கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 15, 2018

வேடிக்கை மனிதர்கள்

 வேடிக்கை மனிதர்கள்

நிஜம் கற்பனையை விட விநோதமானது என்பார்கள். அப்படி இரண்டு செய்திகள்:

சவுதி அரேபியாவில் ஒரு பெண் விவாகரத்து கோரியிருக்கிறாள். காரணம் அவள் கணவன் தன் தாயை விட தன்னை அதிகம் நேசித்ததாம்.

மனைவியை தாறுமாறாக நேசித்த அந்த கணவன் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவளை வெளிநாட்டு சுற்றுலாவுக்கெல்லாம் அழைத்து சென்றிருக்கிறான். அவள் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கி தந்திருக்கிறான். மனைவியை இப்படி மாங்கு மாங்கென்று கவனித்தவன் பெற்ற தாயை புறக்கணித்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "இன்றைக்கு எனக்காக சொந்த தாயாரை கவனிக்காமல் விடும் இவன் நாளைக்கு என்னை விட அதிகமாக அவனைக்கவர்ந்த வேறு ஒரு பெண்ணைக் கண்டால் என்னை கை கழுவ மாட்டான் என்று என்ன நிச்சயம்?, இவன் நம்பத் தகுந்தவன் அல்ல" என்று கூறியிருக்கிறாள். என்ன ஒரு ட்விஸ்ட்!

சீனாவின் விமான நிலயம் ஒன்றில் பாதுகாப்பு சோதனைக்காக ஒரு பெணணிடம் அவளுடைய கைப்பையை ஸ்கேன் செய்யும் பொருட்டு எக்ஸ் ரே மிஷினில் போடச் சொல்லி இருக்கிறார்கள். எக்ஸ் ரே மிஷினில் போட்டால் தன் கைப்பையில் வைத்திருக்கும் பணம் எங்கேயாவது திருட்டுப் போய் விடுமோ என்று பயந்த அந்தப் பெண் தானே எக்ஸ் ரே மிஷினுக்குள் புகுந்து வெளி வந்திருக்கிறாள். எதிர் பக்கம் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொள்ள காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி.




Sunday, February 11, 2018

பத்மாவதியும், மோகனாவும்

பத்மாவதியும், மோகனாவும் 



பத்மாவதி சாரி, பத்மாவத் படம் பார்த்து விட்டேன். சென்னையில் பார்த்தேன், ஆனால் அங்கு wifi இல்லாததால், இணையத்தில் இணைவது கஷ்டமாக இருந்தது.

இந்த படத்தை ஏன் எதிர்த்தார்கள் என்று தோன்றியது. ஆச்சேபிக்கும் விதமாக எதுவும் இல்லை. இருந்ததை நீக்கி விட்டார்கள் என்கிறார்கள் சிலர்.

அலாவுதீன் கில்ஜியாக வரும் ரன்பீர்சிங் மிரட்டியிருக்கிறார். என்ன உடல் மொழி! என்ன நடிப்பு! ராணா ரத்தன் சிங்காக வரும் ஷாகித் கபூரிடம் கம்பீரம் கொஞ்சம் குறைகிறது. சாக்கிலேட் பையனை ராஜா வேஷத்திற்கு தேர்ந்தெடுத்த இயக்குனரின் தைரியத்தை பாராட்ட  வேண்டும். பிரமாதமாக நடிக்காத தீபிகா படுகோன் அப்படி நடித்திருப்பதாக தோன்றச் செய்வதும் இயக்குனரின் திறமைதான். அலாவுதீன் கில்ஜியின் மனைவியாக வரும் அதிதி ராவ் (காற்று வெளியிடை கதா நாயகி) கவனிக்க வைக்கிறார்.

பாடல் காட்சிகளும், போர் காட்சிகளும் சிறப்பு. குறிப்பாக குடை போன்ற பாவாடை அணிந்து கொண்டு தீபிகா குழுவினர் ஆடும் நடனம், அற்புதம்! மொத்தத்தில் ரசிக்கக் கூடிய  பிரு...மா.....ண் ...ட...ம்...!

அந்தக் கால பிரும்மாண்ட தயாரிப்பான தில்லானா மோகனாம்பாள் படம் பற்றிய செய்திகள். ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை வெள்ளித் திரை நிகழ்ச்சியில் சித்ரா லக்ஷ்மணன் கூற கேட்டது. இப்போது போல அப்போதெல்லாம் மேக்கிங் ஆப் தி பிலிம் என்று எடுப்பது பழக்கம் இல்லாவிட்டாலும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் அதை டாகுமெண்ட்ரியாக எடுத்திருக்கிறாராம்.


தில்லானா மோகனாம்பாள் படம் எடுப்பது என்று முடிவு செய்த பிறகு எம்.பி.எம். சேதுராமன், எம்.பி.எம்.பொன்னுசாமி இருவரையும் கச்சேரி செய்ய   சொல்லி ஏ.பி.நாகராஜன், சிவாஜி கணேசன், கே.வி.மஹாதேவன் ஆகிய மூவரும் உட்கார்ந்து கேட்டார்களாம்.

அந்த கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு, சவடால் வைத்தி கதாபாத்திரத்தை தன்னை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினாராம். அந்தக் கதை படமாக்கப்படும் பொழுது தான்தான் அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம். எஸ்.எஸ். வாசன் இயக்கி இருந்தால் நிச்சயமாக கொத்தமங்கலம் சுப்பு அவர்களைத்தான் வைத்தி பாத்திரத்தில் போட்டிருப்பார், ஆனால் ஏ.பி.நாகராஜன் இயக்கியதால் நாகேஷுக்கு அந்த வாய்ப்பை அளித்து விட்டாராம். இதனால் கொத்தமங்கலம் சுப்பு கடைசி வரை அந்தப் படத்தை பார்க்கவே இல்லையாம்.

அந்த வருடத்திற்கான தமிழக  அரசின் திரைப் பட விருதுகள் வழங்கப்பட்ட பொழுது சிறந்த நடிகைக்கான விருது தி.மோ.வில் கதாநாயகியாக நடித்த பத்மினிக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது மனோரமாவிற்கும், துணை நடிகருக்கான விருது பாலைய்யாவுக்கும் வழங்கப் பட்டதாம். ஆனால் சிறந்த நடிகருக்கான விருது அந்த வருடம் வெளியான குடியிருந்த கோவில் படத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டதாம். அவர்களை சொல்லி குற்றமில்லை சிவாஜி கணேசன் அந்தப் படத்தில் எங்கே நடித்தார்? சிக்கல் ஷண்முக சுந்தரமாகவே வாழ்ந்திருந்தார். அதனால்தான் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப் பட்டிருக்காது.

ஆனால் எம்.ஜி.ஆர். தான் ஒரு சிறந்த கலைஞன், ரசிகன் என்று வேறு விதமாக நிரூபித்திருக்கிறார். அவர் முதலமைச்சராக இருந்த பொழுது, தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்த  ரஷ்ய நாட்டு கலாச்சார குழு ஒன்றிர்க்கு நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் இவைகளை விளக்கும் திரைப் படம் ஒன்றை திரையிட்டு காட்ட வேண்டும் என்று அரசு தரப்பில் தீர்மானம் போடப்பட, அப்போதிருந்த அரசு அதிகாரி ஒருவர் எம்.ஜி. ஆர் படங்களை குறிப்பிட்டாராம். எம்.ஜி.ஆரோ சிரித்துக் கொண்டே அவைகளை புறம் தள்ளி விட்டு, "நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் இவைகளை விளக்கும் படம் என்றால் தில்லானா மோகனாம்பாள்தான் சிறந்த தேர்வு. அதை திரையிட்டுக் காட்டுங்கள்" என்றாராம். பெரிய மனிதர்!