கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, May 20, 2023

ஒடிஷா யாத்திரை – 6

 ஒடிஷா யாத்திரை – 6

கோனார்க், லிங்கராஜ், பிமலாம்பாள் கோவில்கள்  
எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள், கடைசி நாளும் கூட என்பதால் காலை சிற்றுண்டி சாப்பிட வந்த பொழுதே அறையை காலி செய்து பெட்டிகளை கீழே கொண்டு வந்து விட்டோம். சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு எல்லோரும் சொன்னபடி எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். அங்கிருந்து கிளம்பி, ஒரு பெட்ரோல் பங்கில் வண்டிக்குத் தேவையான டீசலை நிரப்பிக்கொண்டு ஹைவேயில் விரைந்தது வண்டி. திடீரென்று வண்டியின் அடி பாகத்திலிருந்து ஏதோ சப்தம் வந்தது. டயர் பஞ்சராகியிருக்கும் என்று நினைத்தோம். வண்டியை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, டிரைவர் இரங்க, வண்டியிலிருந்த சில ஆண்களும் இறங்கினார்கள். அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி அளித்தது. டயர் எதுவும் பஞ்சராகவில்லை, டீசல் நிரப்பியிருந்த டீசல் டாங்கை தாங்கி பிடித்திருந்த க்லாம்பின் திருகாணி கழன்று விட்டதால், டீசல் டாங்க் கீழே விழுந்து டீசலை சிந்தியபடியே உருண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ½கி.மீ. உருண்ட டீசல் டாங்க் தீ பிடிக்காமல் இருந்தது இறையருள்தான். பஸ் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி வேறு ஒரு பேருந்து வரவழைத்தார்கள். இதில் ஒரு மணி நேரம் வீணானது. வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் சென்று விடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. ஆனால் இங்கும் தலைக்கு குல்லா, செல்ஃபி ஸ்டிக் போன்றவை வாடகைக்கும், விலைக்கும் கிடைக்கின்றன.

 

மெயின் கேட்டிலிருந்து கோனார்க் சூரியன் கோவிலுக்கு செல்லும் வழியில் இரண்டு பக்கங்களிலும் பூங்கா, அழகான சிலைகள்.. ஆனால் அவற்றையெல்லாம் நிதானமாக ரசிக்கவோ, புகைப்படமெடுக்கவோ முடியவில்லை. ஏனென்றால் நல்ல கும்பல், கைடு வந்து விட்டார். எல்லோரும் சேர்ந்து வாருங்கள் என்றார்கள், உள்ளே செல்ல நுழைவு டிக்கெட் உண்டு. அதிலும் இரண்டு பேர் புகைப்படமெடுக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டதில் எங்களோடு உள்ளே வர முடியாமல் போய் விட்டது. பிறகு எங்கள் குழுவில் ஒருவரை தொடர்பு கொண்டு, டூர் ஆபரேட்டர் போய் அழைத்துக் கொண்டு வந்தார்.

 

சபா மண்டபம் 

சூரியன் கோவிலுக்கு முன்பு ஒரு மண்டபம் இருக்கிறது. அதை சபா மண்டபம் என்கிறார்கள். அந்த காலத்தில் தேவதாசிகள் எனப்பட்ட நடனமாதர்களின் நடனம் இங்குதான் நடைபெறுமாம். அதைத் தாண்டி பிரதானமான சூரியன் கோவில். பன்னிரெண்டு சக்கரங்கள் மற்றும் ஏழு குதிரைகள் பூட்டிய பிரும்மாண்டமான தேர் வடிவ கோவிலின் மத்தியில் உள்ளே சூரிய பகவான் திருவுரு இருக்குமாம். ஆனால் கோவிலுக்குள் நுழையும் வாசல்கள் போர்ச்சுகீசியர்களால் அடைக்கப்பட்டு விட்டதாம். காரணம் இந்தக் கோவில் தஞ்சை பெரிய கோவிலைப் போல  எந்த பூச்சு வேலை இல்லாமல் கற்கள் ஒன்றோடொன்று பொருத்திக் கொள்ளும்படி(inter-locking system) கட்டப்பட்டது. இடையில் இரும்புத் துண்டுகளும், கோபுரத்தின் மேலே 50 டன் எடையுள்ள காந்தமும் பொருத்தப் பட்டிருப்பதால் அந்த காந்தத்தின் ஆகர்ஷணத்தால் கோவில் சிதையாமல் காக்கப்படுகிறதாம். இந்த காந்த சக்தியால் கடலில் சென்ற கப்பல்கள் திசை தவறின. இதனால்தான் போர்ச்சுகீசியர்கள் இந்த கோவிலின் வெளிப்புரத்தை சிதைத்தார்களாம். ஆனால் கருவரைக்கு மேலே இருக்கும் பெரிய 50 டன் காந்தம் அப்புறப்படுத்த பட்டால் கோவில் இடிந்து விடும் என்பதால் அங்கு யாரும் நுழைய்க் கூடாது என்று வாயில்கள் அடைக்கப்பட்டதாம்.

 

கோவில் முழுவதும் கருப்பு நிற கிரானைட் கற்களாலும், சிவப்பு நிற பாறைகளாலும் கட்டப் பட்டிருக்கிறது. கோணம்+அர்க்கன் = கோனார்க் என்று பொருள் கூறுகிறார்கள். அர்க்கன் என்பது சூரியனின் மற்றொரு பெயர். சூரியனுக்கான இந்த கோவில் முழுக்க முழுக்க ஜியானெண்ட்ரி அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளதால் இந்த பெயர். சூரியனின் சுழற்சி, அதன் விளைவான நேரம், வாரம், மாதம், அயணம் இவைகளை குறிக்கும் விதமாகத்தான் இங்கு சக்கரங்கள், அதில் இருக்கும் ஆரங்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் மனித வாழ்க்கை சம்பவங்களை விளக்கும் சிற்பங்கள். ஒரு பக்கத்தில் மனிதனின் வாழ்க்கையில் மூன்று பருவங்களான குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவ  காலங்களில் அவர்கள் ஈடுபடும் செயல்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தை பருவ விளையாட்டுகளை குறிக்கும் சிற்பங்கள் கீழ் பகுதியிலும், இளமைப் பருவ (காம)கேளிக்கைகள் சிற்பங்கள் நடுப் பகுதியிலும், முதுமைப் பருவ இறை வழிபாடுகளை காட்டும் சிற்பங்கள் மேற் பகுதியிலும் செதுக்கப்பட்டுள்ளன. இவைகளில் இளமைப் பருவ கேளிக்கை சிற்பங்களே சுலபமாக பார்க்கக் கிடைக்கின்றன. இதற்கு அந்த கைட் கூறிய காரணம், கலிங்கப் போரில் நிறைய உயிரிழப்புகள். ஜனத்தொகை மிகவும் குறைந்து விட்டது. மக்களின் உணர்வைத் தூண்டி மக்கள் தொகையை அதிகரிப்பதற்காகவே இந்த சிற்பங்கள் இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.  

 இன்னொரு பக்கம் பெண்களின் வாழ்க்கை முறை, அம்மியில் அரைப்பது, உரலில் இடிப்பது, துணி துவைப்பது போன்ற சிற்பங்கள் ஏன் மாமியார் மருமகள் சண்டை கூட சிற்பமாக.

 

கொனார்கிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் பிப்பிலி என்னும் கிராமத்தில் ஷாப்பிங் செய்வத்ற்காகவே ஒரு மணி நேரம் நிறுத்துவதாக இருந்தது. அங்கு வரிசையாக கடைகள், எல்லாவற்றிலும் ஒடிஷாவின் கைவினை பொருள்கள். ஆனால் காலையில் டீசல் டாங்க் கீழே விழுந்ததால் ஒரு மணி நேரம் வீணாகி விட்டது. எனவே இங்கு, 15 நிமிடம் மட்டுமே கொடுத்தார்கள். முடிந்த அளவு ஷாப்பிங் செய்து கொண்டோம். வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு புவனேஷ்வரில் லிங்கராஜ் கோவிலுக்குச் சென்றோம்.

 

லிங்கராஜ் ஆலயம் 

லிங்கராஜ் கோவில் புவனேஷ்வரில் அமைந்திருக்கும் பழமையான கோவில். இங்கு இருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கம் எங்கிறார்கள். அது மட்டுமில்லை, சிவனும்,விஷ்ணுவும் சேர்ந்த அம்சம் என்கிறார்கள். பூரியில் பிரசாதம் தயாரிக்க ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பது போல இங்கு ஐந்து பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அங்கு போலவே இங்கும் மேலே இருக்கும் பானையில் இருக்கும் உணவுதான் முதலில் வேகுமாம். கோவிலில் எக்கச்சக்க கும்பல். ஜெகன்னாதர் கோவிலைப் போலவே இங்கும் கும்பலில் நசுங்கி வெளியே வந்தோம்.கேதார்நாத்,விமலாம்பாள் கோவில் அங்கிருந்து கேதார்நாத் கோவிலுக்குச் சென்றோம். அங்கு குடிகொண்டிருக்கும் அம்மன் விமலாம்பாள், அவர்கள் பிமலாம்பாள் என்கிறார்கள். அது ஒரு சக்தி பீடம். அம்மனின் சுண்டுவிரல் விழுந்த இடமாம். அம்மன் அழகாக சான்நித்தியதோடு விளங்குகிறாள். தரிசனம் செய்து கொண்டோம். வெய்யில், அலைச்சல், லிங்கராஜ் கோவிலின் தள்ளு முள்ளு, எல்லோரும் மிகவும் ஓய்ந்து விட்டோம்.

 

வழியில் ஒரு பாலாஜி கோவில் இருந்தது. தரிசனம் செய்யலாம் என்றால் அங்கு திரை போடப்பட்டிருந்தது. நடை திறக்க காத்திருந்தால் விமான நிலையம் செல்ல நேரமாகிவிடும் என்பதால் கிளம்பி விட்டோம். இரவு உணவை கையில் கொடுத்து விட்டார்கள். விமான நிலையத்தில் ரசகுல்லா வாங்கிக் கொண்டேன். விமானம் ½ மணி நேரம் தாமதம். வீடு செல்ல இரவு 12 மணி ஆகி விட்டது. அக்காவும், அவர் கணவரும் கவலையோடு காத்திருந்தார்கள்.

ஒடிஷா யாத்திரையில் கலந்து கொண்டவர்கள்:


 இந்த குழுவில் பல் டாக்டராக ஹைதராபாத்தில் பணியாற்றும் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், பெற்றோர்களோடு வந்திருந்த ஒரு இளைஞனையும் தவிர பெரும்பான்மையோர் 60+, சிலர் 50+. நான் தனியாக செல்லப் போகிறேன் என்றதும் கேட்ட எல்லோரும், “தனியாகவா?” என்றார்கள். ஆனால் அப்படி தனிமையாக உணரவில்லை. இந்த பயணத்திற்குப் பிறகு உறவினர்களோடு செல்வதை விட, இப்படி தெரியாதவர்களோடு செல்வதே மேல் என்று தோன்றியது. யாரும் யாரையும் காக்க வைக்காமல் நேரத்திற்கு ரெடியாகி விட்டோம். எல்லோருக்கும் ஒரு கமிட்மெண்ட் இருந்தது.


இங்கு வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருணாசலம் என்னும் தொழில் முனைவர். நல்ல கலகலப்பாக இருந்தார். அடுத்ததாக திருமதி சுவர்ணா ஜெகன்னாதனும் அவர் கணவர் ஜகன்னாதனும். ஜ்கன்நாதன் பொதுவுடைமை வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்விற்குப் பிறகு நிறைய பயணிக்கிறார்களாம். அதைப் போல கிருத்திகா, சுரேஷ் தம்பதிகளும் நிறைய பயணம் செய்வார்களாம். அதிலும் இந்த யாத்ரிகா டிராவல்ஸ் மூலம்தான் உள் நாடு, வெளி நாடு சுற்றுலாக்கள் செல்வார்களாம். நிர்ப்பவர்களில் நடுவில் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டை  அணிந்தவரும், அவருக்கு அருகில் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்தவரும் சகோதரர்கள். ஒருவருக்கு மனைவி இல்லை, இன்னொருவரின் மனைவி வெளியே எங்கேயும் வர மாட்டாராம், எனவே சகோதரர்கள் மட்டும் வந்திருந்தார்கள். மே மாதம் ஆஸ்திரேலியா செல்லப் போகிறார்களாம். ஹைதராபாத்தில் பணிபுரியும் பல் டாக்டர்தான் பேபி ஆஃப் த டீம். அவருடைய தாயாரோடு வந்திருந்தார். சேலத்திலிருந்து வந்திருந்த பவானி என்பவரின் பெண்ணும் இந்தப் பெண்ணும் ஒரே வகுப்பில் படித்தார்களாம். அதைப்போல என்னோடு அறையை பகிர்ந்து கொண்ட பத்மஜா என்பவருக்கு நம் ஆன்சிலாவைத் தெரியும் என்றார்(ஒரே வங்கி). எங்கள் இருவருக்கும் நன்றாக ஜெல் ஆகி விட்டது.

 

அவரவரை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் என்றபோது, நான்,”மத்யமரில் ஆக்டிவ் மெம்பர்” என்றேன், உடனே, சிவகாமி என்பவர், “மத்யமரில் இருக்கிறீர்களா? ராதை சாய்ராமைத் தெரியுமா?” என்றார். நான் உணர்சிவசப்பட்டு, “குஜராத்தில் இருக்கிறாரே, அவர்தானே?” என்றேன், “அது ராதா ஸ்ரீராமாக இருக்கும், இவள் பெங்களூரில் இருக்கிறாள், என் தங்கைதான்” என்றார். “நன்றாக ஓவியங்கள் வரைவாரே, அவர்தானே?” என்றதும் ஆமாம் என்று ஆமோதித்ததோடு என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்கைக்கு அனுப்பினார். அவரிடமிருந்து ராதையின் காண்டாக்ட் நம்பரை வாங்கிக் கொண்ட நான் தற்சமயம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன், விரைவில் நேரில் சந்திப்பேன் என நினைக்கிறேன். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணி, அவரது சகோதரி இருவரும் திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் படித்தார்களாம். அங்கு பணி புரிந்த என் அத்தை பெண்ணை தெரியும் என்றார்கள். ஒரு நாள் இரவு உணவருந்தும் பொழுது சுரேஷ் என்பவர், மாயவரத்திர்கு அருகில் இருக்கும் பெரம்பூர்தான் எங்கள் பூர்வீகம்” என்றார், “அட! எங்கள் சம்பந்திக்கு அந்த ஊர்தான்” என்றேன். World is small, isn’t?

 

இவ்வளவும் சொல்லிவிட்டு, யாத்ரிகா டூர்ஸ் பற்றி சொல்லாமல் விடலாமா? எல்லா ஏற்பாடுகளையும் நன்றாக செய்து, நல்ல ஹோட்டலில் தங்க வைத்து, அருமையான, வயிற்றை பாதிக்காத சாப்பாடு போட்டு அழைத்துச் சென்ற யாத்ரிகா ட்ராவல்சுக்கு தாராளமாகா ஒரு ஜே போடலாம். சென்னை அண்ணாநகரிலிருந்து இயங்குகிறது இந்த நிறுவனம். இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அன்பர்களுக்கு நன்றி.  


15 comments:

 1. முதல் படம் சூப்பர் பானுக்கா......இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று கோணம் பார்த்து எடுத்திருக்கலாமோ என்று தோன்றினாலும் உங்களுக்கு நேரம் இருந்திருக்காது அதுவும் குழுவோடு போயிருப்பதால்....

  படங்கள் எல்லாம் அருமை நிதானமாக ஒவ்வொன்றாகப் பார்த்து வாசித்துவிட்டு வருகிறேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த புகைப்படத்தை அங்கிருக்கும் ஒரு ஆள்,நம்முடைய செல் போனிலேயே எடுத்துத் தருகிறார். கட்டணம் ரூ.10/- மட்டுமே. 

   Delete
 2. அழகான கோவில். நான் இங்கே சென்ற போது கிடைத்த அனுபவங்கள் மனதில் இன்னும் பசுமையாக...... மேலும் பல பயணங்கள் உங்களுக்கு அமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 3. கிட்டத்தட்ட ½கி.மீ. உருண்ட டீசல் டாங்க் தீ பிடிக்காமல் இருந்தது இறையருள்தான். //

  கடவுளே! நிஜமாகவே Miraculous!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என்ன இப்படி கேட்கிறீர்கள்?நிஜம்தான், நிஜம்தான், இறையருள்தான். 

   Delete
 4. படங்கள் எலலம் அட்டகாசம் பானுக்கா. ரொம்ப நன்றாக வந்திருக்கு. என்ன அழகான சிற்பங்கள், சிற்பங்களைப் பற்றிய விளக்கங்கள் அருமை அதுவும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்காக இப்படி என்பது ஆச்சரியம்.

  மக்களின் வாழ்வியல்களை விளக்கும் சிற்பங்கள் என்று சொல்லியிருப்பது பார்க்கத் தூண்டுகிறது.

  பாருங்க ஒரு சின்ன குழுவின் எத்தனை அறிமுகங்கள்! அதுவும் ஏற்கனவே அறிந்தவர்களின் உறவுகள், ஒரே ஊர் என்று. உலகம் கையளவு! நல்ல குழுவாக அமைந்துவிட்டால் நல்லதுதான்.

  அருமையான சுற்றுலா நீங்களும் மகிழ்ச்சியோடு போய் வந்தது நல்ல விஷயம் பானுக்கா.

  இன்னும் நிறைய பயணங்கள் வாய்க்கட்டும்! வாழ்த்துகள்!

  கீதா

  ReplyDelete
 5. இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை உண்டு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்னூட்டம்,"உங்கள் பதிவை படித்தபிறகு.." துவங்கியிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.

   Delete
 6. பயணம் அருமையாக அமைந்தது மகிழ்ச்சி. படங்களும் விவரங்களும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. உங்களின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது.  

   Delete
 7. அருமையான விவரிப்பு...

  புகைப்படங்கள் அருமை...

  ReplyDelete
 8. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. யாத்திரை பயணம் நன்றாக அமைத்து தந்திருப்பதற்கு இறைவனுக்கு நன்றி. அதுபோல் பயணத்தில் டீசல் விபத்தை தவிர்த்த இறைவனுக்கு மனப்பூர்வமான நன்றி.

  சென்ற இடங்களைப்பற்றி விபரங்கள் அறிந்து கொண்டேன். நன்றாக சொல்லியுள்ளீர்கள். நாங்களும் உடன் வந்த நிறைவை தந்தது பதிவு.

  அந்த அடையாள முத்துமாலையை பயணத்தில் தொடக்கத்தில் பொறுப்பாளர்கள் சொன்னது போல், நீங்கள் விடாமல் அணிந்திருக்கிறீர்கள். உங்களின் அந்த நேர்மையான செயலுக்கு பாராட்டுக்கள்.

  நிறைய நட்புகளை தேடித்தந்த இந்த யாத்திரை பயணத்தின் சிறப்பு மனதை கவர்ந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 9. உளப்பூர்வமான, விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. 

  ReplyDelete