கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 5, 2018

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)


இதே தலைப்பில் ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறேன். அதை பார்க்க முடியாதவர்களுக்காக இந்த உரை நடை:

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா? என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. எங்கேயோ தவற விட்ட ஒன்றை அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் தேடுவதைத்தான் இப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டாலும், எவ்வளவுதான் வடிகட்டிய முட்டாளாக இருந்தாலும், இப்படி ஒரு செயலை செய்வார்களா? என்று ஒரு சந்தேகமும், அப்படியானால் அர்த்தமே இல்லாமல் ஒரு சொலவடை வருமா? என்றும் கேள்விகள் புறப்படுகின்றன, இதற்கு விடை தெரிய வேண்டுமானால் சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை சரிதத்தை புரட்டிப் பார்க்க வேண்டும்.

சிவபெருமானை தன்னுடைய தோழனாக கருதி வழிபட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு  சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு விருதாச்சலத்தை கடந்து செல்லும் பொழுது, "எம்மை மறந்தனையோ சுந்தரா?"என்னும்  அசரீரி கேட்டு, அருகில் எங்கேயோ சிவாலயம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லையே..?" என்று மயங்கி நிற்கும் பொழுது, இறைவனும், இறைவியும்  வயது முதிர்ந்த தம்பதியினராக வந்து சுந்தரரை விருத்தாச்சலம் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கிருக்கும் சிவபெருமான் மீது பாடல்கள் பாடிய சுந்தரருக்கு சிவபெருமான் பதினையாயிரம் தங்க கட்டிகளை வழங்குகிறார். அவற்றை தனியாகச் செல்லும் தான் எப்படி எடுத்துச் செல்வது என்று தயங்கிய சுந்தரர், சிவபெருமானிடம், "இந்த தங்க கட்டிகளை நான் இங்கு ஓடும் திருமணிமுக்தா நதியில் போடுகிறேன், அவைகளை திருவாரூரில் இருக்கும் கமலாலயம் திருக்குளத்தில் கிடைக்கும்படி அருள வேண்டும்" என்று வேண்டுகிறார். சிவபெருமானும் அதற்கு ஒப்புக்கொள்ள அவரளித்த பதினையாயிரம் தங்க கட்டிகளில் அடையாளமிட்டு திருமணிமுக்தா நதியில் போட்டு விடுகிறார். 

திருவாரூருக்கு திரும்பிச் சென்ற, சுந்தரர் தன் மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் இந்த விஷயத்தை கூறி, அவரையும் கமலாலயத்திற்கு அழைக்கிறார். அவர் கூறியதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவருடன் செல்கிறார் பரவை நாச்சியார். திருவாரூர் தியாகேசனையும், அங்கிருக்கும் விநாயகரையும்  வணங்கி, கமலாலயம் குளத்தில் மூழ்கி தான் மணிமுக்தா ஆற்றில் போட்ட தங்க கட்டிகளை தேடுகிறார், அவருக்கு கிட்டவில்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி தேடுகிறார், அப்போதும் கிட்டவில்லை, இதைப்பார்த்த பரவை நாச்சியார்,"ஆற்றில் இட்டதை குளத்தில் தேடுவதோ" என்று கேலியாக நகைத்தாராம். உடனே சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சிவபெருமானிடம்,"என் மனைவி என்னை கேலி செய்யும்படி வைத்து விட்டாயே இறைவா, இது சரியில்லை, எனக்கு அந்த பொற்கட்டிகளை தந்தருள வேண்டும்" என்று வேண்ட, அவர் மணிமுக்தா ஆற்றில் இட்ட தங்க கட்டிகள்  திருவாரூர் கமலாலயம் குளத்தில் அவருக்கு கிட்டின. நமக்கு ஒரு சொலவடையும் கிட்டியது.    



28 comments:

  1. அழகான ஒரு சொலவடைக்கு அற்புதமான ஒரு கதை! முன்னமேயே தெரிந்த கதை என்றாலும் சுவாரஸ்யமான நடை மீண்டும் ரசித்துப்படிக்கத் தூண்டியது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மனோ அக்கா.

      Delete
  2. பானுக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப இன்னும் எத்தனை ரொம்ப வேணாலும் போட்டுக்கோங்க....நன்றி நன்றி..

    இப்படியே முடிந்தால் காணொளி போடும் போது கீழவே உரைநடையும் கொடுக்க முடிந்தால் கொடுத்துடுங்க அக்கா....

    இதோ படிச்சுட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
  3. சொலவடையும் கேட்டதுண்டு ஆனால் கதை இப்பத்தான் உங்க மூலம் கேட்கிறேன் அக்கா. சூப்பர்.....

    இது ஆன்மீகமான கதை இதற்கு யதார்த்தத்தில் வேறு ஏதேனும் அர்த்தம் இருக்குமா அக்கா?

    ஆற்றில் போட்டாலும் அளந்து போடனும் என்பது யதார்த்தத்திற்கு மிகவும் பொருந்தும் இல்லையா அது போல...என்று நான் யோசித்துப் பார்க்கிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தத்திற்கு பொருந்தும்படி ஏதாவது இருக்குமா என்று யோசித்து, கண்டறிந்ததை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

      Delete
  4. அடடே ஒரே மாவை வைத்து தோசையும், ஊத்தப்பமுமா ?

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்வியை தவிர்க்கத்தான் உரைநடையை வெளியிடுவதில் தயக்கம் இருந்தது. கீதா ரெங்கன் கேட்க முடியவில்லை என்கிறார், அவரைப்போன்றவர்களுக்காக வெளியிட்டேன்.

      Delete
  5. எழுத்திலும் படித்து ரசித்தேன்.

    கீதாஜி சொல்வது போல காணொளியாகப் பகிரும் போது எழுத்து வடிவிலும் பகிரலாம்.

    தோசையும் ஊத்தப்பமும்.... :)

    ReplyDelete
  6. இதுவரை அறிந்திராதது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமை. கீதா சொல்வதைப்போல கீழேயே உரைநடையையும் கொடுத்து விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. கீதா மட்டுமல்ல, வெங்கட், நீங்கள் எல்லோரும் சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த முறை அப்படித்தான் செய்ய வேண்டும். நன்றி.

      Delete
  8. காணொளி பார்த்ததால் நேத்தே வரவில்லை. நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் -
    ஈசன் சுந்தரர்க்குப் பொன்னளிக்க - அவற்றைப் பத்திரமாகத் திருஆரூருக்குக் கொண்டு செல்லும் வழியை அருளுமாறு கேட்கின்றார்..

    இறைவன் - இங்கே மணிமுத்தா நதியிலிட்டு அங்கே திருஆரூர் கமலாலயத்தில் பெற்றுக் கொள்க.. - என்கின்றார்...

    அவ்வண்ணமே -
    ஆற்றிலிடும் சமயம் அங்கே எழுந்தருளியிருக்கும் ஆழத்துப் பிள்ளையாரை சாட்சிக்கு வைத்துக் கொள்கிறார் - சுந்தரர்...

    ஒரு துண்டு பொன்னை மாற்றுக்கு வைத்துக் கொண்டு மற்றவற்றை ஆற்றில் இடுகின்றார்..

    திரு ஆரூருக்கு வந்ததும் - பரவை நாச்சியாரை அழைத்துக் கொண்டு
    கமலாலயத்துக்கு விரைகின்றார்...

    மனையாளிடம் விவரத்தைச் சொல்லி விட்டு குளத்து நீரில் தேடும் போது அந்த பொன் கட்டிகள் கிடைக்கவில்லை...

    மனம் வேதனையடைந்து -
    பொன் செய்த மேனியினீர் - என, திருப்பதிகம் பாடுகின்றார்...

    எனது துன்பங்கள் தீர்ந்திடும்படிக்கு -
    பரவையிவள் முன்பாக செம்பொன்னைத் தருள்க...

    உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச்
    செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்
    வம்பமருங் குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்
    எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளங் கெடவே.. (7/25/2)

    - என்று உருகுகின்றார்..

    திருப்பதிகம் பாடிய வேளையில் பொற்கட்டிகள் மீண்டும் கிடைக்கின்றன...

    அவ்வாறு கிடைத்த கட்டிகளை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போகாமல்
    அங்கே குளக்கரையில் வீற்றிருந்த பிள்ளையாரை மாற்றுரைத்துப் பார்க்கும்படிக்கு கேட்டுக் கொள்கிறார்...

    தான் முன்பு எடுத்து வைத்திருந்த கட்டியையும் கொடுக்கின்றார்...

    அதுவரைக்கும் சும்மா இருந்த பிள்ளையாரும் - சுந்தரருக்காக எல்லா பொற்கட்டிகளையும் உரைகல் கொண்டு உரசிப் பார்த்து அதன் தரத்தை உறுதி செய்கின்றார்...

    அதற்குப் பிறகே சுந்தரருக்குத் திருப்தி.. பரம திருப்தி!...

    திருஆரூர் கமலாயத்து வடகரையின் மூலையில் வீற்றிருக்கின்றார் -
    ஸ்ரீ மாற்றுரைத்த பிள்ளையார்...

    பிள்ளையார் மாற்றுரைத்ததே -
    சுந்தரர் பொன் பெற்ற நிகழ்வின் முத்திரைச் செய்தி!..

    ReplyDelete
    Replies
    1. அருமையான, சுவாரஸ்யமான மேலதிகத் தகவல்கள்.

      Delete
    2. மேல் விவரங்களுக்கு மிக்க நன்றி. நான் படித்த, மட்டும் கேட்டவற்றில் இது குறிப்பிடப்படவில்லை. அடுத்த முறை கவனமாக விவரங்களை திரட்டுகிறேன்.

      மாற்றுரைத்த விநாயகர் திருவாரூரில் இருக்கிறாரா? திருச்சிக்கு அருகில் திருவாசி என்னும் ஊரா?அல்லது வேறு ஊரா என்று நினைவில் இல்லை. அங்கு ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. அங்கே இருக்கும் விநாயகர் மாற்றுரைத்த விநாயகர் எனப்படுகிறார். அந்த கோவிலில் மஹாவிஷ்ணுவும் உண்டு. சிவபெருமான் அளித்த தங்க கட்டிகளை விநாயகரிடம் உரைத்துப் பார்த்தாராம் சுந்தரமூ ர்த்தி நாயனார். சாட்சிக்கு மஹாவிஷ்ணுவை வைத்துக் கொண்டாராம்.

      Delete
  10. மேல் விவரங்களுக்கு மிக்க நன்றி. நான் படித்த, மட்டும் கேட்டவற்றில் இது குறிப்பிடப்படவில்லை. அடுத்த முறை கவனமாக விவரங்களை திரட்டுகிறேன்.

    மாற்றுரைத்த விநாயகர் திருவாரூரில் இருக்கிறாரா? திருச்சிக்கு அருகில் திருவாசி என்னும் ஊரா?அல்லது வேறு ஊரா என்று நினைவில் இல்லை. அங்கு ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. அங்கே இருக்கும் விநாயகர் மாற்றுரைத்த விநாயகர் எனப்படுகிறார். அந்த கோவிலில் மஹாவிஷ்ணுவும் உண்டு. சிவபெருமான் அளித்த தங்க கட்டிகளை விநாயகரிடம் உரைத்துப் பார்த்தாராம் சுந்தரமூ ர்த்தி நாயனார். சாட்சிக்கு மஹாவிஷ்ணுவை வைத்துக் கொண்டாராம்.

    ReplyDelete
    Replies
    1. திருஆரூர் கமலாலயக் குளக்கரையில் ஸ்ரீமாற்றுரைத்தவிநாயகர் கோயில் உள்ளது..
      திருக்கரத்தில் உரைகல்லுடன் விளங்கும் சுதை சிற்பம் கூட உள்ளது...

      திருவாசி தலத்தில் ஈசன் வழங்கிய பொன் கட்டிகளை
      ஈசனே திருமாலுடன் வந்து உரசி மாற்றுரைத்ததாக ஐதீகம்...

      திருவாசியில் ஈசன் மாற்றுரைத்ததால் -
      ஸ்ரீ மாற்றுரைத்த வரதேஸ்வரர் என்று திருப்பெயர்...

      தேவாரம் பெற்ற திருத்தலம் - திருவாசி..

      Delete
  11. தெரியாத கதை. நல்லா இருந்தது. துரை செல்வராஜு சாரின் பின்னூட்டம் இன்னும் தெளிவித்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. துரை சார் நல்ல தகவல்களை அழகாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

      Delete
  12. >>> படித்த, மட்டும் கேட்டவற்றில் இது குறிப்பிடப்படவில்லை. அடுத்த முறை கவனமாக விவரங்களை ...<<<

    கற்றதை விட - கல்லாதது உலகளவு என்றார் ஔவையார்...

    3X5(இஞ்ச்)கட்டத்துக்குள் அடங்கும்படியாக திருக்குறிப்புகளை உருமாற்றம் செய்கின்றன சில பத்திரிக்கைகள்...

    குருப் பெயர்ச்சி என்றால் -
    ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபெருமான் பெட்டி படுக்கையுடன் அடுத்த வீட்டுக்குப் போவது மாதிரியும்

    ருண விமோசன தலம் என்றால்
    ஆடம்பர செலவுகளுக்காக அடுத்த வீட்டுக்காரனிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கான தலம் திருச்சேறை என்கிற மாதிரியும்

    மக்களை ஆக்கி வைத்திருக்கின்றனர் - இன்றைய ஆன்மிக வியாபாரிகள்...

    திருக்கடவூர், வைத்தீஸ்வரன்கோயில், திருநாகேஸ்வரம் -
    முதலான திருத்தலங்களில் சாதாரண சேவார்த்திகளுக்கு தனியான பார்வை தான்...

    நீங்கள் ஏதாவது கேட்டால் சொல்ல மாட்டார்கள்..

    திருநாகேஸ்வரத்தில் காக்கிச் சட்டையுடன் கூடிய கோயில் பணியாளர்களின் முரட்டுத் தனத்தைச் சகித்துக் கொள்வதற்கே தனியாக தவம் இருக்க வேண்டும்...

    திருக்கருகாவூரில் - கர்ப்ப வரம் வேண்டும் பெண் தான் அந்தப் படியினை நெய்யினால் மெழுக வேண்டும் என்பது ஐதீகம்...

    ஆனால் - அங்கேயே நெய் விற்பனை பிரதானமாகி விட்டது...

    அபலைப் பெண்களிடம் அதிர்ந்து பேசும் குருக்களைக் கண்டு மனம் வருந்தி இருக்கின்றேன்...

    அங்கேயெல்லாம் சென்று - இது இப்படித்தான் என்று சொன்னால் நம்புவதற்கு மறுக்கின்றார்கள்... காரணம் நாம் ஆன்மீக வியாபாரிகள் இல்லையே...

    எல்லாருக்கு எல்லாமும் சேர்ந்து விடாது - என்பது நீதி..

    ஆகையினால் நம்மை வந்தடைய வேண்டிய உண்மைகள் வந்தே தீரும்...

    அளித்துள்ள விவரங்கள் சரியாக இல்லையே (சரியான விவரங்களை அளிக்கவில்லையே!..) என்பதற்காக வருந்தற்க!...

    தங்களது திருப்பணி தொடரட்டும்... அன்பின் நல்வாழ்த்துகள்!..

    தங்கள்

    ReplyDelete
    Replies
    1. //ஆகையினால் நம்மை வந்தடைய வேண்டிய உண்மைகள் வந்தே தீரும்...//
      நூறில் ஒரு வார்த்தை. நம் தேடல் உண்மையாக இருக்க வேண்டும்.

      உங்கள் ஆதங்கம் அத்தனையும் சரி. வைத்தீஸ்வரன் கோவிலையும், திருநள்ளாரையும் செவ்வாய், சனி பரிகார தலங்களாக்கி விட்டோம். அங்கே மூலவரான சிவபெருமான் சந்நிதியை விட, செவ்வாய், சனி சந்நிதிகளில் கும்பல் அதிகம் இருக்கும்.

      Delete
    2. துரை செல்வராஜு சார்... இதைப் பற்றி நீங்க தெளிவா ஒரு தொடர் எழுதணும்.

      எனக்கும் பல சமயம், சுயநலத்துக்காக ஒரு கோவிலுக்குப் போவது, அங்கு எப்படி வழிபடவேண்டுமோ அப்படி வழிபடாமல் அரசாங்க ஆபீசுகளில் மனுப்போடுவதுபோல் போட்டுவிட்டு வருவது என்பது ரொம்ப சங்கடமாகத் தோணும். திருநள்ளாறில், மூலவரைச் சேவிக்க விட்டுப்போவது, திருப்பதில, தெரிஞ்சும் வராஹரை சேவிக்காமல் நேரே கோவிலுக்குச் செல்வது என்று பல தவறுகள்..

      Delete
  13. அந்தக் கோவில் திருவாசிதானா? அருமையான தலம். நன்றி துரை செல்வராஜ் சார். எனக்கு திருவாரூர் செல்லும் பாக்கியம் இதுவரை வாய்க்கவில்லை.
    தியாகேசனையும், கமலாம்பாளையும் வேண்டிக்கொண்டே இருக்கிறேன். அங்கு செல்லும் பொழுது நீங்கள் சொன்ன விஷயங்களை நினைவில் கொண்டு மாற்றுரைத்த விநாயகரையும் தரிசனம் செய்கிறேன். வாழ்க நலம்.

    ReplyDelete
  14. தாங்கள் விரைவில் திருஆரூர் தரிசனம் செய்வதற்கு வேண்டிக் கொள்கின்றேன்..

    சில மாதங்களுக்கு முன் - ஸ்ரீ பேச்சியம்மனைப் பற்றி எழுதியிருந்தீர்கள்..

    அப்போது நான் எனது தளத்திலுள்ள பதிவுக்கு இணைப்பு தருகின்றேன் என்று சொல்லியிருந்தேன்.. ஆனால் அது இயலாமல் போனது...

    29/11/2018 அன்று வெளியாகியுள்ள ஸ்ரீ ஐயப்ப சரிதம் 05 ல்
    ஸ்ரீ பேச்சியம்மனின் திருத்தோற்றத்தைச் சொல்லியிருக்கின்றேன்...

    நேரம் இருப்பின் வருகை தருக...

    ஸ்ரீ பேச்சியம்மனைப் பற்றிய விரிவான பதிவினை
    எதிர் வரும் தை மாதத்தில் தருகின்றேன் - அவள் அருளுடன்!...

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. //ஸ்ரீ பேச்சியம்மனைப் பற்றிய விரிவான பதிவினை
      எதிர் வரும் தை மாதத்தில் தருகின்றேன் - அவள் அருளுடன்!...//
      ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி!

      Delete