கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 18, 2021

திருவெம்பாவை - 3

திருவெம்பாவை - 3



முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் 
நமக்கேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலும், வெளியே நிற்கும் தோழிகளுக்கும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் ஒரு உரையாடலாகத்தான் அமைந்திருகாகிறது.

"முத்துப்போல் பளிச்சென்ற புன்னகை கொண்டிருக்கும் பெண்ணே! எங்களோடு பேசும் பொழுது சிவபெருமான்தான் என் தந்தை, என் சந்தோஷமே அவன்தான், எனக்கு மரணமற்ற வாழ்வை அளிக்கவல்ல அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாவினிக்க பேசுவாய்.‌ உன் வீட்டு கதவைத் திறப்பாயாக". என்று கேலியாக கூறியதும்... 

உள்ளே இருப்பவளுக்கு நாணமும்,குற்ற உணர்ச்சியும் மேலிட, நல்ல பண்புகள் கொண்ட பெண்களே, நீங்கள் எல்லோரும் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்கள், நீண்ட நாட்களாக அவருடைய அடியவர்கள், நானோ புதியவள், உங்கள் நடைமுறைகளை எனக்கு சொல்லிக் கொடுத்து, என் குற்றங்களை மன்னித்தால் ஆகாதா? இதுதான் உங்கள் அன்பா? என்கிறாள்.
அவர்கள் விட்டு விடுவார்களா?

"அடியே, நீ சிவபெருமான் மீது கொண்டிருக்கும் பக்தி எங்களுக்குத் தெரியும்" என்றதும்
அவள் வாளாதிருப்பாளா?

"உள்ளம் தூய்மையாக இருப்பவர்கள் சிவனின் பெருமையை பேசுவதைத்தானே விரும்புவார்கள்? (இப்படி மற்றவர்களை குறை கூறுவார்களா? என்பது உட்கிடை)என்றதும், 

வெளியே நிற்கும் தோழிகளோ, "உன்னையும் சேர்த்துக் கொண்டதற்கு எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்" என்பதாக இந்தப் பாடலை முடிக்கிறார்.

என்ன ஒரு அழகிய நாடகம் போன்ற படைப்பு!

12 comments:

  1. உரையாடலை மிகவும் ரசித்தேன்.

    "உள்ளம் தூய்மையாக இருப்பவர்கள் சிவனின் பெருமையை பேசுவதைத்தானே விரும்புவார்கள்? (இப்படி மற்றவர்களை குறை கூறுவார்களா? என்பது உட்கிடை//

    குறை கூறும் நேரத்தில் நாம் நல்லது நினைக்க வேண்டும் என்ப்து எவ்வளவு சிறப்பு இல்லையா.

    இதே போலத்தான் மனதில் ஏதேனும் நெகட்டிவாகத் தோன்றினால் அதை வெளியில் சொல்லாமல் இறைவனைத் துதித்திட வேண்டும் என்று சொல்வதும் என்று தோன்றியது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //இதே போலத்தான் மனதில் ஏதேனும் நெகட்டிவாகத் தோன்றினால் அதை வெளியில் சொல்லாமல் இறைவனைத் துதித்திட வேண்டும் என்று சொல்வதும் என்று தோன்றியது// சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

      Delete
  2. அழகிய படைப்பு..
    நம சிவாய நம ஓம்..

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    திருவெம்பாவை 3 ம் பாசுரம் நல்ல விளக்கத்துடன் இருக்கிறது. எப்போதும் இறை சிந்தனையுடன் இருப்பவர்களை இறைவன் விளையாட்டாய் சோதித்தாலும், அவர்களுக்கு அந்த சோதனை ஒரு பொருட்டல்ல.. அதுபோல் அந்த பெண்ணை கேலி செய்து வம்புக்கு இழுத்தாலும், சதா சிவனைப் பற்றிய சிந்தனையில் இருப்பவளுக்கு இது ஒரு பொருட்டேயல்ல..பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. மிக அருமையாக அதே சமயம் எளிமையாக சொல்லி வருகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எளிமையாக சொல்ல வேண்டும் என்பதுதான் நோக்கம்.நன்றி.

      Delete
  5. இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும்...

    தொடர வேண்டும்...

    ReplyDelete
  6. இறையருள் வேண்டும்.

    ReplyDelete