ஸ்ரீரங்கம் தை தேர்
வேங்கடவன் வடிவழகு, காஞ்சி குடை அழகு, ஸ்ரீரெங்கம் நடை அழகு என்பது வழக்கு. வைணவ தலங்களில் முக்கியமான திருப்பதியில் சாலிக்ராம பெருமாளின் திருமேனி அழகு. காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளுக்கு பிடிக்கப் படும் குடை அழகு. ஸ்ரீரங்கத்திலோ ஸ்ரீ ரங்கநாதரின் நடை அழகு. அந்த நடைக்கு வையாளி என்று பெயர். பெருமாளை எழுந்தருளச் செய்யும் பொழுது, பெருமாளின் விக்ரஹத்தை சுமந்து வரும் ஸ்ரீ பாதாம் தாங்கிகள் தங்கள் கைகளை பிணைத்துக் கொண்டு கால்களை ஒரே போல சற்று அகட்டி வைத்து நடப்பார்கள். தொலைவிலிருந்து பார்க்கும் நமக்கு ரெங்கநாதர் கம்பீரமாக நடந்து வருவது போல மிக அழகாக தோன்றும்.
தேருக்கு முதல் நாள் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வருவார். மறுநாள் அதிகாலையில் தேர் கிளம்ப வேண்டும் என்பதால் முதல் நாள் மாலையே அலங்காரம் செய்யப்பட்டு தயார் ஆகி விடும். பிரும்மாண்டமாக நிற்கும் அந்த தேரைக் கண்டு பெருமாள் ஏறி வரும் குதிரை மிரண்டு ஓடுவது போல கற்பனை செய்து ஒரு நிகழ்வு நடக்கும். அதுவரை சாதாரணமான வையாளியில் நடந்து வரும் ஸ்ரீபாதம்தாங்கிகள் தேருக்கு எதிரே வரும் பொழுது குதிரை மிரண்டு ஓடுவது போல தாறுமாறாக, தறி கெட்டு ஓடுவது போல கோணல் மாணலாக ஓடுவார்கள். அவர்கள் மட்டுமல்ல, தீவட்டி ஏந்தி வருபவர்களும் அப்படியே கோணல்மானலாக ஓடுவார்கள். அது மட்டுமல்லாமல் அப்படி தறி கெட்டு ஓடிய குதிரை ஒரு ஓரமாக நின்று மூச்சு வாங்கும், அப்பொழுது குதிரையின் தலை மேலும் கீழுமாக அசையும், பெருமாள் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த குதிரையின் தும்பும் அதற்கேற்றார் போல் அசையும். ஒரு நாடகம் போன்ற மிக சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சிதான் கோண(ல்) வையாளி எனப்படும்.
மறு நாள் காலை நான் சென்ற பொழுது பெருமாள் வடக்கு உத்திர வீதியின் இறுதிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த மூலை திரும்பி கிழக்கு உத்திர வீதிக்கு வரும் வரை பார்த்து விட்டு வந்தேன். இதில் எனக்கு ஏமாற்றம் அளித்த ஒரு விஷயம்.. அப்போதெல்லாம் அதாவது ஸ்ரீ ரங்கத்தில் அடுக்கு மாடி குடிஇருப்புகள் வராத பொழுது எத்தனை பேர்கள் வந்தார்களோ அதே அளவு மக்கள்தான் ஸ்ரீரங்கத்தின் மக்கள் தொகை பன்மடங்கு பெருகி விட்ட இந்த காலத்திலும் வந்தது. இன்னும் அதிக அளவு மக்கள் வந்திருக்க வேண்டாமா?
முன்பெல்லாம் தேருக்கு மர சக்கரங்கள், அவை மூலை திரும்ப வெகு நேரம் எடுக்கும். ஆனால் திருச்சி BHEL நிறுவனம் அந்த சக்கரங்களில் இரும்பு சட்டம் அடித்து தந்த பிறகு சற்று சீக்கிரம் மூலை திரும்பி விடுகிறது. தேர் மூலை திரும்புவதை பார்த்தால் நம் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரும் என்று கூறுவார்கள். ஆனால் எனக்கு மூலை திரும்பும் நிகழ்ச்சி வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை உணர்த்துவது போல தோன்றியது.
ஓடிக்கொண்டே இருக்கும் தேர், ஒரு மூலைக்கு வரும் பொழுது அதை திருப்புவது கடினமாக இருக்கும். தேர் சக்கரங்களுக்கு கீழே பின்னால் ஏத்தம் கட்டை என்று ஒன்றை சொருகுவார்கள். இப்பொழுது அது சீசா மரம் போல ஆகி விடுகிறது, அதில் ஆண்கள் உட்கார்ந்து அழுத்த, சக்கரம் கொஞ்சம் நகர்ந்து கொடுக்கும், அதே நேரத்தில் முன்னால் வடம் பிடிப்பவர்கள் இழுக்க, சற்று முன்னேறும். இப்படி இம்மி இம்மியாக நகரும் தேர் மூலை திரும்பி விட்டால் பிறகு கட கடவென்று நகர ஆரம்பித்து விடும். ஆனாலும் இந்த நேரத்தில் பின்னாலிருந்து ஏத்தம் கட்டை போடுபவர்களும் சரி, முன்னாலிருந்து வடம் பிடித்து இழுப்பவர்களும் சரி அதை தங்கள் செயலாக சொல்லிக் கொள்வது இல்லை. மேலே தேரில் உட்கார்ந்திருக்கும் பெருமாளின் விருப்பமாகவே சொல்கிறார்கள்.
எல்லோர் வாழ்க்கையிலும் முன்னாலும் செல்ல முடியாமல், பின்னாலும் செல்ல முடியாமல், ஸ்தம்பித்து நிற்பது போல ஒரு சமயம் வரும். அப்போது ஏத்தம் கட்டை போடுவது போல சிலர் உதவுவார்கள். அதை பயன் படுத்திக் கொண்டு நம்முடைய முயற்சி என்னும் வடத்தை இழுப்பதை விட்டு விடாமல் தொடர்ந்தால் மேலே இருக்கும் இறை அருள் செயல் பட நம் வாழ்வில் திருப்பம் வரும்.
No comments:
Post a Comment