கார்த்திகை தீபம் - தீப ஜோதி நமோ நம:
தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:
தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும் ஸ்லோகம்.
நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.
தினமும் 27 விளக்குகள்...
கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த இடங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றுவது? என்பது குறித்து விரிவாக அறிவோமா
கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்
திண்ணைகளில்: நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்
நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்
நடைகளில்: இரண்டு விளக்குகள்
முற்றத்தில்: நான்கு விளக்குகள்
இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.
பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.
சமையல் அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.
பின்கட்டு பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.
ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில், மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.
தீபத்தின் வகைகள்:
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...
சித்ர தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள்.
மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.
ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.
ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.
நௌகா (படகு) தீபம்: கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.
சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.
மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.
சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.
அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.
லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும். திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.
மாவிளக்கு தீபம்: அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, மண்டை விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.
விருட்ச தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.
தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!
பி.கு. வாட்ஸாப்பில் வந்த செய்தியை பகிர்ந்திருக்கிறேன்.
படங்கள்: கூகுள் உபயம்
சிறப்பான தகவல்கள். நல்ல பகிர்வு. திருக்கார்த்திகை தின வாழ்த்துகள். ஜலதீபம் என்றதும் சாண்டில்யனும் மஞ்சுவும் நினைவுக்கு வருகிறார்கள்!
ReplyDelete//ஜலதீபம் என்றதும் சாண்டில்யனும் மஞ்சுவும் நினைநவுக்கு வருகிறார்கள்//உங்களுக்கு மட்டுமா? கூகுளுக்கும் அதேதான். ஜலதீபத்திற்கான படங்களுக்காக தேடியபோது சாண்டில்யனின் நாவலை காட்டுகிறது.
Deleteஅவல், பொரி உருண்டைகள் தயாரா? வீட்டில் செய்ததா? கடையிலிருந்தா ? வேறென்ன பட்சணங்கள்? (நமக்கு எப்பவுமே 'திங்க'க்கிழமைதான்!)
ReplyDeleteஎங்கள் வீட்டில் திருவண்ணாமலை தீபத்தன்று ஏற்றுவதுதான் பழக்கம். எனவே நாளைதான். பொரி உருண்டை இனிமேல்தான் செய்ய வேண்டும். இப்போது நாங்கள் இருக்கும் இடத்தில் பொரி கண்ணில் படவில்லை. பொரி வாங்க திப்பசந்ரா செல்ல வேண்டும். அங்கு நிச்சயம் கிடைக்கும். இதற்கிடையில் கடுமையான ஜலதோஷம், தலைபாரம், தலைவலி, காய்ச்சல் வருமோ என்று தோன்றுகிறது.
Deleteபொரி உருண்டை தவிர அப்பம்(குழிப்பணியாரம்), அடை உண்டு.
Deleteமாடங்கள், முற்றம், பின்கட்டு...
ReplyDeleteஹூ.....ம்... நீங்கள் சொல்லி இருப்பது போல இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்வில் இதையெல்லாம் நினைவுகளில் தேட வேண்டி இருக்கிறது!
இனிய காலை வணக்கம்.
அம்பத்தூர் வீட்டில் தோட்டம், கழிவறை, குளியலறை (அங்கே தனித்தனியாய்க் கட்டி இருந்தோம்.) முதல் எல்லா இடங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி இருக்கேன். எல்லாம் நினைவுகள் இப்போது. நல்ல பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//எல்லாம் நினைவுகள் இப்போது.// ஆம் அக்கா. எங்கள் வீட்டில் 1982 வரை மாடு இருந்தது. எனவே மாட்டுக் கொட்டிலிலும் விளக்கு வைக்கும் பழக்கம் உண்டு.
Deleteபயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி ஜி. இது வாட்ஸ்ஆப்பில் வந்த தகவல்.
Deleteஇது உங்கள் மகளுக்கு திருமணமாகி வரும் முதல் கார்த்திகை. அகல் விளக்கு வாங்கித்தரும் பழக்கம் உங்கள் சமூகத்தில் உண்டா?
Deleteசிறப்பான தகவல்கள்...
ReplyDeleteஉபயம் வாட்ஸ்ஆப். நன்றி டி.டி.
Deleteநல்ல தகவல்கள் ..
ReplyDeleteநன்றி அனு.
Deleteநிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கின்றீர்கள்...
ReplyDeleteகார்த்திகைத் திருநாளன்று தலைவாசலில் விளக்கு வைப்பது போல
பின்புறம் கிணற்றடியிலும் குப்பை மேட்டிலும் ஒவ்வொரு விளக்கு வைப்பதுண்டு...
திண்ணை, நடைவழி, முற்றம், மாடக்குழி -
இளைய தலைமுறைகள் அறியாதவை...
அட்டைப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டாற்போல வீடுகள்...
அடிப்படை அம்சங்கள் எவையும் கிடையாது...
கிராமங்களில் கட்டப்படும் வீடுகளில் கூட மாடக்குழி திண்ணைகள் கிடையாது...
நவீன இஞ்சி,, களும் கொத்தனார்களும் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை...
தற்காலத்தில் பல லட்சம் போட்டு வீட்டைக் கட்டி ஆடம்பர அநாவசியமாக கிரானைட் தளம் போடுகிறார்கள்..
செவ்வாய் வெள்ளி, நல்ல நாள் பெரிய நாள் - இவற்றில்
வீட்டைக் கழுவி விடுவதற்கு வக்கற்றுப் போகிறார்கள்...
துடைக்கும் குஞ்சங்களைத் (Mop Threads) தண்ணீரில் முக்கி - தரையில் போட்டு இழுத்து விட்டால் சுத்தம் என்கின்றார்கள்...
வீட்டைக் கழுவி விடுவதும் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றது...
உங்கள் ஆதங்கம் அத்தனையும் சரி.
ReplyDelete//வீட்டைக் கழுவி விடுவதற்கு வக்கற்றுப் போகிறார்கள்...// நல்ல விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, எந்த நாள் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. கட்டாயம் வீட்டை கழுவியே ஆக வேண்டிய ஒரு நாளில் கூட, அதற்கு ப்ரொவிஷன் இல்லாததால் மாப் போட்டு துடைத்தார்கள்.
எக்கச்சக்க விஷயங்கள் ஒரே பதிவில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை . கோர்வையாக எழுதுவது என்பது ஒரு கலை. அது உங்களுக்கு இருக்கிறது சூப்பர் பதிவு
ReplyDeleteநன்றி அபயா. ஆனால் இது நான் எழுதியது இல்லை. வாட்சாப்பில் வந்தது. இதை நான் குறிப்பிடிருகிறேன். படங்கள் மட்டும் நான் இணைத்தேன்.
Deleteசிறப்பான தகவல்கள். இப்போதைய அடுக்கு மாடி குடியிருப்புகளில் சாத்தியம் இல்லை என்றாலும், வீட்டில் விளக்கேற்றலாம்.
ReplyDeleteமாடக்குழிகள், முற்றம், திண்ணை - இப்படி இருந்த வீடுகளில் இருந்ததுண்டு. இப்போது இவை எல்லாம் இழந்து விட்டோம் என்பதில் எனக்கும் வருத்தமுண்டு.