கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 19, 2024

பெருகி வரும் நுகர்வோர் கலாசாரம்

பெருகி வரும் 

நுகர்வோர் கலாசாரம்

வேடிக்கையாக, ‘அம்மா வேணுமா? அப்பா வேணுமா? என்றுதான் தெருவில் விற்றுக்கொண்டு வரவில்லை, மற்றபடி எல்லாம் கிடைக்கிறது” என்பார்கள். இப்போது சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும் சில பொருள்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

அன்று என் மகன் குட்டி குட்டியான பாட்டில்கள் அடங்கிய பாக்(Pack)ஒன்றை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்தான். என்ன என்று கேட்டதற்கு ப்ரோ ப்யோடிக் ஃபெர்மென்டெட் மில்க், “குட் ஃபார் கட் ஹெல்த்” என்றான் சரி ஏதோ  என்று விட்டு விட்டேன்.

சில நாட்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு பெண்மணி ப்ரோ பயோடிக் ஃபெர்மென்டெட் கர்ட் ரைஸ் என்று ஒரு ரெசிபி எழுதியிருந்தார். அதன் செய்முறை:

சாதத்தை வெடித்து, ஆற வைத்து, பின்னர் அதில் சுத்தமான பச்சைத் தண்ணீரை ஊற்றி, ஆறிலிருந்து, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது அது நொதித்திருக்கும். அதில் உப்பு போட்டு, நன்றாக பிசைந்து, அதில் தயிர் அல்லது மோர் சேர்த்து வேண்டுமானால் கடுகு தாளிக்கலாம். சுவை அள்ளும். இந்த ப்ரோ பயோடிக் ரைஸ் வைட்டமின் பி1. பி12, கால்ஷியம்,பொட்டாஷியம் எல்லாம் நிறைந்த சத்தான உணவு. குடலுக்குமிக மிக நல்லது, அசிடிடி தொல்லை இருப்பவர்கள் இதை உட்கொள்ள, அசிடிடி, ரிஃபெக்ளெக்ஸ் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாமாம்.

அடங்கொக்கமக்கா! இதை நாங்கள் பழையது என்போம். கோடை விடுமுறையில் இதுதான் எங்கள் ப்ரேக்ஃபாஸ்ட். காலையில் குழந்தைகளுக்கு பழையது போடுவதற்காகவே சாதம் நிறைய வடிப்பார்கள். எங்கள் வீடுகளில் பழையது மேடை என்றே ஒன்று இருக்கும். இப்போ அது ப்ரோ ப்யோடிக் ஃபெர்மென்டெட் ரைசாம்!, அதை காசு கொடுத்து வாங்கணுமாம்.

இதைவிட இன்னொரு கொடுமை, நான் அரிசி களைந்த நீரை(கழுநீர்) வீணாக்காமல் செடிகளுக்கு விடுவேன். இதை கவனித்த என் மருமகள்,  இது கூந்தலுக்கு கூட நல்லது” என்றாள். நான், "கழுநீரால் கூந்தலை அலம்ப முடியுமா என்று தெரியாது, நாங்கள் சாதம் வடித்த கஞ்சியை தலைக்கு தேய்த்துக் கொள்வோம், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்” என்றேன். அதற்கு என் மருமகள், “கஞ்சியெல்லாம் நம்மால் வீட்டில் வடிக்க முடியாது, என்பதால் இப்போது அது ஒரு பேஸ்டாக விற்பனைக்கு வந்திருக்கிறது” என்றாள். சரிதான்!


இன்னும் என்னவெல்லாம் வந்திருக்கின்றன? சமைப்பதற்கு கூட மெஷின் வந்து விட்டதே. என்னதான் மெஷினை வாங்கி வீட்டில் வைத்தாலும் அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருக்கும், நாம் ஸ்விகியில் வரவழைப்போம். அப்படித்தானே?

10 comments:

  1. இன்னும் நிறைய சந்திக்க வேண்டும்.
    காத்திருப்போம்.

    ReplyDelete
  2. சீனாவிலிருந்து ஒரு ரோபோ பெண்மணி வாங்கி சமையல் செய்ய வைக்கப் போகிறேன்!  இரண்டு லட்சமாமே..  வீடு பெருக்கி, கோலம் போட்டு...

    ReplyDelete
    Replies
    1. சீன ரோபோ கோலம் போடுமா?

      Delete
    2. AI டெக்னாலஜி. சொல்லிக் கொடுத்தால் எல்லாம் செய்யும்!

      Delete
  3. இப்படிதான் வரட்டி எல்லாம் ஆன்லைனில் கிடைத்தபோது வியந்தோம்! பழைய சாதமே மண் சட்டிகளில் ஹோட்டல்களில் கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பழைய சாதம் மண் சட்டிகளில் ஓகே, அதை பிசைந்து கையில் போட அத்தையோ பாட்டியோ கிடைப்பார்களா? ரொம்பத்தான் ஆசை என்கிறீர்களா?

      Delete
    2. அதையும் கூட கொண்டு வந்து விடுவார்கள்!  ஆனாலும் நம் சொந்த பாட்டி, அத்தை போல வருமா!

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.

    /இந்த ப்ரோ பயோடிக் ரைஸ் வைட்டமின் பி1. பி12, கால்ஷியம்,பொட்டாஷியம் எல்லாம் நிறைந்த சத்தான உணவு. குடலுக்குமிக மிக நல்லது, அசிடிடி தொல்லை இருப்பவர்கள் இதை உட்கொள்ள, அசிடிடி, ரிஃபெக்ளெக்ஸ் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாமாம்/

    .உண்மைதான். பழைய செய்முறைகள், புதிய பெயர் வடிவம் பெற்று வருகிறது. எப்படியோ பழையதை மக்கள் விரும்பினால் சரிதான்...! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பழையன கழிதலும்,புதியன புகுதலும் என்பார்கள். அது ஒரு சுற்று சுற்றி மீண்டும் பழையனவே வருகிறது..

      Delete