கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 5, 2020

திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை

திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை 




பாவை நோன்பு நோற்பது நல்ல கணவனை அடையவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும்தான். தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்ட  மாணிக்கவாசகர், தனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று இறைவனிடம் நிபந்தனை விதிக்கிறார்.

இப்போது பரவலாக ஒரு பேச்சு என்னவென்றால் பெண்கள் திருமணத்திற்கு நிறைய கண்டீஷன்கள் போடுகிறார்கள் என்பது. ஆனால் நம் நாட்டில் அந்தக் காலத்திலேயே நிபந்தனை விதித்து திருமணம் செய்து கொண்ட பெண்களை நாம் குமார சம்பவத்திலும், மகாபாரதத்திலும் பார்த்திருக்கிறோம்.

இங்கே திருவெம்பாவை பெண் என்ன நிபந்தனை விதிக்கிறாள்? மணமகளை கைபிடித்து இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் தாரை வார்த்தல், அல்லது கைத்தலம் தருதல் என்னும் சடங்கினை நினைத்தால் அவளுக்கு அச்சமாக இருக்கிறதாம். வார்த்தையை கவனியுங்கள் 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்னும் அங்கம் பழம் சொற் புதுக்கும் எம் அச்சத்தால்.." என்கிறாள். நல்ல கணவனை அடைய வேண்டும் என்று நோன்பிருக்கும் பெண் திருமணத்தை நினைத்து அச்சப்படுவாளா? என்னும் கேள்வி இங்கே வருகிறது. என்னுடைய பெண்ணை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று தாரை வார்த்து கொடுப்பதை ஏன் பழம் சொல் என்கிறார்? ஏனென்றால் காலம் காலமாக இதைச் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மிகவும் பழமையான வேத மந்திரங்களை ஓதித்தான்  திருமண சடங்குகளைச் செய்வது பழக்கம்.
அதனால்தான் அந்த சொற்களை கேட்கும் பொழுது அவளுக்கு அச்சம் வருகிறது.  ஒரு சிவ பக்தனின் தோள்களைத்தான் நான் தழுவிக்கொள்வேன், சிவ பக்தனுக்கே அடிமையாக சேவை செய்வேன். இந்த பரிசை மட்டும் எனக்கு அளித்து விடுவதாக நீ உறுதி கூறினால் சூரியன் எங்கே உதித்தாலும் எனக்கு கவலை இல்லை. என்று தீர்மானமாக கடவுளிடம் வரம் கேட்கும் அந்தப் பெண்ணின் பக்தியும், திடமும், உறுதியும் என்னை வியக்க வைக்கும். 

உன் கையிற் பிள்ளை  உனக்கே அடைக்கலாமென்(று)
அங்கப் பழஞ் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம்  கேள்
எம்கொங்கை நின்னபரல்லாதார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல்  பகலென்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்

24 comments:

  1. பதிவு ரசனையாக இருந்தது படிப்பதற்கு...
    காணொளி காலையில் கேட்பேன் நன்றி

    ReplyDelete
  2. ராசக்ரீடை போலத் திருவெம்பாவையின் விளக்கங்களும் மறை பொருள் கொண்டது. இங்கே தன்னைப் பெண்ணாக உருவகப்படுத்திக் க்மாணிக்க வாசகர் பாடி இருக்கும் அனைத்துப் பாடல்களும் அருமை என்றாலும் எனக்குப் பிடித்தது என்றால், "காதார் குழையாடப், பைம்பூண் கனலாட காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

    கோதை குழலாட வண்டின் குழாமாடச்
    சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

    வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
    சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

    ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
    பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

    ReplyDelete
    Replies
    1. காதாற் குழையாட பாடல் மிகவும் அழகான பாடல். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. கேட்டேன், ரசித்தேன்.    உண்மையில் இதை முன்பே யு டியூபில் கேட்டு ரசித்து விட்டேன்.

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. திருப்பாவையும் திருவெம்பாவையும்
    இரு கண்களைப் போல...

    ஆண்டாள் மழைக் குறிப்பு
    சொல்லியிருப்பதைப் போல
    மாணிக்கவாசகரும் சொல்லியிருப்பார்..

    வாழ்க தமிழ்...

    ReplyDelete
  5. இந்த செல்வங்கள் அடுத்த தலைமுறைக்கும் செல்ல வேண்டும். நன்றி.

    ReplyDelete
  6. காணொளி கேட்டேன் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி. நீங்கள் என்னதான் விஷயம் என்பதை விடயம் என்று எழுதினாலும், உங்கள் பெயரை 'ஜி' என்றுதான் முடிக்க வேண்டியிருக்கிறது. 'சீ' என்று முடித்தால் நன்றாக இருக்காது.  

      Delete
  7. காதார் குழையாட, மிகப் பிடித்த பாடல். நீங்கள் எழுதி இருக்கும்
    பாடலை நேற்று நினைத்துக் கொண்டேன் . மணிவாசகர் வாசகம்
    என்றும் பொய்க்காது.
    ஒரு பக்தை இன்னோரு பக்தனையே
    அடைய விரும்புவாள். அல்லார்க்கு வாழ்க்கைப் படின் அச்சம் தான் மிஞ்சும். மிக அர்த்தமுள்ள
    அருமையான காணொளி.
    மிக நன்றி பானு மா.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். 

      Delete
  8. ஒரு பக்தைக்கு ஒரு பக்தன் கிடைக்கவில்லை என்றால் அவள் பக்தி பங்கப்பட்டு விடும்.
    அவள் இறைவன் மீதான பக்திக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இந்த வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. பக்தியில்லாத வாழ்க்கைத் துணையை தன் பக்தியால் மாற்றியவர்கள் உண்டு. ஆனால் அதற்கு கொஞ்சம் போராட வேண்டும். வருகைக்கு நன்றி.  

      Delete
  9. மிக அழகாய் விளக்கம் அளித்தீர்கள். காணொளி கேட்டேன்.
    திருப்பாவை, திருவெம்பாவை தினம் பாடச் சொல்வார்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. //திருப்பாவை, திருவெம்பாவை தினம் பாடச் சொல்வார்கள் அம்மா.// நம் பெற்றோர்கள் தங்கள் கடமையை சிறப்பாக செய்து விட்டார்கள். நம்முடைய கலாச்சார சிறப்பை அடுத்த தலை முறைக்கு கடத்த வேண்டியது நம் பொறுப்பு. 

      Delete
  10. வைணவ கோதை நாச்சியாரின் திருப்பாவைக்கு சைவ எதிர்ப்பாட்டோ திரு வெம்பாவை என்று சில நேரங்களில் நினைப்பதுண்டு

    ReplyDelete
    Replies
    1. இதற்கு பதில் கூற கீதா அக்கவைத்தான் அழைக்க வேண்டும். என் கருத்தில் எதிர்ப்பாட்டு என்று சொல்வதை விட, அதன் பாதிப்பு என்று கூறலாம். அது கூட சரியாகாது, ஏனென்றால் கவிதை தன்னைத்தானே பிறப்பித்துக் கொள்ள வேண்டும். வருகைக்கு நன்றி. 

      Delete
    2. மாணிக்கவாசகர் காலம் தேவார மூவருக்கு முற்பட்டது எனச் சிலரும் ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுண பாண்டியன் காலம் எனச் சிலரும் கூறுவர். அவர் காலத்தை இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஆண்டாள் ஏழாம் நூற்றாண்டு. மாணிக்க வாசகருக்குப் பின் ஆண்டாள் தோன்றி இருந்தால் ஒருவேளை மணிவாசகரின் தாக்கமாக இருந்திருக்கலாமோ என்பதற்கும் இடம் இல்லை. அதே போல் ஆண்டாளுக்குப் பின் மணி வாசகர் தோன்றி இருந்தால் ஆண்டாளின் தாக்கம் என்றும் சொல்லுவதற்கில்லை. அவரவர் வழியில் அவரவர் பாடி இருக்கின்றனர். இதில் சைவம், வைணவம் என்றெல்லாம் யாரும் பிரித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. இரண்டுமே சரணாகதி, பரிபூரண சரணாகதி தத்துவத்தைத் தான் சொல்லுகிறது என்பதே ஒற்றுமை. ஆனால் இருவரும் சமகாலத்தவர் இல்லை.

      Delete
    3. ஆண்டாளின் நோக்கம், "மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்!" என்பதே! அவள் காதல் கொண்டதும் கண்ணனிடம். மாணிக்கவாசகர் ஈசன் மேல் கொண்ட காதல் வேறு வகையானது. அவருடைய பாடல்கள் யோகமுறையில் இறைவனை அடைவதைச் சுட்டுகிறது என்பார்கள்.

      Delete
    4. அழகான விளக்கத்திற்கு நன்றி அக்கா.

      Delete
    5. // கவிதை தன்னைத்தானே பிறப்பித்துக் கொள்ள வேண்டும்..//

      கதையும் கவிதையும் அப்படித்தான்...

      அருமை...

      Delete
  11. மிக அழகான விளக்கம் மா... கேட்டும் படித்தும் ரசித்தேன்.

    ReplyDelete