கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, October 9, 2020

மைக் மேனியா

மைக் மேனியா 

மூன்று வாரங்களுக்கு முன்பு முகநூலின் மத்யமர் குழுவில் ஒரு விவாதத்தில்  பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு மத்யமர் என்றால் என்ன என்று கூறி விடுகிறேன். முக நூலில் இருக்கும் எத்தனையோ குழுக்களில் மத்யமாறும் ஒன்று. சங்கர் ராஜரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்டு இப்போது 30000 உறுப்பினர்களோடு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வெறுமனே முகநூலில் அரட்டை அடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள்.  ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்வார்கள். சிறந்த படைப்புகளுக்கு போஸ்ட் ஆஃப் தி வீக் என்று சான்றிதழ் வழங்குவார்கள். நம் ரஞ்சனி நாராயணன் நிறைய POTW வாங்கியிருக்கிறார்.  நானும் இந்த வருடத்தில்  இதுவரை நான்கு POTW வாங்கியிருக்கிறேன். இதைத்தவிர தனித்திறமை, குழுத்திறமை, நாடகம், கவிதை என்றெல்லாம் நடத்தி  பரிசுகள் வழங்குகிறார்கள். சமீபத்தில் புதன் கிழமைகளில் மத்யமர் சபா என்று விவாதங்கள் நடத்துகிறார்கள். அதில்தான் நான் பங்கு கொண்டு பேசினேன். 

இந்த மத்யமர் சபாவில் மூன்று வாரங்களுக்கு முன்பு நம் சமுதாயத்தில் ஆணாதிக்கம் முடிந்து பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது, இல்லை இன்னும் ஆணாதிக்கம்தான் தொடர்கிறது என்று பேச விருப்புகிறவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றார்கள். அடுத்த நாள் திரு.சங்கர் ராஜரத்தினம் அவர்கள், "என்னது பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது என்று பேச யாருமே பெயர் கொடுக்கவில்லையே, அவ்வளவு பயமா?" என்று கேட்டிருந்தார். நான் உடனே," யாருமே முன்வரவில்லையென்றால் நான் பேசுகிறேன் என்று செய்தி அனுப்பினேன். உடனே, "நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை சுருக்கமாக ஒரு நிமிட ஆடியோவாக எடுத்து அனுப்புங்கள்" என்றார்கள். அதன்படி செய்து தேர்ந்தெடுக்கப் பட்டேன். 

அதில் இன்னும் ஆணாதிக்கம்தான் நீடிக்கிறது என்று கலிபோர்னியாவிலிருந்து பேசிய ஒரு பெண்மணி வெளுத்து வாங்கினார். அவர் வீட்டில் மகன், மருமகள்  இருவருமே ஐ.டி.யில் பணிபுரிந்தாலும், மகன் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, மருமகள் அடுப்பங்கரையில் பிசியாக இருப்பாளாம். மாலை அலுவலகத்திலிருந்து வந்ததும் மகன் செல்போனுடனும், ரிமோட்டுடனும் சோபாவில் செட்டிலாகி விட, மருமகள் அவன் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றுவாளாம். கோபம் அதிகமாகும் பொழுது மகனின் கை நீளுமாம். இப்படி அதிரடியாக பேசினார். பின்னூட்டங்களில் கூட அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. 

அதே ஆண்டி மறு நாள், " ஐயையோ! என் மகன் தங்கம். வீட்டு வேலைகளை மகன்,மருமகள்  இருவரும் பகிர்ந்துதான் செய்வார்கள்.  நான் என் வாதத்திற்கு வலு சேர்க்க உதாரணம் கொடுப்பதற்காக என் மகனை பயன்படுத்திக் கொண்டு விட்டேன். என் மகனும்,மருமகளும் இதை ஈசியாக எடுத்துக் கொண்டாலும் மற்ற உறவினர்களுக்கு என் மீது ரொம்ப கோபம். எங்கள் சம்பந்தியும் மத்யமரில் இருக்கிறார் அவர் என்ன நினைத்துக் கொள்வார்? தயவு செய்து நான் செய்த தவறை மற்ற பேச்சாளர்கள் இனிமேல் செய்யக் கூடாது என்று விரும்புகிறேன் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார். ஆண்டியின் ஆண்ட்டி க்ளைமாக்ஸ் எப்படி?     

சிலருக்கு மைக்கை கையில் எடுத்து விட்டால் கீழே வைக்கத் தெரியாது, சிலருக்கு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதே தெரியாது. எல்லாம் மைக் மேனியா!


20 comments:

  1. எந்த அம்மாவாவது மகனிடம் குறை கண்டுபிடிப்பாரா, சுலபமா மருமகள் மீது பழிபோடுவதை விட்டுவிட்டு.

    பேச்சாளர்கள் அனேகமாக எல்லோரும் (நகைச்சுவைப் பேச்சாளர்கள், குறிப்பாக) மனைவியை, மகன்/மகளைத்தான் தங்கள் பேச்சுக்களில் கேலி செய்வார்கள். மனைவியைக் கேலி செய்யாத பேச்சாளர்களே வெகு குறைவு.

    இந்தம்மா ஒருவேளை உண்மையைச் சொல்லி எதிர்ப்புகளைச் சந்தித்து பின்வாங்கியிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே இப்படிப்பட்ட பொது வெளிகளில் பர்ஸனலாக பேசக்கூடாது என்பது என் சொந்தக்கருத்து. வருகைக்கு நன்றி.

      Delete
  2. ஆண்ட்டி க்ளைமாக்ஸ் சூப்பர்...!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    மத்யமர் குழு பற்றி விபரமாக சொன்னதற்கு மிக்க நன்றி. பேச்சுப் போட்டியை பற்றிய தகவல் சுவாரஷ்யமாக உள்ளது. தலைப்பு நன்றாக இருக்கிறது. அந்த ஆண்டி வீட்டுக்கு வந்ததும் யாரிடம் நிறைய டோஸ் வாங்கினாரோ...(வீட்டில் நடப்பதை மாத்தி சொல்லி விட்டதற்காக) சம்பந்தியும் அந்த குழுவில் உள்ளதால் வீட்டுக்கு வந்ததும் பந்தி போட்டு பரிமாறி விட்டிருப்பார்கள்:) என்ன செய்வது? காலங்கள் மாறி விட்டன. சுழற்சி வரும் போது மறுபடியும் மாறுமோ என்னவோ?

    தாங்கள் இந்த வருடத்தில் மத்யமரில் போஸ்ட் ஆஃப் தி வீக் சான்றிதழ்கள் வாங்கியதற்கு மனமார்ந்த பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும். சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. விரிவான பின்னூட்டத்திற்கும், மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  4. காரியக்கார ஆன்ட்டிதான் போலும்...

    ReplyDelete
  5. சிலர் இப்படித்தான் அதிகம் நபர்களை கவர்ந்து இழுக்க வேண்டும் என்பதற்காக தங்கள் கற்பனை திறனை பயன்படுத்தில் கடைசியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. மத்யமரிலேயே இப்படி என்றால், தொலைகாட்சி டாக் ஷோக்களை நினைத்துப் பாருங்கள். நன்றி.

      Delete
  6. மத்யமர் குழுவில் குழு ஆரம்பித்ததில் இருந்தே உறுப்பினராக இருக்கிறேன் என்றாலும் நான் முழு அளவில் பங்கெடுப்பதெல்லாம் இல்லை. நேரம் இல்லை என்பதோடு இதில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லை. சமையல் போட்டி வைத்தப்போக் கலந்து கொண்டேன். அவ்வளவு தான்! நிறையப் பேர் சண்டை இட்டுக்கொள்வதையும் அபிப்பிராய பேதங்கள் அதிகமாய்ப் போவதையும், இரவு, பகல் காலநேரம் பார்க்காமல் கருத்துகள் சொல்லிக் கலந்துரையாடுவதையும் பார்க்கிறேன். தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் அதில். ஆனால் நான் எப்போதாவது ஏதேனும் கருத்துச் சொல்வதோடு சரி.

    ReplyDelete
    Replies
    1. நான் சென்ற வருடம்தான் உள்ளே சென்றேன். இந்த வருடத்தில்தான் active participation. நன்றி.

      Delete
  7. இந்தக் குழு பற்றி அறிந்திருந்தாலும் நான் அதில் இல்லை. முகநூல் பக்கம் வருவதே குறைவு - பெரும்பாலும் எனது வலைப்பதிவுக்கான சுட்டி கொடுப்பதோடு சரி.

    ஆண்ட்டி க்ளைமேக்ஸ் - ஹாஹா... மைக் கிடைத்தவுடன் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று நினைப்பவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல - நம் சக மனிதர்களும் தான் என்று மீண்டும் அந்தப் பெண்மணி உணர்த்தி இருக்கிறார்.

    நீங்கள் பேசியதை பகிர்ந்து கொள்வீர்களா - தனிப்பதிவாக?

    நல்ல பதிவு. பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  8. அவ்வப்போது மத்யமரில் உங்கள் எழுத்துகளையும், சமீப காலமாக ரமா ஸ்ரீநிவாசன் எழுத்துகளையும் பார்க்கிறேன்.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.  அதுசரி, நீங்கள் என்ன பேசினீர்கள் என்று சொல்லவே இல்லையே...  அது தனிப் பதிவா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம்! தனிப்பதிவா? வெங்கட்டும் கேட்டிருக்கிறார். மசாலா சாட்டில் போட்டு விடலாம். நன்றி.
      .

      Delete
  9. அன்பு பானுமா,
    என் உறவுகளில் நிறைய பேர் அங்கே இருக்கிறார்கள்.
    வாய் புளித்தாதோ வார்த்தை புளித்ததோ என்று பேசி என்ன லாபம்.
    குடும்பத்தினரை முடிந்தவரை
    சந்தியில் இழுக்காமல் என்பது முதிர்ச்சியின்
    அடையாளம். வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. //குடும்பத்தினரை முடிந்தவரை
      சந்தியில் இழுக்காமல் என்பது முதிர்ச்சியின் அடையாளம்//. correct! பட்டிமன்றம் ராஜா ஆரம்பத்தில் அவர் மனைவியை மேடைகளில் கிண்டல் அடிப்பார். அந்த சமயங்களில் பேசிக் கொண்டிருந்த காந்திமதி என்பவர் அது தவறு என்று உணர்த்தினாராம். நன்றி அக்கா.

      Delete
  10. //நானும் இந்த வருடத்தில் இதுவரை நான்கு POTW வாங்கியிருக்கிறேன்.//

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? பாராட்டுகள். நீங்கள் அவைகளை வலைப்பூவிலும் பகிரலாமே?

      Delete