செவ்வாய், 17 மே, 2011

TN Election result 2011

ELECTION RESULT 2011

சமீபத்திய தேர்தலில் இத்தனை அமோக வெற்றியை ஜெயலலிதாவே எதிர் 
பார்த்திருக்க மாட்டார்.   complete sweep! படுத்துக்கொண்டே   ஜெயிப்போம் என்று 
காமராஜர் சொன்னதாக கேள்விப் பட்டிருக்கிறேன், நிஜமாகவே அதை செய்து 
காட்டி இருக்கிறார் ஜெயலலிதா! நான்கு வருடங்களை பெரும்பாலும் கொட
நாட்டில் ஓய்வு எடுப்பதிலேயே கழித்த ஜெயலலிதா மாபெரும் வெற்றியை 
தழுவி இருப்பது மக்களின் மனதை பிரதிபலிக்கிறது! 

சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற கருணாநிதியிடம், "உங்களின் வெற்றிக்கு 
காரணம்?" என்று கேட்ட பொழுது, "ஜெயலலிதாதான்..!" என்றார் கிண்டலாக.
இப்பொழுது யாராவது ஜெயலலிதாவிடம், "உங்கள் வெற்றிக்கு காரணம்..?"
என்று கேட்டால், "கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும்" என்று கூறுவாரா?
தெரியாது.

எலக்க்ஷன்  கமிஷன் கண்டிப்பாக இருந்தும் பணம் பெருமளவில் விளையாடி 
இருக்கிறது. ஆனால் அதையும் மீறி மக்கள் அ.தி.மு.க.விற்கு ஓட்டளித்திருப்பது
மக்கள் எந்த அளவிற்கு எதேச்சாதிகாரத்தை வெறுக்கிறார்கள் என்பதையும் 
அவர்கள் தெளிவாகத்தான்  உள்ளார்கள் என்பதையும் காட்டுகிறது.  ஆனால் 
 ஒரு  சோகம்  அவர்கள்  தேர்ந்தெடுக்க  கழகங்களுக்கு  மாற்றாக  வேறு  ஒரு 
கட்சி இல்லாதது. 

தமிழ் நாட்டைப்பொருத்தவரை காங்கிரசிற்கு உட்கட்சி பூசலுக்கே நேரம் 
போதவில்லை. மேலும் ஊழலை ஒழிப்போம் என்று ஒரு  பக்கம்   பேசிக்கொண்டே மறு பக்கம் ஊழல்வாதிகளுக்கு உதவுவது அதன் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க.,  போன்றவைகளை  மக்கள் கழகங்களின் கிளையாகதான் கருதுகிறார்கள். மிஞ்சி இருக்கும் ஒரே 
ஒரு உருப்படியான தேசிய கட்சி பி.ஜே.பி ஒன்றுதான். அதுவோ இன்னும்
தமிழ் நாட்டில் வேர் ஊன்றவே   இல்லை.

       
பி.ஜே.பி ஒரு மத வாத கட்சி என்னும் இமேஜை உடைக்க வேண்டும். 
ஆர்.எஸ்.எஸ். உடன் தனக்கு சம்மந்தம் கிடையாது  என்பதை  உறுதிப்படுத்தி, மற்ற மதத்தினரும் அமைதியாய் வாழ தாம் உதவுவோம்
என்பதையும் நிச்சயப்படுத்த வேண்டியது அதன் கடமை.  தமிழக மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துள்ளார்கள் என்று கருணாநிதி கூறினாலும் தன்
முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனை போன்று உடனேயே வேலை 
செய்ய ஆரம்பித்து விடுவார். அவரைப்போல உழைக்க தமிழக பி.ஜே.பி யில் 
யாராவது இருக்கிறர்களா என்று தெரியவில்லை. இனிமேலாவது 
தமிழக பி.ஜி.பி. தீவிரமாக உழைத்து முதலில் தன் இருப்பை வலுப்படுத்தினால் 
நிஜமான தேசிய உணர்வு கொண்ட ஒரு மாற்றுக் கட்சி தமிழ் நாட்டிற்கு கிடைக்கும்.
ஜெய் ஹிந்த்!