கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 28, 2021

திருவெம்பாவை - 14

திருவெம்பாவை - 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

மற்றுமொரு அழகான பாடல். பாவை நோன்பு நோர்க்கும் பெண்களைப் பற்றிய வர்ணனை. அந்தப் பெண்கள் பொய்கையில் குடைந்து நீராடும் பொழுது அவர்கள் காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடுகின்றன, உடலில் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஆடுகின்றன, கூந்தல் அசைகிறது, அதில் அவர்கள் சூடியிருக்கும் மலர்கள் அமைகின்றன, அந்த மலர்களை மொய்க்கும் வண்டுகளும் சுற்றிச் சுற்றி ஆடுகின்றன. இப்படி நீராடும் நாங்கள் வேதத்தின் பொருளாக விளங்கும் சிவபெருமானை துதித்து, உருவமற்ற சோதியாக உயர்ந்த அவர் நமக்காக ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு கொன்றை மாலை அணிந்து காட்சியளிக்கிறாரே அவரின் திறத்தையும், நன்மை, தீமைகளை பிரித்து காட்டி நம்மை உயரச்செய்யும் உமையாளின் பாதகமலங்களையும் பாடி நீராடுகிறோம்.

5 comments:

  1. இதைப்பாடும் போது நமக்கே ஆடும்/ஆட வேண்டும் என்னும் உணர்வு தோன்றும். திருவாசகத்தின் ஒவ்வொரு வாசகமும் ரசித்து அனுபவிக்க வேண்டியவை.

    ReplyDelete
  2. ஆமாம் பானுக்கா இப்பாடலும் மிக அருமையான பாடல். இது எனக்கு மனப்பாடமாக இருந்தது. அதன் ஓசையும் சந்தமும் வெகு எளிதாக மனதில் பதியும். இப்போது பார்த்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    //உருவமற்ற சோதியாக உயர்ந்த அவர் நமக்காக ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு கொன்றை மாலை அணிந்து காட்சியளிக்கிறாரே //

    இதுதான் முக்கியமான பொருள். உருவமற்ற!!! நமக்காக ஒரு உருவம்! இதுதான் நாம் அறிய வேண்டியது. ஆதியும் அந்தமும்....

    இதே போன்று பிரபந்தத்திலும் வருகிறது. ஆணல்லன் பெண்ணல்லன்....சுஜாதா கூட இதைச் சொல்லியிருப்பார்.

    வள்ளலாரும் சோதி வடிவமாகத்தான் கண்டார் இறைவனை. வள்ளலார் சபையில் உருவ வழிபாடு கிடையாது. தியான மண்டபமாகத்தான் இருக்கும். சென்றிருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வள்ளலார் ஜோதி ஸ்வரூபமாய் இறைவனைக் கண்டார் என்பதை விட அவர் அந்த ஜோதியில் ஐக்கியம் ஆனார் எனலாம். மேலும் அவர் உருவ வழிபாடு செய்யாதவர் இல்லை. கந்த கோட்டத்து முருகனை நினைந்து அவர் எழுதிய பல பாடல்கள் இன்றளவும் முருக பக்தர்களால் பாடப்படுகின்றன. அதே போல் ஈசனைப் பற்றியும் பாடி இருக்கிறார். வள்ளலார் பற்றி நான் மரபு விக்கிக்காக எழுதியவற்றின் சுட்டியைப் பின்னர் தருகிறேன்.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    இன்றைய திருவெம்பாவை பாடலும், அதன் அருமையான விளக்கமும் நன்றாக உள்ளது. படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete