் கஷ்டம்.

    ReplyDelete
  11. அனுபவம் புதுமை உங்கள் பதிவினில் கண்டேன்

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி

    வேலையில் சேர்ந்ததும் அங்கு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்கள் கொஞ்சம் மாறுதலாக இருந்திருக்கும். காலை டிபனையே தினமும் பிரட், பன்னுடன் முடித்து கொள்வது கடினந்தான். ஒரு நிரந்தர இடம் கிடைத்து தினசரி வாழ்வை தொடங்கும் வரை கஸ்டமாக இருந்திருக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது மாதிரி புது நாட்டில், புது சூழலை சமாளித்திருக்கிறீர்கள்.அங்கு அடிக்கும் வெய்யில் பற்றி குறிப்பிட்டிருந்தது கேட்கவே கஸ்டமாக இருந்தது. அடுத்தப் பகுதியையும் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. சுவாரஸ்யமான அனுபவங்கள் பானுமா.
    அந்த ஊர் வெய்யில் சொல்ல வேண்டுமா.
    கொடுமைதான்.
    நீங்கள் கதை எழுதிய அனுபவங்களையும் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி அக்கா.
      //நீங்கள் கதை எழுதிய அனுபவங்களையும் சொல்லுங்கள்.// கதை எழுதிய அனுபவங்களையா? அனுபவங்கள் கதை ஆனதையா? நான் அப்படி என்ன எழுதி விட்டேன்?

      Delete
  14. அனுபவங்கள் சுவாரசியமானவை என்று மேலுக்குச் சொன்னாலும் வெய்யிலிலும் புது நாட்டிலும் நீங்கள் பட்ட சங்கடங்கள் என்னால் உணர முடிகிறது

    ReplyDelete