மசாலா சாட் - 23
இந்த குழு இப்படி என்றால் இன்னொரு குழு டில்லியை சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள் போலிருக்கிறது. முதல் விமானப் பயணம் என்று தோன்றியது. விமானத்திற்குள் நுழைவதிலிருந்து, கேபின் பேகேஜ் வைப்பது, இறங்கியதும், வாக்கலேட்டரில் நடப்பது என்று அத்தனையையும் வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்கள். நிச்சயம் இன்ஸ்டாக்ராமில் பகிர்வார்கள் என்றுதான் தோன்றியது.
டில்லியிலிருந்து சென்னை திரும்பியவுடன் கொரோனா தடுப்பூசி விஜயா ஹெல்த் சென்டரில் போட்டுக் கொண்டேன். எல்லோருக்கும் கோவிஷீல்டுதான் போடுகிறார்கள். பெங்களூரில் வசிக்கும் நான் சென்னையில் போட்டுக் கொள்ள முடியுமா? என்னும் தயக்கம் இருந்தது. டில்லியில் வசிக்கும் வெங்கையா நாயுடு சென்னையில் போட்டுக் கொண்டது ஒரு நம்பிக்கையை தந்தது. முதல் ஊசியை எங்கு போட்டுக் கொள்கிறோமோ அதே இடத்தில் இரண்டாம் ஊசியையும் போட்டுக் கொண்டால்தான் சான்றிதழ் தருவார்களாம். எங்கள் வீட்டிலும், நட்பு வட்டாரத்திலும் ஊசி போட்டுக் கொள்ள சிலருக்கு ஏதோ தயக்கம் இருப்பது தெரிகிறது. எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறேன்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. மார்ச் 10,11 வேலை இருந்தது. 9ஆம் தேதி காலை காரில் பயணப்பட்டோம். அந்த டிரைவர் மாஸ்க் அணிந்து கொள்ளவில்லை. கேட்டதற்கு கொரோனாவெல்லாம் முடிந்து விட்டது மேடம் என்கிறார். முதலில் நாங்கள் இன்னும் இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கி அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று, திருச்சி பதிவர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால் இனொரு அக்காவின் மகன் சென்னை சி.ஐ.டி. காலனியில் 'பவுல்டு'(BOWLD) என்னும் உணவகத்தின் கிளையை துவங்கியதால் வியாழனன்றே திரும்ப வேண்டிய நிர்பந்தம். கிடைத்த கொஞ்ச நேரத்தில் திரு.ரிஷபன் அவர்களையும், திருமதி. ஆதி வெங்கட்டையும் மட்டும் சந்தித்தேன்.
திரு ரிஷபன் அவர்களின் எழுத்தைப் போலவே அவரும் எளிமையாக இருக்கிறார். மனைவி அருமையான டீ கொடுத்தார். அவர் தந்தையும் எங்கள் உரையாடலில் அவ்வப்பொழுது கலந்து கொண்டார். ஆதி வெங்கட் வீட்டை கண்ணாடி போல் பளிச்சென்று வைத்திருக்கிறார். அவரோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. இந்த முறை கீதா அக்காவையும் பார்க்க முடியவில்லை.
கூரத்தாழ்வார் சன்னதி |
கமலவல்லி சமேத அழகிய மணவாளன் சன்னதி நுழை வாயில் |
எப்போதும் செல்லும் மலைக்கோட்டை விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம் தலங்களை தரிசனம் செய்து விட்டு, உறையூரில் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில், நாச்சியார் கோவில்களுக்கும் சென்றோம். எந்த கோவிலிலும் நமஸ்கரிக்க அனுமதியில்லை. பெருமாள் கோவில்களில் தீர்த்தம், சடாரி சாதிப்பது போன்றவை இல்லை. அதற்காக நாச்சியார் கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் இரண்டு பேரும் வெகு அலட்சியமாக கால்களை நீட்டியபடி அமர்ந்து கொண்டிருந்ததும், எங்கள் கேள்விகளுக்கு அசிரத்தையாக பதில் சொன்னதும் வருத்தமாக இருந்தது. சாதாரணமாக வைணவ கோவில்களில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு உறையும் பெருமாளின் சிறப்பை எடுத்துக் கூறுவார்கள். இங்கோ பெருமாள் கையில் இருக்கும் சக்கரம் பிரயோக சக்கரம் என்பதை நான் கவனித்து, கேட்டேன் அப்போதும் அலட்சியமான பதில்தான்.. பெருமாளின் சக்கரம் பிரயோக சக்கரமாக இருக்கும் தலங்கள் மிகவும் சிறப்பானவை.
ஏற்கனவே டி.நகரிலும், மடிப்பாக்கத்திலும் கிளைகள் உள்ள பவுல்டு என்னும் உணவகத்தின் கிளையை சென்னை சி.ஐ.டி. காலனியில் துவக்கியுள்ளார் என்னுடைய சகோதரியின் மகன். ஹோட்டல் என்றாலே நான்,பரோட்டா, மட்டர் பனீர், குருமா, பிரியாணி என்ற எண்ணத்தை மாற்றி வீட்டில் கிடைக்கும் ஆனால் இப்போது பெரும்பாலானோர் செய்யாத மோர்க்கூழ், உப்புமா கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை போன்ற ஐட்டங்களை கொடுப்பது நோக்கம். தற்சமயம் டேக் அவே ஆர்டர்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஸ்விகி மூலம் ஆர்டர் கொடுக்கலாம்.
ரைஸ் பவுலில் பருப்பு சாதம், ரசம் சாதம், மோர் குழம்பு சாதம், வற்றல் குழம்பு சாதம், மிளகு குழம்பு சாதம், புளியோதரை, தயிர் சாதம் போன்றவைகள் இருக்கின்றன. ஹோட்டல் சாப்பாடு பிடிக்காத, வீட்டில் சமைக்கவும் முடியாத பெரியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
பல வருடங்களுக்கு முன்னால் திருச்சி ஸ்ரீரங்கம் சென்றபோது ரிஷபன் ஜியை என்னால் சந்திக்க இயலவில்லை. வெளியூர் சென்றிருந்தார். திருமதி வெங்கட் பேஸ்புக்கில் அடிக்கடி பகிரும் குறிப்புகளிலிருந்து அவர் வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருப்பார் என்று தெரியும்.
ReplyDeleteநாங்கள் வசித்த தெருவின் முற்பகுதியில் ரிஷபன் வசித்திருக்கிறார். என்னுடைய சிநேகிதி அவருக்கும் சிநேகிதி போன்ற விஷயங்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது தெரிந்தது.
Deleteஇங்கு எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி கூட ஒரு கடை துவங்கி உள்ளார்கள். டேக் அவே மட்டும்தான். முதலில் மெதுவாக ஆரம்பித்தாலும் இப்போது நன்றாக ஓடுகிறது. அவர்களும் மெல்ல மெல்ல வெரைட்டிகளைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள்.
ReplyDeleteஇப்போது டிமாண்ட் இருக்கும் துறைகளில் உணவகங்கள் முக்கியமானது.
Deleteஇத்தனை இடங்களுக்குப் போயிருக்கீங்க. எங்களிடம் சொல்லக் கூட இல்லை. மாமாவும் உங்களைப் பார்க்கணும்னு சொல்லிக் கொண்டிருந்தார். நாங்களாவது வந்து பார்த்திருப்போம். கொரோனாவினால் சொல்லி இருக்க மாட்டீங்க என்று நினைக்கிறேன். போகட்டும். நானும் இன்னமும் எங்கும் போக ஆரம்பிக்கவே இல்லை.
ReplyDeleteகொரோனா ஒரு முக்கிய காரணம். நேரம் மிகவும் குறைவாக இருந்தது. எங்கள் அண்ணாவின் வீடு இருப்பது இரண்டாவது மாடியில், மின்தூக்கி கிடையாது, அதனால் உங்களை அங்கு வரச்சொல்லுவதில் தயக்கம் இருந்தது.
Deleteதடுப்பு ஊசி போட்டுக்கொள்ளச் சொல்லிப் பலரும் சொல்லி வருகிறார்கள். சிலர் கோவிஷீல்ட் போட்டுக்கோ என்றும் சில கோவாக்ஸின் போட்டுக்கோ என்றும் சொல்லிக் கொண்டு இருக்காங்க. இன்னமும் எங்கள் மனம் அதில் பதியவில்லை. போகப் போகப் பார்ப்போம்.
ReplyDeleteசென்னையில் கோவி ஷீல்டுதான் போடுகிறார்கள்.
Deleteஇன்னமும் வயிறு ஒரு நிலைக்கு வராததால் என் சமையலையே ரொம்பக் கஷ்டப்பட்டுச் சாப்பிட்டு வருகிறேன். இதிலே கடைகளிலே எங்கே வாங்கறது. 2,3 மாதங்களாக அடுத்தடுத்து உடம்புப் படுத்தலில் பக்ஷணம் ஒண்ணும் பண்ணலையேனு தெரிந்த மாமியிடம் பண்ணித் தரச் சொல்லி வாங்கினால் ஒரே எண்ணெய்! எண்ணெயின் வாசனை மட்டுமில்லாமல் கைகளில் எல்லாம் எண்ணெய். நான் தொடவே இல்லை. நேற்று ஒன்று எடுத்துக் கொண்டுவிட்டு அவருக்குப் பிடிக்கவே இல்லை. விலையும் அதிகம்! :( காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்டாற்போல் ஆகி விட்டது.
ReplyDelete//காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்டாற்போல் ஆகி விட்டது.// ஹாஹா! சில சமயம் அப்படியும் ஆகி விடுகிறது. இங்கு கூட நான் மோர் குழம்பு சாதம் ஆர்டர் கொடுத்தேன். காரம் அதிகமாக இருந்தது.
ReplyDeleteதடுப்பூசி போட்டுக் கொண்டது நல்லது.
ReplyDeleteஅடுத்தவாரம் என்னை அழைத்து செல்வான் மகன் ஊசி போட.
//வீட்டில் கிடைக்கும் ஆனால் இப்போது பெரும்பாலானோர் செய்யாத மோர்க்கூழ், உப்புமா கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை போன்ற ஐட்டங்களை கொடுப்பது
நோக்கம்.//
நல்ல ஐட்டங்கள்.
உங்கள் சகோதரி மகன் துவக்கி உள்ள உணவகத்திற்கு வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
ReplyDeleteதடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு வாழ்த்துகள்.
இங்கேயும் வயதானவர்களுக்கு ஊசி போடுவதில் சிரமம். இல்லை.
திருச்சி சென்று எல்லோரையும்
சந்தித்தது மகிழ்ச்சி.
இப்பொழுது அவ்வளவு வெய்யில் அதிகம் இருந்திருக்காது என்று நம்புகிறேன்.
தங்கள் அக்கா மகனுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
இனிய சுற்றுலா...
ReplyDeleteஹோட்டல் சிறக்க வாழ்த்துகள்...
மிகவும் சுவாரஸ்யமான பதிவு!
ReplyDeleteதங்கள் சகோதரி மகனுக்கு என் வாழ்த்துக்கள்!
take away மட்டும் தானா? உள்ளே அமர்ந்து சாப்பிடும் வசதி இல்லையா?
சிறப்பான மசாலா சாட். விமானப் பயணங்களில் வரும் சக பயணிகள் பல சமயங்களில் தொல்லை தருபவர்களாகவே இருக்கிறார்கள் - எனக்கும் இப்படிச் சில அனுபவங்கள். சென்ற முறை விஸ்தாராவில் பயணிக்கும்போது இப்படி 20 பேர் ஒரு குழுவாக வந்து அதிரடியாக நடந்து கொண்டிருந்தார்கள். தாங்க முடியாத உபத்திரவம்.
ReplyDeleteபல சமயங்களில் திருச்சி வரும்போது நண்பர்கள் அனைவரையும் சந்திக்க முடிவதில்லை - நேரம் இருந்தால் சந்திக்காமல் இருக்கப் போவதில்லை. உங்களால் சந்திக்க முடியாத சூழல் புரிகிறது.
புதிய உணவகம் தொடங்கி இருக்கும் உங்கள் உறவினருக்கு வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteமசாலா சாட் பகுதிகள் அருமை. விமான பயண அனுபவங்களை தெரிந்து கொண்டேன். திருச்சியுள்ள கோவில் தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தது குறித்து மகிழ்ச்சி. அங்குள்ள பதிவர்களை சந்தித்து வந்ததும் மகிழ்ச்சி தரும் செய்தி. கோவில் படங்கள், தங்கள் குடும்ப படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டமைக்கு வாழ்த்துகள். தங்கள் அக்கா மகன் நடத்தும் உணவகத்திற்கு வாழ்த்துகள். மேலும் அது குறித்த பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்கள் அருமை பதிவர்களை சந்திப்பது மகிழ்ச்சியான விசயமே...வாழ்த்துகள்.
ReplyDeleteகொரோனா மீண்டும் தலையெடுப்பதாக தகவல்.