Monday, September 17, 2018

ஒண்ணுமே புரியல உலகத்திலே..

ஒண்ணுமே புரியல உலகத்திலே..செப்டெம்பர் 17,  தந்தை பெரியாரின் பிறந்தநாள். பெரியாரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மூட நம்பிக்கைகள் மலிந்து கிடந்த அந்த காலத்தில் விடிவெள்ளி மாதிரி அவர் தோன்றாவிட்டால் பல மாறுதல்கள் நடந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் அவை ஏன் நீடிக்கவில்லை என்று தெரியவில்லை. 

அவர் எத்தனை பிள்ளையார் சிலைகளை உடைத்தாரோ, அவைகளைப் போல பன்மடங்கு பிள்ளையார் சிலைகள்  இன்று பூஜிக்கப்படுகின்றன. அன்று நூற்றுக் கணக்கானவர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு நாத்திகம் பேசினார்கள் என்றால்,இன்று லட்சக் கணக்கானவர்கள் கருப்பு வேட்டி அணிந்து கொண்டு சபரி மலைக்குச் செல்கிறார்கள். 

எழுபதுகளில் கூட பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்களில் மிகச் சிலரே அதுவும் வயதானவர்கள் மட்டுமே கோவிலுக்குச் செல்வார்கள். இன்றோ அந்த நாட்களில் சிறிய கோவில்களில் கூட நெரிசல் தாங்க முடியவில்லை. அதுமட்டுமல்ல கிருஷ்ணபட்ச அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம், அமாவாசை,மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிரத்யங்கரா தேவிக்கு அபிஷேகம். செவ்வாய் ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கு என்று கோவில்களில் கும்பல். நேற்று கூட(16.9.18) பானு சப்தமி, மிகவும் விசேஷம் என்று வாட்ஸாப்பில் தகவல்கள் வந்தன.

சென்ற வருடம் காவேரி புஷ்கரம் என்று காவேரி பாயும் மாவட்டங்கள் விழி பிதுங்கின, இந்த வருடம் தாமிரபரணி புஷ்கரத்திற்கு ஐந்து லட்சம் பேர்களை எதிர்பார்க்கிறார்கள். நாற்பது வருடங்களுக்கு முன்பு புஷ்கரம் என்ற விஷயம் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? அதே போல இருவது வருடங்களுக்கு முன்பு அட்சயத் த்ருதியை அன்று பொன் வாங்கினால் நிறைய 
பொன் சேரும் என்பது யாருக்காவது தெரியுமா? இப்போது அன்றைக்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட வேண்டியிருக்கிறது. நகை கடையிலோ வாசலில் நிற்கும் காவலாளி நகை வாங்க வருபவர்களை,"வரிசையில் நில்லுங்கள்" என்று குச்சியால் அடிக்க வருகிறார். காலக்கொடுமையடா..!!  

1995ஆம் ஆண்டு, கும்பகோணத்தை சுற்றி இருக்கும் நவகிரக கோவிலைகளுக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். பல கோவில்களில் யாருமே இல்லை, ஆனால் இன்றோ, எல்லா கோவில்களும் பக்தர்கள் வருகையால் வழிகின்றன. எல்லா சிவன் கோவில்களும் பரிகார கோவில்களாக மாறி விட்டதில் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும், யாருமே வராமல் இருந்த கோவில்களுக்கு மக்கள் வருகை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. 

முன்பு இத்தனை ஜோதிடப் புத்தகங்கள் கிடையாது. இப்போது ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு ஜோதிடப் புத்தகம் வெளியிடுகின்றன. இஸ்லாமிய பெண் ஒருவரை ஆசிரியையாக கொண்டு கூட ஒரு ஜோதிடப் புத்தகம் வருகிறது. அதைத்தவிர குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, முன்பு அவ்வளவாக யாருக்கும்  தெரியாத அல்லது பொருப்படுத்தாத  ராகு, கேது பெயர்ச்சிகளின் பொழுது இலவச இணைப்புகள் வழங்காத பத்திரிகை இல்லை என்றே கூறலாம். அந்த நாட்களிலும் நாம் கோவில்களுக்குச் சென்றுவிட முடியாது. 

அதே போல ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்வதை ஒழித்தார்கள். இந்தியாவின் பிற மாநிலங்கள் இன்னும் ஜாதிப் பெயரை போட்டுக்கொள்ளும் பொழுது தமிழகத்தில் அதை கை விட்டிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் முன்பு இல்லாத அளவிற்கு ஜாதி சங்கங்கள் இப்போது இருக்கிறதே....??!! கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் ஜாதி சங்கங்கள் கலப்புத் திருமணம் செய்து  கொள்வதற்கு தடை விதித்திருப்பதோடு, அப்படி மீறி கலப்பு திருமணம் செய்து கொள்ளும் குடும்பங்களை ஜாதிப்ரஷ்டம் செய்கிறார்களே..??!!  தவிர ஆணவக் கொலைகளும் நிற்கவில்லை.  

ராசிபலன் சொல்லாத சேனல் கிடையாது. சன் டி.வி.யில் முதலில் நட்சத்திர பலன், பின்னர் ராசி பலன் என்று இருவிதமாக கூறுகிறார்கள். இரண்டுமே பொத்தாம் பொது என்னும் பொழுது என்ன வித்தியாசமாக சொல்லிவிடப் போகிறார்கள்?

எல்லாவற்றையும் விட என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் சன் டி.வி.யின் ஆரம்ப நாட்களில் விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் பொழுது, விநாயக சதுர்த்தி அன்று என்று கூற மாட்டார்கள்.  விடுமுறை நாளன்று என்பார்கள். இப்பொழுதோ, விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அறிவிக்கிறார்கள். அது மட்டுமல்ல, காலையில், ஆலய வழிபாடு, ஆன்மீக கதைகள், நட்சத்திரம், ராசி என்ற இரண்டின் அடிப்படையிலும் ராசி பலன், ஜெய் ஹனுமான், விநாயகர், சாயிபாபா என்று வரிசையாக தெய்வீக தொடர்கள். இவற்றில் சில காலை,மாலை என்று இரண்டு வேலைகளிலும் ஒளிபரப்பப்படும். எப்படி இவர்களுடைய பகுத்தறிவு இத்தனை சீக்கிரம் நீர்த்துப் போனது? புரியத்தான் இல்லை.

Sunday, September 16, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 3

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 3 
திருப்புளியன்குடியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நாங்கள் அடுத்ததாக ஆழ்வார் திருநகரிக்குச் சென்றோம். நாங்கள் சென்ற பொழுது நம்மாழ்வார் சந்நிதியில் தான் பலர் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். நாங்கள் பெருமாளை சேவித்து விட்டு வரலாம் என்று அங்கு சென்ற பொழுது, அங்கு அவர்கள் எங்களிடம் "முதலில் ஆழ்வார் சந்நிதிக்குச் செல்லுங்கள். அங்கு தீர்த்தமும், சடாரியும் பெற்றுக் கொண்டு, திருப்புளியாழ்வார் என்னும் புளியமரத்தை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்". என்றனர். சரி என்று நாங்கள் அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களோடு சேர்ந்து கொண்டோம். நம்மாழ்வார் சந்நிதியில் பாசுரம்  படித்துக்(அனுஸந்தானம் செய்து) கொண்டிருந்தார்கள். 

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் இரண்டு ஊர்களுக்குப் பிறகு இங்குதான் அரையர் சேவை உண்டாம்.  அதன் பிறகு கற்பூர ஆரத்திக்குப் பிறகு எல்லோருக்கும் நெய் வாயில் தொங்கும் படி கோதுமை ரவை கேசரி வழங்கப்பட்டது. பின்னர் தீர்த்தமும், சடாரியும் சாதிக்கப் பட்டன. பின்னர் வரிசையில் சென்று நம்மாழ்வாரை தரிசனம் செய்து விட்டு, கீழிறங்கி, பின்புறமாக நடந்து சில படிகள் ஏறி, திருப்புளியாழ்வார் எனப்படும் புளியமரத்தை தரிசனம் செய்து கொண்டோம். 

குருகூரில் பிறந்த ஒரு ஆண் குழந்தை பிறந்ததிலிருந்து அழவில்லை, பேசவில்லை, சாப்பிடவில்லை. அதன் பெற்றோர்கள் அந்த குழந்தையை இந்த புளிய மரத்தினடியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அந்த புளிய மரத்தில் இருக்கும் ஒரு பொந்தில் அமர்ந்து தன் தவத்தை தொடர்கிறார். இப்படி பதினாறு வருடங்கள் கழிகின்றன. 

குருகூருக்கு அருகில் இருக்கும் திருக்கோளூரைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வார்(இவருடைய இயற் பெயர் எனக்குத் தெரியவில்லை) ஒரு குருவைத் தேடி வட தேச யாத்திரை செல்கிறார். அங்கே விண்ணில் தோன்றும் ஒரு தெய்வீக ஒளியைத் தொடர்ந்து வந்து, குருகூரில் இருக்கும் இப்புளிய மரத்தினடியை அடைகிறார். அங்கு தேஜோ மயமாக விளங்கும் நம்மாழ்வரைப் பார்த்ததும் அவருக்கு இந்த சிறுவனா நமக்கு குரு? என்னும் எண்ணம் தோன்றுகிறது. அவரை பரிசோதிக்க நினைத்து,

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?" என்று வினவுகிறார். உடனே பதினாறு வருடங்கள் வாயைத் திறக்காமல் இருந்த அந்தக் குழந்தை,
அத்தை தின்று அங்கே கிடக்கும்" என்று பளிச்சென்று பதில் கூறுகிறது.  இங்கே செத்தது என்பது உடலைக் குறிக்கும். சிறியது என்பது ஜீவாத்மா. ஜடமாகிய ஒரு உடலுக்குள் ஒரு ஜீவன் புகுந்து பிறவியை எடுக்கும் பொழுது அது என்ன செய்யும்?(தின்பது என்பது உலக விஷயனுபவங்களை அனுபவிப்பது)

அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்பதற்கு, உலக விஷயங்களை அனுபவித்துக்கொண்டு உலகில் இருக்கும் என்பது பொருள். 

மதுரகவி ஆழ்வாருக்கு புரிந்து விடுகிறது, தான் தேடிய குரு இவர்தன் என்று. மற்ற ஆழ்வார்கள் பெருமாளை பாடினார்கள் என்றால் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வரைதான் பாடினார். நம்மாழ்வார் விக்கிரகத்தை தன் தவ வலிமையால் வடித்தவர் மதுரகவி ஆழ்வார்தான். 

அந்த பேறு பெற்ற புளியமரத்தை விட்டு வேறு எங்கும் நம்மாழ்வார் செல்லவில்லை. பெருமாள், வெவ்வேறு தலங்களில் இருந்த வடிவில் இங்கே அவருக்கு காட்சி அளித்தார்.  

இந்த கோவிலில் நம்மாழ்வார் சந்நிதிக்கு முன்பும் ஒரு கொடி மரம் இருக்கிறது. 

புளிய மரம் ஆதிசேஷன் ஆகிய லக்ஷ்மணன் அம்சம், நம்மாழ்வார் ராமனின் அம்சம். ஆகவே வேறு எங்கும் இல்லாத வகையில் ராமனுக்கு ஆதிசேஷன் குடை பிடிக்கிறார் என்றார் அர்ச்சகர். இது பற்றி தெரிந்து கொள்ள துருவிய பொழுது, கிடைத்த தகவல்:

ஒரு முறை ஏகாந்தத்தில் இருக்க விரும்பிய ஸ்ரீ ராமன், தன் தம்பி லக்ஷ்மணனை காவலுக்கு வைத்து விட்டு, "யார் வந்தாலும் உள்ளே அனுப்ப கூடாது என்று எச்சரிக்கிறார். அப்பொழுது துர்வாசர் ராமனைக்காண வருகிறார். அவருடைய கோபத்திற்கு அஞ்சிய லக்ஷ்மணன் துர்வாசரை உள்ளே அனுமதித்து விடுகிறார். இதனால் வெகுண்ட ஸ்ரீராமன், தன் கட்டளையை மீறியதற்காக புளியமரமாகும்படி தம்பியை சபித்து  விடுகிறார். அண்ணனை விட்டுப் பிரிய முடியாத தம்பி லக்ஷ்மணர், "உன்னைப் பிரிந்து நான் எப்படி இருப்பேன் ராமா?" என்று கதற, தான் *சடகோபனாக அவதரிக்கும் பொழுது லக்ஷ்மணர் எந்த புளியமரமாக இருக்கிறாரரோ, அந்த புளியமரத்தையே தான் இருப்பிடமாக கொள்வதாக வாக்களிக்கிறார்.  இத்தனை பெருமைகள் உடைய அந்த புளியமரத்தையும் வணங்கி விட்டு, மூலவரை தரிசிக்க செல்கிறோம். 

Add caption


புளியமரத்தின் இரு வேறு தோற்றங்கள் 

மூலவர் ஆதிநாத பெருமாள். நின்ற திருக்கோலம். உற்சவர் பொலிந்து நின்ற பிரான். பெயருக்கு ஏற்றார் போல் பொலிவான தோற்றம். குருகூர் வல்லி, ஆதிநாத வல்லி என்று இரண்டு நாச்சியார்கள் தனித்தனி சந்நிதிகளில்.  

பிரம்மா பூமியில் தவம் இயற்ற சிறந்த இடம் எது என்று திருமாலைக் கேட்க, தான் ஏற்கனவே தாமிரபரணிக்கரையில் எழுந்தருளியிருப்பதாக பெருமாள் காட்டிய இடம்தான் இது. ஆரம்பத்திலிருந்தே(ஆதியிலிருந்தே) இருப்பதால் ஆதிநாதன்.  ஆற்றில் மிதந்து வந்த சங்கு இந்த பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால், திருசங்கன்னித்துறை, ஆதிசேஷன் அம்சமாகிய லக்ஷ்மணன் புளியமரத்தின் வடிவில் இருப்பதால் சேஷ ஷேத்திரம், வராஹ அவதாரத்தை காண வேண்டும் என்று தவம் இருந்த முனிவர்களுக்கு பெருமாள் வராஹ நாராயணனாக பிராட்டியுடன் காட்சி அளித்த ஷேத்திரம் ஆனதால் வராஹ ஷேத்திரம். நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்த கரை என்பதால் தீர்த்த கரை என்று பலவாறாக அறியப்படுகிறது.  

கோவில் மிகப்பெரியது என்று கூற முடியாது. ஆனால் மிக அழகான சிற்பங்கள் இங்கும் இருக்கின்றன. அவசியம் செல்ல வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.

* நம்மாழ்வார் ஏறத்தாழ முப்பத்தி நான்கு பெயர்களால் அறியப்படுகிறார். அவற்றுள் சடகோபன் என்பதும்  ஒன்று. 

Friday, September 14, 2018

இரண்டு தீர்ப்புகள்

இரண்டு தீர்ப்புகள்

ஓரினச் சேர்கையை ஆதரித்து சென்ற வாரம் வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி எல்லோரும் விவாதித்து முடித்து விட்டார்கள். அதைப் பற்றி எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லாததால் விட்டு விடுகிறேன்.

நேற்று, தொழு நோயை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைப் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பொழுது அவர்கள் வாழ்க்கை துணையால் பரிவை கொடுக்க முடிந்தால்தான் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இருக்கும். அப்படி கொடுப்பதற்கு தயாராக இல்லாததால்தான் விவாகரத்து கோருகிறார்கள், அவர்களைப் போய் வற்புறுத்தி சேர்ந்து வாழச் சொல்வது சரியா?

நோயின் வேதனை, பிடிக்காத வாழ்க்கைத் துணையால் வரும் மன உளைச்சல் எல்லாம் அவர்கள் நிலையை இன்னும் மோசமாக்கி விடாதா? தீர்ப்பு அளித்தவர்கள் படித்தவர்கள், உலக அனுபவம் நிறைய இருக்கும், எனவே அவர்கள் தீர்ப்பு சரியாகத்தான் இருக்க வேண்டும் இல்லையா?
…………………..
ஸ்வட்ச் பாரத் சாத்தியமா?

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உருவாகி வருகிறது. அதில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் அதன் அருகிலேயே கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த குடியிருப்புக்கும், எங்கள் குடியிருப்புக்கும் இடையே நிறைய புதர்கள் மண்டிக் கிடக்கும். கட்டிட தொழிலாளர்களுக்கு கழிப்பறையாக பயன்படுவது இந்த புதர்கள்தான். தினமும் எங்கள் வீட்டு ஜன்னல் திரைச்சீலையை நீக்கும் பொழுது நான் கண்களை மூடிக் கொண்டு விடுவேன்.

எத்தனையோ கோடிகள் லாபம் பார்க்கப் போகும் கட்டிட நிறுவனங்கள் தங்களிடம் பணி புரியும் தொழிலாளிகலின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற முனைவதில்லை. இப்போதெல்லாம் மொபைல் டாய்லெட்டுகள் வந்து விட்டன. அவைகளை நிறுவினால் போதும். இந்த மாதிரி விஷயங்களை திருத்தாத வரை ஸ்வட்ச் பாரத் சாத்தியமில்லை.   

Thursday, September 13, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும் நவ கைலாசமும் - 2

பரவசம் தந்த நவ திருப்பதியும் 
நவ கைலாசமும் - 2

விஜயாசன பெருமாள் கோவில் - வரகுணமங்கை 
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அடுத்த திருப்பதியான வரகுணமங்கையை நோக்கிச் சென்றோம். வரகுணமங்கை என்று குறிப்பிடப்பட்டாலும் நத்தம் என்றே அறியப்படுகிறது. நவகிரஹங்களில் சந்திரனுக்கு உரிய ஷேத்திரம். 
மூலவர் விஜயாசன பெருமாள் விஜயம்(வெற்றி) என்னும் பெயருக்கேற்றாற்போல இடது கை நம்மை வா என்று அழைக்க, வலது கை அபய ஹஸ்தமாக  வெகு கம்பீரமாக ஆதிசேஷன் குடை பிடிக்க, அதன் மீது அமர்ந்திருக்கிறார். மனதை கொள்ளை கொள்ளும் அழகு! தாயாருக்கு தனி சன்னிதி இல்லை. உற்சவர் எம் இடர் கடிவான் இரண்டு தாயார்களோடு சேவை சாதிக்கிறார். சிறிய கோவில்தான். 

தல சிறப்பு: ரேவா நதிக்கரையில், புண்ணியகோஸம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த வேதவித் என்னும் அந்தணர் தன லௌகீக கடமைகளை முடித்த பிறகு, மஹாவிஷ்ணுவின் திருவடியை அடையும் பொருட்டு தவம் செய்து வந்தார். அவருக்கு ஸ்ரீமன் நாராயணனே ஒரு அந்தணராக வந்து வரகுணமங்கைகுச் சென்று தன் தவத்தை தொடரச் சொல்ல, வேதவித்தும் அவ்விதமே வரகுணமங்கையை அடைந்து ஆஸன மந்திரத்தை ஜபித்து முக்தி அடைந்ததாக வரலாறு. ஆஸன மந்திரத்தை ஜபித்து முக்தி அடைந்ததால் இங்கு பெருமாள் விஜயாசனத்தில் வீற்றிருக்கிறார். 

ரோமச மஹரிஷி, அக்னி பகவான், சத்யவான் மனைவியான சாவித்திரி ஆகியோருக்கு பெருமாள் இங்கு காட்சி அளித்திருக்கிறார். இங்கே இருப்பவர்களுக்கு முக்தி என்பது ஒரு நம்பிக்கை. 

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை
இருந்துவை குந்தத்துள் நின்று
தெளிந்தவெண் சிந்தை அகங்கழி யாதே 
என்னையாள் வாயெனக் கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப 
நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய் 
சிவப்பநீ காணவா ராயே. 
  
என்ற ஒரே ஒரு  பாசுரத்தால் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட  தலம்.

அங்கு பெருமாளை சேவித்து விட்டு அடுத்து திருப்புளியன்குடி என்னும் புதன் ஷேத்திரத்திற்கு வந்தோம். இங்கு பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். பெருமாளின் திரு உந்தியிலிருந்து(தொப்புளிலிருந்து) பிரம்மா காட்சி அளிக்கிறார். மூலவர் பூமிபாலன். தாயார் லட்சுமி தேவி என்னும் மலர் மகள். உற்சவ தாயாருக்கு புளிங்குடிவல்லி என்னும் திருநாமம். 
இங்கு கர்ப்பகிரஹத்தில் பெருமாளின் திருமுகமண்டலத்தை சேவித்து, திருவடியை பிரகாரம் வலம் வந்து ஒரு ஜன்னல் வழியாக சேவிக்க வேண்டும். திருவடிக்கருகில் லட்சுமி தேவியும், பூமா தேவியும் அமர்ந்து பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு கல்கண்டு, உலர்ந்த திராட்சை வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள். குழந்தை பேற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் குழந்தை பிறக்குமாம்.  இதுவும் சற்று சிறிய கோவில்தான். 

ராஜ கோபுரம் அப்படி சொல்ல முடியாமல் மொட்டை கோபுரமாக நிற்கிறது.
தல வரலாறு:

ஒரு முறை லட்சுமி தேவியுடன் பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி தனித்திருந்த  பொழுது, பூமிக்கு வந்தும் தன்னை உதாசீனப் படுத்துகின்றாரே என்று பூமிதேவி மனம் வருந்தி, கோபித்து பாதாள லோகத்திற்கு சென்று விடுகிறார். அதனால் பூலோகம் இருண்டு விடுகிறது. உடனே, திருமால் லட்சுமி தேவியுடன் பாதாள உலகம் சென்று, தனக்கு இருவருமே சமம்தான் என்று சமாதானப்படுத்தி, இருவருக்கும் நட்பு உண்டாக்கி இரெண்டு பேருடனும் இங்கே எழுந்தருளுகிறார். பூமி தேவியை சமாதானம் செய்ததால் இங்கு அவர் பூம் பாலன் என்று வழங்கப்படுகிறார். 

தேவேந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். தன் சாப விமோசனத்தால் மகிழ்ந்து தேவேந்திரன் பெரிய யாகம் ஒன்றை செய்ய, அதற்கு வருகை தந்த வசிஷ்டரின் மகளையும், அவருடன் வந்த ரிஷிகளையும் மதிக்காமல் தவறான கடும் சொற்களை பேசிய யக்ஞசர்மா என்னும் அந்தணன் அரக்கனாக சபிக்கப்பட்டான். அவன் தன தவறை உணர்ந்து வருந்தியதால் அவனுக்கு பாப விமோசனம் அளிக்கப்பட்ட தலம் இதுதான்.  

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

அடுத்தது நாங்கள் சென்றது நம்மாழ்வாரின் அவதார தலமாகிய ஆழவார் திருநகரி. மிகவும் விசேஷமான தலமாகிய இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் எனவே ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் சந்திக்கலாம். 

Tuesday, September 11, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 1

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 1


செப்டம்பர் முதல் வாரத்தில் ஏதாவது கோவில்களுக்குச் செல்லலாம் என்று தோன்றியது. பல வருடங்களாக தரிசிக்க ஆசைப்பட்ட, திருநெல்வேலியை சுற்றி இருக்கும் நவதிருப்பதி 
தலங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். வெகு சமீபத்தில் அங்கு சென்றுவிட்டு வந்திருக்கும் நெல்லை தமிழனிடமும், கீதா சாம்பசிவம் அக்காவிடமும் சில ஆலோசனைகள் பெற்றுக் கொண்டேன். கீதா அக்கா அங்கே நவ கைலாசம் எனப்படும் விசேஷமான சிவ ஸ்தலங்களும் இருப்பதாக கூறினார். எனவே அவைகளையும் தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று முடிவு செய்து பெங்களூரிலிருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸில்  கோகுலாஷ்டமி அன்று கிளம்பினோம். மாலை 5:15க்கு புகை வண்டி கிளம்பும் என்பதால் காலையிலேயே எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணனை வரவழைத்து விட்டோம். அவருக்கு பாயசம், பால், வெண்ணை, பழங்கள், அவல் மற்றும் ஏலக்காய் பொடி செய்து போட்ட சுத்தமான நீர் இவைகளை நிவேதித்து  விட்டு  பழங்களையும் குடி நீரையும் எடுத்துக் கொண்டோம். மறுநாள் காலை 6:30க்கு நெல்லையை அடைந்தோம். ஹோட்டலுக்குச் சென்று, குளித்து, சிற்றுண்டி அருந்தி கிளம்ப 8:30 ஆகி விட்டது.

முதலில் நாங்கள் சென்றது ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஷேத்திரம். இங்கு பெருமாள் சூரியனின் அம்சமாக இருக்கிறார். நின்ற திருக்கோலம். மூலவர் வைகுண்டநாதன், ஆதிசேஷன் குடை பிடிக்க நின்ற திருக்கோலம். உற்சவர் கள்ளர்பிரான். வைகுண்ட நாயகி, சோரநாத நாயகி(பூ தேவி)என்று இரண்டு தாயார்கள். நவ திருப்பதியில் முதலாவது ஷேத்திரம்.  நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

பிரும்மா வசிக்கும் சத்யலோகத்தில் ஒரு முறை பிரளயம் ஏற்பட்ட பொழுது,சோமுகாசுரன் என்னும் அரக்கன் பிரும்மாவின்  படைத்த தொழில் பற்றிய ரகசிய ஏடுகளை கவர்ந்து சென்று விடுகிறான். அதை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு தன பிரம்ம தண்டத்தை ஒரு பெண்ணாக்கி தான் பூமியில் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தை  அறிந்து வரச் சொல்ல, அந்தப் பெண் தாமிரபரணி நதிக்கரையில் சோலைகள் சூழ்ந்த இந்த இடத்தை தேர்வு செய்து அவரிடம் தெரிவிக்கிறாள். பிரம்மா இங்கு வந்து மஹாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் செய்ய, அவருக்கு வைகுண்டநாதனாக காட்சி அளித்த மஹாவிஷ்ணு சோமுகாசுரனிடமிருந்து ஸ்ருஷ்டி ரகசிய ஏடுகளை மீட்டுத் தருகிறார். தனக்கு காட்சி கொடுத்த கோலத்திலேயே பெருமாள் இங்கு எழுந்தருள வேண்டும் என்று பிரம்மா வேண்ட, பெருமாளும் அதற்கு சம்மதித்து அருளிய கோலம். மூலவர் விக்கிரஹத்தை பிரம்மாவே பிரதிஷ்டை செய்து, தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்த தீர்த்தம் கலச தீர்த்தம் எனப்படுகிறது. 

கால தூஷகன் என்னும் பெருமாளின் பக்தனான திருடன் ஒருவன் தான் கொள்ளையடிக்கும் செல்வங்களில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக தருவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஒரு முறை அரசனின் கருவூலத்தை கொள்ளையடிக்க முயன்ற பொழுது பிடிபடுகிறான். தன்னை காப்பாற்றும்படி  வைகுண்டநாதனிடம் வேண்டுகிறான். அவனுக்காக திருடன் உருவில் பெருமாளே செல்கிறார். அரசன்   வரும் பொழுது, தன்னுடைய சுய ரூபத்தை காட்டியருளுகிறார்.  தன்னுடைய செல்வத்தை கொள்ளையடிக்க ஏன் பெருமாள் வர வேண்டும் என்று கேட்க, தரும வழியில் செல்லாத அவனை தர்மத்தில் ஈடுபட செய்யவே தான் வந்ததாக கூறுகிறார். தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று  மன்னன், கள்ளர்பிரான் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளச் செய்கிறான். அழகான அந்த சிலா ரூபத்தை நாமும் வணங்குகிறோம்.

கோவில் ஓரளவிற்கு பெரியது. நிறைய பெரிய அழகான சிற்பங்கள். நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம். மூலவரை தரிசித்து விட்டு பிரகாரத்தை வலம் வரும் பொழுது இடது புறம் வைகுண்ட நாயகி சந்நிதியும்,  வலது புறம் சோரநாத நாயகி சந்நிதியும் இருக்கின்றன.  அதைத்தாண்டி  மண்டபம் உள்ளது. பல சிற்பங்களில் வானரங்கள் பிரதான இடம் பிடித்திருக்கின்றன.


தசாவதாரங்களில் மச்ச,கூர்ம அவதாரங்கள் மீன் போலவும், ஆமை போலவும் இருப்பதை பாருங்கள் 


யுத்த காட்சி 
Sunday, September 9, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் (ஒரு முன்னோட்டம்)

பரவசம் தந்த  நவ திருப்பதியும், நவ கைலாசமும் (ஒரு முன்னோட்டம்)


சென்ற வாரம் ஸ்ரீ ஜெயந்தி அன்று நவ திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. செல்வதற்கு முன்பு கீதா அக்கா, நெல்லை தமிழன், ஸ்ரீராம் இவர்களிடம் சில ஆலோசனைகள் கேட்டுக் கொண்டேன். எல்லாமே மிகவும் உதவியாக இருந்தன.

நாங்கள் முதலில் நவ திருப்பதிக்கு மட்டுமே செல்வதாக இருந்தோம். கீதா அக்கா சொல்லித்தான் அங்கு நவ கைலாசம் என்று அழைக்கப் படும் ஒன்பது முக்கியமான சிவ ஸ்தலங்களும் இருப்பது தெரிய வந்தது. எனவே அவைகளையும் தரிசித்துக் கொண்டோம்.

பின்னர் மதுரைக்கு  வந்து திருப்பரங்குன்றம், அழகர் கோவில், திருமலை நாயக்கர் மஹால் காந்தி மியூசியம் போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு, மறுநாள் பழனிக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு பெங்களூர் திரும்பினோம். பயணத் தொடர் வரும் பின்னே, சில புகைப்படங்கள் முன்னே..
சில கோபுரங்கள் 
சிற்ப அழகுகள் 

வழியில் கண்ணைக் கவர்ந்த இயற்கை காட்சிகள் 
எங்கள் சாரதியும் நாங்களும் 
  தற்சமயம் இதை ரசியுங்கள், பின்னர் விரிவாக பார்க்கலாம்.


Saturday, September 8, 2018

சாப்பிட வாங்க அப்படியே பதில்சொல்லிட்டு போங்க

சாப்பிட வாங்க 
அப்படியே பதில்சொல்லிட்டு போங்க  1. "We call this as four yards of coffee" Who? Why?

2. மணக்கும் மலரின் பெயர் கொண்ட இவர் சமையல் மணக்கும்,ருசிக்கும்.

3. தந்தை பாட்டு(கவிதை) படைத்தார், மகள் சாப்பாடு படைக்கிறார்.

4. பன், ப்ரெட் போன்றவற்றிர்க்கு ஆங்கிலேயரிடம் இருந்து வந்த வரவேற்பை உணர்ந்து கொண்ட மாணிக்கம் பிள்ளை ஒரு ரொட்டி கடை தொடங்க விரும்பினார். ஆங்கிலேயர்களை கவரும் வண்ணம் அதற்கு இந்த ஆங்கிலப் பெயரை சூட்டினார். இன்றைக்கும் சென்னையின் ஒரு முக்கியமான ரொட்டி கடை இது எது என்று தெரிகிறதா? 

5. இவை சில உணவு பண்டங்களைப் பற்றிய குறிப்புகள், எவை எவை என்று கண்டு பிடியுங்கள்:

A). தீர்ப்பதற்கு மிகவும் கடினமானதை இதோடு ஒப்பிடுவார்கள்.

B). ஒரு ராஜபார்வை கவிஞர் இதை பெண்களின் விரல்களுக்கு ஒப்பிட்டிருக்கிறார்.

C). இது கூடவா தெரியாது? 'அழகுதான்' போங்கள்.Thursday, August 30, 2018

பிரசாத விசேஷங்கள்


பிரசாத விசேஷங்கள்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் 
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஆகி, நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்த நேரம், அந்த கோவில் கமிட்டி மெம்பர்களில் ஒருவர் காஞ்சி மடம் மஹா பெரியவரை தரிசிக்க காஞ்சீபுரம் சென்றிருக்கிறார். அங்கு பெரியவரிடம் கோவில் நடைமுறைகளைப் பற்றி கூறி விட்டு, தினமும் இரண்டு வேளையும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வருகின்றவர்களுக்கு வயிறு நிறையும் வண்ணம் நிறைய விநியோகம் செய்வதாக பெருமையாக கூறிக் கொண்டாராம். அதைக் கேட்ட மஹா பெரியவர்," பிரசாதம் அவ்வளவு அதிகமாக கொடுக்கக்கூடாது, கொஞ்சமாகத்தான் தர வேண்டும், இதை நீயே புரிந்து கொள்வாய்" என்றாராம்.

இவருக்கு கொஞ்சம் வருத்தம். "என்னது இது? பிரசாதம் விநியோகிப்பதை குறை கூறுகிறாரே?" என்று நினைத்தாராம். எனவே வழக்கம் போல் பிரசாதத்தை ஒரு தட்டில் நிறைய வைத்து  விநியோகம் செய்வது தொடர்ந்தது. 

ஒரு நாள் மதியம் சாம்பார் சாதத்தை பெற்றுக் கொண்ட ஒருவர், " இனிமேல் சாம்பார் சாதத்தோடு ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் வைத்துக் கொடுங்கள், தனியாக சாப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது" என்றாராம். அப்போதுதான் இவருக்கு மகா பெரியவர் சொன்னது புரிந்ததாம். பிரசாத அளவை குறைத்தார்களாம். 

பிரசாதம் என்பதை மிகவும் குறைவாக தொண்டைக்கு கீழ் இறங்காத அளவிற்குத்தான் சாப்பிட வேண்டும், அது விஸர்ஜனமாகக் கூடாது. அதாவது கழிவாக மாறாக கூடாது என்பார்கள். 


கோகுலாஷ்டமி பிரசாதங்கள்  
விநாயக சதுர்த்தி மோதகம் 

அக்காரவடிசல் 
நம்முடைய இந்து மதத்தில் பூஜையும்,பண்டிகைகளும்,  கோவில்களும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிரசாதங்களும்.  இதோ நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே கோகுலாஷ்டமியும், விநாயக சதுர்த்தியும். கோகுலாஷ்டமிக்கு பதினெட்டு வகை பட்சணங்கள் செய்வார்கள். விநாயக சதுர்த்திக்கு அப்பம், வடை, மோதகம், பாயசம், அவல், மற்றும் பழங்கள். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல். சரஸ்வதி பூஜைக்கு சுகியன் அல்லது அப்பம், வடை, பாயசம். தீபாவளிக்கு கேட்கவே வேண்டாம். கார்த்திகை பொரி சாப்பிட்டே ஆக வேண்டும். திருவாதிரை களி, ஏழு தான் கூட்டு. கூடாரவல்லிக்கு அக்காரவடிசல். போகி அன்றும் போளி வடை உண்டு. தைப்  பொங்கல் என்றால் பால் பொங்கல், ஏழு தான் கூட்டு. பங்குனி உத்திரம், ராம நவமி போன்றவைகளுக்கு பானகம், நீர் மோர், வடை பருப்பு என்று சீதோஷணத்தை ஓட்டி பிரசாதம் மாறும். சித்திரை வருடப் பிறப்பிற்கு போளி வடை கண்டிப்பாக வேண்டும். அன்று மாலை பஞ்சாங்கம் படிக்கும் பொழுது பானகம், நீர் மோர், வடை பருப்பு உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு கூழ், மாவிளக்கு, ஆவணியில் ஆவணி அவிட்டத்திற்கு போளி, வடை, காயத்திரி ஜபத்தன்று கலந்த சாதம் அவியல். வரலக்ஷ்மி நோன்பிற்கு எல்லோரும் இப்போதுதான் பாயசம், வடை, கொழுக்கட்டை, சுண்டல் என்று சாப்பிட்டிருப்பார்கள். ஓணம் என்றாலே எல்லோருக்கும் 'ஓணம் சத்யா'தான் நினைவுக்கு வரும். பச்சடி,காளன்,ஓலன், கறி, கூட்டு, அவியல், எரிசேரி, புளிசேரி, சாம்பார், புளியிஞ்சி, பப்படம், இரண்டு வகை பாயசம், உண்ணியப்பம், என்று ஒரு கட்டு கட்டியிருப்பார்கள். இப்போதெல்லாம் சென்னை, பெங்களூர் இங்கெல்லாம் கூட உணவகங்களில் 'ஓணம் சத்யா' என்று விளம்பரப் படுத்துகிறார்கள்.இது ஒரு பக்கம் என்றால் ஒவ்வொரு கோவிலையும் ஒரு பிரசாதத்தோடு இணைத்து வைத்திருக்கிறோம். திருப்பதியென்றால் லட்டு, பழனி பஞ்சாமிர்தம். திருவல்லிக்கேணி புளியோதரை, ஸ்ரீரங்கம் அரவணைப் பாயசம். குருவாயூரில் ஸ்வாமியை தரிசிக்க நிற்கும் நேரத்தை விட அதிகமான நேரம் பால் பாயசம் வாங்க காத்திருக்க வேண்டும். 

மஸ்கட்டில் சிவன் கோவிலில்தான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கும் தனி சந்நிதி இருக்கும். அங்கு வியாழக் கிழமை, அல்லது சனிக்கிழமை மாலையில் சென்றால் இரவு உணவை அங்கே முடித்து விட்டு வந்து விடலாம். அவ்வளவு பேர்கள் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவார்கள். அதோடு கேசரி, பொங்கல்,தயிர் சாதம் என்று வகையறாக்களும் இருக்கும். தவிர இரண்டு, மூன்று பேர் வடை மாலை சாற்றுவதால் விதம் விதமான பிரசாதங்களை ருசித்து வீட்டில் வந்து தூங்கி விடலாம். பேச்சிலர்களுக்கு ரொம்ப சௌகரியம். அங்கு ஹோட்டல்களிலேயே 'ஆஞ்சநேயருக்கு வடை மாலை செய்து தரப்படும்' என்னும் அறிவிப்பை காணலாம்.     ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர்,"எனக்கு ஞானம், வைராக்கியம் வர வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாராம். பரமஹம்சர் ,"தினமும் பகவத் கீதையின் சில ஸ்லோகங்களை படித்து விட்டு, கடவுளுக்கு திராட்சைப் பழங்களை நைவேத்தியம் செய்" என்றாராம். அந்த ஆசாமி உடனே," தினமும் எத்தனை திராட்சைப் பழங்கள் நைவேத்தியம் செய்ய வேண்டும்?" என்று கேட்டதும் ராமகிருஷ்ண பரமஹம்சர்," தினமும் எத்தனை ஸ்லோகங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் உனக்கு ஞானம் அடைவதில் நிஜமாகவே விழைவு இருக்கிறது என்று கொள்ளலாம், நீ எத்தனை திராட்சை நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று கேட்கிறாய், உனக்கும், ஞான,வைராக்யத்திற்கும் வெகு தூரம்" என்றராம். 

அவர் சொன்னது ஞான வேட்கை உள்ளவர்களுக்கு, நமக்கல்ல. இன்று சங்கடஹர சதுர்த்தி, குக்கரில் கொத்து கடலை சுண்டல் வேகப் போட்டிருக்கிறேன். நம் வேலையை நாம் பார்ப்போம்.  ஞானம் லபிக்கும் பொழுது லபிக்கட்டும். 

Tuesday, August 28, 2018

சின்ன சின்ன செய்திகள்சின்ன சின்ன செய்திகள் சிந்தூர் என்றால் என்னவென்று கேட்ட அதிரவுக்காக இந்த பாடல். எனக்கு ஒரு சந்தேகம். எ.பி.யின் கண்களில்  அனுஷ்கா, தமன்னா தவிர வேறு கதாநாயகிகள் பட மாட்டார்களா? இந்தப் பொண்ணு ஹன்சிகாவுக்கு என்ன குறை?   
xxxxxxxx

வரலட்சுமி விரதம் பற்றி பதிவிடுகையில் தோன்றிய விஷயம். நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, வரலக்ஷ்மி விரதம் எல்லாவற்றிலும் பூஜை முடிந்ததும் அது சம்பந்தப்பட்ட கதை ஒன்றை வாசிப்பார்கள். வாழக்கையில் ஏதோ ஒரு கஷ்டத்தில் இருந்த ஒருவர் பெரும்பாலும் பெண், இந்த விரதத்தை அனுஷ்டித்து எப்படி நற்கதி அடைந்தார் என்று விளக்கும் கதையாக அது இருக்கும். வரலட்சுமி விரதம் சம்பந்தப்பட்ட கதை எனக்கு தெரியவில்லை. ஆனால், வரலக்ஷ்மி நோன்பின் முக்கிய பாடல் 'வரலக்ஷ்மி வருவாய் அம்மா..(பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..)' என்னும் பாடல்தானே? லட்சுமி நம் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கூறும் கதை. சிறு வயதில் கேட்டது.

ஒரு முறை லட்சுமி தேவி பூமியில் வாழும் மனிதர்களுக்கு கருணை புரியலாம் என்று அதிகாலை நேரத்தில்  வைகுண்டத்திலிருந்து கீழே இறங்கி வருகிறாள். எந்த வீட்டிற்கு செல்லலாம் என்று யோசித்தபடியே வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு வீட்டில் புழுத்த சாணத்தைக் நீரில் கரைத்து அதைக் கொண்டு வாசலில் தெளித்து கோலம் போடுகிறாள் அந்த வீட்டு அம்மாள். லட்சுமி தேவி அருவருத்து அந்த வீட்டத் தாண்டிச் சென்று விடுகிறாள். அதற்கு அடுத்த வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து பேன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காண சகிக்காமல் நகர்ந்து விடுகிறாள். வேறொரு வீட்டிலோ காலை வேளையில் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு பிக் பாஸின் மஹத் போல கெட்ட வார்த்தைகளை இறைத்துக் கொள்கிறார்கள்."சீ! சீ! இந்த வீட்டில் நான் எப்படி இருக்க முடியும்?" என்று அங்கிருந்தும் அகன்று விடுகிறாள். வேறொரு வீட்டிலோ இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை, ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். மனமொடிந்து போன லட்சுமி தேவி சே! ஒரு வீடு கூடவா நான் வசிக்கத்தகுதி உடையதாக இருக்காது? என்று வருந்தும் பொழுது, அந்த சிறு குடிசை கண்ணில் படுகிறது. பளிச்சென்று வாசலில் சாணி தெளித்து கோலமிடப்பட்டு, உள்ளே விளக்கேற்றி வைக்கப் பட்டிருக்கிறது. அந்த வீட்டில் உள்ளவர்கள் காலையில் குளித்து விட்டு, அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆஹா! நான் வசிக்க தோதான இடம் இதுதான்" என்று அந்த வீட்டிற்குள் நுழைகிறாள் மஹாலக்ஷ்மி. அதன் பிறகு அந்த வீட்டின் வளம் பெருகத் தொடங்குகிறது. இந்த கதை மூலம் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் நிறைய வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக் கூடாது, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் காலத்தை ஒட்டி சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும் . உதாரணமாக வீட்டு வாசலில் யார் இப்போதெல்லாம் சாணம் தெளிக்கிறார்கள்? அதே போல இப்போதைய இளைய தலைமுறையினர் எட்டு மணிக்கு முன்னாள் துயிலெழுகிறார்களா?

xxxxx எழுத்தாளரும், வீணை வித்தகியும் ஆன கீதா பென்னட் காலமாகி விட்டாராம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டார். ஆனால் அந்த அரக்கன் மீண்டும் அவரைத்தாக்கி அவர் உயிரைக் குடித்து விட்டான்.  சென்னை அசோக் நகரில் என் சகோதரியின்
வீட்டிற்கு பக்கத்து வீடு அவருடைய சகோதரியின் வீடு. தனி பங்களாவாக இருந்த அதை இடித்து அபார்ட்மெண்ட் ஆக்கிய பொழுது அவரும் அதில் ஒரு வீடு வாங்கி கொண்டார்.  ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் சென்னைக்கு வருவார். அப்போது அவரை சந்தித்து உரையாடியிருக்கிறேன். ராமபுரத்தில் எங்கள் விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பிற்கு ஒரு முறை சிறப்பு விருந்தினராக வந்தார்.  மூன்று வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு அவர் கணவரோடு வந்திருந்த பொழுது, அவர் கணவருக்கு நம் ஊரின் இரைச்சலைத்தான் தாங்க முடியவில்லை என்றார். 

ஒரு முறை குமுதத்தில் பட்டுக்கோட்டை பிரபாகரின் மனைவி, வாஸந்தியின் கணவர் போன்றே  பிரபல எழுத்தாளர்களின் வாழ்க்கைத் துணைகளை கதைகள் எழுத வைத்து வெளியிட்டார்கள். அதில் கீதா பென்னட்டின் கணவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கவிதையை அவர் கதையாக்கியிருந்தார்.  அவைகளை என்னால் ரசிக்க முடியவில்லை காரணம் எல்லோரும் தங்கள், தங்கள் வாழ்க்கைத் துணை எழுதுவது போலவே (அவர்கள்தான் எழுதி கொடுத்தார்களோ என்னவோ?) எழுதியிருந்தார்கள். "ப.பிரபாகரின் கதையை படிக்க வேண்டும் என்றால் அவர் எழுதியிருப்பதையே படித்து விடலாமே? எதற்கு டூப்பிளிகேஸி?" என்று நான் கேட்டதை திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டார். "உண்மைதான், இவையெல்லாம் பிசினெஸ் கிம்மிக்ஸ்" என்றார். "ஒரு நாவல் எழுத வேண்டும்" என்று ஆவல் என்றார். அது நிறைவேறாமலேயே ஆயுள் முடிந்து விட்ட்து.  Sunday, August 26, 2018

வரலக்ஷ்மி வருவாய் அம்மா..!

வரலக்ஷ்மி வருவாய் அம்மா..!ஆடி மாதம் வந்துவிட்டாலே பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கும். முதலில் வருவது வரலக்ஷ்மி நோன்பு அல்லது வரலக்ஷ்மி விரதம். இந்த நோன்பு அனுசரிக்கும் சிலர், அதென்ன சிலர் என்கிறீர்களா? வரலக்ஷ்மி நோன்பு செய்யும் பழக்கம் குடும்பத்தில் இருந்தால்தான் கொண்டாடுவார்கள். மாமியார் அந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் மருமகளும்  தொடர வேண்டும். திருமணம் ஆனவுடன் இதை எடுத்து வைப்பார்கள்.

இந்த வரலக்ஷ்மி விரதம் சில வருடங்கள் ஆடி மாதமும், சில வருடங்கள் ஆவணி மாதமும் வரும். திருமணம் ஆன வருடமே நோன்பு எடுத்துக் கொள்வதென்றால் எந்த மாதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மருமகளும் செய்ய ஆரம்பித்து விடலாம். முதல் வருடத்தை விட்டு விட்டால் எந்த வருடத்தில் ஆவணி மாதத்தில் வருகிறதோ அப்போதுதான் நோன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்(அதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டும்). மாமியார் வீட்டில் இல்லாவிட்டாலும் அம்மா செய்து கொண்டிருந்தால், அம்மாவிடம் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு முறை செய்ய ஆரம்பித்து விட்டால் எல்லா வருடமும் நிறுத்தாமல் செய்ய வேண்டும். ஏதாவது அசம்பாவிதத்தால் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த பூஜையை அனுஷ்டிக்கும் வேறு யாரிடமாவது அம்மன் முகத்தை பூஜிக்க கொடுத்து, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்த விரதம் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். 

வாட்சாப் வந்த படம் 
இப்பொழுதெல்லாம் எல்லோரும் வரலட்சுமியின் முகத்தை வைத்துதான் பூஜிக்கிறார்கள். முன்பெல்லாம் சிலர் வீடுகளில் சுவற்றில் வரலட்சுமியின் முகம் வரைந்து அதை பூஜிப்பார்கள். என் அக்கா, அவர் கூட சில வீடுகளில் வரலக்ஷ்மி படம் வரைந்து தந்திருப்பதாக கூறினார். நிறைய வேலை வாங்கும் பூஜை இது. முன்பெல்லாம் இதை மூன்று நாட்கள் செய்வார்கள். முதல் நாள் வியாழக் கிழமை மாலை வீட்டை அலம்பி, இழை கோலம் போட்டு, செம்மணிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, அம்மன் மண்டபத்தை அலங்காரம் செய்து, அம்மனையும் அலங்கரித்து, முதலில் வீட்டு வாசலில் ஒரு பகுதியில் ஒரு பலகையில் கோலமிட்டு அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, அம்மனுக்கு ஆரத்தி எடுத்து, இரண்டு பெண்களாக அம்மனை வீட்டுக்குள் அழைத்து வந்து மண்டபத்தில் எழுதருளச் செய்வார்கள். அம்மன் அலங்காரத்தில் தாழம்பூ வைத்து பின்னுவது முக்கியம். அதே போல அம்மனுக்கு பின்புறம் அந்த பின்னழகை காணும் வண்ணம் ஒரு கண்ணாடியும் வைப்பார்கள். 

வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி பூஜை, சனிக்கிழமை  புனர்பூஜை செய்துவிட்டு மாலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை கூப்பிட்டு வெற்றிலை பாக்கு கொடுப்பார்கள். அப்போது சுண்டல் உண்டு.

இப்போதைய அவசர காலத்திற்கேற்ப அம்மனை அழைப்பது, பூஜை, மாலையில் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுப்பது என்று எல்லாமே ஒரே நாளில் முடித்து விடுகிறார்கள். அதே போல, ஐயருக்காக காத்திருக்க தேவையில்லாமல் பென் டிரைவ் உதவியோடு பூஜை நடந்து விடுகிறது. அம்மனை அலங்கரிக்க தேவையான எல்லாம் ரெடிமேடாக கிடைப்பதால் அதுவும் ஈசியாக முடிந்து விடுகிறது.   

எங்கள் வீட்டில் வரலக்ஷ்மி பூஜை கிடையாது. எங்கள் கடைசி அத்தைக்கு உண்டு. அத்தையும் திருச்சியிலேயே இருந்ததால் நாங்கள் வரலட்சுமி நோன்பென்றால் அத்தை வீட்டிற்கு சென்று விடுவோம். எங்கள் அம்மா கோலம் போடுவது, அம்மன் அலங்காரம் போன்றவற்றில் திறமை மிகுந்தவர் என்பதால் அத்தைக்கு உதவி செய்ய முதல் நாளே சென்று விடுவார். நாங்கள் பெரும்பாலும் அடுத்த நாள் காலை செல்வோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பெரிய அக்கா ஹாஸ்டலில் இருக்கும் தன் ஸ்நேகிதிகளைக் கூட அத்தை வீட்டிற்கு அழைத்து வருவார். 

முதல் நாள் பூஜைக்கான முன்னேற்பாடுகள் தவிர நைவேத்யத்திற்கான இட்லி, கொழுக்கட்டை போன்றவைகளுக்காக மாவு அரைத்து வைத்துக் கொள்ளுதல், கொழுக்கட்டைக்கு பூரணம் தயார் செய்து வைத்துக் கொள்ளுதல் என்று வேலை நீளும். வெள்ளிக்கிழமை காலை 10:30 முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் எல்லோரும் ராகு காலத்திற்கு முன் பூஜையை முடித்து விட வேண்டும் என்று துடிப்பார்கள். பூஜை செய்து வைக்கும் ஐயருக்கு அன்றைக்கு பயங்கர டிமாண்ட். சில சமயம் ஆவணி அவிட்டமும் அன்றைக்கே வந்து விடும். அவ்வளவுதான் கதை கந்தல்!

சில சமயம் ஆகஸ்ட் 15 அன்று வரலக்ஷ்மி விரத நோன்பு வந்துவிடும். அன்றைக்கு பள்ளிக்கு வந்தே தீர வேண்டும், என்று பள்ளியில் விரட்டுவார்கள். அதுவும் ஓரு பெண் பாடக்கூடிய பெண்ணாகவோ, சுதந்திர தின நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய பெண்ணாகவோ இருந்து விட்டால் பள்ளிக்குச் செல்லாமல் இருக்க முடியாது. வீட்டிலோ, "அப்படி என்ன ஸ்கூல்? ஒரு நாள் கிழமைக்கு கூட வீட்டில் இருக்க முடியாமல்? உங்க டீச்சரெல்லாம் பொம்மனாட்டிதானே?" என்று என்னவோ ஆசிரியைகள் ஆசைப்பட்டு விசேஷ நாளில் பள்ளிக்கு வருவது போலகேட்பார்கள். நிஜமாகவே பாவம் அந்த ஆசிரியைகள் எப்படி மேனேஜ் செய்தார்கள்? 

படம் நன்றி கூகுள்


Friday, August 24, 2018

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே


மதுரா, விஜயத்திற்குப் பிறகு ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு சுதந்திர தின பட்டிமன்றங்களை தொலைக்காட்சியில் ரசித்து விட்டு, மாலை ஜெ.என்.யூ.விற்கு எதிரே இருக்கும் காமாட்சி கோவிலுக்கும், அங்கிருந்து மலை மந்திருக்கும்சென்றோம். ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் முருகன் கோவில். சுவாமிமலையில் இருக்கும் ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போன்ற தோற்றம். படிகள் அதிகம் இல்லை. இப்போது படிகள் இல்லாமல் மேலே செல்வதற்கு ராம்ப் போல சரிவுப் பாதை அமைத்திருக்கிறார்கள். என்றாலும் நாங்கள் படிகள் வழியாகவே சென்றோம். செல்லும் வழியில் எய்ம்ஸில் டி.வி. சேனல்களின் வாகனங்களை பார்த்து உள்ளே இருக்கும் வி.ஐ.பி. யார் என்று யோசித்தோம். மறு நாள்தான் தெரிந்தது. 


மலை மந்திரில் ஓர் செல்ஃபி  
மறுநாள் காலை கிளம்பிய நாங்கள் காலை சிற்றுண்டிக்காக மூர்த்தல் என்னும் இடத்தில் வண்டியை நிறுத்தினோம். அங்கு பராத்தாக்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றும். அதற்காக நொய்டாவிலிருந்தும், டில்லியிலிருந்தும் அங்கு வருபவர்கள் உண்டு என்றும் சொன்னார்கள். இருந்தாலும், காலை வேளையில் ஸ்டஃப்ட் பராத்தா சாப்பிட முடியாது என்பதால் தாவா பராத்தா ஆர்டர் கொடுத்தோம். வெண்ணையோடு பரிமாறப்பட்ட அந்த பராத்தாவும்,அதற்குப் பிறகு குடித்த மசாலா சாய்யும் மிகவும் நன்றாக இருந்தன.

ஹோட்டலில் அரை கப் வெண்ணை கொடுத்தார்கள்.
எங்கள் வண்டி ஓட்டுனர் குரு ஷேத்திரத்தில் பிரம்ம சரோவர் என்னும் பிரும்மாண்ட ஏரிக்கு எதிரே இருந்த ஓர் ஆஸ்ரமத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தி விட்டு, "பிரும்ம சரோவர், அதன் நடுவில் இருக்கும் சிவன் கோவில், கீதோபதேச ரதம் இவைகளை பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார். 

பிரம்ம சரோவர் பின்னணியில் 
நாங்கள் முதலில் எங்களுக்கு எதிரே இருந்த ஆஸ்ரமத்திற்கு உள்ளே சென்று பார்க்க முடிவு செய்தோம். அங்கு இருந்தது பசுபதிநாத் என்னும் சிவன் ஆலயம்.  அதைத்தவிர ஒரு வேதபாட சாலையும் இயங்குகிறது. மேலும் சிறு மியூசியம் ஒன்றும் இருந்தது.  அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும், நன்கு பராமரிக்கப்படும் நந்தவனம் எல்லாம் இருக்கின்றன. 


செம்பருத்தி பூ தான், சற்று பெரியதாக, சிவப்பாக இல்லாமல் பின்கிஷ் ஆக இருந்தது
அவைகளை பார்த்து விட்டு, பிரும்ம சரோவரின் மத்தியில் அமைந்திருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றோம். சிருஷ்டியின் ஆரம்பத்தில் பிரும்மா தன் தபோ பலத்தால் உருவாக்கியதால் பிரும்ம சரோவர் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தன்று இதில் நீராடுவது சிறப்பு என்கிறார்கள். பாரதப்போரின் இறுதியில் துரியோதனன் ஒளிந்து கொண்ட மடு இதுதான் என்கிறார்கள்.

அதன் நடுவே இருக்கும் சிவன் கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு கீதோபதேச ரதத்தை காணச்சென்றோம். அதற்கு ஒரு பாலத்தை கடக்க வேண்டும். வெய்யில் சுட்டெரித்தது.  கையில் ஒரு சிறிய குடை, அல்லது தலைக்கு ஒரு தொப்பி கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது.

கீதா ரதம் 

பாலத்தை கடந்தால் ஒரு  புல்வெளி, அதைத்தாண்டி ஒரு பெரிய மைதானம். புல்வெளியில் இரும்பினால் ஆன கீதோபதேச ரதம், முப்பத்தைந்து டன் எடையாம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் அந்த ரதமும் சரி, அதில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளும் சரி, க்ரிஷ்ணார்ஜுனர்களும் சரி அசல் பரிமாணத்தில் உள்ளன. அங்கிருந்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்த ஜ்யோதிசர் என்று வழங்கப்படும் இடத்திற்குச் சென்றோம். அங்கு இரண்டு பெரிய ஆல மரங்கள் உள்ளன. அதில் ஒன்று இருக்கும் இடம்தான் கீதை பிறந்த இடம் என்கிறார்கள். ஒரு மேடையின் மீது இருக்கும் இதன் கீழ் ராதா கிருஷ்ண விக்ரஹம் இருக்கிறது. அதை ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை காஞ்சி காமகோடி மடத்தால் நிறுவப்பட்டது என்கிறது கல்வெட்டு. 

அங்கிருந்து கல்பனா சாவ்லா பிளானட்டோரியம் பார்த்தோம். பிறகு பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் விழுந்த பீஷ்ம குண்ட் சென்றோம். சிறிய கோவில். பிரதானமாக அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். அவருக்குப் பின்னால் கை கூப்பியபடி பஞ்ச பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி. தலை மாட்டில் சங்கு சக்கர கதாதாரியாக மஹாவிஷ்ணு. 

எப்படிப்பட்ட தியாகி! அம்பு படுக்கையில் இருந்தபடி ஆயிரம் நாமங்களால் இறைவனை துதிப்பதுஎன்பது லேசான விஷயமா?  பகவத் கீதை மனிதனுக்கு கடவுள் உபதேசித்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் மனிதன் கடவுளை நோக்கி துதித்தது. இந்த இரண்டுமே பிறந்த இடங்களை ஒரே நாளில் தரிசிக்க முடிந்தது இறையருள்தான். அங்கு அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தோம். நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கேக்கிறதா?
என் தந்தையின் நினைவு வந்தது. அவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் இரண்டு வேளை தவறாமல் பாராயணம் செய்தவர். காஞ்சி காமகோடி மட பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடம் என் தந்தையின் பெயரை குறிப்பிட்டு அறிமுகம் செய்து கொண்டால் "விஷ்ணு சஹஸ்ரநாமம்?" என்பார். என் அப்பாவின் அந்த பாராயண பலனால் தான் எனக்கு இது கிடைத்தது.பீஷ்ம குண்டத்திற்கு அருகே ஒரு குளம் இருக்கிறது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மருக்கு தாகம் எடுக்கிறது. அவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வர துரியோதனன் ஓடுகிறான்,அவரோ அவனைத்தடுத்து, "என் பேரன் அர்ஜுனனே என் தாகத்தை தீர்ப்பான்,அர்ஜுனா எனக்கு  குடிக்க தண்ணீர் வேண்டும்" என்று கேட்க, அர்ஜுனன் பூமியை நோக்கி ஒரு அம்பு போடுகிறான். அது ஆழ்துளை கிணறு தோண்டுவது போல பூமியை பிளந்து செல்ல, பீஷ்மரின் தாயாகிய கங்கா தேவியே தன் மகனின் விடாயைத் தணிக்க, பிரவாகமாக பொங்கி வந்தாளாம். அந்த நீர்தான் இந்த குளம் என்கிறார்கள்.

பீஷ்ம குண்டத்தை ஒட்டி பத்ர காளி கோவில் ஒன்று உள்ளது. கோவில் நடை அடைக்கும் நேரம் வந்து விட்டதால் அங்கு செல்லாமல் சாப்பிட வந்து விட்டோம். அங்கு ஒரு நண்பர், "ஏன் பத்ர காளி கோவில் செல்லவில்லை? ஐம்பத்தோரு சக்தி பீடங்களில் அதுவும் ஒன்றாயிற்றே? சதி தேவியின் வலது முழங்கால் விழுந்த இடம் அது" என்றார். சரி அடுத்த முறை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டோம்.

சாப்பிட்டு முடித்ததும் ஊர் திரும்ப வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் வண்டி ஓட்டுனரோ, நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணா மியூசியத்தை பார்க்காமல் போனால் இந்த ட்ரிப் முழுமை அடையாது என்று கூறி எங்களை அங்கு அழைத்துச் சென்றார். 

நான்கு தளங்களில், ஒன்பது காலரிகளில் விரிந்திருக்கும் அந்த மியூசியம் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று. அகில இந்தியாவிலிருந்தும் தருவிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைகள், வெவ்வேறு பாணி கிருஷ்ண ஓவியங்கள், பாகவத ஓலைச்சுவடிகள், பழங்கால புத்தகங்கள், கடைசி தளத்தில் மல்டி மீடியாவின் துணையோடு  மஹாபாரத காட்சிகள், இறுதியாக அபிமன்யு மாட்டிக்கொண்ட சக்ர வியூகம் என்று புதுவித அனுபவத்தை தருகின்றது. ஒவ்வொரு தளத்திலும் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட க்விஸ் விளையாட சிறு கம்பியூட்டர். 

இந்த மியூசியத்தின் உள்ளே நுழைந்ததும் கீழ் தளத்தில் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரின் சிலையைப்  பார்க்கிறோம். அப்போது அது  நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பு வேறு. அதே சிலையை மேல் தளத்திற்கு சென்று அங்கு நமக்கு எதிரே பீஷ்மர் உடலெங்கும் அம்புகள் தைத்திருக்க நிலை குலைந்து ரதத்திலிருந்து கீழே விழுவது போல ப்ரமாண்டமாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்தோடு பார்க்கும் பொழுது ஏற்படும் பாதிப்பு வேறு. அதாவது நான்காவது தளத்தில் நம் கண் எதிரே ரதத்திலிருந்து கீழே விழும் பீஷ்மரின் ஓவியம், நம் பார்வை கீழே போகும் பொழுது பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடக்கும் சிலை. அந்த ஓவியத்திற்கும், சிலைக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணைப்பு சிறப்பாக இருக்கிறது. 

அதன் பிறகு அபிமன்யு கவுரவர்களிடம் தனியாக மாட்டிக் கொண்டு கொலையுண்ட சக்ர வியூகம் போன்ற அமைப்பு. அதன் உட்புறச் சுவர்களில் பாரதப் போர் காட்சிகள். நாம் அதற்குள் நுழைந்து சுற்றி சுற்றி வெளியே வருகிறோம். இப்படி ஒரு அமைப்பில் படைகளை அமைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  

வீடு திரும்பியவுடன் பிதாமகர் என்று அறியப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி காலமானதாக செய்தி. நாட்டு நலனுக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்த மாமனிதர்! நம் நாட்டின் ஜீவாதாரமே தியாகம்தான். அந்த தியாகம் தந்த வலுவால்தான் அம்பு படுக்கையில் கிடக்கும் பொழுது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபிக்கவும், மார்பில் குண்டு பாயும் போது 'ஹே ராம்' என்று விளிக்கவும் முடிந்திருக்கிறது சில மகாத்மாக்களால்.

இப்படி பொது வாழ்க்கையில் மட்டும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்திற்காக, உடன் பிறந்தவர்களுக்காக தன் சொந்த சுகத்தை தியாகம் செய்தவர்கள்  நம் நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட தேசத்தில் கோழைகள்தான் தியாகம் செய்வார்கள் என்னும் மேலை நாட்டு சிந்தனை எப்படியோ புகுந்து சுயநலமிகள் அதிகமாகி விட்டார்கள். நாம் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும். 

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத 
அப்யுதான அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"
(எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ, அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.    

என்று வாக்குறுதி அளித்துள்ள கீதாச்சார்யானை நம் நாட்டிற்கு தன்னலமற்ற தலைவர்களை தருமாறு வேண்டுவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் ஸ்ரீராம்! ராதே கிருஷ்ணா!