கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 25, 2021

ஒரு ஊரின் கதை

 ஒரு ஊரின் கதை 


இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு திரு.துரை செல்வராஜூ அவர்களின் 'அந்த  காலத்துல' என்னும் கதை எங்கள் பிளாகில் பிரசுரமாகியிருந்தது. அதில் வளர்ச்சி என்ற பெயரில் நம் ஊர்கள் எப்படி பாழடிக்கப்படுகின்றன என்று ஆதங்கப் பட்டிருந்தார். அதற்கு தில்லையகத்து கீதா தன்னுடைய பின்னூட்டத்தில்,"வளர்ச்சி தவிர்க்கப் பட முடியாதது, ஆனால் வளர்ச்சிக்காக நாம் ஊரின் அழகு பாதிக்கப்படுவது சோகம் என்று எழுதியிருந்தார். இதை படித்த பிறகு எனக்கு ஓமான் நினைவு வந்தது. அந்த நாடு ஒரு பருவப் பெண்ணைப் போல் வெகு அழகாக வளர்ந்தது. 

என் கணவர் 1979இல் அங்கு சென்ற பொழுது பாலைவனம் என்றால் பாலைவனம்தான். எங்கும் மொட்டையாக நிற்கும் மலைகளும், மணலும்தானாம். ஏன் நான் 1987 அங்கு சென்ற பொழுது கூட சில முக்கியமான சாலைகளைத் தவிர பெரும்பான்மையான சாலைகள் கச்சா ரோடாகத்தான் இருந்தன. அப்போதுதான் அல் குவைர் எனப்படும் குடியிருப்பு பகுதி உருவாக ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அங்கிருந்த பி.ஹெச்.எஸ். எனப்படும் ஒரு வட்ட வடிவ கட்டிடம், ஐஸ் ஸ்கேட்டிங் ரிங் எனப்படும் போன்றவை அடையாளங்கள். நாளடைவில் அல்-குவைர்  பிரம்மாண்டமாக  வளர்ந்து விட்ட பிறகு இவை இருக்கும்  இடம் தெரியவில்லை. 

அதைப்  போலத்தான் வாடி கபீர் என்னும் இடமும். ஆரம்பத்தில் வெறும் கச்சா ரோடாக இருந்த இடத்தில் இருட்டிய பிறகு செல்வதற்கு பயப்படுவார்களாம். ஓரளவு வளர்ந்த பிறகு கூட நெருப்புத் துண்டுகளாக ஜொலிக்கும் கண்களோடு நரிகள் ஓடுவதை பார்த்திருக்கிறேன். பின்னர் அந்த இடம் எப்படிப்பட்ட அழகான,பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டது!

ஆரம்பத்தில் அங்கு ரியாம் பார்க் என்று ஒரு பார்க் மட்டுமே நகருக்குள் உண்டு. கொஞ்சம் தள்ளி நசீம் கார்டன் என்று ஒரு இடம் உண்டு. அங்குதான் விடுமுறை நாட்களில் பிக்னிக் செல்வோம். நாளடைவில் வாடி கபீர் பார்க், டார்செய்ட் பார்க்,கல்பூ பார்க், குரம் என்னும் இடத்தில் மிகப் பெரிய ரோஸ் கார்டன். விதம் விதமான ரோஜாக்களை அந்த பாலைவனத்தில் பூக்க வைத்தார்கள். அங்கு ஒரு செயற்கை நீர் வீழ்ச்சி வேறு உண்டு. விடுமுறை நாட்களில் மியூஸிக்கல் பவுண்டன் உண்டு.

அதே போல பீச் என்றால் மத்ரா என்னும் இடத்தில் இருந்த கார்னிஷ்தான். அங்கு சமுத்திரத்தில் இறங்கி காலை நனைக்க முடியாது. பேவ்மெண்ட்டில் நடக்கலாம், ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் உட்காரலாம். விடுமுறை நாட்களில் கண்டாப் என்னும் இடத்திற்குச் செல்வோம். அங்கு போட்டிங் போகலாம். மற்றபடி பெரிதாக எதுவும் கிடையாது. அழ-ஸவாதி என்னும் பீச்சிற்கும் பிக்னிக் செல்வதுண்டு. அங்கு கடலுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு திட்டிற்குச் சென்று, கையில் கொண்டு சென்றவற்றை சாப்பிட்டு விட்டு வருவோம். அந்தக் கடலில் ஜெல்லி பிஷ் நிறைய இருக்கும். என்பதால் காலை நனைக்க பயமாக இருக்கும். ஒரு முறை பிக்னிக் சென்றபோது நிறைய பேருக்கு காலில் ஜெல்லி பிஷ்ஷின் முட்கள் அடையாக அப்பிள் கொள்ள, அதை மருத்துவரிடம் சென்று எடுக்க வேண்டியதாக போய் விட்டது. அதெல்லாம் அந்தக் காலம், 2000குப் பிறகு அந்த பீச்சை வெகு அழகாக மாற்றி விட்டார்கள். 



எட்டி பீச் என்றொரு இடம் உண்டு. தொன்னூறுகளின் இறுதியில் அப்படி ஒரு இடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டு நண்பர்களோடு அங்கு சென்ற பொழுது அது ஒரு பயமுறுத்தும் அனுபவமாக இருந்தது. ஏனென்றால்  ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் நல்ல பாதை, அதன் பிறகு மேடும், பள்ளமும், சரளைக் கற்களும், வண்டி குதித்து குதித்து, குழந்தைகள் பயந்து விட்டார்கள். நாங்களும்தான், எங்கேயாவது வண்டி பஞ்சராகிவிடப் போகிறதே என்று நடுக்கம். ஆனால் ஒரே வருடத்திற்குள், அருமையான பாதி அமைத்து விட்டார்கள். பீச்சும் வெகு அழகு. வின்டரில் பல நாடுகளிலிருந்தும் பல அபூர்வ பறவைகள் வரும். 


இவைகளைத் தவிர இன்டர் கான்டினென்டல் பீச், குரம் பீச் போன்ற நகருக்குள் இருந்த கடற்கரைகளில் , வாக்கிங் போவதற்கு நடைபாதை அமைத்து மிகவும் அழகாக்கி விட்டார்கள். அங்கெல்லாம் சிறிய காபி கடைகள் உண்டு, ஆனால் அவற்றில் அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எதையும் பொரிக்க அனுமதி கிடையாது. எண்ணெய் வாடை சுற்றுப்புறத்தை பாழ் படுத்திவிடக் கூடாது என்பதுதான் காரணம். அங்கு செல்லும் போதெல்லாம் எனக்கு நம்முடைய மெரீனா பீச் நினைவுக்கு வரும். எத்தனை அழகான கடற்கரை!ஆனால்...?

ஸீப்(Seeb) என்னும் கடற்கரை சாலைக்குச் சென்றால் வெகு அழகான பங்களாக்களை காண முடியும்.  நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை ஓமானுக்கு வருகை தரும் டால்ஃபின்களை காண  சிதாப் என்னும் பீச்சிலிருந்து படகில் அழைத்துச் சென்று நடுக்கடலில் முக்கால் மனை நேரத்திற்கும் மேல் நிறுத்துவார்கள். நமக்கு லைஃப் ஜாக்கெட் தருவார்கள்,அதை அணிந்து கொண்டு விருப்பப்பட்டால் கடலில் குளிக்கலாம். ஆனால் நம் ஊர்க்காரர்கள் டிபன் பாக்ஸை திறந்து விடுவோம். ஐரோப்பியர்கள்தான் குளிப்பார்கள். 

இந்த சிதாப் பீச்சில் கந்தசாமி படத்தில் வரும் "எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி.." பாட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. பீமா படத்தில் ஒரு பாடல்(விக்ரம்,திரிஷா) ஸீப் பீச்சில் படமாக்கப்பட்டதாக  சொன்னார்கள்.  

ஒரு கிராமமாக இருந்த ஸீப், பொட்டலாக இருந்த காலா(Ghala) என்னும் இடங்களையெல்லாம் மிகவும் சிறப்பாக,அழகாக மாற்றி விட்டார்கள். அங்கெல்லாம் ஒரு இடத்தை நிர்மாணிக்கும் பொழுதே வாட்டர் கனெக்ஷன், ட்ரைனேஜ், டெலிபோன், மற்றும் மின்சார இணைப்புகளையும் முடித்து விடுவார்கள். அதனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக தோண்டும் வேலை கிடையாது.

நம் நாட்டின் மக்கள்தொகை, மக்களின் ஒத்துழையாமை, ஊழல் போன்றவை நம் தேசத்தின் அழகை குலைக்கின்றன.   

பி.கு.: என்னிடம் இருந்த புகைப்படங்களை தேட முடியாததால் இணையத்திலிருந்து எடுத்து போட்டிருக்கிறேன். 

19 comments:

  1. எனது சிறுகதையை அடையாளப்படுத்தி பதிவில் சொன்னதற்கு மகிழ்ச்சி....

    ReplyDelete
    Replies
    1. உண்மையை சொல்லத்தானே வேண்டும். உங்கள் கதைதான் என் பதிவுக்கு inspiration. நன்றி.

      Delete
  2. // அங்கெல்லாம் ஒரு இடத்தை நிர்மாணிக்கும் பொழுதே வாட்டர் கனெக்ஷன், ட்ரைனேஜ், டெலிபோன், மற்றும் மின்சார இணைப்புகளையும் முடித்து விடுவார்கள். அதனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக தோண்டும் வேலை கிடையாது..//

    இங்கே ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தோண்டி எடுக்காவிட்டால் பொழுதே போகாதே...

    க.க.க. வாழ்க!..

    ReplyDelete
    Replies
    1. அப்ரூவல் இல்லாமல் கட்டிடத்தை எழுப்பிய பிறகுபிறகு எப்படியாவது அதிகாரிகளை சரி கட்டி விட முடியும் என்னும் நிலை இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது.

      Delete
  3. எண்ணெய் வாடை இல்லாமல் மெரீனா பீச்சா...? OMG...!

    ReplyDelete
  4. இந்த நாட்டின் வளர்ச்சி பற்றி சுஜாதா கூட ஓரிரு எண்ணங்கள் பகுதியில் (இணையம் - அம்பலம் மின்னிதழ்) எழுதி இருப்பார்.  

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? ஓமானுக்கு வருகை தந்த பிறகு சிவசங்கரி குங்குமத்தில் ஓமான் பற்றி எழுதியிருந்தார்.

      Delete
  5. முன்னேற நினைக்கும் நாடுகள் சுயநலமின்றி பெரும்பான்மை மக்களின் ஒத்துழைப்புடன் பிரமாதமாக உழைத்து முன்னேறி விடுகின்றன.  கடுமையான சட்டதிட்டங்களும் அதற்கு காரணம் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அங்கு பால்கனியில் துணி உலர்த்த முடியாது. மீறினால் அபராதம் கட்ட வேண்டும். பால்கனியில் துணி தொங்குவது அழகை கெடுக்கும் என்பதுதான் காரணம். அதே போல் ஏ.ஸி.யிலிருந்து சொட்டும் தண்ணீர் சுவற்றில் வழிந்து கரையாக்குவதையும் அனுமதிக்க மாட்டார்கள்.

      Delete
  6. அக்கா சூப்பரா சொல்லிட்டீங்க. வளர்ச்சி என்பது அழகைக் கெடுக்காமல் அழகாக்குவது. நம்ம பெயரையும் சொல்லிருக்கீங்க நன்றி பானுக்கா. இந்தத் தலைப்பைப் பற்றி நிறைய சொல்லலாம்

    சட்டதிட்டங்கள் வலுவாக இருக்க வேண்டும். டவுன், சிட்டி ப்ளானிங்க் மிக மிக முக்கியம். ஒரு இடத்தில் கழிவுநீர் போக்குவரத்து அமைக்க முடியாது என்றால் அங்கு வீடோ அலுவலகமோ கட்ட அனுமதிக்கக் கூடாது. அதற்கான வழிமுறைகள் செய்து விட்டுத்தான் கட்ட வேண்டும்.

    அரசியல்வாதிகளின் சுயநலம் மக்களின் சுயநலம் எல்லாம் கலந்து கட்டி ...

    ஆற்றங்கரை ஓரம் வீடு கட்டி கழிவு நீரை ஆற்றில் கலக்க விடுவது, இதோ பங்களூரில் ஏரிகளைச் சுற்றி இருக்கும் வீடுகள் கழிவுநீர் எல்லாம் ஏரிகளில் விழச்செய்திருக்காங்க அப்புறம் என்ன கார்டன் சிட்டி லேக் சிட்டினு சொல்லிக்க வேண்டியதோ?

    ஒரு ஏரியைச் சுற்றி வீடு கட்ட சிட்டி ப்ளானிங்க், அர்பன் ப்ளானிங்க் அந்தத் துறையைச் சேர்ந்தவங்க அரசு எப்படி அனுமதி கொடுக்கிறது? க்டுத்தாலும் அடிப்படை வசதிகளுக்கு வழி வகுக்காமல் மேலும் மேலும் கட்டிக் கொண்டே..ஏஏஏஏஏஏஏஏ

    ஈரொடு அந்தப் பக்கங்களில் ஆற்றில் துணிகளின் சாயம் கலந்து ஆறே போய்விட்டது.

    நீங்கள் சொல்லியிருப்பதுதான் வளர்ச்சி இது வீழ்ச்சி

    ப்ளானிங்க், சட்டதிட்டம் இவை எல்லாம் வலுவாக இல்லை என்றால் இப்படித்தான்

    அங்கெல்லாம் வலுவான சட்டங்கள். இங்கு?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நம் நாட்டின் நிலை பற்றி புலம்பினால் ஒரு நாள் போறாது கீதா. வருகைக்கு நன்றி.

      Delete
  7. ம்ம்ம்ம் பெருமூச்சுத்தான் விட முடியும். நம்ம ஊர்களிலோ ஒரே கூட்டம், நெரிசல், சண்டை, சச்சரவு, தேநீர்க்கடைகள், குப்பைகள் தான் முன்னேற்றம். நீங்கள் சொல்லி இருக்காப்போல் இங்கே கொண்டு வந்தால்! இப்போவே ஹிட்லர் ஆட்சி என்பவர்கள் அப்போது என்ன சொல்வார்களோ! :( இதையும் ஓர் அழகுனு ஏத்துக்கணும். வேறே வழியே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் அக்கா. உடல்நலம் எப்படி இருக்கிறது?

      Delete
  8. வணக்கம் சகோதரி

    பதிவும் படங்களும் அருமை. எல்லாவகையான நல்ல மாற்றங்களுக்கு காரணம், அரசாங்கமும், மனிதர்களுந்தான் முக்கிய காரணம் என்பதை தங்கள் பதிவு நீருபிக்கிறது. நீங்கள் சென்றவிடத்தில்தான் எத்தனை அழகான கடற்கரைகள், பூங்காக்கள் உருவாகியிருக்கிறது...அதன் அழகை கெடுக்காமலிருக்க அதற்கு அங்கு ஒத்துழைக்கும் மக்களுக்கும் பாராட்டுக்கள். இப்படியே அவர்கள் பழகி விட்டால் இன்னமும், வசதிகளும், அழகுகளும் அங்கு மேலும் விரிவடையும் என்பதையும் சொல்லவும் வேண்டுமோ.. ? அழகான பகிர்வுகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நம் நாட்டில் ஒரு கட்சி ஒரு பூங்காவை உருவாக்கினால், எதிர்கட்சி ஆட்சிக்கு வந்ததும் அந்த பூங்காவை பராமரிக்க மாட்டார்கள், இந்த நிலையில் வளர்ச்சி எப்படி சாத்தியம்?

      Delete
    2. அன்பின் பானுமா,
      ஓமான் கடற்கரையை நினைக்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது.
      நீங்கள் சொல்லி இருக்கும்
      நாட்டின் சரித்திரம் பிரமிப்பு.

      சுஜாதா சார் அங்கு வந்த போது சந்தித்தீர்களா. அப்போது துபாயிலிருந்தேன்.
      அவருடன் பேசினேன். மனைவியுடன்
      ஷாபிங்க் செய்யப் போவதாகச் சொன்னார்.
      ஒன்றும் வாங்கி இருக்க மாட்டார்கள்:))

      அருமையான படங்களுடன் கட்டுரையும் மிகச் சிறப்பு.

      Delete
  9. பதிவும் படங்களும் அழகு. சிறப்பான தகவல்கள். இங்கே அப்படி ஒரு சூழல் உருவாக வாய்ப்பில்லை. கனவில் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete