கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 17, 2015

மாமியார் கொடுமை போச்சு, மேலதிகாரி கொடுமை வந்தது டும்! டும்! டும்!

மாமியார் கொடுமை போச்சு, மேலதிகாரி கொடுமை வந்தது 
டும்! டும்! டும்! 



அந்தக் கால சினிமாக்களிலும் கதைகளிலும் பார்த்தால் சாதுவான நல்ல பெண்களை மாமியார்கள் ஆட்டி படைப்பார்கள். கதா நாயகிகளும் அத்தனை கொடுமைகளையும் வாய் திறக்காமல் பொறுத்துக் கொள்வார்கள். ஏன் நிஜத்திலும் அது பெருவாரியாக நடந்தது. இதெற்கெல்லாம்  பெண்களுக்கு படிப்பறிவு இல்லாததுதான் காரணம். பெண்கள் படித்து வேலைக்குச் சென்று பொருளாதார சுதந்திரம் பெற்று விட்டால் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம் என்ற எண்ணம் வலுப் பெற்று பெண் கல்வி வலியுறுத்தப் பட்டது. என்றாலும் ஆரம்ப காலங்களில் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப பெரும்பாலோர் தயங்கினார்கள். அதற்கு அப்போதிருந்த குடும்ப அமைப்பும் ஒரு காரணம். ஒவ்வொரு வீட்டிலும் ஆணும் பெண்ணுமாக ஆறேழு குழந்தைகள் இருந்த பொழுது பெண்ணென்றால் எப்படியும் திருமணமாகி அனுப்பி விட வேண்டும், ஆகவே அவளை எதற்கு செலவழித்து படிக்க வைக்க வேண்டும்? அதற்கு பையனை படிக்க வைத்தால் அவன் சம்பாதித்து கொடுப்பான்  என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. ஆகவே பெண் கல்வி என்பது பள்ளியோடு பெரும்பாலும் முடிந்தது. அதைத் தாண்டி கல்லூரிக்கு அனுப்பியவர்களில் பி.ஏ. படித்தால் போதுமே எதற்கு கஷ்டப்பட்டு பி.எஸ்சி படிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் உண்டு.  அதே போல பெண்களுக்கு ஏற்ற வேலை என்றால் அது டீச்சர் வேலைதான் என்று ஒரு கருத்தும் இருந்தது. 

அதற்கு அடுத்த கட்டத்தில் பெண்களுக்கான தகுதியான வேலை என்பதில் வங்கி வேலையும் சேர்ந்து கொண்டது. காலை 9 மணிக்கு போய் விட்டு மாலை 6 மணிக்கு வீட்டிற்க்கு வந்து விடலாம். அப்பொழுது வங்கிகளில் வேலைக்கு சேர்ந்த பல பெண்கள் உத்தியோக உயர்வு வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு க்ளர்க்காகவே இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் தொந்தரவில்லாத அரசு உத்தியோகங்கள். தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்ற பெண்கள் சொற்பம்தான். 

காலம் மாறியது, குடும்பங்கள் சிறுத்தன. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண் இங்கு சற்றும் இளைப்பில்லை என்று  படிக்க ஆரம்பித்த பெண்கள் இல்லாத துறை இன்று இல்லை. பக்கத்து தெருவிற்கு செல்வதற்கே துணையோடுதான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பெண்கள் இன்று வெளி நாடுகளுக்கே படிக்கவும் உத்தியோக நிமித்தமாகவும் தனியாக செல்கிறார்கள். போன தலைமுறை பெண்களைப் போல இல்லாமல் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லவே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். பொருளாதார சுதந்திரம் அடைந்து விட்டதால் இப்போதெல்லாம் வரதக்ஷணை கொடுமைகளெல்லாம் வெகுவாக குறைந்து விட்டன. 

அப்படியானால் கொடுமையான மாமியார்களெல்லாம் சீரியெல்களில் மட்டும்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். பலர் அலுவலகங்களில் மேலதிகாரிகளாக இருந்து தனக்கு கீழே பணி புரிபவர்களை வதை கொட்டுகிறார்கள். அதே 'மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்' மனப்பான்மை. அந்தக் கால மாமியார்களைப் போலவே ஜாடையாக குத்தல் பேச்சுக்கள், எள்ளல்கள். நாங்கள் எல்லாம் இப்படியா இருந்தோம் என்னும் அசூயை..அப்பப்பா! ஒரு பெண் அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் இன்னொரு பெண் படும் துன்பங்கள் இருக்கிறதே...! 

அந்தக் காலத்தில் சொல்வார்கள், மருமகள் தன் மாமியார் செய்யும் கொடுமை எல்லாவற்றையும் பொறுமையாக சகித்துக் கொள்வாளாம் காரணம் தானும் ஒரு நாள் மாமியார் ஆவோம், தனக்கு வரும் மருமகளை படுத்தி வைக்கலாம் என்ற எண்ணம். இந்தக் காலத்தில் அந்த உணர்வு அலுவலகத்திற்கு ஷிப்ட் ஆகி விட்டது போலிருக்கிறது. 
 
உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு தெரிந்த பணி புரியும் பெண்கள் இருந்தால் கேட்டு பாருங்கள் அவர்கள் யார் கீழே பணி புரிய விரும்புகிறார்கள்? என்று பத்துக்கு எட்டு பேர் ஆண்களுக்குத் தான் ஓட்டளிப்பார்கள். பாக்கி இருவரில் ஒருவர் பேப்பர் போட்டிருப்பார், இன்னொருவர் ஜால்ரவாக இருப்பார்.   


மாமியார்: 

நாங்களெல்லாம் கார்த்தால நாலு மணிக்கு எழுந்தா 
ராத்திரி பத்து மணிக்கு படுக்க போற வரை உட்கார முடியாது. 

புள்ள பெத்த பச்ச உடம்புன்னு கூட பாக்காம எங்க மாமியார் 
வேலை வாங்குவா 

என்னது பொறந்த வீட்டுக்கு போறயா? இங்க ரெண்டு நாளுக்கு தேவையான இட்லி,தோசை மாவு அரைச்சு வைச்சுட்டு, புளி காய்ச்சல் செஞ்சு வைச்சுட்டு, குண்டான், தவலை எல்லாத்திலும் தண்ணி ரொப்பி வைச்சுட்டு போ 



மேலதிகாரி:

உங்களை மாதிரி எடுத்த எடுப்புல ஆபீசர் ஆகிடல, கிளார்க்கா சேர்ந்து, படிப்படியா உயர்ந்து, இன்னிக்கு மேனேஜர் ஆகி இருக்கேன். 18 வருஷ அனுபவம்.

எங்க காலத்தில் மெடெர்னெடி லீவு மூணு மாசம்தான். இப்போ மாதிரி ஆறு மாசம் கிடையாது.

என்னது பர்மீஷனா? பெண்டிங் வொர்க் எல்லாம் முடிச்சுட்டு, பைலிங் வொர்க் இருந்தா அதை முடிச்சுட்டு போங்க.


எப்பொழுதுமே ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்தான் எதிரி. முன்பு வீடுகளில், இப்போது அலுவலகங்களில்.

படங்கள்: நன்றி: ask.com & google