கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 6, 2021

குதிரை

குதிரை


என்னதான் செல்ஃபோனில் காலண்டர் இருந்தாலும் மந்த்லி ஷீட் காலண்டர், டெய்லி ஷீட் காலண்டர் இவைகள் எனக்கு தேவை. அதிலும் மந்த்லி காலண்டரில் எனது விருப்பம் ஜி.ஆர்.டி. காலண்டர். சென்னையில் இருந்தவரை ஒவ்வொரு வருடமும் எப்படியாவது ஜி.ஆர்.டி. காலண்டர் கிடைத்து விடும். அதைப்போலவே ஒரு காலண்டரை எங்கள் எல்.ஐ.சி. ஏஜெண்ட் அனுப்புவார். அதில் தேதிக்கு பின்னால் சில ஸ்வாரஸ்யமான தகவல்கள் இருக்கும். அதில் எனக்கு படிக்க கிடைத்த குதிரை பற்றிய தகவல்களை பகிர்வதில் மகிழ்ச்சி.

மனிதர்களால் மிகவும் நேசிக்கப்படும், பராமரித்து வளர்க்கப்படும் விலங்கு வகைகளில் குதிரை நான்காவது விலங்காக விளங்குகிறது. சென்ற நூற்றாண்டு வரை குதிரைகள் வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்பட்டன.

குதிரை மனிதர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியும், மேல் நாடுகளில் ஏர் உழுவதற்கும் பயன்படுத்தப்பட்டனவாம்.

போர்க்காலங்களிலும்,அலங்கார அணிவகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்காலத்தில் குதிரைப்படை வீரர்கள் மட்டுமே குதிரையேற்றம் கற்றனர், இப்போது குதிரையேற்றம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகவும் இருக்கிறது. குதிரைகள் பயன்படுத்தப் படும் ஒரு விளையாட்டு நேருவுக்கு மிகவும் பிடித்த போலோ. குதிரைப் பந்தயங்களும் விளையாட்டுதான்,ஆனால் சூதாட்டம் என்பதில் வரும்.

குதிரைப் படைகளை பண்டைய காலத்தில் இருந்தே போரில் பயன்படுத்தி வருகின்றனர். சங்க காலம் தொட்டு தமிழக அரசர்கள் வைத்திருந்த நால்வகை படைகளில் குதிரைப்படையும் ஒன்று. பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரின் வாழ்க்கையில் குதிரைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நரியை பரியாக்கிய திருவிளையாடல் நாம் அறிந்ததுதானே.

பொதுமக்களுக்கான குதிரை வண்டியிலிருந்து,அரசர்கள் பயணிக்கும் தேர்கள் வரை ஒருவரோ, பலரோ பயணிக்கும் வண்ணம் வண்டிகள் வடிவமைக்கப்பட்டு அவற்றில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன.

குதிரைகளார்ல் மனித குலத்திற்கு கிடைக்கும் இன்னுமொரு நன்மை பாம்பு கடிக்கு மாற்றாக பயன்படுத்தும் மருந்து குதிரையின் உடலிருந்து எடுக்கப் படுகிறது என்பது. குதிரையின் உடலில் பாம்பின் விஷம் ஊசி மூலம் செலுத்தப்படும். உடனே குதிரையின் உடலில் நஞ்சு எதிர்ப்பு நீர்மங்கள் உருவாகும், அந்த நீர்மங்களை குதிரையின் ரத்ததிலிருந்து பிரித்து அதுவே பாம்பு நஞ்சுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மன நலம் குன்றிய நோயாளிகள் குதிரையோடு பழகும் பொழுது விரைவில் குணமடைகிறார்களாம்.

குதிரைகளின் சராசரி உயரம் அறுபது அங்குலம் முதல் அருபத்திரெண்டு அங்குலம் வரை. அதன் ஆயுட்காலம் இருபதைந்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் வரை. பிறந்த ஐந்து ஆண்டுகளிலேயே இனப் பெருக்கத்திற்கு தயாராகி விடுகின்றன.

ஒரு நாளில் ஏறக்குறைய பதினோரு கிலோ உணவையும், நாற்பத்தைந்து லிட்டர் நீரும் எடுத்துக் கொள்ளும். கொள்ளும் என்றதும் குதிரையின் உணவு கொள்ளு என்பது நினைவுக்கு வருகிறது. கொள்ளு உட்லில் சேரும் கொழுப்பை கரைக்க வல்லது என்பதால்தான் கொள்ளை தின்னும் குதிரை விண்ணென்று இருக்கிறது என்று கூட சிலர் கூறுவார்கள்.

பாலூட்டிகள் யாவற்றிலும் குதிரையின் கண்களே பெரியது. குதிரைகள் பகலிலும்,இரவிலும் தங்களின் ஒற்றைக் கண்ணால் 350 டிகிரிக்கு மேலும் பார்க்க இயலும். அதாவது முன்னால் உள்ளவை, பின்னால் உள்ளவை, பக்கவாட்டில் உள்ளவை என் அனைத்தையும் பார்க்க இயலும்.

அதைப் போல குதிரைகள் தங்கள் காதுகளை 180 டிகிரி வரை திருப்ப இயலும். எனவே தலையைத் திருப்பாமலேயே எந்தப் பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும்.

குதிரைகளால் நின்று கொண்டே தூங்க முடியும். குதிரையானது சரசரியாக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் வரை தூங்குகிறது. நான்கிலிருந்து பதினைந்து மணி நேரம் வரை நின்று கொண்டே ஓய்வெடுக்கிறது. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற மாமிச பட்சிணிகளுக்கு இரையாக இருப்பதால், இயற்கையிலேயே இவற்றின் கால்கள் உறுதியாக,மிக விரைவாக ஓடக்கூடிய வகையில் அமைந்துள்ளன.  

தன் எஜமானரின் மன ஓட்டத்தை கண நேரத்தில் உணர்ந்து செயல்படும் அறிவு குதிரைகளுக்கு உண்டு. அப்படி  சில குதிரைகள் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கின்றன.

ராணா பிரதாப் சிங்கின் சேத்தக் என்னும் குதிரை முகலாயர்களுடன் ஏற்பட்ட போரில் படுகாயமடைந்தது, அந்த நிலையிலும் எஜமானருக்காக விசுவாசமாக இறுதிவரை போராடியது. அது இறந்த பொழுது கதறியழுத ராணா பிரதாப் சிங், அது உயிர் விட்ட இடத்தில் அதற்கு சமாதி கட்டினார்.

அலெக்ஸாண்டர் வெற்றி பெற்ற பல போர்களில் அவரை சுமந்து சென்ற குதிரையின் பெயர் புசிபலஸ். அதன் கம்பீரமே காண்பவர்களை மிரட்டும். அலெக்ஸாண்டர் புஸிபலஸை தன் குதிரையாக தேர்ந்தெடுத்தபொழுது அவருடைய வயது பதிமூன்று. அப்போதிலிருந்து அந்த குதிரையை அவர் பிரிந்ததே இல்லை.

மராட்டிய வீரன் சிவாஜியை நம்மால் குதிரை மீதுதானே கற்பனை செய்ய முடியும். கற்பனையோ, நிஜமோ நமக்கு நினைவுக்கு வரும் இன்னொரு குதிரை வீரன், அடங்காத டில்லி சுல்தானின் நீலவேணி என்னும் குதிரையை அடக்கிய ராஜா தேசிங்கு.

புராணத்தில் பாற்கடலை கடைந்த பொழுது வெளிப்பட்ட உச்ரைவசஸ் என்னும் குதிரையால் பறக்க முடியும். கிரேக்க புராணத்தில் வரும் பெகாசஸ் என்னும் குதிரைக்கும் இறக்கைகள் உண்டு என்பதால் அதனால் பறக்க முடியும்.

புராண காலத்தில் வரும் ராஜாக்கள் அஸ்வமேத யாகம் செய்யும் பொழுது அதில் முக்கிய அங்கம் வகிப்பது குதிரைகள்தான்.(அஸ்வதம் என்றாலே குதிரைகள்தானே). சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வருவதாக நம்புகிறோம்.

குதிரைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது என்பது வருத்தம் அளிக்கும் செய்தி.

Moral of the story:

காலண்டர் ஷீட்டுகளை கிழித்து தூர எறிந்து விடாதீர்கள். அதிலும் உங்களுக்கு எழுத ஒரு விஷயம் கிடைக்கலாம். குப்பையில் மாணிக்கம்!

*நீல நிறத்தில் இருப்பவை என் கருத்துக்கள்: