திங்கள், 5 செப்டம்பர், 2011

தமிழ் நாட்டின் சிறப்பான பிள்ளையார்கள் - II  


திருவலஞ்சுழி ஸ்வேத(வெள்ளை) விநாயகர்:

கும்ம்பகோனத்திலிருந்து ஆறு கிலோ மீடர் தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி     என்னும் கிராமம்.  காவேரி    இங்கு வலப்புறமாக சுழித்து ஓடுவதால் இவ்விடம் திரு வலஞ்சுழி என்று அழைக்கப்படுகிறது.காவேரி கரையில் அமைந்துள்ள ஆலயங்களுள் முக்கியமான ஒன்று 
ப்ரஹன்நாயகி சமேத கபர்டநீஸ்வரர் கோவில். பிரதான மூர்த்தி சிவா பெருமான்தன் என்றாலும் 
இங்கு   விநாயகருக்கே சிறப்பு.  

புராண பின்னணி:

தேவர்கள்,அசுரர்களையும் சேர்த்க்கொண்டு பாற்கடலை கடைந்த பொழுது, நீண்ட நேரம் அமிர்தம் வராமல் போக, பாற்கடலை    கடைய ஆரம்பிக்கும் முன் தாங்கள் விநாயகரை வழிபடாததால்தான் அமிர்தம்  கிடைக்கவில்லை என்று உணர்ந்த இந்திரன் பாற்கடலில் இருந்த நுரையைக் கொண்டு ஒரு விநாயகர் பிரதிமையை உருவாக்கி இங்கு 
வழிபட்டதாக வரலாறு. கடல் நுரையால்  உருவானவர்  என்பதால்  இவருக்கு அபிஷேகங்கள் கிடையாது. 
இந்தக் கோவிலில் இருக்கும் பலகணி மிகவும் சிறப்பான சிற்ப வேலைபாடுகள் கொண்டது.

அச்சரபாக்கம் அச்சுமுறி விநாயகர்:


சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் மேல் மருவத்தூருக்கு அருகே உள்ளது அச்சரப்பாக்கம் அச்சுமுறி விநாயகர் ஆலயம்.

புராண பெருமை:

திரிபுர சம்ஹாரத்திர்க்கு கிளம்பிய சிவ பெருமான் விநாயகரை அலட்சியம் 
செய்து புறப்பட, அவரது ரதத்தின் அச்சினை விநாயகர் முறித்த இடம். அதன் பிறகு விநாயகரின் மகத்துவத்தை புரிந்து கொண்ட சிவ பெருமான் விநாயகரை உரிய முறையில் வழிபட்டு திரிபுர தகனம் செய்ததாக புராணம். இதைத்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் 'முப்புரம் எரி
செய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா...' என்று பாடி உள்ளார்.

இவரை வழிபட, நாம் தொடுங்கும்  செயல்கள்  தடை இன்றி  நிறைவேறும்  என்பது நம்பிக்கை.   

திரு செங்காட்டங்குடி சிந்தூர விநாயகர்:

தஞ்சை மாவட்டத்தில் திருவெண்காட்டிற்கு அருகில்    இருக்கும்  மற்றொரு  புராண பின்னணி கொண்ட பிள்ளையார்  இங்கிருக்கும்  சிந்தூர  விநாயகர்.  கஜ முகாசுரனை விநாயகர்  சம்ஹாரம் செய்த பொழுது அவன்  உடலிலிருந்து  பீரிட்ட ரத்தம் இந்த காட்டில் இருந்த மரங்களின் மீதெல்லாம் தெளித்து  இந்த  வனப் பகுதியையே சென்னிரமாக்கியதால் இந்தப் பகுதி (திரு)செங்காட்டங் குடி   என்று பெயர் பெற்றது.  


திருநாரையூர் பொல்லாப் (பொள்ளா) பிள்ளையார்:

கடலூர் மாவட்டத்தில்,  காட்டுமன்னார்  கோயிலுக்கு  அருகில்  இருக்கிறது  திருநாரையூர் பொல்லாபிள்ளையார் கோவில். இந்த பழமையான கோவில் தேவார பாடல் பெற்ற  திருத்தலங்களுள் ஒன்றாகும்.


பொள்ளாப்  பிள்ளையார் என்பதற்கு உளி கொண்டு பொள்ளப் படாத அதாவது செதுக்கப்படாத திரு மேனி என்று பொருள். அதாவது இங்கிருக்கும் விநாயகர்  சுயம்பு  மூர்த்தி.  தேவாரத்தை  தொகுத்த  நம்பி  ஆண்டர் நம்பிக்கு பிரத்யட்சமாக  அருள் செய்தவர் இவர்.

இந்த கோவிலுக்குச் செல்ல சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

குறிப்பிடப்பட்ட இந்த   எட்டு விநாயகர் கோவில்களைத் தவிர மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் முக்குருணி விநாயகர், திருவாரூரில் இருக்கும்  தீக்ஷதரால்  பாடப்பெற்ற  மூலாதார  கணபதி,  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில்  இருக்கும் பள்ளத்து விநாயகர் ஆகிய இவர்களும் சிறப்பான சக்தி உடையவர்கள். சமயம் கிடைக்கும் 
பொழுது இவர்களைத் தொழுது அருள்    பெறுவோம்.