கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, July 10, 2021

நவாப்பழம் வாங்கலையோ..நவாப்பழம்...

நவாப்பழம் வாங்கலையோ..நவாப்பழம்...


அன்று காய் வாங்குவதற்காக வெளியே சென்ற பொழுது, ஒருவர் வண்டியில் நாவல் பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தார். அது எத்தனையோ பழைய நினைவுகளை கிளறி விட்டது. பள்ளிக்கூட நாட்களில் ஸ்கூல் வாசலில் ஒரு கூடையில் நாவல் பழங்களை விற்றுக் கொண்டிருக்கும் கிழவி நினைவுக்கு வந்தார் . ஒரு கூறு பத்து பைசா. மந்தார இலையில், அல்லது நீயூஸ் பேப்பரில் கட்டித் தருவார். இப்போதெல்லாம் கூறெல்லாம் கிடையாது கால் கிலோதான் தருவேன் என்றார். 

விநாயகருக்கும், கிருஷ்ணருக்கும் மிகவும் பிடித்தது என்று நம்பப் படுகிறது. விநாயக சதுர்த்தி அன்றும், கோகுலாஷ்டமி அன்றும் முக்கியமான நைவேத்தியம். "ஜம்பு பலஸார பக்ஷிதம் .." என்று ஸ்லோகத்தில் வருகிறது. ஜம்பு பலம் என்பது நாவல் பழம்தான்.

நாவல் மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்ட கோவில் திருச்சிக்கும், ஸ்ரீரெங்கத்திற்கும் இடையில் இருக்கும் திருவானைக்கோவில். அங்கிருக்கும் ஸ்வாமி ஜம்புகேஸ்வரர் என்றும், அந்த ஷேத்திரமே ஜம்புகேஸ்வரம் என்றும் வழங்கப் படுகிறது. 

இந்த நாவல் பழம் பல நல்ல மருத்துவ குணங்களை கொண்டது.  நாவல் பழம் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நாவல் பழத்தின் கொட்டைகளை காய வைத்து இடித்து,அந்த பொடியை நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவார்கள். இப்போதெல்லாம் அந்த பொடியே கிடைக்கிறது. இதைத் தவிர பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயத்திற்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இதில் இரும்புசத்து நிறைய இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தத்தை சுத்தமாக்கும்.எனவே தோல் மினுமினுப்பு பெறும், இதில் இருக்கும் வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி ' கண்களுக்கு நல்லது என்று நன்மைகளை பட்டியல் இடுகிறது கூகுள். இதுதான் சீசன், வழியில் வண்டியில் யாரவது நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்தால் வாங்கி நீங்களும் சாப்பிடுங்கள், குழந்தைகளுக்கும் கொடுங்கள்.   

29 comments:

  1. என் அக்காவுக்கு மிகவும் பிடிக்கும்.  பாஸுக்கும் பிடிக்கும் என்றாலும் இதைச் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கொள்ளும்!

    ReplyDelete
    Replies
    1. பள்ளியில் படித்துக்க கொண்டிருந்த பொழுது ஒரு முறை நவாப்பழம் வாங்கி சாப்பிட அம்மாவிடம் காசு கேட்க,"அது சாப்பிட்டால் ஜுரம் வரும், சாப்பிடக் கூடாது" என்று அம்மா மறுக்க, "போனால் போகிறது என்று அப்பா நாலணா கொடுத்தார். நவாப்பழம் வாங்கி சாப்பிட்டதும் அம்மா சொன்னது போலவே ஜுரம் வந்து விட்டது.

      Delete
  2. நாங்களும் இதை அதே இரண்டு பூஜைகளுக்குதான் வாங்குவோம்... சிறிய அளவு!  இதே போல பூஜைகளுக்கென்றே வாங்கும் இன்னொரு பழம் பிரப்பம்பழம்.  அதைச் சாப்பிடுவார்களா என்று கூட தெரியாது!

    ReplyDelete
    Replies
    1. பிரப்பம் பழத்தை ஒரே ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்தேன். துவர்ப்பாக இருந்தது. நன்றி ஸ்ரீராம்.

      Delete
    2. சென்னையில் இருந்தவரை பிள்ளையார் குடை, எருக்கம்பூ, நாவல் பழம், பிரப்பம்பழம் எல்லாம் அப்படியே செட்டாகக் கொடுப்பாங்க. இங்கே எல்லாம் குடை கூடக் கிடைப்பதில்லை. நான் அறிந்தவரை பிள்ளையார் குடையே பார்க்கலை. எருக்கம்பூ வீதிகளில் கிடைப்பனவற்றைப் பொறுக்கிக் கோர்த்துப்போம். பிரப்பம்பழம் இங்கே கிடைப்பதில்லை.

      Delete
    3. பிரப்பம்பழம் என்றால் விளாம் பழமா..? உடைத்தால் தேங்காய் போல் இரு ஓடாக வரும். உள்ளே இருப்பதை சுரண்டி எடுத்து வெல்லப் பொடியோ, ஜீனியோ சேர்த்து சாப்பிடுவோம். அதுவா?

      நானும் இங்கு வந்த பின் ஒரு வருடமேனும் பிள்ளையார்க்கு குடை பிடிக்கவில்லை.

      Delete
    4. பிரப்பம்பழம் சின்னச் சின்னதாக இருக்கும். விளாம்பழம் வேறே, பிரப்பம்பழம் வேறே. பள்ளி நாட்களில் வாத்தியார் பிரம்பால் அடிப்பதைக் கூட அப்போதெல்லாம் பிரப்பம்பழம் வாங்கினியானு கேலி செய்வாங்க. அது வேறே! இது வேறே! ஹிஹிஹி!

      Delete
    5. அப்படியா சகோதரி. இந்தப் பழத்தைப் பற்றி விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி. இதுவரை வாங்கினதாக நினைவில்லை. (வாத்தியாரிடம் அடியையுந்தான்... ஹா ஹா.) நன்றி சகோதரி.

      Delete
  3. நாவல் பழம், பண்டிகைப் பழம்.
    தாகம் எடுக்கும்
    இது சாப்பிட்டால் நாக்கு சிவந்துவிடும் அதற்காகவே
    வாங்கின நாட்கள் பள்ளிக்கூட நாட்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாய் அக்கா, எப்படி இருக்கீறீர்கள்? பள்ளி நாட்களுக்குப் பிறகு கோகுலாஷ்டமிக்கு நைவேத்தியம் செய்த பிறகு சாப்பிடுவேன். பிரயாணங்களின் பொழுது கிடைத்தால் வாங்கி சாப்பிடுவதுண்டு. நன்றி.

      Delete
  4. பெங்களூரில் பழங்கள் நிறைய கிடைக்கிறது. நாவல் பழம் பெரியது, கிலோ 120 ரூ. இரு நாட்களுக்கு முன் 90 ரூபாய்க்கு வாங்கினேன். நிறைய கல் உப்பு போட்டு தண்ணீரில் சில மணி நேரங்கள் வைத்திருந்து பிறகு சாப்பிடுவேன்.

    பொட்டாசியம் என்றதும், நண்பனை பஹ்ரைனில் சாப்பிடக் கூப்பிட்டதும், எல்லாவற்றையும் தயார் செய்தவன், அவன் வந்த பிறகு சூடாக வெண்டைக்காய்கறி செய்யலாம் என திருத்தி வைத்திருந்தேன். அவனோ, அதில் பொட்டாசியம் அதிகம், எனக்கு கிட்னி ப்ராப்ளம் இருக்கு, வேண்டாம் எனச் சொன்னது நினைவுக்கு வருது

    ReplyDelete
  5. By the by பாரத்த்துக்கே, ஜம்புத்வீபம், நாவலம்பெரிய தீவு என்று பெயர்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சங்கல்பங்களில் வரும். நன்றி

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. நாவல் பழம் சாப்பிட்டு நாட்களாகி விட்டது. பார்ப்பதற்கே நல்ல கலர். அது சாப்பிட்ட பின் நாக்கு கொஞ்ச நேரத்திற்கு தடித்துப் போகும். அதனால் சிறுவயதிலிருந்தே ஒன்றிரண்டை தவிர நிறைய சாப்பிட விரும்ப மாட்டோம்.

    அதன் மருத்துவ குணங்களைப்பற்றி இப்போது தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்லும் பண்டிகைகளுக்கு இடம் பெறும் இவைகளை அன்று மட்டுந்தான் வாங்கி சாப்பிட்டுள்ளோம். ஆடிப் பிறக்கப் போவதால், வரும் பண்டிகைகளுக்காக அவற்றின் சீசனும் வந்துள்ளது போலும். மிக அழகாக அதன் உபயோகங்களைப் பற்றியும், தெய்வத்துடன் சம்பந்தபட்டதையும் சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் அழகான பின்னூட்டம். இப்போதுதான் சீசன்.

      Delete
  7. இந்த முறை கொரோனாவால் ஊருக்குப்போகவும் முடியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த நாவல்பழத்தை சாப்பிடவும் முடியவில்லை. இப்போதெல்லாம் பெரிய பழங்கள்,உருண்டையாக இல்லாமல் நீள சைஸில் கிடைக்கிறது. ஆந்திரா பழங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் உருண்டையாக இருக்கும் நாட்டு நாவல்
    ப‌ழம் தான் ருசியானது. அது மட்டுமல்ல. அவை தான் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டது. வாங்கி நன்கு கழுவி கல் உப்பு போட்டுக் கலந்து சில மணி நேரங்களாவது ஊற வைத்து அப்புறம் சாப்பிட வேண்டும். தொண்டை பிடிக்காது. கொஞ்சமாக எல்லாம் வாங்குவது கிடையாது. நிறைய வாங்குவது தான் வழக்கம். தஞ்சை பக்கம் நிறைய கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஆந்திரா பழங்கள் வந்து ஆக்கிரமித்து விட்டன.

    ReplyDelete
    Replies
    1. நான் வாங்கியதும் நீளமான நாவல் பழங்கள்தான். எங்கள் வீட்டில் நான் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்பதால் குறைவாகத்தான் வாங்குவேன். பலாச்சுளை கூட நாலே நாலுதான் வாங்குவேன்.

      Delete
  8. எங்கு எப்போது கிடைத்தாலும் வாங்கி விடுவோம்...

    ReplyDelete
  9. மிக நல்ல பழக்கம். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை அவ்வப்போது வாங்கி சாப்பிட வேண்டும் என்கிறார்கள். எலந்தை பழம் கிடைக்கும் பொழுது வாங்கி சாப்பிட்டு விட்டால் ஒரு வருடத்திற்குரிய இன்சுலின் கிடைது விடும் என்கிறார்கல். என் சிறிய வயதில் ஒரு கைப்பிடி அரிசி போட்டால் ஒரு ஆழாக்கு இலந்தைப் பழம் கிடைக்கும்.

    ReplyDelete
  10. இந்தப் பழங்களை எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. அப்பா கிருஷ்ண ஜயந்தி, பிள்ளையார் சதுர்த்திக்கே வாங்க மாட்டார். பள்ளியில் யாராவது வாங்கினால் அவங்க கொடுத்து ருசி பார்த்தது தான். அதுக்கே தொண்டை கட்டிக் கொண்டு வீட்டில் பதில் சொல்ல முடியாது. ஆனால் இவற்றை நிறையச் சாப்பிடுபவர்களையும் பார்த்திருக்கேன். வடக்கே நாவல்பழங்களின் மேல் உப்புத் தூவிக் கொடுப்பார்கள். கொய்யாப்பழம் எனில் மி.பொடி, உப்புக் கலந்து தடவிக் கொடுப்பார்கள். எல்லோரும் நிறைய வாங்கிச் சாப்பிடுவதை வேடிக்கை பார்ப்பேன். :))))

    ReplyDelete
    Replies
    1. //வடக்கே நாவல்பழங்களின் மேல் உப்புத் தூவிக் கொடுப்பார்கள்.// நம் ஊரிலும் அப்படிதான் தருவார்கள். நானும் உப்பு தூவிதான் சாப்பிடுவேன்.

      Delete
    2. சோலைமலை முருகன் கோயிலில் நாவல் மரம் இருந்தது. இப்போ இருக்கானு தெரியலை. இந்த மரத்தடியில் தான் ஔவைப் பாட்டியிடம் முருகன் நாவல் பழத்தைச் சுட்ட பழம் வேண்டுமா/சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு ஔவைக்கு ஞானம் கொடுத்ததாகச் சொல்லுவார்கள். அங்கே அறிவிப்புப் பலகையும் இருந்தது.

      Delete
  11. நாவல் பழத்தில் கொஞ்சம் உப்பு போட்டு குலுக்கி, கொஞ்ச நேரம் வைத்து விட்டு சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளது ஸ்ரீராம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா. கேள்விப்படிடிருக்கிறேன். மோரில்கூட ஊறப் போடுவார்கள் என்று ஞாபகம்.

      Delete
  12. பள்ளிப் பருவத்தில் சின்னதாக கிடைக்கும், சதைப்பற்று குறைவாக இருக்கும். முதன் முதலில் கல்கத்தாவில்தான் பெரிய பள பளவென மின்னும் நாவல்பழம் பார்த்தேன்.
    இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. விலை அதிகம். ஆனால் ஒரு பழம் கூட கெடாமல் நன்றாக இருக்கிறது.

    இப்போது சந்தையில் அந்த சின்ன நாவல் பழம் கிடைக்கிறது, ஆழாக்கு வைத்து அளந்து தருகிறார்கள். இந்த மாதிரி பெரிய பழங்கள் பழக்கடைகளில் கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இங்கே சின்ன நாவல் பழம் கிடைப்பதில்லை. கிடைக்கும் எல்லாப் பழங்களும் சதைப்பற்றோடு நன்றாக இருக்கின்றன.

      Delete
  13. நாவல் பழ நினைவுகள் எனது மனதிலும். நெய்வேலியில் மரங்கள் உண்டு. மரத்தில் ஏறி பறித்துச் சாப்பிட்டதுண்டு. இது குறித்து ஒரு பதிவும் “மனச் சுரங்கத்திலிருந்து” பதிவாக எழுதி இருக்கிறேன்.

    ReplyDelete
  14. //மரத்தில் ஏறி பறித்துச் சாப்பிட்டதுண்டு.// ஆஹா! அந்த சாகஸ சுவை அலாதிதான்.

    ReplyDelete