கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, September 19, 2019

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாரே..

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாரே..


"நாளை அவருக்கு பிறந்த நாள் என்கிறீர்கள், ஒரு சின்ன கேக் வாங்கிக் கொண்டு வாருங்கள், உங்கள் நாலு பேரை ஐ.சி.யூ. உள்ளே அனுமதிக்கிறேன், செடேஷனை குறைக்கச் சொல்கிறேன், அவர் கட்டிலருகே நின்று 'ஹாப்பி பர்த் டே சாங் பாடுங்கள், அவரால் கேட்க முடியும். தன் பிறந்த நாளை  நீங்கள் கொண்டாடுகிறீர்கள்(??) என்று அவரால் உணர முடியும்." மருத்துவர் கூறியதற்கு இணங்க, அரை கிலோ சாக்லேட் கேக்கிற்கு ஆர்டர் கொடுத்து, அதை எடுத்துக் கொண்டு சென்றோம்.

"நம் வீட்டில் கேக் கட் பண்ணும் பழக்கம் கிடையாதே அம்மா? நாம் ஐயப்பன் கோவிலுக்குத்தானே செல்வோம், ஐயப்பன் கோவில் சந்தனம் இருக்கிறதா?" என்று கேட்டாள் என் மகள். இருந்தது. அதையும்  அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 31அன்று  எடுத்துச் சென்று அவருடைய நெற்றியில் இட்டு விட்டு, அவருக்கு எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து கூறினோம். அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் நர்ஸின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 31 அன்று துடிக்க ஆரம்பித்த அவருடைய இதயம், அதே ஆகஸ்ட் 31 அன்று துடிப்பதை நிறுத்திக் கொண்டது.

எங்களையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி விட்டு, எனக்கு தனிமைத் துயரையும் தந்து விட்டு இறைவனடி அடைந்து விட்டார். வீட்டில் உறவினர்கள் இருந்த வரை பெரிதாக எதுவும் தெரியவில்லை. குறிப்பாக பேத்தி இருந்த வரை தனிமையை உணரவில்லை. அவர்களும் ஊருக்குச் சென்றதும்தான் தனிமை தகிக்கிறது.

"எங்களால் ஆன எல்லாவற்றையும் செய்து விட்டோம், மெடிசன் இஸ் எ சப்போர்ட் ஒன்லி, பாடி ஷுட் ஹீல், டெத் இஸ் இன் எவிடேபில், பீ ப்ரீபெர்ட் பார் யுவர் லாஸ்"  தலைமை மருத்துவர் எங்கள் தலையில் இறக்கிய இடியை தாங்கிக் கொண்டு வெளியே வந்த பொழுது, அவரது அலுவலக வாசலில் இருந்த பெண், "திருப்பதி லட்டு" என்று பெருமாள் பிரசாதத்தை கொடுத்தாள்  "என்ன சொல்கிறார் இந்த வெங்கி?(திருப்பதி பெருமாளை நான் வெங்கி என்றுதான் குறிப்பிடுவேன்)"  எது நடந்தாலும் என் ஆசிர்வாதம் உனக்கு உண்டு என்கிறாரோ என்று தோன்றியது.

சுற்றமும், நட்பும் என்னை எழுதச் சொல்கிறார்கள். இதுவரை மூன்று முறைகளுக்கு மேல் எழுதத் தொடங்கி, தொடர முடியாமல் நிறுத்தி விட்டேன்.  அலமாரியில் இருக்கும் புடவைகளை எடுத்து மீண்டும் அடுக்க முயல்கிறேன். ஒவ்வொரு புடவையையும் மடிக்கும் பொழுதும், அவற்றை வாங்கிய தருணங்கள் மனதில் வருகிறது. பாடல் கேட்கலாம் என்றால் என் கணவருக்கு பிடித்த ஏதோ ஒரு பாடல் வந்து விடுகிறது. ஸ்லோகம் சொல்லவோ பூஜை செய்யவோ  இயலவில்லை.

என்னை வலையுலகத்திற்கு மீண்டும் வரச்சொல்லி எங்கள் பிளாக் உறுப்பினர்கள் பலரும் அழைப்பு விடுத்திருந்த அதிராவின் பதிவையும், கீதா அக்காவின் பதிவையும் ஸ்ரீராம் எனக்கு வாட்ஸாப்பில் அனுப்பி வைத்திருந்தார். இத்தனை கருணைக்கும், அன்பிற்கும் நெகிழ்ச்சியோடு நன்றி கூறிக்கொள்கிறேன்.

என் சோகம் என்னோடு, உங்களை மீண்டும் சந்திக்கும் பொழுது உற்சாகமான பதிவுகளோடுதான் சந்திக்க விருப்பம். சந்திப்போம்.


45 comments:

  1. மீண்டும் தங்களின் எண்ணப்படி வாருங்கள் அம்மா...

    ReplyDelete
  2. எது தவிர்க்கமுடியாததோ, எதைத் தவிர்த்திருக்க முடியாதோ, அதை நினைத்து என்ன பயன்?

    இணைய உலகம் உங்களுள் எண்ணத்தை, சிந்தனையை வேறு பக்கம் திருப்பும். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. //எது தவிர்க்கமுடியாததோ, எதைத் தவிர்த்திருக்க முடியாதோ, அதை நினைத்து என்ன பயன்?//
      100 வீதம் உண்மை, நம்மால் முடிந்தால் இப்படி நடக்க விட்டிடுவோமா?

      Delete
    2. கடினமாக இருந்தாலும், எழுத முயற்சித்து கொண்டிருக்கிறேன். விரைவில் வருவேன். நன்றி.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    தங்களின் தாங்க முடியாத துயரம், ஆழ் மனதின் அந்த வருத்தம் எனக்கும் புரிகிறது. மனதின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலமெனும் மருந்தால்தான் ஆற்ற முடியும்.. வருத்தத்தை தாங்கும் வலிமையை அந்த ஆண்டவன் தங்களுக்கு தர மனமாற பிரார்த்திக்கிறேன்.தங்களின் விருப்பப்படி மீண்டும் மனம் தேறி வாருங்கள்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. மீண்டு வாருங்கள். மீண்டும் வாருங்கள்.  உங்கள் நினைவில் என்றும் அவர் உங்களோடு இருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், அன்பிற்கு நன்றி.

      Delete
  5. அவர் என்றும் உங்களுடன் தான்.... துயரத்தில் இருந்து விடுபட நாளாகும். மனம் தேறி வாருங்கள் பானும்மா...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், அன்பிற்கு நன்றி.

      Delete
  6. Take your time ..
    Sometimes it seems
    Time alone exists
    Everyone
    Everything
    In this world
    Has a little share
    Of that magnificent time
    Time steals
    Time seals
    Time also heals
    So they say ..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், துயரத்தை தரும் அந்த காலம்தான் துயரத்தை ஆற்ற வேண்டும். நன்றி. 

      Delete
  7. ஓ வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ.. மொபைலில் இப்போதான் உங்கள் போஸ்ட் பார்த்தேன் உடனே ஓடிவந்து கொம்பியூட்டரை ஓன் பண்ணி கொமெண்ட் போடுகிறேன்.

    நீங்கள் பிஸியாக இருக்க வேண்டும் அப்போதுதான் உள்ளே இருக்கும் கவலை வெளியே எட்டிப்பார்க்காதமாதிரி வாழலாம். உலகத்தைப் பற்றிக் கவலைப்பட்டிடாதீங்கோ, யாரும் கூட வந்து உங்களை ஆறுதல் படுத்தப்போவதில்லை, அதனால நீங்களாகத்தான் வெளியே வரவேண்டும், அதுக்கு உண்மையில் நல்ல ஒத்தடம் புளொக் எழுதுவது.. தொடர்ந்து புளொக் எழுதுங்கோ.. பழையபடி உங்கள் நகைச்சுவையை வெளியே கொண்டு வாங்கோ.

    குறைந்த வயசுதான் ஆனா என்ன பண்ணுவது, அவருடைய ஸ்டேஷன் வந்துவிட்டது இறங்கி விட்டார்ர்... அதையே நினைத்துக் கொண்டிருக்காமல் உங்களை நீங்கள்தான் ஆரோக்கியமாக[மனதை] வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். கவலை அதிகம் வரும்போது, தனியே போயிருந்து அழுது தீர்த்து விடுங்கோ அது மனதுக்கு நல்லது.

    தொடர்ந்து எதையாவது எழுதுங்கோ, “இதுவும் கடந்து போகும்”..

    நாம் மட்டும் என்ன நெடுகவும் வாழப்போகிறோமா, போகத்தானே போகிறோம் என நினையுங்கோ மனம் கொஞ்சமாவது ஆறுதல் அடையும்.. அதுதானே உண்மையும்கூட.

    “நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார்”.. நாட்கள் நகர்ந்தால் உள்ளம் கொஞ்சமாவது ஆறும்.

    ReplyDelete
    Replies
    1. //அவருடைய ஸ்டேஷன் வந்துவிட்டது இறங்கி விட்டார்ர்...// இப்படித்தான் நினைத்துக் கொள்கிறோம். அன்பிற்கு நன்றி அதிரா. 

      Delete
  8. இன்னொன்று பானுமதி அக்கா, அவர் இல்லையே என நினைச்சிடாதீங்கோ.. ஹொஸ்பிட்டலில் இருக்கிறார் என எண்ணுங்கோ.

    ReplyDelete
  9. பானு அக்கா காற்றலை வழியே உங்கள் கரங்களை இறுக்க  கட்டிக்கொள்கிறேன் .தனிமையில் இருக்க வேண்டாம் .அது இன்னும் உங்களை வீக் ஆக்கிடும் .மனதை ஆறுதல் படுத்தி வலைப்பக்கம் வாங்க .
    (அதிரா சொல்லலைனா உங்க பதிவு எனக்கு  தெரிந்திருக்காது ) தேங்க்ஸ் மியாவ் 

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு தனிமையை விரட்ட தொலைகாட்சியும், யூ ட்யூபும், கொஞ்சம் புத்தகங்களும் உதவுகின்றன. நண்பர்கள் தினமும் பேசுகிறார்கள். இப்போதுதான் வலைப்பக்கம் வந்திருக்கிறேன்.அன்பிற்கும், அக்கறைக்கும் நன்றி ஏஞ்சல்.

      Delete
  10. என்ன சொல்லித் தேற்றுவது என்றே புரியவில்லை. அதிலும் அவர் பிறந்த நாள் அன்றே உயிரும் பிரிந்திருக்கிறது. சாகிற வயசா? உற்சாகமான மனிதர், சிரித்த முகமே கண்ணெதிரே நிற்கிறது, எங்களாலேயே தாங்க முடியவில்லை என்னும்போது உங்கள் இழப்பு பிரம்மாண்டமாகத் தான் தெரிகிறது. என்றாலும் உங்கள் பிள்ளை, மாட்டுப்பெண், பெண், மாப்பிள்ளை, பேத்திக்காக நீங்கள் உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். நீங்கள் தைரியமான பெண்மணி. ஆனாலும் இந்த இழப்பு மனதைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கும். இதன் தாக்கத்தில் இருந்து நீங்கள் வெளிவர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கும், அக்கறைக்கும் நன்றி அக்கா.

      Delete
  11. உடல் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.இறைவன் துணை இருப்பான்.அன்பு பானுமா, ஈடு செய்ய முடியாத இழப்பு. நீங்கள் அனுபவித்த துயரங்களை நினைத்து நானும் கீதா ரங்கனும் பேசி ஆற்றிக் கொள்வொம்.
    மிக மிகச் சோதனையான காலம். பல்லைக் கடித்துக் கடக்க வேண்டும். உங்கள் எண்ணப்படி எழுதுங்கள். நாங்கள் எல்லோரும் உங்களுக்கு வடிகாலாகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. //மிக மிகச் சோதனையான காலம். பல்லைக் கடித்துக் கடக்க வேண்டும்.// ரொம்ப சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா. எதையும் தாங்கும் இதயத்தை வழங்க இறைவனை வேண்டுகிறேன். அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி. 

      Delete
  12. பிறந்த நாள் அன்றே அவர் இறைவனடி சேர்ந்தது மனதை கஷ்டப்படுத்துகிறது.
    நீங்கள் வருத்தப்பட்டு கொண்டு இருப்பதை சார் இருந்தால் விரும்ப மாட்டார்.
    எப்போதும் புன்னகை புரிந்து இயல்பாய் இருப்பதைதான் விரும்புவார்.
    உங்களுடன் இருந்து உங்களுக்கு பலம் தருவார்.
    தெய்வமாக இருந்து குடும்பத்தை பாதுகாப்பார்.

    இப்போது குழந்தைகள் அருகில் இல்லாத போது மனம் சஞ்சல படும்.
    இங்கு இணைந்து விடுங்கள். கவலையை மறக்கலாம்.
    காலம் மன புண்ணை ஆற்றிய பின் நித்திய கடமைகள் செய்யலாம் இயல்பாய்.
    தைரியமாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி. 

      Delete
  13. //அலுவலக வாசலில் இருந்த பெண், "திருப்பதி லட்டு" என்று பெருமாள் பிரசாதத்தை கொடுத்தாள் "என்ன சொல்கிறார் இந்த வெங்கி?(திருப்பதி பெருமாளை நான் வெங்கி என்றுதான் குறிப்பிடுவேன்)" எது நடந்தாலும் என் ஆசிர்வாதம் உனக்கு உண்டு என்கிறாரோ என்று தோன்றியது.//

    சிலிர்க்கிறது. அவர் ஆசீர்வாதம் என்றும் வழி நடத்தும். இறைவன் எப்போதும் நம் அருகில் தான்.

    ReplyDelete
  14. பானுமதி வெங்கேடேஸ்வரன் அவர்களுக்கு லவ் அண்ட் தி டைம் ஸ்டோரி https://avargal-unmaigal.blogspot.com/2019/09/thambattamblogspotcom.html

    ReplyDelete
    Replies
    1. அருமையான குட்டிக்கதையை பகிர்ந்து கொண்டதன் மூலம் உங்கள் அக்கறையையும், அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. 

      Delete
  15. தங்களுக்கு மன ஆறுதல் கிடைக்க என் பிரார்த்தனைகள். காலம் மட்டுமே மருந்தாக முடியும்.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி. 

      Delete
  16. காலம் தான் காயங்களை ஆற்றுவிக்கும் மருந்து...
    தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளுங்கள்...

    1994 நவராத்திரியின் ஏழாம் நாள் ஒரு கனவு..

    ஆறு வயது சிறுவனாக என் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எங்கோ நடக்கிறேன்.. திடீரென அவரைக் காணவில்லை.. அப்பா.. அப்பா என்று அழுகிறேன்...
    அப்போது அவருடைய குரல் நான் இங்கு தாம்ப்பா இருக்கிறேன்... என்று...

    ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜையன்று இறைவனடி சேர்ந்து விட்டார்..

    இப்போதும் அவருடைய குரல் காதருகில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது...

    என் தந்தை என்னுடன் இருப்பதாகத் தான் பாவித்துக் கொள்கிறேன்...

    கவலைகளை வென்று வாருங்கள்..

    அது ஒன்றுதான் நம்மால் செய்யக் கூடியது...

    ஓம் நம சிவாய...

    ReplyDelete
    Replies
    1. //தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளுங்கள்...// நூறில் ஒரு வார்த்தை கூறியிருக்கிறீர்கள். அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி.

      Delete
  17. இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. இறைவன் அருள் துணைநிற்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி.

      Delete
  18. காலம் எந்த மனப் புண்ணையும் ஆற்ற வல்லது take heart இதுவும்கடந்து போகும்

    ReplyDelete
    Replies
    1. புண் ஆறும், அதன் வடு இருக்கும். அன்புக்கும், ஆறுதலுக்கும்  நன்றி. 

      Delete
  19. ஆமாம். பதிவுலகில் மனம் பதிக்கும் பொழுது அதுவும் மன வியாகூலங்களுக்கு ஒரு மருந்தாக இருக்கலாம். லாம் என்ன, நிச்சயம் இருக்கும். வாருங்கள்.

    ReplyDelete
  20. //லாம் என்ன, நிச்சயம் இருக்கும். வாருங்கள்.//  வருகிறேன். அன் புக்கும், ஆறுதலுக்கும், அக்கரைக்கு நன்றி. 

    ReplyDelete
  21. ஆறுதல் பலரும் சொல்லலாம் அதை அனுபவிப்பவருக்கே அதன் வலி புரியும்.

    இதை கடந்தே தீரவேண்டும் என்பதே நியதி இறைவன் தங்களுக்கு அதன் வல்லமையை தரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. //ஆறுதல் பலரும் சொல்லலாம் அதை அனுபவிப்பவருக்கே அதன் வலி புரியும்.// உண்மைதான். ஆனாலும், கஷ்டமான இந்த நேரத்தில் நம்மோடு இத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணம் ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி.  

      Delete
  22. கூற வார்த்தைகள் இல்லை ...

    வாருங்கள் விரைவில் ...

    ReplyDelete
  23. பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைந்து வழி நெடுக இனிமையாக பயணம் கழிந்து செல்ல உதவி, தான் இறங்குமிடம் வந்ததும் இறங்கிச் சென்று விட்டார்கள் உங்கள் கணவர். ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த வரிகள் உங்கள் மனதின் நிலைமையை உணர்த்தி மனதை மிகவும் கனமாக்குகிறது. பறந்து சென்றவரை நினைக்காதிருக்க எப்படி முடியும்? ஆனாலும் இந்த‌ப்பயணம் தொடர வேண்டியிருக்கிறது. அதை அமைதியாக கழிக்க முயலுங்கள் உங்கள் மனம் சமாதானமாகட்டும். அமைதி நிலை பெறட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி. 

      Delete
  24. விரைவில் நீங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  25. அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி. 

    ReplyDelete