சனி, 25 ஆகஸ்ட், 2018

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே


மதுரா, விஜயத்திற்குப் பிறகு ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு சுதந்திர தின பட்டிமன்றங்களை தொலைக்காட்சியில் ரசித்து விட்டு, மாலை ஜெ.என்.யூ.விற்கு எதிரே இருக்கும் காமாட்சி கோவிலுக்கும், அங்கிருந்து மலை மந்திருக்கும்சென்றோம். ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் முருகன் கோவில். சுவாமிமலையில் இருக்கும் ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போன்ற தோற்றம். படிகள் அதிகம் இல்லை. இப்போது படிகள் இல்லாமல் மேலே செல்வதற்கு ராம்ப் போல சரிவுப் பாதை அமைத்திருக்கிறார்கள். என்றாலும் நாங்கள் படிகள் வழியாகவே சென்றோம். செல்லும் வழியில் எய்ம்ஸில் டி.வி. சேனல்களின் வாகனங்களை பார்த்து உள்ளே இருக்கும் வி.ஐ.பி. யார் என்று யோசித்தோம். மறு நாள்தான் தெரிந்தது. 


மலை மந்திரில் ஓர் செல்ஃபி  
மறுநாள் காலை கிளம்பிய நாங்கள் காலை சிற்றுண்டிக்காக மூர்த்தல் என்னும் இடத்தில் வண்டியை நிறுத்தினோம். அங்கு பராத்தாக்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றும். அதற்காக நொய்டாவிலிருந்தும், டில்லியிலிருந்தும் அங்கு வருபவர்கள் உண்டு என்றும் சொன்னார்கள். இருந்தாலும், காலை வேளையில் ஸ்டஃப்ட் பராத்தா சாப்பிட முடியாது என்பதால் தாவா பராத்தா ஆர்டர் கொடுத்தோம். வெண்ணையோடு பரிமாறப்பட்ட அந்த பராத்தாவும்,அதற்குப் பிறகு குடித்த மசாலா சாய்யும் மிகவும் நன்றாக இருந்தன.

ஹோட்டலில் அரை கப் வெண்ணை கொடுத்தார்கள்.
எங்கள் வண்டி ஓட்டுனர் குரு ஷேத்திரத்தில் பிரம்ம சரோவர் என்னும் பிரும்மாண்ட ஏரிக்கு எதிரே இருந்த ஓர் ஆஸ்ரமத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தி விட்டு, "பிரும்ம சரோவர், அதன் நடுவில் இருக்கும் சிவன் கோவில், கீதோபதேச ரதம் இவைகளை பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார். 

பிரம்ம சரோவர் பின்னணியில் 
நாங்கள் முதலில் எங்களுக்கு எதிரே இருந்த ஆஸ்ரமத்திற்கு உள்ளே சென்று பார்க்க முடிவு செய்தோம். அங்கு இருந்தது பசுபதிநாத் என்னும் சிவன் ஆலயம்.  அதைத்தவிர ஒரு வேதபாட சாலையும் இயங்குகிறது. மேலும் சிறு மியூசியம் ஒன்றும் இருந்தது.  அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும், நன்கு பராமரிக்கப்படும் நந்தவனம் எல்லாம் இருக்கின்றன. 


செம்பருத்தி பூ தான், சற்று பெரியதாக, சிவப்பாக இல்லாமல் பின்கிஷ் ஆக இருந்தது
அவைகளை பார்த்து விட்டு, பிரும்ம சரோவரின் மத்தியில் அமைந்திருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றோம். சிருஷ்டியின் ஆரம்பத்தில் பிரும்மா தன் தபோ பலத்தால் உருவாக்கியதால் பிரும்ம சரோவர் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தன்று இதில் நீராடுவது சிறப்பு என்கிறார்கள். பாரதப்போரின் இறுதியில் துரியோதனன் ஒளிந்து கொண்ட மடு இதுதான் என்கிறார்கள்.

அதன் நடுவே இருக்கும் சிவன் கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு கீதோபதேச ரதத்தை காணச்சென்றோம். அதற்கு ஒரு பாலத்தை கடக்க வேண்டும். வெய்யில் சுட்டெரித்தது.  கையில் ஒரு சிறிய குடை, அல்லது தலைக்கு ஒரு தொப்பி கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது.

கீதா ரதம் 

பாலத்தை கடந்தால் ஒரு  புல்வெளி, அதைத்தாண்டி ஒரு பெரிய மைதானம். புல்வெளியில் இரும்பினால் ஆன கீதோபதேச ரதம், முப்பத்தைந்து டன் எடையாம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் அந்த ரதமும் சரி, அதில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளும் சரி, க்ரிஷ்ணார்ஜுனர்களும் சரி அசல் பரிமாணத்தில் உள்ளன. அங்கிருந்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்த ஜ்யோதிசர் என்று வழங்கப்படும் இடத்திற்குச் சென்றோம். அங்கு இரண்டு பெரிய ஆல மரங்கள் உள்ளன. அதில் ஒன்று இருக்கும் இடம்தான் கீதை பிறந்த இடம் என்கிறார்கள். ஒரு மேடையின் மீது இருக்கும் இதன் கீழ் ராதா கிருஷ்ண விக்ரஹம் இருக்கிறது. அதை ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை காஞ்சி காமகோடி மடத்தால் நிறுவப்பட்டது என்கிறது கல்வெட்டு. 

அங்கிருந்து கல்பனா சாவ்லா பிளானட்டோரியம் பார்த்தோம். பிறகு பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் விழுந்த பீஷ்ம குண்ட் சென்றோம். சிறிய கோவில். பிரதானமாக அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். அவருக்குப் பின்னால் கை கூப்பியபடி பஞ்ச பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி. தலை மாட்டில் சங்கு சக்கர கதாதாரியாக மஹாவிஷ்ணு. 

எப்படிப்பட்ட தியாகி! அம்பு படுக்கையில் இருந்தபடி ஆயிரம் நாமங்களால் இறைவனை துதிப்பதுஎன்பது லேசான விஷயமா?  பகவத் கீதை மனிதனுக்கு கடவுள் உபதேசித்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் மனிதன் கடவுளை நோக்கி துதித்தது. இந்த இரண்டுமே பிறந்த இடங்களை ஒரே நாளில் தரிசிக்க முடிந்தது இறையருள்தான். அங்கு அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தோம். நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கேக்கிறதா?
என் தந்தையின் நினைவு வந்தது. அவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் இரண்டு வேளை தவறாமல் பாராயணம் செய்தவர். காஞ்சி காமகோடி மட பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடம் என் தந்தையின் பெயரை குறிப்பிட்டு அறிமுகம் செய்து கொண்டால் "விஷ்ணு சஹஸ்ரநாமம்?" என்பார். என் அப்பாவின் அந்த பாராயண பலனால் தான் எனக்கு இது கிடைத்தது.பீஷ்ம குண்டத்திற்கு அருகே ஒரு குளம் இருக்கிறது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மருக்கு தாகம் எடுக்கிறது. அவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வர துரியோதனன் ஓடுகிறான்,அவரோ அவனைத்தடுத்து, "என் பேரன் அர்ஜுனனே என் தாகத்தை தீர்ப்பான்,அர்ஜுனா எனக்கு  குடிக்க தண்ணீர் வேண்டும்" என்று கேட்க, அர்ஜுனன் பூமியை நோக்கி ஒரு அம்பு போடுகிறான். அது ஆழ்துளை கிணறு தோண்டுவது போல பூமியை பிளந்து செல்ல, பீஷ்மரின் தாயாகிய கங்கா தேவியே தன் மகனின் விடாயைத் தணிக்க, பிரவாகமாக பொங்கி வந்தாளாம். அந்த நீர்தான் இந்த குளம் என்கிறார்கள்.

பீஷ்ம குண்டத்தை ஒட்டி பத்ர காளி கோவில் ஒன்று உள்ளது. கோவில் நடை அடைக்கும் நேரம் வந்து விட்டதால் அங்கு செல்லாமல் சாப்பிட வந்து விட்டோம். அங்கு ஒரு நண்பர், "ஏன் பத்ர காளி கோவில் செல்லவில்லை? ஐம்பத்தோரு சக்தி பீடங்களில் அதுவும் ஒன்றாயிற்றே? சதி தேவியின் வலது முழங்கால் விழுந்த இடம் அது" என்றார். சரி அடுத்த முறை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டோம்.

சாப்பிட்டு முடித்ததும் ஊர் திரும்ப வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் வண்டி ஓட்டுனரோ, நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணா மியூசியத்தை பார்க்காமல் போனால் இந்த ட்ரிப் முழுமை அடையாது என்று கூறி எங்களை அங்கு அழைத்துச் சென்றார். 

நான்கு தளங்களில், ஒன்பது காலரிகளில் விரிந்திருக்கும் அந்த மியூசியம் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று. அகில இந்தியாவிலிருந்தும் தருவிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைகள், வெவ்வேறு பாணி கிருஷ்ண ஓவியங்கள், பாகவத ஓலைச்சுவடிகள், பழங்கால புத்தகங்கள், கடைசி தளத்தில் மல்டி மீடியாவின் துணையோடு  மஹாபாரத காட்சிகள், இறுதியாக அபிமன்யு மாட்டிக்கொண்ட சக்ர வியூகம் என்று புதுவித அனுபவத்தை தருகின்றது. ஒவ்வொரு தளத்திலும் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட க்விஸ் விளையாட சிறு கம்பியூட்டர். 

இந்த மியூசியத்தின் உள்ளே நுழைந்ததும் கீழ் தளத்தில் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரின் சிலையைப்  பார்க்கிறோம். அப்போது அது  நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பு வேறு. அதே சிலையை மேல் தளத்திற்கு சென்று அங்கு நமக்கு எதிரே பீஷ்மர் உடலெங்கும் அம்புகள் தைத்திருக்க நிலை குலைந்து ரதத்திலிருந்து கீழே விழுவது போல ப்ரமாண்டமாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்தோடு பார்க்கும் பொழுது ஏற்படும் பாதிப்பு வேறு. அதாவது நான்காவது தளத்தில் நம் கண் எதிரே ரதத்திலிருந்து கீழே விழும் பீஷ்மரின் ஓவியம், நம் பார்வை கீழே போகும் பொழுது பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடக்கும் சிலை. அந்த ஓவியத்திற்கும், சிலைக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணைப்பு சிறப்பாக இருக்கிறது. 

அதன் பிறகு அபிமன்யு கவுரவர்களிடம் தனியாக மாட்டிக் கொண்டு கொலையுண்ட சக்ர வியூகம் போன்ற அமைப்பு. அதன் உட்புறச் சுவர்களில் பாரதப் போர் காட்சிகள். நாம் அதற்குள் நுழைந்து சுற்றி சுற்றி வெளியே வருகிறோம். இப்படி ஒரு அமைப்பில் படைகளை அமைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  

வீடு திரும்பியவுடன் பிதாமகர் என்று அறியப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி காலமானதாக செய்தி. நாட்டு நலனுக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்த மாமனிதர்! நம் நாட்டின் ஜீவாதாரமே தியாகம்தான். அந்த தியாகம் தந்த வலுவால்தான் அம்பு படுக்கையில் கிடக்கும் பொழுது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபிக்கவும், மார்பில் குண்டு பாயும் போது 'ஹே ராம்' என்று விளிக்கவும் முடிந்திருக்கிறது சில மகாத்மாக்களால்.

இப்படி பொது வாழ்க்கையில் மட்டும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்திற்காக, உடன் பிறந்தவர்களுக்காக தன் சொந்த சுகத்தை தியாகம் செய்தவர்கள்  நம் நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட தேசத்தில் கோழைகள்தான் தியாகம் செய்வார்கள் என்னும் மேலை நாட்டு சிந்தனை எப்படியோ புகுந்து சுயநலமிகள் அதிகமாகி விட்டார்கள். நாம் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும். 

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத 
அப்யுதான அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"
(எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ, அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.    

என்று வாக்குறுதி அளித்துள்ள கீதாச்சார்யானை நம் நாட்டிற்கு தன்னலமற்ற தலைவர்களை தருமாறு வேண்டுவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் ஸ்ரீராம்! ராதே கிருஷ்ணா!

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

மதுரா விஜயம்(ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்) - 2

மதுரா விஜயம்(ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்) - 2 


பகுதி -2 கோவர்தன் கிரி & ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்:

ஸ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தான் நுழைவாயில் 
கோகுலத்திலிருந்து மதுரா மீண்டும் வந்தோம். அந்த கைட்  "இந்த புண்ணிய ஷேத்திரத்தில் ஒரு பிராமணனுக்கு உணவு அளிப்பது மிகவும் புண்ணியம்" என்று கூறி பணம் பெற்றுக்கொண்டு எங்களை கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அமைந்திருக்கும் கோவில் வாசலில் விட்டு விட்டு நடையைக் கட்டினார்.

கோவில் வாசலில் செல் ஃபோன், கைப்பை இவைகளை க்ளோக் ரூமில் வைத்து விட்டு, நாங்கள் உள்ளே வந்த பொழுது கோவிலுக்குச் செல்லும் கதவை மூடிக் கொண்டிருந்தார்கள். மாலை நாலு மணிக்குத்தான் திறப்பார்களாம்.  நாங்கள் கிருஷ்ணர் பிறந்த இடம் என்று கருதப்படும் சிறைச்சாலை போன்ற அமைப்பிலேயே இருக்கும் ஜென்மஸ்தானை தரிசனம் செய்தோம். அமைதியாகவும், அழகாகவும் இருக்கிறது. பின்னர் அந்த வளாகத்தில் இருந்த செயற்கை குகை ஒன்றில் டிக்கெட் வாங்கிக்கொண்டு புகுந்து, கண்ணனின் வாழ்க்கையை விளக்கும் நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருந்ததை பார்த்து விட்டு வெளியே வந்து, எதிரே இருந்த பாபிலோன் என்னும் ஹோட்டலில் பராத்தா, பாலக் பனீர், மிக்சட் வெஜிடபிள் சப்ஜி சாப்பிட்டு விட்டு வந்த பிறகும் நிறைய நேரம் இருந்ததால் கோவர்தன் கிரியை பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று அங்கு சென்றோம்.

கோவர்தன் கிரிராஜ் மந்திர் முகப்பு 
கிருஷ்ண பக்தையான மீராவிற்கு கிருஷ்ணனின் திருநாமங்களில் மிகவும் பிடித்தது கிரிதாரி என்னும் நாமம்தானாம்.அதனால்தான் அவள் பாடல்கள் எல்லாம் 'மீரா கே பிரபு கிரிதர நாகர' என்னும் முத்திரையோடு முடிந்திருக்கும். எனக்கு மீரா அளவிற்கு பக்தி கிடையாது. ஆனாலும் எனக்கும் மீராவைப் போல கிருஷ்ணரின் பெயரில் கிரிதாரி என்னும் பெயர்தான் மிகவும் பிடிக்கும். அதனால் கோவர்தன் கிரியை தரிசிக்க வேண்டுமென்பதில் எனக்கு ஆவல் கொஞ்சம் அதிகம் இருந்தது. 

திருவண்ணாமலையை கிரி வலம் செய்வது போல் கோவர்தன மலையையும் கிரி வலம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததால் திருவண்ணாமலையைப் போல பெரிய மலையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. சிறிய கோவிலாகத்தான் இருக்கிறது. 

கோவில் உள்ளே நுழைந்ததும் வலது கை பக்கம் கிரிராஜ் சந்நிதி. அதற்கு பக்கத்திலேயே ஒரு கடையில் ஒரு சிறிய டம்பளரில் பாலும், இனிப்புகளும் விற்கிறார்கள். வட இந்தியர்கள் அங்கு பால் வாங்கி கிரிராஜுக்கு அபிஷேகம் செய்து விட்டு, இனிப்புகள் வாங்கி படைத்து விட்டுதான் கிருஷ்ணரை தரிசிக்க செல்கிறார்கள். கிருஷ்ணன் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்யும்படி கோபர்களை பணித்த காரணமாக இருக்குமோ? எப்படியிருந்தாலும் அவர்களின் பக்தி பிரமிக்க வைக்கிறது.

உள்ளே பிரதானமாக இருப்பது வட இந்திய பாணி ராதா கிருஷ்ணர்.  அழகான தோற்றம். பிரதான மேடைக்கு இரு புறமும் சுவற்றில் பெரிய கோவர்த்தன கிரியை தூக்கி ஆயர்களை காக்கும் கிருஷ்ணன் படமும், காளிங்க மர்தன கிருஷ்ணனின் படமும் மாட்டப் பட்டிருக்கின்றன.


பிரதான மேடைக்கு இடது புறமும் வலது புறமும் உள்ள மேடைகளில் பஞ்சினால் கிருஷ்ணரும், கைலாச தோற்றமும் செய்திருந்தார்கள். 

இந்த கோவிலை பரிக்ரமா என்னும் கிரிவலம் இருபத்தோரு கிலோ மீட்டர்களை சுற்றி வர நன்கு மணி நேரம் ஆகும் என்றார்கள். ஒரு வேளை அப்படி சுற்றி வரும் பொழுது மலை கண்ணில் படலாம்.  இப்போது அந்த இடம் மேட்டுப்பாங்காக இருப்பதை வைத்தும், கிரிராஜ் சந்நிதியில் காணப்படும் பாறையை வைத்தும்  ஒரு காலத்தில் மலையாக அல்லது குன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். 

அங்கிருந்து மீண்டும் மதுரா திரும்பும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. நல்ல மழை. ட்ரைனேஜ் பொங்கி வழிந்து, சாலைகளெல்லாம் சாக்கடை வெள்ளம். கடுமையான போக்குவரத்து நெரிசல். நாங்கள் சென்ற பாதையில் திரும்பி வர முடியாமல் திருப்பி விட்டு விட்டார்கள். எப்படி எப்படியோ சுற்றி வளைத்து கிருஷ்ண ஜென்மஸ்தானை அடைந்தோம். 

மழை விட்டு விட்டது. கோவில் வாசலில் பாதுகாப்பு சோதனை செய்யுமிடத்தில் பயங்கர கும்பல். அப்போது ஒரு பள்ளி மாணவன் போலிருந்தொரு சிறு பையன் எங்களிடம் வந்து, "இந்த வரிசையில் நின்று நேரத்தை வீணாக்க வேண்டாம், நான் உங்களை வி.ஐ.பி. வரிசையில் அழைத்துச் செல்கிறேன், ஒருவருக்கு இருநூறு ரூபாய் கொடுங்கள்" என்றான். மூன்று பேருக்கும் சேர்த்து இருநூறு தருவதாக சொல்லி, அவனுடன் சென்றோம். எங்களை விறுவிறுவென்று பின் பக்கமாக அழைத்துச் சென்றான். உள்ளே சென்றால் நாங்கள் எதிர்பார்த்தது போல் கும்பல் இல்லை. நாங்கள் கொஞ்சம் பொறுமையாக பாதுகாப்பு பரிசோதனையை முடித்து விட்டு உள்ளே வந்திருந்தால் சுலபமாக உள்ளே சென்றிருக்கலாம். 
படிகளில் ஏறத்தேவையில்லாமல் லிஃப்ட்டில் அழைத்துச் சென்றான். 

உள்ளே பிரதானமாக ராதா கிருஷ்ணர், அதற்கு அருகில் ராமர்,சீதையோடு லக்ஷ்மணர் இருக்க அவர்களுக்கு நேர் எதிரே ஹனுமான். உள்ளேயே வலமாக வந்தால் துர்க்கா, இவர்கள் தனி சந்நிதி கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு நவகிரகங்களும் இருக்கின்றன. முதன்முறையாக வட இந்திய கோவில் ஒன்றில் நவகிரக சந்நிதியை பார்க்கிறேன். 

எல்லா சந்நிதிகளிலும் தரிசனத்தை முடித்து விட்டு விரைவில் வெளி வந்து விட்டோம். இங்கே காசு காசு என்று பிடுங்கவில்லை.  அந்த பள்ளி மாணவனுக்கு இருநூறு ருபாய் கொடுத்தது எங்கள் தவறு. தவறான வழியில் சம்பாதிக்க முயலும் ஒரு சிறுவனை ஊக்குவித்தோமே என்று உள்ளம் குறுகுறுத்தது. 

பிறப்பால் வைஷ்ணவரும், கிருஷ்ண லீலைகளை நடனமாடி சம்பாதித்தவருமான  ஹேமமாலினி தன் தொகுதியான மதுராவின் மேம்பாட்டிற்கு எதுவும் செய்ததாக தெரியவில்லை.   

சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி,யமுனோத்ரிக்கு இணையாக சொல்லப்படும்  இங்கிருக்கும் மதுரா, பிருந்தாவன்,நந்தகிராமம்,கோவர்தன்கிரி என்ற நான்கில் மூன்றை மட்டும் இந்த முறை தரிசிக்க முடிந்தது.

பிருந்தாவன தரிசனம் அந்த நந்தகுமாரன் மனது வைத்தால் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன். ராதே கிருஷ்ணா!
   

புதன், 22 ஆகஸ்ட், 2018

மதுரா விஜயம் (ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்)

மதுரா விஜயம்  (ஸ்ரீ  கிருஷ்ண ஜென்மஸ்தான்)

பகுதி - 1: கோகுலம்: கோகுலம்  கோவில் இந்த முறை  டில்லி விஜயத்தின் பொழுது, சென்ற தடவைகளில் பார்க்க முடியாத மதுரா, பிருந்தாவன், குரு க்ஷேத்ரம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு  செய்து, அங்கு  பார்க்க வேண்டிய இடங்களை பற்றி கீதா அக்காவிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டேன். 

எங்கள் சம்பந்தி, "மதுரா, ஆக்ரா சாலை  விபத்துகள் நிகழும் சாலை என்பதால் அதிக வேகத்தில் செல்ல வேண்டாம்" என்று வண்டி ஓட்டுனரிடம் வலியுறுத்தி கூறியதாலோ என்னவோ அவர் கொஞ்சம் நிதானமாகவே ஓட்டினார். முதலில் பிருந்தாவனை அடைந்தோம்.  பிருந்தாவனில் இருக்கும் கோவிலுக்கு செல்லும் சாலை அடைக்கப் பட்டிருந்தது. காரணம் கேட்டதற்கு சுதந்திர தினம் நெருங்கிக்  கொண்டிருந்ததால் அந்த சாலையில் பள்ளி மாணவர்கள் பரேட் பயிற்சி செய்வார்கள், இரவு எட்டு மணிக்குத்தான் திறக்கப் படும் என்று கூறி  விட்டதால் நாங்கள் நேராக மதுரா சென்று விட்டோம். 

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தானாகிய மதுராவில் கோவில் வரை கார்களை அனுமதிக்க மாட்டார்கள், சற்று தொலைவில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்றார்கள். எங்களுடைய ஓட்டுனருக்கு வண்டியை எங்கே விட வேண்டும் என்று தெரியாமல் ஒரே இடத்தையே இரண்டு முறை சுற்றினார். அப்போது ஒருவர், "கோவில் வாசலிலேயே வண்டியை நிறுத்தலாம், இதோ இவர் உங்களுக்கு வழி காட்டுவார்", என்று ஒருவரை எங்கள் காரில் ஏற்றி விட்டார். அவர் ஒரு கைட் என்பது பிறகுதான் தெரிந்தது. கோவிலுக்குத்தானே செல்கிறோம் என்று கேட்டதற்கு அவர் "ஆமாம்,முதலில் கோகுலம் சென்று விடுவோம், அங்கு கோவில் மூடி விடுவார்கள்" என்றார். போகும் வரை ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று கை பேசியை ஆன் பண்ணினால்,"ஏமாற சொன்னது நானோ..?" என்று நீலப்பல்லில் இளித்தது. 

மதுராவிலிருந்து கோகுலத்திற்கு யமுனை நதியை கடந்துதான்  செல்ல வேண்டும். யமுனையின் குறுக்கே ஒரு பாலம் கட்டப் பட்டிருக்கிறது. அதில் செல்லும் பொழுது, *வசுதேவர், குழந்தை கண்ணனை ஒரு திருடனைப் போல நடு இரவில் யாருக்கும் தெரியாமல் மதுராவிலிருந்து கோகுலத்திற்கு இந்த பாதை வழியாகத்தான் கொண்டு சென்றாராம். எனவே அங்கு வண்டியை சற்று நேரம் நிறுத்தி ஒரு ரூபாய் நாணயத்தை யமுனை நதியில் போட்டு எங்களை ப்ரார்திக்கச் சொன்னார்.  

கோகுலம் கோவிலுக்குச் செல்லும் வழி 

கோகுலம் சென்று ஒரு கோவிலை அடைந்தோம். வசுதேவரின் வீடாக இருந்ததாக சொல்லப்படும் இடம் தற்பொழுது கோவிலாக மாற்றப்பட்டுள்ளது என்கிறார்கள். குழந்தை  கண்ணனைக் காண இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்த பொழுது, சிவ  பெருமானை மட்டும்,  "நீங்கள் கழுத்தில் பாம்பை அணிந்திருக்கிறீர்கள், புலித்தோலை ஆடையாக அணிந்திருக்கிறீர்கள், விரித்த சடையோடு இருக்கிறீர்கள், உங்களை பார்த்தால் என் குழந்தை பயந்து விடுவான்" என்று கூறி கண்ணனை பார்க்க அனுமதிக்க மறுத்து விட்டாளாம் யசோதை.  உடனே சிவபெருமான் அங்கேயே அமர்ந்து  தனக்கு தரிசனம் தர வேண்டி மூன்று நாட்கள் மஹாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்தாராம். அதன் பிறகே அவருக்கு கண்ணன் தரிசனம் கிட்டியதாம். 
கோவிலின் திண்ணை போன்ற பகுதியில் எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு டூரிஸ்ட் கோஷ்டியை மட்டும் கோவிலின் உள்ளே அனுமதித்து கதவை அடைத்து விட்டனர். அப்போது எங்கள் கைட் மேற்படி கதையை எங்களுக்கு கூறி, "சிவபெருமான் மூன்று நாட்கள் தவம் செய்திருக்கிறார், நீங்கள் ஒரு பதினைந்து நிமிடம், கண்ணனை நினைத்து, 'ஓம் நமோ பகவதேவாசுதேவாய' என்று ஜபம் செய்யுங்கள்" என்றார்.   

அந்த டூரிஸ்ட் கோஷ்டி நகர்ந்ததும், நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். உள்ளே சந்நிதிக்கு முன் எங்களை அமரச்  சொன்னார்கள். சன்னிதானம் திரையிடப்பட்டிருந்தது. நாங்கள் வாங்கிக் கொண்டு சென்றிருந்த பூவை என்னையும், என் கணவரையும் சேர்ந்து கைகளில் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். பிறகு, அந்த பூஜாரி, "இது மிகவும் புண்ணியகரமான பூமி, இங்கு உங்கள் தாய், தந்தையர் பெயரில் அன்னதானம், பசுவிற்கு உணவு கொடுப்பது போன்றவை செய்வது  மிகுந்த பலனை கொடுக்கும். அதற்காக நீங்கள் எவ்வளவு நன்கொடை தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார். நாம் அதற்கு ஒப்புக் கொண்டால்தான் திரையை திறக்கிறார்கள். இந்த இமோஷனல் மிரட்டலில் நமக்கு பக்தி குறைந்து விடுகிறது.

மூலஸ்தானத்தில் நந்தகோபர், யசோதை இருபுறம் இருக்க, நடுவில் பலராமன். அவர்களுக்கு கீழே, ஒரு தொட்டிலில் குழந்தை கிருஷ்ணன். நம்மை அந்த தொட்டிலை ஆட்ட சொல்கிறார்கள்.  பலராமன் முகவாயில் பதிக்கப்பட்டிருக்கும் வைரக்கல் அவுரங்கசீப்பால் வழங்கப்பட்டதாம். 

பல இந்துக் கோவில்களை இடித்த அவுரங்கசீப் இந்தக் கோவிலை இடிக்க முற்பட்டபோது அவருடைய பார்வை பறிபோனதாம். அதனால் இடிப்பதை கை விட்டதும் மீண்டும் பார்வை கிட்டியதால் இந்த வைரக்கல்லை கோவிலுக்கு தந்தாராம். இதற்கு சரித்திர பூர்வமாக ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.

அந்த ஹாலின் தூண்களில் பால கிருஷ்ண லீலைகள் சிற்பமாக இருக்கின்றன. ஆனால் அத்தனை திருத்தமாக இல்லை. வெளியே இரண்டு மூன்று படிகளுக்கு கீழே ஒரு மரம் இருக்கிறது. அந்த மரம் நம் விருப்பங்களை நிறைவேற்றும் மரம் என்கிறார்கள். அதில் நிறைய கயிறுகள் கட்டப்பட்டிருக்கின்றன. மரமாக இருந்தாலும் அதை கிரிராஜ் என்றுதான் சொல்கிறார்கள். அங்கும் இரு முதியவர்கள் அமர்ந்து கொண்டு ஒரு கோலினால் நம் தலையில் தட்டி, அவர்கள் வைத்திருக்கும் தட்டில் தட்ஷினை போடச் சொல்கிறார்கள். 

மரத்தை வலம் வந்து இடது புறம் இருக்கும் இருக்கும் மேடையில் இருக்கும் சந்நிதிக்குச் செல்கிறோம். அங்கு நந்தகோபர், யசோதா, மற்றும் லோக மாயா காட்சி தருகிறார்கள்.  லோக மாயை எனப்படும் துர்கா தேவியே யசோதைக்கும், நந்தகோபருக்கும் மகளாக பிறக்கிறாள். கண்ணனை இங்கே விட்ட விட்டு, நந்தினியாகிய மாயா தேவியைத்தான் வசுதேவர் எடுத்துச் செல்கிறாள். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முற்படும்பொழுது அவன் கையிலிருந்து விடுபட்டு செல்லும் மாயா தேவி(இது புராண மாயாதேவி) "உன்னைக் கொல்லப் போகிறவன் கோகுலத்தில் வளர்கிறான்" என்று அறிவித்து விட்டு விண்ணில் மறைகிறாள் என்னும் புராண கதை எல்லோரும் அறிந்ததுதானே. 

இந்த சந்நிதியில் வளையல், சிந்தூர் முதலியவை ஒரு தட்டில் வைத்து விற்கிறார்கள். நாம் கேட்காமலேயே நம் கையில் திணித்து ஐம்பது ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள். 
மாடுகளுக்கு வெள்ளரிக்காய் தரும் என் கணவர்.
கீழே ஒரு இடத்தில் லஸ்ஸி விற்கிறார்கள். நன்றாக இருந்தது. அங்கேயே பசு மாட்டிற்கு தருவதற்காக வெள்ளரிக்காய் விற்கிறார்கள்.  அதை ஒட்டி மூடப்பட்ட ஒரு கேட்டிற்கு பின்னால் நிறைய பசு மாடுகள் எல்லோரும் தரப்போகும் உணவுக்காக ஆவலாக தலையை நீட்டுவதை பார்க்கும் பொழுதும், ஓரளவு நன்றாக உடை அணிந்து கொண்டிருக்கும் குழந்தைகள் கூட நம்மிடம் காசு கேட்டு கை நீட்டும் பொழுதும் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்கி விட்டோமே..!

- தொடரலாம் 

* அந்த இடத்திற்கு சோரி என்று துவங்கும் ஒரு பெயரை குறிப்பிட்டார்,அதை குறித்து வைத்துக் கொள்ளாததால் என் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.