வெள்ளி, 11 ஜனவரி, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 


ஒரு நாள் காலை தொலைக்காட்சியில் சேனலை மாற்றியபொழுது கண்ணன் பட்டாச்சார்யா என்பவர் எந்தெந்த ராசிக்காரர்கள் கடைக்குச் செல்லும் பொழுது எந்தெந்த நிற பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி ராசிக்கேற்ற பையை எடுத்துச்சென்றால் நாம் வாங்கும் சாமான்கள் நன்றாக அமையும் என்கிறார். பார்க்கலாமா?

மேஷ ராசிக்காரர்கள் - அடர்ந்த சிவப்பு, சிக்னல் சிவப்பு நிரப்பையை எடுத்துச் செல்ல வேண்டுமாம்.

ரிஷப ராசிக்காரர்கள் - வெளிர்நீல நிற பை எடுத்துக்கொண்டு போக வேண்டும் 

மிதுன ராசிக்காரர்கள் கொண்டு போக வேண்டிய பை  - இளம் பச்சை நிறத்தில் இருந்தால் நலமாம்.

கடக ராசிக்காரர்கள்  தூய வெண்மை நிற பையைத்தான் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இளம் சிவப்பு நிற பைகள் நல்லது செய்யுமாம்.

கன்னி ராசிக்காரர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய பை அடர்ந்த பச்சை நிறத்தில் இருப்பது நலமாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியானது அடர்ந்த நீல நிறப்பை.

விருச்சிக ராசிக்காரர்களும் அடர்ந்த சிவப்பு நிற பையைத்தான் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம்.

தனுர் ராசிக்காரர்களுக்கு கை கொடுப்பது மஞ்சப்பை.

மகர ராசிக்காரர்கள் பிரௌன் கலந்த கருப்பு நிற பையையும், கும்ப ராசிக்காரர்கள் அடர்ந்த கரு நிற பையையும் எடுத்துச் செல்வது நலமாம்.

மீன ராசிக்காரர்கள் பொன் நிற மஞ்சள் பையை தேடிப் பிடியுங்கள். 

இப்படியெல்லாம் எடுத்துக் கொண்டு சென்று வாங்கி வந்த வெண்டைக்காயில் பூச்சி இருந்தால் ஆர்கானிக் என்று சொல்லி சமாளியுங்கள். 
                                            ------------------------

தொலைக்காட்சி என்றதும் என்னைக் கவர்ந்த ஒரு சாக்லேட் விளம்பரம் நினைவிற்கு வருகிறது.

தனக்கு கொடுக்கப்பட்ட சாக்லேட் பட்டையை தின்று முடித்து விட்ட சிறுவன் கண்களை மூடி ,"காட்! எனக்கு இன்னும் ஒரே ஒரு சாக்லேட், ப்ளீஸ்" என்று வேண்டிக்கொள்வான் அதைப் பார்த்த அருகில் படித்துக் கொண்டிருக்கும் அவன் மூத்த சகோதரன்(அவனும் சிறுவன்தான்) தான் திங்காமல் வைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய சாக்லேட் பட்டையை தம்பிக்கு முன் வைத்து விடுவான். அது தெரியாத தம்பி தன்னுடைய வேண்டுதலுக்கு இரங்கி நிஜமாகவே கடவுள் கொடுத்து விட்டார் என்று நினைத்து,"ஆ!கிடைத்து விட்டது!" என்று அண்ணனிடமே காட்டுவான். அதற்கு அவனும்," எனக்கும் ஒன்று கேட்டிருக்கலாமே?" என, "நெக்ஸ்ட் டைம்" என்று கூறி விட்டு முழு சாக்லேட் பட்டையையும் எடுத்துச் சென்று விடுவான். அவன் விட்டுச்சென்ற சாக்லேட் பேப்பரை அண்ணன் எடுக்க, இதையெல்லாம் அறிந்த அவர்கள் தாய்,"சாக்லேட் பேப்பரை நான் தூக்கி போடட்டுமா?" என்று மகனின் தலையை கோதி கேட்பதோடு முடியும். பகிர்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற குணங்கள் இன்னும் இருக்கின்றன என்று கூறும் அந்த விளம்பரத்தை விரும்பி பார்ப்பேன். 
 --------------------ஒரு வழியாக காற்றின் மொழியை அமேசான் பிரைமில் பார்த்தேன். வித்யா பாலன் நடித்திருந்த 'தும்ஹாரி சுலோ' என்னும் ஹிந்தி படத்தின் தமிழ் வடிவம். family drama. மூலத்தை சிதைக்கவில்லை. முன்பாதி முழுவதும் ராதா மோஹனுக்கே உரிய இயல்பான நகைச்சுவையோடு நகர்கிறது. ஜோதிகா என்னவோ நன்றாகத்தான் நடித்திருக்கிறார். இருந்தாலும் வித்யா பாலன் இன்னும் கொஞ்சம் இயல்பாக செய்திருந்தாரோ என்று தோன்றுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று, ஜோதிகாவின் குறும்பு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும், வித்யா பாலனைப்பற்றி தெரியாததால் அவர் எப்படி நடித்திருந்தாலும் ஓகே. அவருடைய நடைதான்.. ஹி ஹி!

இரண்டாவது ஜோதிகா பாவம் என்ன செய்வார்? அவருடைய முட்டை கண்ணை இரண்டு சென்டி மீட்டர் விரிக்க வேண்டுமென்றாலும், அது ஐந்து சென்டி மீட்டர் விரிந்து விடுகிறதே? நமக்கு அது ஓவர் ஆக்டிங் போல தோன்றுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சோகக்காட்சிகளில் ஜமாய்த்து விட்டார்.   விதார்த் தன் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். 
ஸ்டார் வேல்யூ உள்ள வேறு நடிகரை போட்டிருந்தால், இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்குமோ? 

ஜோதிகாவின் பாஸாக வரும் நடிகை யார் என்று தெரியவில்லை. மிக நன்றாக நடித்திருக்கிறார். அந்த பேஸ் வாய்ஸ் ஒரு பிளஸ். 

எதிர்பார்த்த திருப்பங்களோடு(பிரமாத திருப்பங்கள் எதுவும் இல்லை), எதிர்பார்த்த முடிவோடு, சுத்த சைவமாக அந்தக் கால மௌலி படங்கள் போல இருக்கிறது. 
-------------------

என் அக்காவின் வீட்டில் இருந்த பொழுது, ஒரு நாள் அக்கா பேத்தி ரோஷ்ணியை எங்கே காணோம் என்று தேடினோம். ஐந்தே வயதாகும் அவளானால் செருப்பை மாட்டிக்கொண்டு எங்கேயோ சென்று விட்டு வந்தாள். எங்கே போயிருந்தாய்? என்று கேட்டதற்கு,"சும்மா ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்தேன் என்றாள். எல்லோரும் அவளை இப்படியெல்லாம் தனியாக, வீட்டில் சொல்லாமல் எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லி விட்டு விட்டார்கள். நான் மட்டும் கொஞ்சம் அதிகமாக அவளிடம்," இப்படியெல்லாம் வீட்டில் சொல்லாமல் தனியாக போனால், யாராவது உன்னை தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், அப்படி இப்படி என்று பயமுறுத்தினேன். நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் என்னிடம்,"வீட்டில் சொல்லிவிட்டு போனால் தூக்கிக்கொண்டு போக மாட்டார்களா?" என்று கேட்டாளே ஒரு கேள்வி.

இன்னொரு நாள் என்னோடு கடைக்கு வந்தாள். அங்கு நெயில் பாலீஷை அவள் கையில் எடுப்பதை பார்த்து அவளுக்கு வாங்கிக் கொடுத்தேன். மறுநாள் அதை தன் கை, கால் விரல்களுக்கு போட்டுக்கொண்டதோடு எனக்கும் போட்டு விட வந்தாள். ஐயோ! நான் பாட்டிடா, பாட்டியெல்லாம் நெயில் பாலீஷ் போட்டுக்கொள்வார்களா? யாராவது பார்த்தால் கேலி பண்ணுவார்கள் என்றேன். உடனே,"நீ சித்திதானே, நான் உன்னை பானு சித்தி என்றுதானே கூப்பிடுகிறேன்?" என்று எனக்கு ஐஸ் வைத்து, என் கை, கால் விரல்களில் நெய்ல் பாலீஷ் போட்டு விட்டுவிட்டாள். 
இதனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நான் பாட்டியில்லை. ஹா ஹா ஹா! 
-----------------

புதன், 9 ஜனவரி, 2019

சந்திப்பு - சரவெடி ஸ்ரீதர்


சந்திப்பு - சரவெடி ஸ்ரீதர் 
சில நாட்களுக்கு  முன் என் சகோதரியின் மகளின் உடல் நிலை சரியாக பிரார்த்தனை செய்யும்படி உங்களிடம் கேட்டிருந்தேன். உங்கள் எல்லோரின் பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் அக்கா மகளின் உடல் நிலை தேறி வருகிறது. உங்கள் எல்லோருக்கும் பிரத்யேகமாக தன் நன்றிகளை என் அக்கா தெரிவிக்க சொன்னார். நன்றி! நன்றி! நன்றி!

அக்கா மகளுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது அங்கிருந்த லிஃட் ஆபரேட்டர்  எல்லோரோடும் கனிவாக பேசிக்கொண்டும், ஜோக் அடித்துக்கொண்டும் பணி புரிவதை பார்க்க முடிந்தது. அவரோடு பேச்சு கொடுத்த பொழுது தன்னைப்பற்றிய விவரங்களை சொன்னார்.

பாரதியாரின் சொந்த ஊரான எட்டையபுரம்தான் இவருக்கும் சொந்த ஊராம். எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றிய இவர் தந்தை பாரதிக்கு நண்பராம். தந்தை பொதுப்பணித்துறையில் பணி புரிந்ததால், பணி நிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றல், எனவே இவரும் எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம், என்று வெவேறு ஊர்களில் படித்தாராம். ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த பொழுதுதான் இவருடைய நகைச்சுவை உணர்வை கண்டுபிடித்த தமிழாசிரியர்,"உனக்கு நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது. பத்திரிகைகளுக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதிப்போடேன்" என்று உற்சாகப்படுத்தியதால் பத்திரிகைகளுக்கு துணுக்குகள் எழுத ஆரம்பித்தாராம். 

அவருடைய முதல் ஜோக் 1978 மாலை முரசில் தமாஷ் என்ற தலைப்பில் வெளியானதாம். இப்போது அவர் நகைச்சுவை துணுக்குகள் வெளிவராத பத்திரிகைகளே இல்லை எனலாம். "எப்போதும் என் கையில் போஸ்ட் கார்டும், பேனாவும் ரெடியாக வைத்துக் கொண்டிருப்பேன். ஜோக் மனதில் தோன்றியவுடனேயே பத்திரிகைகளுக்கு எழுதிப்போட்டு விடுவேன்". என்கிறார். இப்படி சரமாரியாக ஜோக்குகளை பொழிவதால் 'சரவெடி ஸ்ரீதர்' என்னும் பட்டப்பெயர் பெற்றுள்ளார். 


தொழில்முறையில் ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் ஆன இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, மதுரை மீனாட்சி நர்ஸிங்ஹோம், தாம்பரம் ஹிந்து மிஷன் மருத்துவமனை போன்ற பல இடங்களில் பணியாற்றி தற்சமயம் மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டரில் பணி  புரிகிறார்.   

பாரீஸ், லண்டன், ரோம், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கிறாராம். ஸ்விட்சர்லாந்தில் பணி புரிந்தபொழுது அங்கு இந்தியன் ஹை கமிஷன் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் இவருடைய சம்பளத்தை அந்நிய செலவாணியாக பெற்றுக்கொண்டு இவரிடம் வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டும் தந்து இவரை ஏமாற்றி விட்டாராம். 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு?'

பல்வேறு விருதுகள், பெற்றிருக்கும் இவர் திரு.பாக்கியம் ராமசாமி அணிந்துரையில் ஒரு நூலும், திரு ராணி மைந்தன் வாழ்த்துரையில் ஒன்றுமாக இரண்டு நகைச்சுவை நூல்களும், ஒரு சி.டி.யும் வெளியிட்டிருக்கிறார்.


பேசிக்கொண்டிருக்கும்பொழுதே நாம் சொல்லும் ஒரு வார்த்தையை வைத்து ஒரு ஜோக் சொல்லி விடுகிறார். திருமணம், போன்ற குடும்ப விழாக்களில் ஸ்டாண்டப் காமெடி செய்கிறாராம். திருமணத்தில் இரைச்சலாக லைட் மியூசிக் வைப்பதற்கு பதிலாக இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாமே.

இவர் பெற்றிருக்கும் விருதுகளும் பங்கெடுத்த நிகழ்ச்சிகளும்:


சிரிக்க தெரிந்தவன் பாக்கியவான், சிரிக்க வைப்பவன் அதைவிட பாக்கியவான் என்பார்கள். நண்பர் சரவெடி ஸ்ரீதரின் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களும் நிறைந்திருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

அவருடைய ஜோக்ஸ் புத்தகத்திலிருந்து சில:

ஆசிரியர்: மாணவர்களே, நானும் உங்களில் ஒருவன், என்னை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம் 
மாணவன்: சரிடா மச்சி! கீழே உட்காரு.

ஆசிரியர்: ப்ராகரஸ் ரிப்போர்ட்டில் உங்கப்பா கையெழுத்து மாதிரி தெரியலையே?
மாணவன்: அப்படி எல்லாம் சந்தேகப்படாதீங்க சார், வேணா இரண்டாவது வாட்டி போட்டு காட்டறேன். 

பல் டாக்டர்: என்கிட்ட எதுக்கு சார் வீடு டாக்குமெண்ட்,வங்கிப் புத்தகம் எல்லாம் காட்டுகிறீர்கள்?
பேஷண்ட்: நீங்கதானே சார் சொத்தை பார்த்த பிறகுதான் பல்லைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னீர்கள் 

டாக்டர் அறுவை சிகிச்சை முடித்த பிறகு,"எப்படி பண்ணியிருக்கேன்"னு கேட்டார், 
அதற்கு நர்ஸ்,"கொன்னுடீங்க டாக்டர்" என்றார்.

தோழி1: உன்னைப் பெண் பார்க்க திடீர்னு நாற்பது பேர் வந்தாங்களாமே? மாப்பிள்ளையின் பெயர் என்ன?
தோழி2: அலிபாபா 

ஆசிரியர்: வேர்ல்டு மேப்பை காட்டி ஜப்பான் எங்கு இருக்கிறது, ஆஸ்திரேலியா எங்கு இருக்கிறது? அமெரிக்கா எங்கு இருக்கிறது காட்டு பார்க்கலாம் 
யோகேஸ்வர் என்ற மாணவன் ஆசிரியர் கேட்ட எல்லா நாடுகளையும் காட்டினான்.
ஆசிரியர்: இந்தியா எங்கே இருக்கிறது காட்டு 
யோகேஸ்வர் தயங்கினான்.
ஆசிரியர்: தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்ல வேண்டியதுதானே?
யோகேஸ்வர்: நீங்கள் என்னை எவ்வளவுதான் மிரட்டினாலும், என் தாய் நாட்டை நான் காட்டி கொடுக்க மாட்டேன்.

பேரன்: பாட்டி, இந்தா இந்த பலூனை ஊதிக்கொடு 
பாட்டி: போடா வயசாச்சு, என்னால முடியாது 
பேரன்: அப்பாதான் சொன்னாங்க பாட்டி சின்ன விஷயத்தை கூட ஊதி ஊதி பெரிசாக்கிடுவாங்கன்னு..

இவருடைய ஜோக் புத்தகத்தை படிக்கும் பொழுது நகைச்சுவை உலகில் ஆசிரியர்-மாணவன், டாக்டர்-நர்ஸ்-நோயாளி, கணவன்-மனைவி-மாமியார் இவை வற்றாத ஜீவ நதிகள் என்று புரிகிறது.