வியாழன், 13 அக்டோபர், 2011

engaeyum eppodhum - review

எங்கேயும் எப்போதும்


எதிர் எதிர் சாலையில் (சென்னை திருச்சி) செல்லும் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பெரும்
விபத்துக்குள்ளாகின்றன, அவைகளில் பயணித்தவர்களில் இரண்டு காதல் ஜோடிகளைப் பற்றி பிளாஷ் பாக்கில் விரியும் கதை. மிகச் சிறிய இந்த விஷயத்தை சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். தனி காமெடி ட்ராக் கிடையாது, குத்து பாட்டு கிடையாது, மிகையான சம்பவங்களோ வசனங்களோ இல்லாமல் மிக மிக யதார்த்தமான கதை மாந்தர்கள், காட்சிகள் என வெகு அழகாக நகர்கிறது படம்.

அஞ்சலி, ஜெய் ஒரு காதல் ஜோடி, அனன்யா,சர்வா மற்றொரு ஜோடி.
காபி ஷாப்பில் நாற்பது ரூபாய் டிப்ஸ் கொடுக்க மனம் வராமல் தயங்குவதாகட்டும், உடல் உறுப்பு தானம் செய்ய கை எழுத்து போடும் முன், "ஏங்க செத்ததற்கு அப்புறம் தானே?" என்று கேட்கும் அப்பாவி உஷார்தனமாகட்டும், அஞ்சலியின் அம்மாவை பார்த்து கை ஆட்டி விட்டு அசடு வழிவதாகட்டும், கிடைத்த வாய்ப்பை தவற விடவில்லை ஜெய்! சபாஷ்!

அஞ்சலியைப் பற்றி என்ன சொல்ல...  உடல் மொழி பிரமாதம்!தேர்ந்த
நடிகையாகிவிட்டார்! சிம்ரனுக்குப் பிறகு நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை.  ஆனந்யாவும் சோடை போகவில்லை.தோன்றும் முதல் காட்சியிலேயே மனதை கொள்ளை கொள்கிறார்! ஒரு முழுமையான ஐ.டி. இளைஞனை தத்ரூபமாக கண் முன் நிறுத்துகிறார் சர்வா!.

'கோவிந்தா..', பாடலும் 'மாசமா...' பாடலும் படமாக்கப் பட்டுள்ள விதம் நன்றாக உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. காமிரா துல்லியம்!
இதற்கு முன் வந்த படங்களைப் போல் திருச்சி என்றால் வெறும் மலை கோட்டையை மட்டும் காட்டாமல் திருச்சியின் பல் வேறு இடங்களையும் முதல் முறையாக  இந்த படத்தில்தான் காட்டியிருக்கிறார்கள்.

அஞ்சலி ஜெய் யை படம் முழுவதும் "நீ",  "வா" "போ" என்று ஒருமையிலும், ஜெய் அஞ்சலியை, "நீங்க, வாங்க, போங்க," அழைப்பது..... புதுமையா?

படத்தில் உறுத்தும் ஒரே விஷயம்,  கதையின்  ஓட்டத்திற்கு  எந்த  விதத்திலும்  உதவாத, பஸ்சில்  பயணிக்கும்  ஒரு  மாணவனுக்கும்  மாணவிக்கும் பூக்கும் காதல்.

தமிழ் சினிமா புது பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது என்பதை நிரூபிக்கும் விதமாக வந்துள்ள ஒரு நல்ல படம் எங்கேயும் எப்போதும்!