கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, November 8, 2018

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (திருகோவிலூர் திவ்ய தரிசனம்)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் 
(திருகோவிலூர் திவ்ய தரிசனம்)


அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் 
இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் 
பட்டது. திறந்தால்,  மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். 

மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் 
நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று 
வந்தவர் கேட்க,  தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், 
நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் 
மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி  விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் 
ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி..."சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி 
நெருக்குகிரீர்கள்?"  "நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்?" என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அந்த மூவருக்கும் இடையே இன்னும் 
ஒருவரும் நிற்கிறார் என்பது எலோருக்கும் தெரிகிறது, ஆனால் அவருடைய உருவம் தென்படவில்லை. ஒரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் விளக்கிற்கு எங்கே போவது? 

முதலாமவர்க்கு சட்டென்று ஒரு எண்ணம் உதிக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றினார். ஆம் இந்த உலகத்தையே ஒரு விளக்காக்கி அதில் சமுத்திரத்தை எண்ணையாக ஊற்றி, கதிரவனையே 
விளக்காக ஏற்றிய விளக்கு.. அதில் அந்த மூவருக்கும் இடையே புகுந்தது யார் என்று ஓரளவுக்கு புலப்பட்டது என்றாலும் தெளிவாக தெரியவில்லை. இன்னொரு விளக்கு இருந்தால் நன்றாக 
இருக்குமே என்று நினைத்த இரண்டாமவர் மற்றொரு விளக்கை ஏற்றினார் அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் தம் சித்தத்தை திரியாகவும் கொண்ட விளக்கு.. அதை ஏற்றியவுடன் மூன்றாமவருக்கு பளிச்சென்று புலப்பட்டுவிட்டது. "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று தொடங்கி தங்களுக்கு இடையே புகுந்திருப்பது சங்கும் சக்கரமும் ஏந்திய தடக்கையினனாகிய நாராயணனே என்று அறிவித்தார். இப்படித்தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பிறந்தது. அந்த மூவரும் 
வேறு யாரும் இல்லை, பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் மூவரான பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார், மற்றும் பேய் ஆழ்வார், ஆகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருகோவிலூருக்கு  செல்லும் பாக்கியம் கிடைத்தது.


புராதனமான கோவில். 192 அடி  உயரமுள்ள கிழக்கு கோபுரம் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் உயரமான  கோபுரத்தை உடைய ஒன்று. கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு 
மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். எந்த வைணவ கோவிலிலும் இல்லாத வழக்கமாய் 
அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை காட்சி அளிக்கிறாள். உலகளந்த அண்ணனுக்கு காவலாம் 
தங்கை!! 

அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவிக்ரம கோலத்தை தரிசிக்க விரும்பிய ம்ருகண்டு முனிவருக்கு அவரின் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த தரிசனம்.  அடடா! என்ன திருக்கோலம்! பிரும்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை 
உயர்த்தி, வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி புன்னகை தவழும் 
திருமுகத்தோடு 20 அடி உயர சிலா மேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது! உயர்த்திய 
திருவடிக்கருகே மஹாலட்சுமி, ஊன்றிய  திருவடியின் கீழே மஹாபலி, ஆதிசேஷன், இடது 
திருவடியை பூஜிக்கும் பிரும்மா என்று அற்புத கோலம்!  கர்ப்பக்ரத்திலேயே முதல் மூன்று 
ஆழ்வார்களையும்,  ம்ருகண்டு மகரிஷியையும் தரிசிக்க முடிகிறது.  பிரகாரத்தில் தனி சந்நிதியில் புஷ்பவல்லி தாயார். 

இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்யா ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை 
ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை 
போல வலது  கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை. 

புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் 
என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர்,தோற்றுப்  போய்  "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"

பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே 
ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் 
சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ 
மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருகோவிலூருக்கு விழுபுரதிலிருந்து ஏராள பேருந்துகள் 
உள்ளன! 


பி.கு.: இது ஒரு மீள் பதிவு.










15 comments:

  1. கொடுத்து வைச்சிருக்கீங்க. நாங்க இன்னும் அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலை. கிடைக்குமானும் தெரியலை! மீள் பதிவுன்னா நான் பார்த்தது இல்லைனு நினைக்கிறேன். இப்போத் தான் இந்தப் பதிவைப் படிக்கிறேன். திருக்கோவிலூரில் உள்ள ஓர் மாத்வ மடம் கூடப் பிரபலம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் கிடைக்கும் அக்கா. திருச்சியிலிருந்து அதிக தொலைவு கிடையாது. விழுப்புரம் வரை கூட செல்ல வேண்டாம், உளுந்தூர்பேட்டை வழியாக செல்வது இன்னும் சுலபம். திருக்கோவிலூருக்கு செல்லும் பொழுது, அருகில் இருக்கும் ஆதி ரெங்கனாதர் கோவிலுக்கும் சென்று விட்டு வாருங்கள். ஒரே கல்லினால் ஆன மிகப்பெரிய ரெங்கனாதர்.
      திருக்கோவிலூரில் இருப்பது ஞானானந்தரின் தபோவனம். அது மாத்வ மடம் கிடையாதே. ஞானாந்தரின் ப்ரதம சீடராக இருந்த ஹரிதாஸ்கிரி மாத்வர்.
      நான் இந்த பதிவை எழுதி நான்கு வருடங்கள் இருக்கும். அப்போது எங்கள் ப்ளாக் குழுமத்தில் சேரவில்லை.

      Delete
    2. ஞானானந்தரையும், கரிதாஸ்கிரியையும் தெரியாதவர் உண்டோ! அதிலும் அவர் மதுரையில் தங்கி இருந்த அறுபதுகளில் தினம் தினம் அவரோட பஜனைகளில் கலந்து கொள்வோம். மதுரை ஜி.எஸ். மணி அவர்களின் வீட்டில் தான் மேலாவணி மூல வீதியில் (1ஆம் நம்பர் வீடு! இப்போவும் அந்த ஒரு வீடு மட்டும் இருக்கு) தங்குவார். எங்க வீட்டிலிருந்து சரியா ஆறு வீடுகள் முன்னால்! நாங்க இருந்தது 7 ஆம் நம்பர் வீடு. நான் சொல்வது மாத்வ மடம். மாத்வர்கள் நண்பர்களையே விசாரிக்கிறேன். சரியா நினைவில் இல்லை. காஞ்சிபுரம் நிறையப் போயிருக்கேன். சென்னையில் இருந்தப்போ அடிக்கடி போவோம்.

      Delete
  2. நான் பார்த்த கோயில்களில் மூலவராக உலகளந்த பெருமாள் இருக்கும் இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். பார்த்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்பேன். அடடா. பிறவிப்பயன் அடைந்தது போன்ற எண்ணம் கிட்டும். பார்க்காதவர்களைச் சென்று பார்க்க வேண்டுகிறேன். காஞ்சீபுரம் உலகளந்த பெருமாளைப் பார்க்கும்போதும் இந்த எண்ணம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. //அடடா. பிறவிப்பயன் அடைந்தது போன்ற எண்ணம் கிட்டும்.// சரியாக சொல்லியிருகிறீர்கள். முதல் முறை இங்கு சென்று விட்டு வந்ததும், ஹேங்க் ஓவர் போல மனது இரண்டு மூன்று நாட்களுக்கு உலகளந்த பெருமாளின் நினைவாகவே இருந்தது. காஞ்சீபுரம் உலகளந்த பெருமாளை இன்னும் தரிசிக்கவில்லை.

      Delete
  3. உபன்யாசங்களில் கேட்டதுதான். நேரில் சென்றதில்லை. பெருமூச்சுதான் வருகிறது.எத்தனை கம்பீரம். மிக நன்றி பானு மா.

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் வல்லி அக்கா. வருகைக்கு நன்றி.

      Delete
  4. எனக்கு மிக விருப்பமான தளம் ...இருமுறை சென்று தெரித்தோம் ...

    இம்முறை பாண்டிக்கு செல்லும் போது மிக அருகில் சென்றும் பெருமாளை அருகில் சென்று சேவிக்க இயலவில்லை ..மன கண்ணிலே கண்டு தரிசனம் ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அனு.

      Delete
  5. பானுக்கா இந்தக் கோயிலுக்கு நாங்கள் சென்றிருக்கிறோம். பாண்டிச்சேரியில் இருந்தப்ப...

    பாண்டிச்சேரியிலிருந்து போகும் வழியில் திருக்கோவிலூர் வெகு அருகில் மூன்று கிமீ தூரத்தில்.. அந்திலி நரசிம்மர் கோயில் சின்னது ஆனால் அழ்கு கருட வடிவில் இருக்கும் பாறை மீது இருக்கும் கோயில். சின்ன சின்ன குன்றுகள் இருக்கும்... நரசிம்மர் மீது வருடம் முழுவதும் சூரிய ஒளி படும் கோயில்...பெண்ணை ஆற்றின் கரையிலேயே இருக்கும் கோயில்....பாண்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில் அரக்கந்தநல்லூரில் இறங்கி ரயில் தண்டவாளம் க்ராஸ் செய்து ஒரு கிமீ தூரம் நடந்தால் கோயில்...நாங்க போன போது ஆறு வற்றி இருந்தது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்திலி ந்ரசிம்மர் கோவில் பார்த்ததில்லை. கேள்விப்பட்டது கூட இல்லை. ஆதி ரெங்கநாதரை தரிசித்திருக்கிரீர்களா?

      Delete
  6. திவ்யமான தரிசனம். இக்கோவிலுக்கு சென்றதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்! திருச்சியிலிருந்து செல்வது சுலபம்தான்.

      Delete
  7. காலை வணக்கம், வாழ்க வளமுடன்.
    இந்த திவய தேசத்தை தரிசனம் செய்து இருக்கிறேன்.
    மிக அழகான் கோவில்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்து பதிவிற்கும் நன்றி.

      Delete