கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 23, 2021

திருவெம்பாவை - 8

திருவெம்பாவை - 8 


கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பெண்ணே கோழி(சேவல்) கூவுவதும், குருகுப் பறவைகள் எழுப்பும் ஒலியும், கோவிலிலிருந்து வரும் மங்கள வாத்தியத்தின் நாதமும், சங்கொலியின் ஓசையும்,  ஒப்புமை அற்ற பரஞ்சோதியாகிய சில பெருமானின் ஒப்புயர்வற்ற கருணையையும், இணையற்ற சிறப்பையும் நாங்கள் பாடும் ஓசையும் கேட்கவில்லையா?அப்படி ஓர் உறக்கமா? உன்னிடமிருந்து சத்தமே இல்லையே? கடலளவு கருணை கொண்டவன் மீது உன் அன்பை வெளிப்படுத்தும் வழிகளுள் இதுவும் ஒன்றா? பிரளய காலத்திலும் அழியாமல் இருக்கும் ஒருவனும், பெண்ணை தன் இடது பாகத்தில் கொண்டவனுமாகிய அந்த சிவ பெருமானை பாடு.
மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை 

திருவண்ணாமலையில்தான் பாடினார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் 'ஏழைப்பங்காளனை' என்னும் வார்த்தை ஒரு சான்று என்பார்கள். ஏழைப்பங்காளன் என்பதை ஏந்திழை பங்காளன் அதாவது பெண்ணை தன் உடலின் ஒரு பங்காக கொண்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும். தவமியற்றிய பார்வதி தேவிக்கு தன் உடலின் இடது பாகத்தை அளித்து அர்தாதநாரீஸ்வரராக அவர் அருளுவது திருவண்ணாமலையில் தான்.

துயிலிடைப் பாடல்கள் என்னும் பாடல்கள் இந்த பாடலோடு முடிகின்றன. வெளியே நிற்கும் பெண்கள் உள்ளே உறங்கிக்  கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள் என்பது ஒரு உருவகம். 

வெளியே நிற்பவர்கள், உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண் எல்லாம் நாம்தான்.  அடிப்படையில் கடவுள் பக்தியும், ஆன்மீக நாட்டமும் கொண்டிருந்தாலும் நம் கர்ம வினை அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றது. விழித்துக்கொண்ட புத்தி, உறங்கிக் கொண்டிருக்கும் புலன்களையும், மனதையும் எழுப்புவதாகக் கொள்ளலாம்.

10 comments:

  1. கடைசி பாரா விளக்கம் அருமை.

    ReplyDelete
  2. அருமை..விழித்துக்கொண்ட புத்தி...உறங்கிக் கொண்டிருக்கும் புலன்கள்..விளக்கம் அற்புதம் வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. நல்ல விளக்கத்தோடு திருவெம்பாவையின் துயிலிடைப்பாடல்களின் முடிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை

    திருவண்ணாமலையில்தான் பாடினார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் 'ஏழைப்பங்காளனை' என்னும் வார்த்தை ஒரு சான்று என்பார்கள். ஏழைப்பங்காளன் என்பதை ஏந்திழை பங்காளன் அதாவது பெண்ணை தன் உடலின் ஒரு பங்காக கொண்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.//

    அறிந்துகொண்டேன்.

    //தவமியற்றிய பார்வதி தேவிக்கு தன் உடலின் இடது பாகத்தை அளித்து அர்தாதநாரீஸ்வரராக அவர் அருளுவது திருவண்ணாமலையில் தான்.//

    சிறப்புத் தகவல்!

    கடைசியில் சொன்ன தத்துவம் அருமை பானுக்கா. இதுதான் சாராம்சம்.

    கீதா


    ReplyDelete