ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

திருப்புல்லாணி

திருப்புல்லாணி தேவிப்பட்டிணத்திலிருந்து திருஉத்திரகோசமங்கைக்கு சென்று விட்டு பின்னர் திருப்புல்லாணி சென்றோம்.  தர்பசயன ராமர் கோவில் என்று பிரபலமாக அறியப்பட்டாலும் மிகவும் புராதனமான இக்கோவில் ஆதி ஜெகந்நாதர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. 

கருவறையில் ஆதி ஜெகந்நாதர் தர்பாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இரு புறமும் ஸ்ரீதேவி,பூதேவி நாச்சியார்களோடு காட்சி அளிக்கிறார். இங்குதான் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த தசரதருக்கு பாயசம் வழங்கப்பட்டது என்கிறார்கள். அதனால் இப்போது கூட குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனுக்கு பாயசம் படைத்தது பிரார்தித்துக்கொள்ள குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிதர்சனமான நம்பிக்கை. தனிசந்நிதியில் அழகே உருவாய் பத்மாசினி தாயார். ஆண்டாளுக்கும் தனி சந்நிதி இருக்கிறது. 

பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது தனி சந்நிதியில் தர்ப்பை படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும்  ராமபிரானை தரிசிக்க முடிகிறது. சீதையை இழந்த சோகத்தில், கடலை கடந்து எப்படி சீதையை மீட்கப்போகிறோம் என்ற சிந்தனையில் தர்பை புல்லையே  படுக்கையாக விரித்து படுத்து விட்டாராம். அவருடைய தொப்பூழிலிருந்து மூன்று தண்டுகள் பிரிய ஒன்றில் பிரம்மா, ஒன்றில், சூரியன், மற்றொன்றில் சந்திரன் இருக்க, சுற்றிலும் முப்பது முக்கோடி தேவர்களும் பாலம் கட்டுவதைப் பற்றி ஆலோசனை செய்தார்களாம். 

இங்கிருந்து இலங்கை கடலின் நடுவே செல்ல பாலம் கட்டுவதற்கு சமுத்திரராஜனிடம் அனுமதி வாங்குவதற்காக அவனை வரச்சொல்கிறார் ராமர். சமுத்திரராஜன் வராததால் கோபமுற்று தன் கோதண்டத்திலிருந்து அம்பினை ஏவுகிறார், அக்னி பிழம்பாக அம்பு பாய, பயந்து போன சமுத்திர ராஜன் ஓடிவந்து ராமனின் பாதம் பணிகிறான். அதன் பிறகு இங்கிருந்துதான் பாலம் கட்டப்பட்டது. அதனால் இந்த இடம் ஆதி சேது என்று வழங்கப்படுகிறது. இங்குதான் விபீஷணன் ராமரிடம் சரணடைந்தாராம். எனவே இது சரணாகதி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

கடலைத்தாண்டி சீதையைக் கண்டு, அவளிடமிருந்து சூடாமணியை பெற்று வந்த ஹனுமான் இங்குதான் அதை ராமனிடம் தந்ததாக சொல்கிறார்கள்.

இங்கு பட்டாபிஷேக ராமருக்கு என்று ஒரு தனி சந்நிதியும், சந்தானகோபாலருக்கு தனிசந்நிதியும் இருக்கின்றன.  ஆனால் நடை சாத்தி விட்டதால் இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணரை எங்களால் தரிசனம் செய்ய முடியவில்லை.  குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கிருஷ்ணருக்குத்தான் பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  வெளி பிரகாரத்தில் அரச மரத்திற்க்கு அடியில் நிறைய நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. 

திருமங்கையாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட தலம். 108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று. மூலவர் ஆதி ஜெகன்னாதர், உற்சவர் கல்யாண ஜகந்நாதர். தாயார் பத்மாசினி மற்றும் கல்யாணவல்லி. 

இங்கிருக்கும் சமுத்திரத்தில் நீராடி விட்டுதான் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்கிறார்கள். நாங்கள் தரிசனம் மட்டும் செய்து கொண்டோம். 

28 கருத்துகள்:

 1. இந்த இடமும் பார்த்ததில்லை. விவரங்கள் தெரிந்து கொ\ண்டேன். முப்பத்து முக்கோடி தேவர்கள் நினைத்தால் சீதையை மீட்க ஒரு கணம் போதாதோ! சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்கணும் அல்லவோ அங்கு செல்லவேண்டும்! மிரட்டி, தான் இருக்கும் இடதுக்கா வரவழைத்து அனுமதிகேட்பது!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முப்பத்து முக்கோடி தேவர்கள் நினைத்தால் சீதையை மீட்க ஒரு கணம் போதாதோ!//இதெல்லாம் அந்த கோவிலை உயர்வு படுத்த பின்னல் சேர்க்கப்பட்ட கதைகளாக இருக்கும். வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. ஸ்ரீராம்... நீங்க பரீட்சை எழுதும்போது ஹால் சூபர்வைசருக்கு பதில் தெரியும். பேப்பரைத் திருத்துபவருக்கு பதில் தெரியும். பரீட்சை ஹாலுக்கு போவதுக்கு முன்னால் என்ன கேள்விகள் என்பதெல்லாம் அவங்களுக்குத் தெரியும். ஆனால் டெஸ்ட் உங்களுக்கு என்பதால் அவங்க அதுல தலையிட மாட்டாங்க.

   அதே கதைதான் புராணத்திலும். அங்கயும் கர்மவினை மற்றும் கடமைகள்னால ராமர் பிறப்பெடுக்கிறார். அவர் செய்ய வேண்டிய வேலைகள், கஷ்டங்கள், சந்தோஷங்கள் எல்லாம் அவர்தான் பண்ணணும் அனுபவிக்கணும்.

   நீக்கு
 2. திருப்புல்லாணி சென்றதில்லை. செல்லும் ஆவலை உங்களின் பதிவு தூண்டியது. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நாங்கள் இங்கே இரண்டு, மூன்று முறை சென்றாலும் சேதுக்கரைக்கு 2014 ஆம் ஆண்டில் தான் போனோம். அது பற்றி எழுதி இருந்தேன். அடிக்கடி போவதாலோ என்னமோ இது எல்லாம் பழக்கமான இடங்களாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 4. திருப்புல்லாணி பார்க்கவில்லை.

  விவரங்கள் , வரலாறு எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 5. பலநூறுமுறை திருப்புல்லாணி சென்று இருக்கிறேன் ஆனால் ஒருமுறைகூட கோவிலுக்குள் போனதில்லை.

  எனது அப்பா-அம்மாவுக்கு ஆதிஜெகநாதர்தான் அவரது காலடியில் திருமணம் நடத்தி வைத்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பலநூறுமுறை திருப்புல்லாணி சென்று இருக்கிறேன் ஆனால் ஒருமுறைகூட கோவிலுக்குள் போனதில்லை.//ஏனப்படி? வருகைக்கு நன்றி.

   நீக்கு
 6. ராமேஸ்வரம் சில தடவைகள் போய் வந்திருந்தாலும் திருப்புல்லாணி போய் விட்டு அங்கு போக வேண்டும் என்பது தெரிந்திருக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 7. திருப்புல்லணை ,திருப்புல்லாணி ஆகி விட்டது.
  ராமரின் சேதுவுக்கு படகில் சென்று பார்த்து வரலாம்.

  நிறைய தர்ப்பம் விளையும் பூமி.
  அழகான கடற்கரை.
  ஸ்னானம் செய்ததும் நம் உடைகளை வாங்கிக் கொள்ள
  நிறையப் பெண்கள் காத்திருப்பார்கள்.

  கோவிலும் தண்மையாக இருக்கும்.
  நினைவுகளை மீட்டதற்கு நன்றி பானுமா.

  பதிலளிநீக்கு
 8. தெரியாத பல விபரங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! உங்கள் பதிவு திருப்புல்லாணி செல்லும் ஆவலை தூண்டி விட்டது!

  பதிலளிநீக்கு
 9. சமுத்திரத்தில் நீராடமுடியாத போது, தலையில் அந்தத் தண்ணீரைத் தெளித்துக்கொள்ளலாம். இதே கடல்தானே அங்கேயும் என்றால் என்னிடம் பதில் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் திருப்புல்லாணி சென்ற பொழுது 12 மணி ஆகி விட்டது. அதனால் கோவிலில் மட்டும் தரிசனம் செய்து கொண்டு வந்தோம். அதனால் கடலில் குளிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. கோயிலில் இருந்து சேதுக்கரை கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது. வண்டி இல்லாமல் போக முடியாது! நாங்கள் சீக்கிரம் போயுமே ராமர் சேதுவைப் பார்க்கப் படகுகள் ஒன்றும் இல்லை! அப்போது தடை செய்திருப்பதாகச் சொன்னார்கள். சேதுக்கரையில் ஸ்நானம் மட்டும் பண்ணிவிட்டு சங்கல்பம் செய்ய முடிந்தது. திருப்புல்லாணி கோயில் பட்டாசாரியார் தான் வந்து செய்து வைத்தார்.

   நீக்கு
 10. திருப்புல்லாணி - நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். இராமேஸ்வரம் சிறு வயதில் சென்ற நினைவு. இங்கே சென்றதில்லை என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 11. திருப்புல்லணை கோயில் போயிருக்கிறேன் சிறிய வயதில். ..இப்போதுதான் அதைப்பற்றிய தகவல்கள் அறிகிறேன் பானுக்கா. என் தாத்தாபாட்டியுடன் ஒவ்வொரு முறை வரும் போதும் சேதுக்கரை சென்று நாங்கள் கடலில் முங்கி எழாமல் போனதில்லை. மிகவும் பிடித்த இடம்...அதுவும் ராமேஸ்வரம் வந்து இறங்கியதும் ஓலைக் குடிசை போன்றுதான் என்ட்ரி விசா போட்டிருப்பாங்க அப்போ. விரலில் ரத்தம் சேகரித்து பார்த்துவிட்டுத்தான் உள்ளே அனுப்புவாங்க. பாஸ்போர்ட் செக்கிங்க் எல்லா சோதனைகளும் முடிந்தபிறகுதான். பெரும்பாலும் மாலை. 8, 8.30க்கு தலைமன்னாரிலிருந்து கப்பலில் ஏறினால் 12, 1 மணிக்குள் ராமேஷ்வரம் வந்து கப்பலில் இருந்து தோணியில் இறக்கி கரைக்குக் கொண்டு சேர்ப்பார்கள். மிகவும் பிடித்த பய்ணம். நான் பெரும்பாலும் கப்பலில் வெளியில் வந்து நின்று கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவேன். சீட்டில் இருந்தாலும் பார்க்கலாம் தான். நிறைய நினைவுகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவரை கப்பலில் பயணித்ததில்லை. அந்தமான் போக வேண்டும் என்று நினைத்திருந்தோம். இனிமேல் அது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.

   நீக்கு
 12. இதுவரை ராமேஸ்வரம் பகுதிக்குச் சென்றதில்லை. உங்கள் பதிவிலிருந்து நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. முந்தைய பதிவுகளையும் வாசித்துவிட்டேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு