ஞாயிறு, 18 டிசம்பர், 2011

சென்னையில் ஒரு மழைக் காலம்:(((

சென்னையில் ஒரு மழைக் காலம்:(((

முன் குறிப்பு:இதை படிக்கும் முன் கிரி படத்தில் வரும்
வடிவேலு,ஆர்த்தி காமெடி சீனை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். 

நான் மாமா வீட்டிற்கு சென்ற பொழுது மாமா கை, கால், மண்டை என்று பல இடங்களில் காயத்தோடும் அதில் கட்டோடும் காணப்பட்டார்.

என்ன மாமா என்ன ஆச்சு?

ஒன்னுமில்லப்பா, மழையில கொஞ்சம் வெளில போக வேண்டி வந்தது.

அப்படி என்ன மாமா முக்கியம்? மழை நின்ன பொறவு போக வேண்டியதுதானே?

இல்லப்பா, ரொம்ப தோஸ்து, ஆஸ்பத்ரில  சீரிஸா  இருகார்னாங்க  போகாம  இருக்க முடியுமா..?

சரி பஸுல போக வேண்டியதுதானே?

அது எங்கப்பா வருது..? அவசரத்துக்கு ஆகுமா?

ஆட்டோ புடிக்க வேண்டியதுதானே..?

சரிதான் மழைல ஆட்டோவா?  என்னோட  ஒரு  மாச  சம்பளம்  முழுசையும்  ஆட்டோவுக்கு கொடுத்துட்டு நான் என்ன பண்ணறது? சரி நமக்கு தெரிஞ்ச
ரோடுதானே? எங்க பள்ளம் எங்க குழி எல்லாம் தெரியும் என்கர தைரியத்தில் டூ வீலரில்  கிளம்பினேன்..

மெயின் ரோடுல போனா அங்க ட்ராபிக் ஜாம்... சரி
பரவாயில்லன்னு குறுக்கு ரோடுல நொழஞ்சேன்.. மொதல்ல நல்லாத்தான் இருந்துச்சு.. திடீர்னு ஒரு பள்ளம்... அவ்வளவு பெரிய பள்ளமா இருக்கும்னு எதிர் பார்கல... வண்டியோட விழுந்துட்டேன்..  கைல அடி..

அய்யய்யோ!

சமாளிச்சு எழுந்து மெதுவா ஒட்டிகிட்டே வந்து மெயின் ரோடு நல்லாத்தான் இருக்கும்னு ந...ம்...ம்...பி    திரும்பிட்டேன், அங்க லைட்டே  எரியல, வண்டி கீழ விழுந்ததுல ஹெட் லைட்டும் எரியல, ரோடுல கிடந்த ஒரு கல்லுல மோதி மறுபடியும் கீழ விழுந்தேன்
காலுல,தலைல அடி,

அடடா! நீங்க சொல்றதப் பார்த்தா நம்ம கவுன்சலர் வீடு வழியாத்தான்
வந்துருக்கீங்க... அப்படியே அவரப் போய் பார்த்து ரோடைப்பத்தி கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியதுதானே...?

போய் சொன்னேனே...அவரு என்னைப் பார்த்து ஒரு
வார்த்தை சொல்லிட்டார் ...

அப்படி என்ன சொன்னார்?

இவன்  ரொ...ம்ம் ...ப.. நல்லவன்டா... ரோடு எவ்ளோ மோசமா இருந்தாலும் ஓட்டறான் ன்னு சொல்லிட்டாரே...!
ஓஓஒ!

பி.கு. : இது என்னுடைய ஒரு பழைய பதிவு. சென்னையில் கொஞ்சம் மழை பெய்கிறது. எங்கள் பகுதியில் நன்றாக இருந்த சாலைகளையெல்லாம் மெட்ரோ வாட்டர் இணைப்பிற்காக தோண்டி, குத்தி, கிளறி போட்டிருக்கிறார்கள். நாங்கள் படும் அவஸ்தையை உங்களுக்கு உணர்த்த இதை பகிர்கிறேன்.ஞாயிறு, 11 டிசம்பர், 2011

mayakkam enna - review

மயக்கம் என்ன? - விமர்சனம்


தமிழ் சினிமாத் தனங்களை தைரியமாக தாண்டும் மற்றும் ஒரு செல்வராகவன் படம்.

வைல்ட் லைப் போடோக்ராபெராக ஆசைப்படும் கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) அவருடைய ஆதர்ச புகைப்பட கலைஞர் மாதேஷ்  கிரிஷ்ணச்வாமியால்  (ரவி பிரசாத்)  வஞ்சிக்கப்பட்டு விபத்துக்குள்ளாகி, குடிக்கு அடிமையாகி பாதை மாறுவதும், சகிப்பு தன்மையும், காதலும்,பெருந்தன்மையும் கொண்ட மனைவியால் தன் இலட்சியத்தை அடைவதும் பொறுமையாக செல்வராகவன் வழியில் சொல்லப்பட்டிருக்கின்றது.

தனுஷின் கலைப் பயணத்தில் ஒரு முக்கியமான  படம். படம் முழுவதும் அவரைச் சுற்றியே சுழுல்கிறது.  சும்மா சொல்லக்கூடாது அவரும் தொழில் வேட்கை, நண்பனின் தோழியை காதலியாக்கிக் கொள்ளும் போது குற்ற உணர்ச்சி, தான் ஆதர்சமாக கொண்டவரே தன்னை வஞ்சிக்கும் பொழுது கழிவிரக்கம், குடி வெறி, இறுதியில் அமைதி என்று அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி தேசிய விருதை நியாயப்படுத்துகிறார்!  ரிச்சா..?  ம்ம்ம் ...ம்ஹூம்! ஏன் எப்பொழுதும் வெறித்த பார்வையோடு இருக்கிறார் என்று புரியவில்லை, குரல் கொடுத்தவரும் உலர்ந்த குரலில் பேசுகிறார்.

முதல் காட்சியில் தனுஷும் அவருடைய நண்பனும் குடித்து விட்டு,அவ கலீஜுடா, உன் கிட்டேயும் சரி என்று சொல்லிவிட்டு என் கிட்டேயும் சரி என்று சொல்ரா. அவ வேண்டாம்ட, என்று பேசிக் கொண்டே இருக்கும் பொழுது வெளியே யாமினியின்(ரிச்சா) குரல் ஒலிக்கிறது, கண்களில் காதல் தவிப்போடு ஜன்னல் வழியே தனுஷ் பார்க்கிறார், அடுத்த காட்சி தனுஷுக்கும் ரிச்சாவுக்கும்  திருமணம்....  வழக்கமான சினிமா போல இது கனவு என்று காட்சி முடியும் என்று நினைக்கிறோம், நல்ல வேளை அப்படி இல்லை. அதே போல தான் எடுத்த புகைப் படங்களை ரவி பிரசாத் தன் பெயரில் பிரசுரித்துக் கொள்ளும் போழ்து வழக்கமான சினிமா கதா நாயகன் போல அவருடைய சட்டை காலரை பிடித்து உலுக்காமல் யதார்த்தமாக கெஞ்சும் பொழுதும் செல்வராகவன் பளிச்சிடுகிறார்.

படத்தின் குறிப்பிடத்தக்க இன்னும் இருவர் ஒளிப்பதிவாளர், மற்றும்  இசை அமைப்பாளர் ஜி.வீ.  பிரகாஷ் ! இயக்குனரோடு கை கோர்த்து அருமையாக பணியாற்றி உள்ளனர்.

நாலு டூயெட், ரெண்டு பைட், தனியாக காமெடி ட்ராக் என்றெல்லாம் இல்லாத, நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான படம்! ரசிக்கலாம் கொஞ்சம் பொறுமை வேண்டும்!  
       

ஞாயிறு, 27 நவம்பர், 2011

oru kurun chutrula -II

ஒரு குறுஞ் சுற்றுலா - II

குடந்தையிலிருந்து காலை நாங்கள் புறப்படும் முன் வருண பகவான் கிளம்பி விட்டார்.
அதென்னவோ நாங்கள் எங்காவது கிளம்பினால் வருண பகவானும் எங்களுக்கு முன் ரெடி
ஆகி விடுவார்! முதலில் நாச்சியார் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்! நாச்சியார் கோவிலுக்கு முன் காசி விஸ்வநாதர் ஆலயம் என்று புராதனமான ஒரு கோவில் இருப்பதாகவும் அங்கு சனி பகவான் தன் இரு மனைவிகளோடும்
இரு மகன்களோடும்
எழுந்தருளி இருக்கிறார் என்றும் ஆகவே அவர் குடும்ப சனி என்று வழங்கப் படுகிறார் என்றும் எங்கள் காரோட்டி கூறி எங்களை அங்கு அழைத்துச் சென்றார்.

 பர்வதவர்தனி சமேத ராமநாத சுவாமி குடிகொண்டிருக்கும் சிறிய ஆலயம். தசரத சக்ரவர்த்திக்கு ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி தரிசனம் அளித்த தலம்! எனவேதான் அதே
பேரோடு விளங்குகிறார்! ராமேஸ்வரத்திற்கு இணையான தலம்.

பிரகாரத்தில் சனி பகவானுக்கு தனி சந்நிதி! அங்கு தன் இரு  மனைவியரோடும் இரு மகன்களான மாந்தி மற்றும் குளிகனோடும் காட்சி
அளிக்கும் அபூர்வ கோலம்!
இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் குடும்ப சகிதமாக காட்சி அளிக்கும் சனி பகவானை தரிசனம் செய்ய முடியும். ஏழரை சனி மற்றும் அஷ்டமத்து சனி நடக்கும் காலங்களில் இவரை வழிபடுவது நன்மையை அளிக்கும்.
Kudumba Sani Bhagavan Sannidhi

இதற்குப் பிறகு நாச்சியார் கோவிலுக்குச் சென்றோம். வஞ்சுளவல்லி தாயாரை பெருமாள் மணந்து கொண்ட இடம். பெருமாளை அடைய வேண்டி தாயார் தவம் புரிந்து கொண்டிருக்க,தாயாரைத் தேடி வரும் பெருமாளுக்கு தாயார் இருக்கும் இடத்தை காட்டியது கருட பகவான்தான்! எனவே இத்தலத்தில் கருடனுக்கு சிறப்பு.


இங்குள்ள கருடனுக்கு பல் வேறு சிறப்புகள் உண்டு. மார்பில் இரண்டு, தோள்களி இரண்டு, கைகளில் இரண்டு,தலையில் ஒன்று,இடுப்பு கச்சையில் ஒன்று, கத்தியில் ஒன்று என்று ஒன்பது பாம்புகளை அணிந்துள்ளதால் நாக தோஷங்களை நீக்க வல்லது இவரது தரிசனம்! குறிப்பாக ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய தலம் இது. 108 வைணவ தலங்களுள் ஒன்று. மூல ஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் மூர்த்தியே புறப்பாட்டின் பொழுதும் வெளியே எழுந்தருளுவது ஒரு சிறப்பு என்றல் அந்த விக்ரகம் முதலில் நான்கு பேராலும், முன் மண்டபத்தில் எட்டு பேராலும், பிரகாரத்தில் பதினாறு பேராலும்,வெளியே முப்பத்திரண்டு பேராலும் சுமக்கப்பட்டு, திரும்பி வரும் பொழுது படிப்படியாக கணம் குறைவது இன்றளவும் நடக்கும் அதிசயம்!

-உலா தொடரும்

ஞாயிறு, 6 நவம்பர், 2011

oru kurun chutrula!

ஒரு குறுஞ் சுற்றுலா !

நீண்ட நாட்களுக்குப் பிறகு தவறு, பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் சொந்த ஊரில் நடந்த ஸ்கந்த சஷ்டி விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது.

எங்கள் மாமா வீட்டில் பரம்பரையாக கந்த சஷ்டி அன்று காவடி எடுக்கும் பழக்கம் உண்டு.  வீட்டிலிருந்து பூஜிக்கப்பட்ட காவடியை எங்கள் ஊரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சுமந்து சென்று அங்குள்ள முருகன் சன்னதியில் அபிஷேகம், அர்ச்சனை போன்றவைகளை முடித்துக்கொண்டு  வீடு திரும்பிய பின் அன்னதானம் நடக்கும். மாலையில் சுவாமி புறப்பாடு, சூரா சம்ஹாரம், போன்றவையும் சிறப்பாக நடைபெறும். கடந்த சில வருடங்களாக மறு நாள் திருக் கல்யாண உற்சவமும் நடத்துகிறார்கள். இதில் பல வருடங்களுக்குப் பிறகு கலந்து கொண்டேன்.

சென்னையிலிருந்து பேருந்தில் தஞ்சை வரை சென்று விட்டு அங்கிருந்து ஆட்டோவில் எங்கள் ஊராகிய கண்டமங்கலதிர்க்கு சென்றோம். ஆட்டோ ஓட்டுனர் மழையால் சாலைகள் மிக மோசமாக இருப்பதாக கூறினார். அவர் சென்னை சாலைகளை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். ஓரிரு இடங்களில் குழிவாக இருந்ததைத் தவிர சாலை மிகவும் நன்றாகவே இருந்தது.

சிறு வயதில் பார்த்த கோவில், இப்பொழுது பார்க்கும் பொழுது கோவிலின் சிறப்பு வியப்பூட்டியது. ஊரின் வட கிழக்கில் சற்றே உயர்வாக அழகான சிவன் கோவில். கருங்கல் கட்டிடம் என்பது ஒரு சிறப்பு. கோவிலில் இருக்கும் விநாயகர் மிக அழகு! ராஜராஜேஸ்வரி சமேத கைலாசநாதர் மூலவர். ஊரின் காவல் தெய்வமான வாத்திலை நாச்சி அம்மன் உற்சவ விக்ரகமும் இங்கேதான் உள்ளது. வாத்தில்லை நாச்சி அம்மனின் கிரீடத்தின் பின் புறத்தில் ஸ்ரீ சக்ரம் இருப்பதும் ஒரு சிறப்பு!

இதைத் தவிர முருகன் சந்நிதியின் சிறப்பு ...! முருகன் சந்நிதிக்கு எதிரே நின்று தரிசனம் செய்யும் பொழுது முருகன் சிலை மட்டுமே தெரிகிறது, சற்றே வலது புறம் நின்று பார்க்கும் பொழுது முருகனோடு தேவானை மட்டும்  ,இடது புறம் நின்று பார்க்கும் பொழுது முருகனோடு வள்ளி மட்டும் காட்சி அளிக்கும் அற்புத அமைப்பு!

ஸ்கந்த சஷ்டி விழா முடிந்த பிறகு அங்கிருந்து கும்பகோணம் சென்றோம். கும்பகோணத்தில் ஹோட்டல் ராயாஸ் பிரமிக்க வைத்தது. கும்பகோணத்தில் இப்படி ஒரு ஹோட்டலா! என்று வியந்தோம். ஊடகங்களில் கும்பகோணத்தை சுற்றி உள்ள கோவில்களைப் பற்றி அடிக்கடி வருவதால், அவைகளில் பெரும்பான்மை பரிகார தலங்களாக விளங்குவதால் கும்பகோணத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டே வருகிறது அதன் விளைவுதான் ராயாஸ் போன்ற ஹோட்டல்கள். விவசாயத்திற்குப்  பிறகு கும்பகோணத்தின் முக்கிய தொழில் சுற்றுலாதான்! 

உலா தொடரும்-       
        
              
      

வியாழன், 13 அக்டோபர், 2011

engaeyum eppodhum - review

எங்கேயும் எப்போதும்


எதிர் எதிர் சாலையில் (சென்னை திருச்சி) செல்லும் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பெரும்
விபத்துக்குள்ளாகின்றன, அவைகளில் பயணித்தவர்களில் இரண்டு காதல் ஜோடிகளைப் பற்றி பிளாஷ் பாக்கில் விரியும் கதை. மிகச் சிறிய இந்த விஷயத்தை சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். தனி காமெடி ட்ராக் கிடையாது, குத்து பாட்டு கிடையாது, மிகையான சம்பவங்களோ வசனங்களோ இல்லாமல் மிக மிக யதார்த்தமான கதை மாந்தர்கள், காட்சிகள் என வெகு அழகாக நகர்கிறது படம்.

அஞ்சலி, ஜெய் ஒரு காதல் ஜோடி, அனன்யா,சர்வா மற்றொரு ஜோடி.
காபி ஷாப்பில் நாற்பது ரூபாய் டிப்ஸ் கொடுக்க மனம் வராமல் தயங்குவதாகட்டும், உடல் உறுப்பு தானம் செய்ய கை எழுத்து போடும் முன், "ஏங்க செத்ததற்கு அப்புறம் தானே?" என்று கேட்கும் அப்பாவி உஷார்தனமாகட்டும், அஞ்சலியின் அம்மாவை பார்த்து கை ஆட்டி விட்டு அசடு வழிவதாகட்டும், கிடைத்த வாய்ப்பை தவற விடவில்லை ஜெய்! சபாஷ்!

அஞ்சலியைப் பற்றி என்ன சொல்ல...  உடல் மொழி பிரமாதம்!தேர்ந்த
நடிகையாகிவிட்டார்! சிம்ரனுக்குப் பிறகு நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை.  ஆனந்யாவும் சோடை போகவில்லை.தோன்றும் முதல் காட்சியிலேயே மனதை கொள்ளை கொள்கிறார்! ஒரு முழுமையான ஐ.டி. இளைஞனை தத்ரூபமாக கண் முன் நிறுத்துகிறார் சர்வா!.

'கோவிந்தா..', பாடலும் 'மாசமா...' பாடலும் படமாக்கப் பட்டுள்ள விதம் நன்றாக உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. காமிரா துல்லியம்!
இதற்கு முன் வந்த படங்களைப் போல் திருச்சி என்றால் வெறும் மலை கோட்டையை மட்டும் காட்டாமல் திருச்சியின் பல் வேறு இடங்களையும் முதல் முறையாக  இந்த படத்தில்தான் காட்டியிருக்கிறார்கள்.

அஞ்சலி ஜெய் யை படம் முழுவதும் "நீ",  "வா" "போ" என்று ஒருமையிலும், ஜெய் அஞ்சலியை, "நீங்க, வாங்க, போங்க," அழைப்பது..... புதுமையா?

படத்தில் உறுத்தும் ஒரே விஷயம்,  கதையின்  ஓட்டத்திற்கு  எந்த  விதத்திலும்  உதவாத, பஸ்சில்  பயணிக்கும்  ஒரு  மாணவனுக்கும்  மாணவிக்கும் பூக்கும் காதல்.

தமிழ் சினிமா புது பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது என்பதை நிரூபிக்கும் விதமாக வந்துள்ள ஒரு நல்ல படம் எங்கேயும் எப்போதும்!

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சில உறுத்தல்கள்

விநாயக சதுர்த்தி அன்று எங்கள் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நல்ல கும்பல்,அர்ச்சகரோ வயதானவர். களைப்படைந்து விட்டார். விநாயக சதுர்த்தி விழா கொண்டாட்ட கமிட்டி உறுப்பினர் ஒருவர் அர்ச்சகருக்கு உதவியாக இருந்தார். அயர்ச்சியை போக்கி கொள்ள பழச்சாறு வாங்கி வந்த அவர் சுவாமி
சந்நிதியிலேயே எச்சில் செய்து குடித்தார். அவரைத் தொடர்ந்து அர்ச்சகரும்
பழச்சாற்றினை எச்சில் செய்து குடித்து விட்டு கைகளை கழுவிக்கொள்ளமலேயே 
எல்லோருக்கும் விபூதி,குங்குமம் கொடுக்கத் தொடங்கினார். அவருக்கு உதவியாக 
இருந்தவரும் அப்படியே எல்லோருக்கும் பூ கொடுத்தார்.  கோவிலில் எச்சில் 
செய்யக் கூடாது என்னும் சிறிய அளவில் கூட ஆச்சாரத்தை  கடை பிடிக்க முடியாமல் போய் விட்டது... இதை சொன்னால் இதற்கும் ஜாதி
சாயம் பூசி விடுவார்கள்...    
 
தற்பொழுது சமையல் நிகழ்ச்சி ஒளி பரப்பாத சானலே கிடையாது... அதில் ஒரு சானலில் சமையல் கற்று கொடுக்கும் பெண், இந்த வெசலில் மாவு போட்டு, சால்ட் ஆட் பண்ணுங்க, அப்புறம் லிட்டில் வாட்டர் ஆட் பண்ணுங்க,
நல்லா மிக்ஸ் பண்ணுங்க, என்று சகிக்க முடியாமல் தமிழையும் ஆங்கிலத்தையும் 
கலந்து பேசி படுத்துகிறார்.. அதை திருத்துவார் இல்லை..இது மட்டுமில்லை, அந்த 
சானலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒரு பெண்,  நீங்கல்  தெரிந்து கொல்ல உதவும் என்று தமிழை தினமும் கொலை  செய்து  கொண்டே  இருக்கிறார்.. சேனல் எது தெரியுமா? தமிழை செம்மொழியாக்கிய கலைஞர் டிவி தான்.     
  

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

mangatha - review

மங்காத்தா  


தன்னுடைய ஐம்பதாவது படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அஜித் விரும்பியதில் தவறில்லை. அதற்காக இப்படியா?  நாயகனில்  தொடங்கிய anti hero  சகாப்தம்  இன்னும்  முடிந்தபாடில்லை.  நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே  நடிக்கிறது? என்கிறார் 
தல. படம் முழுக்க விஸ்கி ஆறாக ஓடுகிறது. அஜித் புகைக்கும் சிகரெட்டால் 
படம் பார்க்கும் நமக்கு  தொண்டை  கமருகிறது.   கெட்டவனாக  நன்றாகதான்  நடித்திருக்கிறார். பின்பாதியில் ஒலிக்கும் பீப் பீப் ஒலிகள் படத்தில்
இறைந்து கிடக்கும் கெட்ட வார்த்தைகளை அடையாளம்  காட்டுகின்றன. 
அந்த கிளைமாக்ஸ்.... கொடுமைடா சாமி! 

பிரேம்ஜி அண்ணனுடைய  படத்தில்  மட்டும்தான்  தன்  நகைச்சுவை  திறமையை கட்டுவது என்று முடிவு கட்டியிருக்கிறார் போலிருக்கிறது!
சரோஜா பாணியிலேயே இருந்தாலும் படத்தின் முன் பாதி இவரால் கலகலப்பாக செல்கிறது.

அளந்து நடிக்கும் த்ரிஷா, அளவில்லாமல் கவர்ச்சி காட்ட லக்ஷ்மி ராய்,
இரண்டே காட்சிகளில் வந்து போகும் அழகான அஞ்சலி மற்றும் ஆண்ட்ரியா என்று நான்கு நாயகிகள் இருந்தும் ஒருவர்க்கும் முக்கியத்துவம் கிடையாது.
துணை வில்லனாக ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் வேறு!

பாடல்களில் கோட்டை விட்டாலும் பின்னணியில் திறமை காட்டியிருக்கிறார் 
யுவன் ஷங்கர் ராஜா.

செலவழிக்க அஞ்சாத தயாரிப்பாளர், வித்தியாசமாக நடிக்க தயாராக கதாநாயகன்,
கவர்ச்சியும் திறமையும் கொண்ட கதாநாயகிகள், தேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள்
என்று அத்தனயயும் அமைந்திருந்தும் இப்படியா  ஒரு  படத்தை  எடுக்க  வேண்டும்?

வெங்கட் பிரபுவிற்கு கிரிகெட் மீது அலாதி ப்ரியம் என்பது புரிகிறது. ஆனால் போலீஸ்காரர்கள்  மீது  என்ன  கோபம்?  அவருடைய  அடுத்த  படத்திலாவது கிரிகெட்டையும்  காவலர்களை  வில்லனாக  சித்தரிப்பதையும்  விட்டு விட்டு வேறு கதையை  யோசிப்பது  அவருக்கும்  நல்லது  நமக்கும்  நல்லது.

சாதாரணமாக சோஷியல் கமிட்மென்ட் இல்லாத இப்படிப்பட்ட படங்களைப்
பார்த்தால் எனக்கு மிகவும் கோபம் வரும். ஆனால் இந்த படத்தை பார்த்து எனக்கு கோபமோ வருத்தமோ வரவில்லை காரணம் சர்கஸில் பபூன் செய்யும் சேட்டைகள் அருவருப்பாக இருந்தாலும் சிரிப்போம் அல்லது பேசாமல்
இருந்து விடுவோம் அதற்காக கோபமா படுவோம்? உங்களிடம் நேரமும், பணமும், அவற்றை செலவழிக்க மனமும் இருந்தால்
மங்காத்தவுக்கு செல்லலாம்.     

  
திங்கள், 5 செப்டம்பர், 2011

தமிழ் நாட்டின் சிறப்பான பிள்ளையார்கள் - II  


திருவலஞ்சுழி ஸ்வேத(வெள்ளை) விநாயகர்:

கும்ம்பகோனத்திலிருந்து ஆறு கிலோ மீடர் தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி     என்னும் கிராமம்.  காவேரி    இங்கு வலப்புறமாக சுழித்து ஓடுவதால் இவ்விடம் திரு வலஞ்சுழி என்று அழைக்கப்படுகிறது.காவேரி கரையில் அமைந்துள்ள ஆலயங்களுள் முக்கியமான ஒன்று 
ப்ரஹன்நாயகி சமேத கபர்டநீஸ்வரர் கோவில். பிரதான மூர்த்தி சிவா பெருமான்தன் என்றாலும் 
இங்கு   விநாயகருக்கே சிறப்பு.  

புராண பின்னணி:

தேவர்கள்,அசுரர்களையும் சேர்த்க்கொண்டு பாற்கடலை கடைந்த பொழுது, நீண்ட நேரம் அமிர்தம் வராமல் போக, பாற்கடலை    கடைய ஆரம்பிக்கும் முன் தாங்கள் விநாயகரை வழிபடாததால்தான் அமிர்தம்  கிடைக்கவில்லை என்று உணர்ந்த இந்திரன் பாற்கடலில் இருந்த நுரையைக் கொண்டு ஒரு விநாயகர் பிரதிமையை உருவாக்கி இங்கு 
வழிபட்டதாக வரலாறு. கடல் நுரையால்  உருவானவர்  என்பதால்  இவருக்கு அபிஷேகங்கள் கிடையாது. 
இந்தக் கோவிலில் இருக்கும் பலகணி மிகவும் சிறப்பான சிற்ப வேலைபாடுகள் கொண்டது.

அச்சரபாக்கம் அச்சுமுறி விநாயகர்:


சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் மேல் மருவத்தூருக்கு அருகே உள்ளது அச்சரப்பாக்கம் அச்சுமுறி விநாயகர் ஆலயம்.

புராண பெருமை:

திரிபுர சம்ஹாரத்திர்க்கு கிளம்பிய சிவ பெருமான் விநாயகரை அலட்சியம் 
செய்து புறப்பட, அவரது ரதத்தின் அச்சினை விநாயகர் முறித்த இடம். அதன் பிறகு விநாயகரின் மகத்துவத்தை புரிந்து கொண்ட சிவ பெருமான் விநாயகரை உரிய முறையில் வழிபட்டு திரிபுர தகனம் செய்ததாக புராணம். இதைத்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் 'முப்புரம் எரி
செய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா...' என்று பாடி உள்ளார்.

இவரை வழிபட, நாம் தொடுங்கும்  செயல்கள்  தடை இன்றி  நிறைவேறும்  என்பது நம்பிக்கை.   

திரு செங்காட்டங்குடி சிந்தூர விநாயகர்:

தஞ்சை மாவட்டத்தில் திருவெண்காட்டிற்கு அருகில்    இருக்கும்  மற்றொரு  புராண பின்னணி கொண்ட பிள்ளையார்  இங்கிருக்கும்  சிந்தூர  விநாயகர்.  கஜ முகாசுரனை விநாயகர்  சம்ஹாரம் செய்த பொழுது அவன்  உடலிலிருந்து  பீரிட்ட ரத்தம் இந்த காட்டில் இருந்த மரங்களின் மீதெல்லாம் தெளித்து  இந்த  வனப் பகுதியையே சென்னிரமாக்கியதால் இந்தப் பகுதி (திரு)செங்காட்டங் குடி   என்று பெயர் பெற்றது.  


திருநாரையூர் பொல்லாப் (பொள்ளா) பிள்ளையார்:

கடலூர் மாவட்டத்தில்,  காட்டுமன்னார்  கோயிலுக்கு  அருகில்  இருக்கிறது  திருநாரையூர் பொல்லாபிள்ளையார் கோவில். இந்த பழமையான கோவில் தேவார பாடல் பெற்ற  திருத்தலங்களுள் ஒன்றாகும்.


பொள்ளாப்  பிள்ளையார் என்பதற்கு உளி கொண்டு பொள்ளப் படாத அதாவது செதுக்கப்படாத திரு மேனி என்று பொருள். அதாவது இங்கிருக்கும் விநாயகர்  சுயம்பு  மூர்த்தி.  தேவாரத்தை  தொகுத்த  நம்பி  ஆண்டர் நம்பிக்கு பிரத்யட்சமாக  அருள் செய்தவர் இவர்.

இந்த கோவிலுக்குச் செல்ல சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

குறிப்பிடப்பட்ட இந்த   எட்டு விநாயகர் கோவில்களைத் தவிர மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் முக்குருணி விநாயகர், திருவாரூரில் இருக்கும்  தீக்ஷதரால்  பாடப்பெற்ற  மூலாதார  கணபதி,  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில்  இருக்கும் பள்ளத்து விநாயகர் ஆகிய இவர்களும் சிறப்பான சக்தி உடையவர்கள். சமயம் கிடைக்கும் 
பொழுது இவர்களைத் தொழுது அருள்    பெறுவோம்.

 
  


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தமிழகத்தின் சிறப்பான பிள்ளையார் கோவில்கள்


தமிழகத்தின் சிறப்பான பிள்ளையார் கோவில்கள்

மகாராஷ்டிரத்தில் 'அஷ்ட விநாயக் மந்திர்' என்று  விநாயகருக்கான    புகழ் பெற்ற  எட்டு கோவில்கள் உண்டு. அதைப் போல நம் தமிழகத்தில்  உள்ள எட்டு பிரசித்தி பெற்ற பிள்ளையார் 
கோவில்களைப் பற்றி பார்ப்போமா..?

திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்:

திருச்சி என்றால் உச்சி பிள்ளையார் கோவில், உச்சி பிள்ளையார்
கோவில் என்றால் திருச்சி என்று  பிரிக்க  முடியாதபடி 
திருச்சியோடு  பின்னி  பிணைந்தது இங்கிருக்கும்  உச்சி பிள்ளையார் கோவில். 

நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவில் இரு கோவில்களை அடக்கியது மேலே தாயுமானவ சுவாமி மற்றும் உச்சி பிள்ளையார்
கோவில், கீழே மாணிக்க விநாயகர் ஆலயம். 

சரித்திரப் பின்னணி :  

திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் அமைந்திருக்கும் குன்று உலகிலேயே மிகவும் பழமையான பாறை அதாவது சுமார் 
30 லட்சம் வருடங்களுக்கு  முந்தைய பாறை ஆகும். 
புராதனமானதை  கல்  தோன்றி மண் தோன்றா காலத்தே 
என்பார்கள் அப்படி முதல் முதலாக கல் தோன்றிய பொழுதே தோன்றியது இந்த  கோவில் அமைந்திருக்கும்  குன்று.
85 மீடர் உயரமுள்ள இந்த குன்று கோவில் பல்லவர்கள் காலத்தை சேர்ந்தது என்று கூறப்பட்டாலும் முழுமையாக 
கட்டி முடிக்கப்பட்டது மதுரையை  ஆண்ட நாயக்கர்கள் காலத்தில்தான்.

புராண கதை:

ராவண வதம்  முடிந்து  ஸ்ரீ ராம  பட்டாபிஷேகத்தில்  கலந்து  கொண்டு விட்டு  இலங்கை  திரும்பும்  முன்  ராமனின்  நினைவாக  ஏதாவது  ஒரு  பொருள்  வேண்டும் என்று விபீஷணன் கேட்க, ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி அவர்களின் குல  தெய்வமான  ஆதி  ரெங்கநாதரின்  விக்ரஹத்தை  விபிஷணனிடம் அந்த விக்ரஹத்தை  எங்கேயும் கீழே வைத்துவிடக் 
கூடாது  எனும்  நிபந்தனையோடு  தருகிறார்.  புஷ்பக  விமானத்தில்  திருச்சி  வழியே  இலங்கை  செல்லும்  பொழுது   ஸ்ரீரங்கத்தின்  இயற்கை அழகில் மனதை பறி கொடுத்த  ரெங்கநாதர்  அங்கேயே தங்கி விட முடிவெடுத்து விபீஷணனுக்கு 
இயற்கை  உபாதையை உண்டு பண்ணுகிறார். அந்த நேரத்தில் 
அரங்கனின் விக்ரஹத்தை   என்ன  செய்வது  என்று  யோசித்த  விபீஷணன் முன் ஒரு சிறுவன்  வடிவில் விநாயகர் தோன்றி 
தான்  அந்த விக்ரஹத்தை பத்திரமாக பார்த்துக்  கொள்வதாக  கூறி பெற்றுக் கொண்டு, பின் விபீஷணன்   வரும் முன்
கீழே வைத்து விடுகிறார், இதனால் கோபம் கொண்ட
விபீஷணன் அந்தச் சிறுவனை தலையில் குட்டுவதற்காக 
வரும் பொழுது அவரிடமிருந்து தப்பித்து ஓடி இந்த  மலையில்  
வந்து  அமர்ந்து  கொண்டதாக  புராண  வழி  செய்தி.  

நகரின் மத்தியில் இப்படி ஒரு  அழகான கோவிலை  வேறு  எந்த  
ஊரிலும்  பார்க்க முடியாது. உச்சி பிள்ளையார் சுற்றுலா
பயணிகளுக்கும் மாணிக்க விநாயகர்   சின்ன கடை வீதியில் 
இருக்கும் வியாபாரிகளுக்கும் விருப்பமான கடவுளர்.

கணபதி அக்ரஹாரம்  மஹா கணபதி:

திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள சிறிய கிராமம் 
கணபதி அக்ரஹாரம். இங்கிருக்கும் விநாயகரை அகஸ்திய முனிவர் பிரதிஷ்டை 
செய்ததாகவும் கௌதம ரிஷியால் வணங்கப்பட்டவராகவும் கருதப்படும் புராதன 
Maha ganapathy of Ganapathy Agraharam

பெருமை வாய்ந்த கோவில் என்றாலும் அளவில் சிறியதாகவே இருக்கிறது. நன்றாக 
பராமரிக்கப்படுகிறது.

இந்த ஊரில் விநாயக சதுர்த்தி வெகு பிரசித்தமான விழா! மற்ற ஊர்களைப் போல விநாயக சதுர்த்தி அன்று மண் பிள்ளையாரை வாங்கி பூஜிக்கும் பழக்கம் 
இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு கிடையாது. அந்த ஊர்க்காரர்கள் எல்லோருமே 
கோவிலில்தான் அர்ச்சனை செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் எல்லார் 
வீட்டிலிருந்தும் வரும் பிரசாந்தங்களை  ஒன்றாக  கலந்து  பொதுவாக  பிள்ளையாருக்கு  நிவேதனம்  செய்து   பிறகு  அதனை  விநியோகம்  செய்வது  இந்த  ஊருக்கே உடைய சிறப்பு. முன்பெல்லாம் சொத்து வழுக்குகள், மற்றும் குடும்ப தகராறுகள் போன்றவை பிள்ளையார் சதுர்த்தி அன்று தீர்த்து வைக்கப் படும் அதன் பிறகே பூஜை, பிரசாத விநியோகம் எல்லாம்
என்று என் பாட்டனார் கூற கேட்டிருக்கிறேன்... இப்பொழுதும் அந்த  பழக்கம்
தொடர்கிறதா என்று தெரியவில்லை.

கணபதி அக்ரஹாரத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கு (என்பிறந்த வீட்டைப் போல) பிள்ளையார் என்றால்  அங்கிருக்கும்   மகாகணபதிதான்,   வேறு விநாயக   மூர்தங்களைக் கூட வணங்க மாட்டோம் என்னும்  தீவிர  பக்தி  உடையவர்கள் ஆதலால், வீட்டில் பிள்ளையார்  படம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்:

ப்ராசீனமான கோவிலாக இருந்தாலும் சமீபத்தில் பிரபலமடைந்த கோவில்களில் 
பிள்ளையார்பட்டியும் ஒன்று. தமிழகத்தின் பழமையான குடைவரை கோவில்களில்  
ஒன்றான இது பல்லவர்கள் காலத்தையது.  புதுகோட்டைக்கும்  காரைகுடிக்கும்  இடையே  திருகோஷ்டியூறைத்  தாண்டி  அமைந்துள்ளது  இவ்வூர். அழகான கோவில். சிறியகோவில் என்று கூற முடியாது.   நகரத்தார்களால்  நன்கு  பராமரிக்கப்படுகிறது. 

ஆறு அடி உயரமுள்ள குடைவரை சிற்பம்.  இங்கிருக்கும்  பிள்ளையாருக்கு   எல்லா விநாயகர் மூர்த்தங்களைப் போல   நான்கு  கரங்கள்   இல்லாமல்  இரண்டு கரங்கள்மட்டுமே உள்ளன. அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து இடது கையை இடுப்பில் ஊன்றி    லிங்கத்தை ஏந்தியிருக்கும் அபூர்வ  திருக் கோலம்.  பகதர்களின் கோரிக்கைகள் அணைத்தையும் நிவேற்றுவதால் கற்பக விநாயகர் என்று வழங்கப்படும் இவருக்கு தேசி விநாயகர் என்றும்
ஒரு பெயர் உண்டு.

வலது   கையில் சிவ சிவ லிங்கத்தை தாங்கி இருப்பதால் இங்கு யாரோ ஒரு சித்தர் ஜீவ சமாதி அடைந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. வலது பக்கம் சுழித்த தும்பிக்கை மற்றும் ஒரு விசேஷம்! கற்பக விநாயகர் தேசி விநாயகர் தேசி விநாயகர் என்றும்
அழைக்கப்படுகிறார்!

பிள்ளையார் பட்டியில் இருக்கும் கற்பக விநாயகருக்கே சிறப்பு என்றாலும் 
இங்கிருக்கும் மற்றொரு சிறப்பு   வாடா மலர் மங்கை  அம்மன்  உடனுறை   திருவீசர்,சிவகாமி அம்மன் உடனுறை மருதீசர்,  சௌந்தர நாயக அம்மன் உடனுறை செஞ்சடேஸ்வரர் எனும்  அனைவரும்  ஒரே  இடத்தில் காட்சி  அளிப்பதாகும்.   

இங்கிருக்கும் மருதீஸ்வரரை பசு ஒன்று பூஜித்ததாகவும், செல்வத்திற்கு 
அதிபதியான குபேரன் பூஜித்ததாகவும்  வரலாறு.          

புதுச்சேரி மணக்குள விநாயகர் :

புதுவை நகரில் அரவிந்தர் அன்னை ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் இக்கோவில் முந்நூறு வருடங்களுக்கு முந்தையது. புதுவை கடற்கரைக்கு அருகே குளம் போல மணல்  தேங்கி  இருந்த  பகுதியில் அமைந்திருந்ததால்  மணக்குள விநாயகர்  ஆலயம் என்ற பெயர் பெற்றது. பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்த பொழுது இவ்வாலயத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த நினைத்த  அவர்கள்  பல  முறை  விநாயகர்  விக்ரஹத்தை  கடலில் வீசி எறிந்த பிறகும்  மறு நாளே அந்த விக்ரகம் மீண்டும் கோவிலில் 
காட்சி அளிக்க, விநாயகரின்   மகத்துவத்தை  புரிந்து  கொண்ட  அவர்கள்   கோவில்  இதே இடத்திலேயே   இருக்க உதவி புரிந்தனர்.சிறிய ஆலயம் என்றாலும் நன்றாக பராமரிக்கப்படுகிறது. கோவிலின் உள்
சுவற்றில் விநாயகரின்  வெவ்வேறு  வடிவங்கள்  அழகான  ஓவியங்களாக  தீட்டப்பட்டுள்ளன. பிரகாரத்தில்  சுப்ரமணிருக்கும்  தனி  சந்நிதி  உள்ளது.  நீண்ட நாட்கள் உற்சவர் விக்ரகம் இல்லாமல் இருந்து 1964 ம் ஆண்டுதான் 
காஞ்சி பரமாச்சாரியாரின் ஆசியோடு உற்சவர்   சிலையும் பிரதிஷ்டை 
செய்யப்பட்டது. 

புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு இங்கே  பூஜை போடுவது சிறப்பாக
கருதப்படுகிறது.
ஞாயிறு, 31 ஜூலை, 2011

கசக்காத வேப்பிலை! மத்தூர் மகிஷாசுரமர்தினிகசக்காத வேப்பிலை!  மத்தூர் மகிஷாசுரமர்தினி  
சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்திக்கு செல்லும் வழியில் 
திருத்தணி தாண்டி   வரும்  ஒரு  சிறிய  கிராமம்  மத்தூர்.  பிரதான  சாலையிலிருந்து  இடது புறம் திரும்பி    ரயில்வே  லைனை  தாண்டி 
உடனே  வந்து  விடுகிறது  மஹிஷாசுரமர்தினி   கோவில்.

சிறிய கோவில். அலங்கார வளவைத் தாண்டி உள்ளே நுழைந்தால் 
இடது புறம் அர்ச்சனை  பொருள்களும்  பிரசாதங்களும்  விற்கும்  இரு  சிறிய கடைகள். வலது புறம் பெரிய அரச   மரத்தின்  கீழ் விநாயகர் சந்நிதி. அதைத்தாண்டி   நான்கு  படிகள்  ஏறினால்   ஒரு  பெரிய  மண்டபம் அதன் முடிவில் அம்பாள் சந்நிதி. 

இப்போது கோவில் இருக்கும் இடம் முன்பொரு  காலத்தில் மேடாக  விளங்கி இருக்கிறது. இங்கு வரும் சிலர் உணர்வு மேலீட்டு மயங்கி
விழ இங்கு   ஏதோ தெய்வீக அருள் இருக்கிறது என்று கருதிய கிராமத்தினர் இந்த இடத்தை 'சக்திமேடு'  என்று  அழைத்து  வந்தனர். 
1954  ம்  வருடம்  இரண்டாவது  இருப்பு பாதை போடும்  பணிக்காக  இங்கு  தோண்டிய  பொழுது 'டங் டங்'  என்று  ஒலி  எழும்ப  மேலும்  தோண்டி  அம்மனின்  திரு  உருவச்  சிலையை  அப்படியே  முழுவதுமாக  எடுத்து  அங்கேயே பிரதிஷ்டை செய்து   வழிபட  தொடங்கி  இருக்கிறார்கள்.  மெல்ல மெல்ல அம்மனின் மகத்துவம் பரவ இப்பொழுது தினசரி அன்னதானம் நடைபெறும் அளவிற்கு கோவில் விரிவடைந்துள்ளது.          

எட்டு கரங்களோடு காலடியில் மகிஷனை வதைத்தபடி ஆனால்
அதே சமயத்தில் கருணையும்  சௌந்தர்யமும்   வழியும்  திரு
முகத்தினளாய்  கிட்டத்தட்ட  ஐந்தரை  அடி  உயர  திரு  உருவம்.  மேல் இரண்டு கரங்களில் சங்கு,  சக்கரம்,  அடுத்த  இரு  கரங்கள்  மகிஷன் உடலில் பதிந்திருக்கும் சூலத்தை  பற்றியிருக்க   அடுத்த
இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, கீழ் இரு கரங்களில்  கத்தியும்,  வாளும்  தாங்கி, "பார் மகிஷனை  அழித்து விட்டேன், உனக்கு வேறு  என்ன வேண்டும்?  என்று  கேட்பது  போல  எழுந்தருளி  இருக்கும் அம்பிகையை காணக் காண  நம்  மனதில்  படரும்  சாந்தியை அனுபவித்தே உணர  வேண்டும்.  தரிசனம்  முடிந்து  வெளியே  வந்ததும் அந்தக் கோவிலின் ஸ்தல விருக்ஷமான வேப்ப மரத்தின் வேப்பிலையை சிறப்பு பிரசாதமாக கொடுத்து சாப்பிடச் சொல்கிறார்கள்....  என்ன அதிசயம்! வேப்பிலையில் சிறிது   கூட  கசப்பு  இல்லை..!  மத்துரின்  மகத்துவம் இது என்கிறார்கள். அது மட்டுமா   அதிசயம்?  அன்னையை  வழிபட வழிபட நம் கர்ம  வினைப்பயன்கள்  என்னும்  கசப்பே  மாறி விடுகிறதே..!   அம்பிகையை துதித்து   அருள் பெறுவோம்!    
     
குறிப்பு: அம்மனுக்கு உகந்த ஆடி  மாதத்தில்  அம்மனைப்  பற்றி  எழுத  வேண்டும் என்றெல்லாம் எண்ணவே இல்லை, ஆனாலும் மத்தூர்   மகிஷாசுரமர்திநியைப்பற்றி எழுத நேர்ந்தது அவள் அருளே! அவள் நிகழ்த்திய அற்புதமே!      
        
         
     

வெள்ளி, 24 ஜூன், 2011

innum konjam kavidhai!

புற நகர் குடியிருப்பு!  
 
அளவற்ற காற்று அருகாமையில் அங்காடி
பத்து நிமிட நடையில் பேருந்தில் பயணிக்கலாம்
நிலத்தடியில் நீருக்கு பஞ்சமில்லை
என்று பல கூறி அடுக்கு மாடி குடியிருப்பொன்றில்
வீடொன்றினை  விற்று விடும் வித்தகன் 
சொல்வது  மிகையில்லை சொல்லாமல் விடுவது:
இசை என்ற பெயரில் இரைச்சலாய்  ஓசை
விரும்பினாலும் வெறுத்தாலும் வறுபடும் மீன்வாசம்
உங்கள் வீட்டு வாசலில் அடுத்த வீட்டு காலணிகள்
பால் பாக்கெட் திருட்டு, பறிபோகும் செய்தித் தாள்
இன்னும் 
ஜாதிச் சண்டை, மொழிச் சண்டை, இனச் சண்டை 
இத்தனையும் உண்டு எல்லா குடியிருப்புகளிலும்...!