கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 21, 2019

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்


ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெருமானை பூஜிப்பதன் மூலம்தான் அந்த தோஷம் விலகும் என்று முனிவர்கள் கூற, தான் பூஜிப்பதற்காக கைலாயத்திலிருந்து சிவ லிங்கங்களை பெற்று வருமாறு ஆஞ்சநேயரை பணிக்கிறார்.

கைலாயத்திலிருந்து இரண்டு சிவ லிங்கங்களை பெற்றுக் கொண்டு ஆஞ்சநேயர் வருவதற்கு முன் பூஜிக்க வேண்டிய நல்ல நேரம் முடிந்து விடுமே என்பதால் சீதை கடற்கரை மணலில் பிடித்து வைத்த லிங்கத்தையே ராமபிரான் பூஜித்து பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுகிறார். அதைப் பார்த்த ஆஞ்சநேயருக்கு தன்னை அவமதித்து விட்டார்கள் என்று கோபம் வருகிறது. தன கொண்டு வந்த சிவலிங்கத்தைத்தான் வைத்து பூஜிக்க வேண்டும் என்று நிர்பந்திகின்றார். அதற்கு ராமன், "உன்னால் முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றி விட்டு  நீ கொண்டு வந்து லிங்கத்தை ஸ்தாபிக்கலாம்" என்று கூற, அவர் அதை பிடுங்க முயற்சி செய்கிறார். எவ்வளவு முயற்சி செய்த போதிலும் அவரால் அதை அகற்ற முடியவில்லை. இறுதியாக தன்னுடைய வாலால் அந்த லிங்கத்தை மூன்று சுற்றுகள் சுற்றி, தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்து அசைக்கப் பார்க்கிறார். இந்த முயற்சியில் அவருடைய வால் அறுபட்டு அவர் தூக்கி எறியப்படுகிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஞ்சநேயரை தூக்கி எடுத்த ராமன், தன் மார்போடு அனைத்துக் கொண்டு ஆதுரத்துடன் அவர் உடலைத் தடவி கொடுக்கிறார். சீதையும் காயம் பட்ட ஆஞ்சநேயரின் உடலை தடவி கொடுத்தவுடன், ஆஞ்சநேயரின் உடலில் பட்ட காயங்கள் ஆறி, அவர் தன் பழைய உடல் பலத்தையும், வனப்பையும் பெறுகிறார்.

"உன் அறியாமையால் பிரும்மா, விஷ்ணு, இந்திரன் இவர்களால் அசைக்க முடியாத இந்த லிங்கத்தை நீ இவ்விதம் செய்ய முற்பட்டதால் சிவ அபாரதத்திற்கு ஆளானாய். இனி இவ்விதம் செய்யாதே. நீ விழுந்த இவ்விடம் ஹனுமத் குண்டம் என்று அழைக்கப்படும்.  நீ கொண்டு வந்த லிங்கங்களுள் ஒன்றை நான் பூஜை செய்த லிங்கத்திற்கு வடக்கே பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதராக பூஜிக்கிறேன். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் காசி விஸ்வநாதரை வணங்கி அதன் பிறகே என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை பூஜிக்க வேண்டும். மற்றொரு லிங்கத்தை நீ உனக்கு அருகே மேற்கு பக்கத்தில் ப்ரதிஷ்டை செய்து இந்த கோவிலுக்கு காவலாக இருந்து கொண்டு பூஜித்து வருவாயாக. இதனால் நீ செய்த அபசாரத்திலிருந்து விடுபடுவாய்" என்று  ராமன் கூறியதாக தல புராணம் கூறுகிறது.

பிரும்மாண்டமான அழகான கோவில். சந்நிதியில் நுழையும் முன் வல்லப கணபதியை வணங்கி உள்ளே நுழைகிறோம். பிருமாண்டமான, அழகான  நந்தி. ஆனால் அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியாமல் நெருக்கமாக கம்பிகள்.  இந்த நந்தி கோவிலின் பிரும்மாண்டத்திற்கு தோதாக பின்னாட்களில் வைக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

சீதை மணலால் பிடித்த லிங்கம் என்பதை நம்பலாம் போல அழகிய, சிறிய லிங்கம்.  அதற்கேற்றார் போன்ற சிறிய நந்தியை வரிசையில் நிற்கும் பொழுது பார்க்க முடிகிறது.  சுவாமியை தரிசித்து விட்டு வரும் பொழுது சீதா,ராம, லக்ஷ்மணர்களை வணங்கியபடி நிற்கும் ஆஞ்சநேயர், மற்றும் சுக்ரீவனை வணங்கி பிரகாரம் சுற்றி வரும் பொழுது கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி யையும், பிராகாரத்தில் பள்ளி கொண்ட பெருமாளையும் வணங்குகிறோம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்திக்கு எதிர் பக்கத்தில் பிரும்மா  இருக்கிறார். ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட காசி விஸ்வநாதர், விசாலாட்சியையும் வணங்குகிறோம். எல்லா சிவன் கோவில்களையும் போலவே நுழைவாயிலுக்கு இரு புறங்களிலும் சூரிய, சந்திரன் காட்சி அளிக்கிறார்கள்.

வெளி வந்து அம்பாள் சன்னதியில் பர்வதவர்த்தினியை தரிசித்துக் கொள்கிறோம். அம்மன் சன்னதிக்கு வெளியே தூண்களில் நவ கன்னிகையர்களின்
சிலைகள் இருக்கின்றன.





பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை இப்போது வர்ணம் பூசியிருக்கிறார்கள். எனக்கென்னவோ வர்ணம் பூசப்படாத பொழுது இன்னும் அழகாக இருந்ததோ என்று தோன்றியது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த எங்கள் அப்பா அப்போது புகைப்படம் எடுத்திருக்கிறார். இப்போது என் செல் ஃபோனால் சிறை பிடிக்க முயன்றேன். ஐந்துக்கு மூன்று பழுதில்லை அல்லவா?°

இங்கு கிழக்கு வாசலிலிருந்து பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. காலையில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி விட்டு கிழக்கு வாலில் இந்த பேட்டரி காரில் ஏறிக்கொண்டால் வடக்கு வாசலில் இறக்கி விடுகிறார்கள். அங்கிருந்து உள்ளிருக்கும் 27 தீர்த்தங்களில் நீராடி மேற்கு வாசலுக்கு வந்து விடுவோம். அங்கு உடை மாற்றிக் கொள்ள இடம் இருக்கிறது. உடை மாற்றிக் கொண்டு இறைவனை தரிசிக்கலாம்.

இந்த கோவில் சைவ,வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்பட்டாலும் வைணவர்கள் அதிகம் கண்களில் படவில்லை. வட இந்தியர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.








24 comments:

  1. பலநூறுமுறை இராமேஸ்வரம் சென்று இருந்தாலும் பத்து முறைக்கும் மேல் கோவிலுக்குள் சென்று இருக்கிறேன்.

    இரண்டு முறை தீர்த்தங்களில் நீராடி இருக்கிறேன்.

    பள்ளி விடுமுறையில் பாம்பனே (பாலமே)கதி

    (நெல்லைத்தமிழர் கோவிக்க வேண்டாம்)

    ReplyDelete
  2. இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும். எல்லாத் தீர்த்தங்களிலும் குளிப்பதற்கு (நீர் விடுவதற்கு) ப்ரோக்கர்கள்தான் உண்டு, நாம் தனியாக செல்லமுடியாது என்றெல்லாம் படித்திருக்கிறேன்.

    கில்லர்ஜி சொன்னால்தான் தெரியும்.

    படங்கள் என்னவோ நன்றாகத்தான் இருக்கு. பாரம்பர்ய கோவில்களில் கலர் பெயிண்ட் அடிப்பது அதன் அழகைக் கெடுத்துவிடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. கடந்த வருடம் குடும்பத்தில் 25 நபர்கள் ஒன்றாக தீர்த்தமாடினோம்.

      கண்டிப்பாக கட்டணம் உண்டு 30 ரூபாய் என்று நினைவு உறவினர் டிக்கட் எடுத்தார் ஆகவே ஞாபகமில்லலை. நான் எடுத்து இருந்தால் இன்றுவரை டிக்கெட் வைத்திருப்பேன். (இதனுள்ளும் ப்ளாக் டிக்கெட் உண்டு)

      புரோக்கர்களிடம் தனியாக அமௌண்ட் (ரூபாய் 100 முதல் 5000 வரை)ஒரு நபர் எல்லா தீர்த்தங்களுக்கும் கூடவே வந்து தண்ணீர் இறைத்து ஊற்றும் நபர்களிடம் விழிகளால் மௌனமொழி பேசுவார்.

      அதன் பொருற்பால் உணர்ந்து அவர்கள் நமது தலையில் தீர்த்த மழையோ அவ்வது அருவியாலோ நனைத்து தினறடிப்பார்கள்.

      இதில் இரண்டு சொட்டு தலையில் தெளிப்பதோடு நாயை விரட்டுவதுபோல விரட்டப்படுபவர்களும் உண்டு.

      இவைகள் கடந்த வருடம் எனது விழிகளில் நேரடியாக கண்டகாட்சி.

      Delete
  3. அழகான கோவில். சிறு வயதில் ஒரு குழுவாகச் சென்றது. நினைவு தெரிந்து இங்கே எல்லாம் சென்றதில்லை. செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு.

    ReplyDelete
  4. எதுவும் பழுதில்லை... படங்கள் உண்மையிலேயே அழகாக இருக்கிறது...

    ReplyDelete
  5. படங்கள் எல்லாம் அழகு.
    முன்பு நீங்கள் சொல்வது போல் தூண்களுக்கு வர்ணம் கிடையாது.

    ReplyDelete
  6. படங்கள் அழகு. இந்தக் கோவில் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  7. புது வர்ணம் பூசப்படுவதை நானும் என் மனதளவில் வரவேற்பதில்லை. என்னமோ செயற்கைத்தன்மை வந்து விடுவது போல இருக்கும்.

    ReplyDelete
  8. ராமேஸ்வரம் போனனீங்களோ பானுமதி அக்கா.. கூப்பிடு தூரத்தில் இலங்கை தெரிஞ்சதோ?

    ReplyDelete
  9. நான்கைந்து முறை சென்றதில் முதல் முறையும், இரண்டாம் முறையும் எல்லா இடங்களிலும் நீராடினோம். பின்னர் நீராடவில்லை. கடைசியாகப் போனபோது பையரும் மருமகளும் மட்டும் நீராடினார்கள். நாங்கள் ஒதுக்குப் புறமாக உட்கார்ந்துவிட்டோம். நீராடி உடைமாற்றும் இடம் சுத்தத்தை அப்போது கடைப்பிடிக்கவில்லை! அதனால் துணி மாற்றச் சென்ற எங்கள் மருமகள் மாற்றாமலேயே வந்து விட்டாள்! :(

    ReplyDelete
  10. பொதுவாக புரோக்கர் மூலம் தீர்த்த ஸ்நான கட்டங்களுக்குச் சென்றதில்லை. ஆனால் பையருடன் போனபோது மாலைவேளை என்பதாலும் நாங்கள் பித்ரு காரியங்கள் எதுவும் செய்யாததாலும் புரோக்கரையே பிடித்தோம். அதிகம் வாங்கவில்லை. எல்லா தீர்த்தங்களிலும் வாளியால் நீரை மொண்டு குழந்தைகளுக்கு ஊற்றினார். நாங்க போனப்போ எல்லாம் புரோகிதர் மூலமே போனதால் அவரே ஆளை அனுப்பி விடுவார். அவர் எல்லா இடங்களிலும் ஸ்நானத்திற்கு நீரை வாளி மூலம் இறைத்து ஊற்றிவிட்டுப் பின்னர் உடை மாற்றி வந்ததும் தரிசனமும் செய்து வைப்பார். பின்னர் புரோகிதர் வீட்டிலேயே சாப்பிட்டு விடுவோம்.ஸ்ருங்கேரி மடத்தில் தங்க இடம் கொடுத்திருந்தார்கள். அங்கேயே உடை மாற்றிக் காய வைக்கவும் வசதி உண்டு.

    ReplyDelete
  11. அண்மையில்தான் சென்றுவந்தோம். தமிழகத்தில் பார்க்கப்படவேண்டிய முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  12. பல முறை ராமேஸ்வர விசிட் ஆயிற்று இப்போதெல்லம்முன்பில்லாத கொவிலள் இருக்கின்றன சில ஆண்டுகளில் அவை ராமாயண காலத்தவை என்றாலும் ஆச்சரியபடக்கூடாது

    ReplyDelete
  13. ஆம், ராமேஸ்வரத்திற்கு பொதுவாகவே வைணவர்கள் போவதில்லை. ஆனால் ரங்கனாதரைப் பார்க்க சைவர்கள் திருவரங்கம் பொவது குறையவில்லை. காரணம் என்னவாக இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. சார்... சைவத்தில் விஷ்ணுவும் வணக்கத்துக்குரிய தெய்வம். அதனால் பெரும்பாலும் எல்லா சைவ கோவில்களிலும் விஷ்ணு, மஹாலக்‌ஷ்மி சன்னிதிகளைப் பார்க்கலாம்.

      வைணவத்தில், அந்நிய தேவதை வழிபாடு கூடாது என்ற கட்டுப்பாடு உண்டு. அதாவது நாராயணனே தெய்வம், அவனை மட்டுமே வழிபடவேண்டும், மற்ற தெய்வங்களிடம் காரியம் ஆவதற்காக வேண்டவும் கூடாது என்று. அதனால் பொதுவா வைணவர்கள் அந்நிய தேவதை கோவில்களுக்குச் செல்வதில்லை. கச்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னிதியாக திவ்யதேசக் கோவில் பெருமாள் இருக்கிறார். பொதுவா திவ்யதேச கோவில்களைச் சேவிக்கச் செல்பவர்கள், நேராக விஷ்ணு சன்னிதிக்கு மட்டும் சென்று சேவித்துவிட்டு வருவார்கள். மற்ற சன்னிதிக்குச் செல்லமாட்டார்கள். காமாட்சியம்மன் கோவிலில் (கச்சி), திவ்யதேசப் பெருமாள் சன்னிதி அம்மன் சன்னிதிக்குப் பின்புறம் இருக்கிறது. அதைச் சேவிக்க அம்மன் சன்னிதி மண்டபத்தில் ஏறி உள்வழியாகப் போகணும். அப்படிக்கூடப் போகக்கூடாது என்று நினைப்பவர்களுக்காக மண்டபத்துக்கு வெளியே நின்று கண்ணாடியில் பெருமாளைப் பார்க்கும்படியாக 6க்கு 3 அடி கண்ணாடி சன்னிதியின் எதிரே வைத்திருக்கிறார்கள். (எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லாத போதிலும்)

      Delete
    2. திருவரங்கத்தில் வழங்கும் பழமொழி, (முன்னால் வழங்கிய)

      ஆனை துரத்தினும் ஆனைக்கா புகேன்.

      அதாவது யானையே என்னைத் துரத்தி வந்தாலும் தப்பிக்க திருவானைக்கா கோவிலுக்குள் நுழையமாட்டேன் என்று ஸ்ரீரங்கத்து வைணவர்கள் சொல்லுவதாக.

      இதெல்லாம் தகவலுக்குத்தான் சொன்னேன். (என்னுடைய நம்பிக்கை அல்ல)

      Delete
    3. சிதம்பரத்தில் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் தரிசிக்க வரும் வைணவர்கள் நேரே இருக்கும் நடராஜர் கண்களில் பட்டுவிடப் போகிறாரே என அந்தப் பக்கம் கையை வைத்து மறைத்துக் கொள்வார்கள். இருவர் சந்நிதிக்கும் எதிரே இருவரையும் ஒருங்கே பார்க்கும் இடம் இருக்கிறது அல்லவா? அங்கே எந்த வைணவரும் நின்று பார்க்க மாட்டார். ஆனால் எனக்குத் தெரிந்து அம்பத்தூரில் எங்கள் நீண்ட நாள் நண்பர் வைணவர் திருமுல்லைவாயில் ஈசன் கோயிலுக்குப் பிரதோஷம் தவறாமல் போய்விட்டு வருவார்.

      Delete
    4. நெல்லை, காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நிலாத்துண்ட பெருமாள் என்று தனிச் சந்நிதி உண்டு.

      வைணவர்களுக்கு பிள்ளையார், தும்பிக்கை ஆழ்வார்.

      காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயிலை சுற்றியிருக்கும் வைணவர்கள் தங்களுக்கே பாத்தியதை பட்ட கோயிலாக எண்ணுவார்கள். கருட சேவை உற்சவத்தின் போது பெருமாளை பிர்மாண்ட பல்லக்கில் வைத்து கோயில் பிரகாரச் சுற்றில் அவர்களே சுமந்து வந்து வெளி மண்டபத்தில் வைப்பார்கள். பெருமாள் பல்லக்கைத் தூக்கியே அவர்கள் தோள்களின் மேற் பகுதியில் வடுவாக காப்புக் காய்ந்திருக்கும்.

      Delete
    5. எல்லா வைணவக் கோயில்களிலும் இதற்கெனப் பயிற்சி பெற்ற வைணவர்களே பல்லக்குத் தூக்குவார்கள். ஸ்ரீபாதம் தாங்கிகள் எனப் பெயர். வேறு யாரிடமும் விட மாட்டார்கள். மதுரை அழகர் கோயில் மட்டும் விதிவிலக்கு. அங்கே கள்ளர் இனத்தவர் தவிர்த்து வேறு யாரும் அழகர் பல்லக்கைத் தொட முடியாது. இங்கே ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீபாதம் தாங்கிகள் காவிரி மணலில் (கொள்ளிடத்தில்) பயிற்சி பெறுவார்கள். அதே போல் வைணவர்கள் வீடுகளிலும் அவர்களைத் தவிர்த்து வேறு யாரும் சமையலறைக்குள் நுழைய முடியாது. கல்யாணம் போன்ற விசேஷங்களில் கூடப் பரிமாறுவதில் இருந்து எல்லாம் அவர்களே! மாத்வர்களிலும் அப்படியே! மாத்வர்கள், "தேவுரு" "தேவுரு" எனச் சொல்லிக் கொண்டு முதலில் எல்லாம் கடவுளுக்கே!

      Delete
    6. ரொம்ப நாட்கள் கழிந்து இந்த இடுகையை மீண்டும் படிக்கிறேன் (பின்னூட்டங்களை). ஸ்ரீபாதம் தாங்கிகள் பெரிய கோவில்களில் உண்டு. அவர்களைத் தவிர வேறு யாரும் பெருமாள் பல்லக்கைச் சுமக்க முடியாது.

      சமீபத்தில் கல் கருடன் (நாச்சியார் கோவில்) ஸ்வாதி நட்சத்திர ஹோமத்தின்போது அங்கிருந்த அர்ச்சகர் ஹோமத்தின் திரவியங்களை (சுமார் 108 இருக்கலாம்) ஒவ்வொருவரையும் (எல்லோரையும்..) கையில் ஏந்தி சன்னிதியைச் சுற்றிவரச் சொன்னார். எல்லா பக்தர்களுடைய பார்டிசிபேஷனும் இருக்கணும் என்று அவர் மெனெக்கிட்டார். இது மிகவும் என்னைக் கவர்ந்தது.

      சென்றவருடம் கல்கருட சேவைக்கு நான் மட்டும் போயிருந்தேன். வெளியே பெருமாள் தாயார் தனித்தனிப் பல்லக்கிள் வந்தார்கள். நான் ஆசைப்பட்டதற்கு இணங்க சில விநாடிகள் தாயார் பல்லக்கைச் சுமக்கும் பாக்கியம் கிடைத்தது. கல்கருடனையும் சுமக்க நான் வேண்டியிருந்தால் அனுமதித்திருப்பார்கள்.

      பக்தர்களை 'பக்தி' என்ற அளவீட்டைக் கொண்டே அளவிடணும் என்பது என் எண்ணம்.

      Delete
  14. ராமேஸ்வரம் கோவிலின் பெருமை அளவில்லாதது. என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த அம்மன்.
    எங்களுக்கு எப்பொழுதும் இந்தப் பாகுபாடு கிடையாது.
    செந்தூர அனுமனைத் தரிசித்தீர்களா.

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரி

    இராமேஸ்வரம் கோவில் ஸ்தல புராண விளக்கங்கள், படங்கள் அனைத்தும் அருமை. எங்கள் அண்ணா மன்னியுடன் இராமேஸ்வரம் கோவிலுக்கு ஒருதடவை சென்றுள்ளேன். அதன் பின் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அழகான கோவில். தங்கள் பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை தரிசனம் செய்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. ராமேஸ்வரம் தகவல் அருமை
    தொடருங்கள்

    ReplyDelete
  17. தங்கள் கணவர் மறைந்த செய்தியினை திருமதி.கீதா சாம்பசிவம் அவர்களது வலைத்தளம் மூலம் இப்போது அறிந்த போது மிகவும் வருத்தமாக இருந்தது. துயரத்துடனிருக்கும் தங்களின் மனநிலையை உணரும்போது இன்னும் வேதனையாக இருக்கிறது. காலம் தங்களின் இழப்பிலிருந்து தங்களை மீட்டு வரும் என்றாலும் துணையைப்பிரிந்த உங்கள் மனதுக்கு என்ன ஆறுதல் சொல்வது? இந்த நேரத்தில் தைரியமாக இருங்கள் என்று மட்டுமே சொல்ல முடிகிறது.

    உங்கள் கணவருக்கு என் இதய அஞ்சலிகள்!

    ReplyDelete