கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, June 19, 2018

படித்ததில் வருந்த வைத்தது


படித்ததில் வருந்த வைத்தது

ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்களை மீட்பது போல மேற்படி விஷயங்களுக்கு அடிமையானவர்களை மீட்க அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலயங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கேட்ஜெட்ஸ் போதை உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு செல்லுமா அதுவும் இரண்டு வயது குழந்தையை அனாதையாக விட்டு விட்டுச் செல்லும் அளவிற்கா?


பெங்களூரில் வசித்து வந்த இளம் கணவன் மனைவி, அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை. மனைவி, வீட்டையும், குழந்தையயும் கூட சரியாக கவனிக்காமல் எப்போதும் வாட்சாப், ட்விட்டர், ஃபேஸ் புக் என்று மூழ்கி இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேற்றுமை, சண்டை என்று நடந்திருக்கிறது. சம்பவம் நடந்ததற்கு முதல் நாள், கணவன், தன் மனைவியின் சகோதரனை தொலை பேசியில் அழைத்து, ”உங்கள் சகோதரியோடு என்னால் இனிமேல் வாழ முடியாது, அவளை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் மைத்துனன், தான் தன் சகோதரியோடு பேசி சரி செய்வதாக சொல்லியிருக்கிறார். மறு நாள், அந்தப் பெண், தன் சகோதரனுக்கு ஃபோன் செய்து, தன் கணவருக்கும், தனக்குமிடையே உள்ள கருத்து வேற்றுமையைப் பற்றி கூறியிருக்கிறார். அவளிடம், தான் ஞாயிறன்று பெங்களூர் வருவேன் என்றும், அப்போது நேரில் பேசிக் கொள்ளலாம் என்றும் சமாதானம் செய்திருகிறார். 

ஞாயிரன்று  காலை சகோதரியின் வீட்டை அடைந்து கதவை தட்டியிருகிறார், கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவருக்கு அதிர்ச்சி. இரண்டு வயது குழந்தை ஹாலில் உட்கார்ந்திருக்க, கணவன், மனைவி இருவரும் இரண்டு படுக்கை அறைகளில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருந்தனராம். முதல் நாள் இரவு அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட சத்தம் கேட்டதாக அண்டை வீட்டினர் தெரிவித்துள்ளார்கள்.

தன் குழந்தையை அனாதையாக்கிவிட்டுச் செல்ல அந்த தாய்க்கு எப்படி மனம் வந்தது?

இது இப்படி என்றால், சிரிப்பதா? அழுவதா என்று தெரியாமல் திகைக்க வைத்த செய்தி ஒன்று இதுவும் இளம் கணவன் மனைவி சம்பந்தப் பட்டதுதான். மனம் ஒன்று பட்டதால், மதத்தை பெரிதாக நினைக்காமல் இணைந்த காதல் ஜோடி அது. இரண்டாவது குழந்தை பிறந்த பொழுது பெயர் வைப்பதில் பிரச்சனை வெடித்திருக்கிறது.



அந்தப் பெண்ணின் மத வழக்கப்படி 28ம் நாள், ஜோஹன் மணி சச்சின் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்பாவுக்கோ அபினவ் சச்சின் என்று பெயர் வைக்க ஆசை. இருவரும் விட்டு கொடுக்க மறுத்து, கோர்ட் வரை சென்று விட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவர் சொன்ன பெயரையும் இணைத்து ஜோஹன் சச்சின் என்று பெயரிட்டு இருவர் சம்மதத்தையும் பெற்று(ரகசியமாக தலையில் அடித்துக் கொண்டிருபாராயிருக்கும்) அந்தப் பெயரையே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தனராம். இதை முன்பே செய்திருக்கலாமே!