வியாழன், 26 மே, 2011

Ko - film review

கோ 

கே.வி. ஆனந்தின் படைப்பில் வெளி வந்திருக்கும் மற்றொரு படம். அரசன் என்று பொருள் தரும் அழகான தமிழ் பெயரை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! இளங்கோ என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ? 


நாட்டில் நல்ல ஆட்சி நிலவ வேண்டுமென்றால் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கருதும் ஒரு இளைஞர் குழு, அதற்கு மறைமுகமாக உதவும் பத்திரிகையாளர் ஜீவா! அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,  நடுவில் கிளை கதையாக ஜீவா, கார்த்திகா, பியாவுக்கிடையே நிலவும் முக்கோண காதல். 

பத்திரிகையின் புகைப்பட நிருபராக பச்சென்று பதிகிறார் ஜீவா. பியாவின் இயல்பான கலகல நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. இளைஞர் குழுவின் தலைவராக வரும் அஜ்மலின் நடிப்பும், பாடி லாங்குவேஜும் சபாஷ் போட வைக்கின்றன! கார்த்திகா...?  ஹும்! கண்கள் அழகுதான், அதற்காக எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி விழித்தால்..? அதீத மேக்- அப்பில் செயற்கையாக நடித்து எரிச்சலூடுகிறார்! இவரைத்தான் கதாநாயகியாக போட 
வேண்டும் வேறு வழி இல்லை என்னும் அளவிற்கு கதா நாயகி பஞ்சம் நிலவுகிறதா என்ன? பிரகாஷ் ராஜ், கோடா ஸ்ரீனிவாச ராவ் என்று இரண்டு வில்லன்கள் இருந்தாலும் அவர்கள் இருவருமே பிரதான வில்லன் கிடையாது என்பது ட்விஸ்ட் ! பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர்தான் என்றாலும் பத்து வார்த்தைகள் பேசினால் எட்டாவது வார்த்தையில் பல்லை கடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஸ்டைலை மாற்றிக் கொள்ளலாம்.

காமெடி ட்ராக் என்று தனியே வைக்காமல் காட்சி அமைப்புகளிலேயே நகைச்சுவையை வைத்திருப்பதை பாராட்டலாம்! இளமை துள்ளும் வசனத்தை எழுதி 
இருக்கும் இரட்டையர் சுபாவில் சுரேஷ் ஒரு காட்சியில் தலை காட்டவும் செய்திருக்கிறார். இதே போல பட்டிமன்ற ராஜாவும், வனிதாவும் வந்து போகிறார்கள்!

பாடல்கள் நன்றாகதான் இருக்கின்றன.லோகேஷன்களும் அருமை இருந்தாலும் படத்தின் ஓட்டத்திற்கு ஸ்பீட் ப்ரேகர்களாகவே இருக்கின்றன. குறிப்பாக தனக்கு நெருங்கிய தோழி பரிதாபமாக இறந்த அன்று டூயட் பாடுவது என்ன எதிக்ஸ்? படத்தின் முற் பாதியில் காட்டப்படும் நிகழ்சிகள் யாவும் பிற் பாதியில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள்
என்பது பின்னால்தானே தெரிகிறது.. எனவே இடை வேளைக்கு முன் திரும்பத் திரும்ப 
ஒரே காட்சியே வருவது போல தோன்றுகிறது. இடை வேலைக்குப் பிறகு சூப்பர்!