கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 14, 2019

காதலர்கள்

காதலர்கள்'வேலண்டைன்ஸ் டே'  கொண்டாடும் வழக்கம் இல்லை. எ.பி.யில் ஸ்ரீராமின் கவிதையையும், வெங்கட்டின் பதிவையும் படித்த பிறகு இது சம்பந்தமான இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வந்தன. 

நான் மஸ்கட்டில் அலுவலக வண்டிக்காக காத்திருக்கும் நேரம் எனக்கு எரிச்சலாக இருக்கும். ஏனென்றால் அங்கு நானும், என் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு ஓமானி, ஒரு இந்தியன் யாவரும் தள்ளித் தள்ளி நின்று கொண்டிருப்போம். எனக்கு அருகில் நர்சரி ஸ்கூல் ஒன்றில் பணியாற்றிய கோவன் ஆசிரியை ஒருத்தி இருப்பாள். அவள் என்னைப் பார்த்து லே..சா..க சிரிப்பாள். அவ்வளவுதான். மற்றபடி பேசவோ, பார்க்கவோ யாரும், எதுவும் இருக்காது. 

சரி, சுற்றும் முற்றும் இப்படி இருக்கிறதே உருமாறும் மேகங்களையாவது வேடிக்கை பார்க்கலாம் என்றால்.. மேகமா? ம் ஹூம்!   மேகமாவது, ஒன்றாவது? துடைத்து விட்டது போல பளிச்சென்று சலிப்பூட்டும் நீல வானம். 

நம் ஊர் என்றால் இப்படியா இருக்கும்? டீ கடையிலிருந்து பாடல் அலறும், பூ வாங்கிக்கமா என்று ஒரு பெண் கூப்பிடுவார். அழகான  பெண்களை ரசிக்கலாம். என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். அது போல ஒரு முறை கே.கே.நகர் அமுதம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, பார்த்த ஒரு காட்சி:

பஸ் ஸ்டாப்பிலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ஒரு வாலிபன் எதற்கோ கெஞ்சி கொண்டிருந்தான், எங்கேயோ அழைத்தான் போலிருக்கிறது, அந்தப் பெண் மறுத்தாள், மிகவும் பலவீனமான மறுப்பு என்று நினைக்கிறேன்,ஏனென்றால், உடனே ஒப்புக்கொண்டு விட்டாளே, அந்த இளைஞனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை, அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினான், அந்தப் பெண்ணை ஏறச்சொல்லி விட்டு அவள் கன்னத்தில் பச்சென்று ஒரு உம்மா கொடுத்தான். அவனுடைய மகிழ்ச்சி, அந்தப் பெண்ணின் திடுக்கிடல் இவை எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கின்றன.  (இது போன்ற காட்சிகளெல்லாம் மஸ்கெட்டில் காணக் கிடைக்குமா?)

இன்னொரு விஷயம் சற்று சோகமானது. சிட்டி சென்டர் துவங்கிய புதிதில்  அங்கிருக்கும் ஐனாக்ஸில் 'நினைத்தாலே இனிக்கும்' படம் பார்க்கச் சென்றிருந்தோம், டைரக்டர் பி.வாசுவின் மகன், பிரிதிவிராஜ், பிரியா மணி முதலியவர்கள் நடித்த மொக்கை படம். 

படத்திற்கு வந்திருந்த காதல் ஜோடிகளில் ஒரு பெண் படம் முடிந்து வெளியே வந்ததும் செல் போனை பார்த்து விட்டு பெரிதாக அழ ஆரம்பித்து விட்டாள். 

வீட்டிற்கு தெரியாமல் காதலனோடு சினிமாவிற்கு வந்திருந்த அந்த பெண், செல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறாள். அந்த நேரத்தில் வீட்டில் அவள் தந்தை ஹார்ட் அட்டாக்கில் மரணமடைந்து விட்டார். அவளை தொடர்பு கொள்ள வீட்டிலிருந்து முயன்றிருப்பது தெரிந்து அவள் கதறிய கதறல்...!

Wednesday, February 13, 2019

தொட்ட மாலூர்(Dhodda Maloor) - சென்னப்பட்டினம்


தொட்ட மாலூர்(Dhodda Maloor) - சென்னப்பட்டினம்

                                           
நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்தது நேற்றுதான் நடந்தது. ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தால் போதாது, அங்கிருக்கும் தெய்வம் நம்மை அழைக்க வேண்டும் என்பார்கள். நாங்கள் பல நாட்களாக ஆசைப்பட்டாலும், ஸ்ரீ.அப்ரமேயராமா நேற்றுதான் எங்களை அழைத்தார். 

காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, வழியில் அடிகாவில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, பதினொன்று பதினைந்திற்கு தொட்ட மாலூரை அடைந்தோம். அர்ச்சனைத்தட்டும், துளசி மாலையும் வாங்கிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தோம். சிறிய கோவில். (மரத்தால் ஆன) கொடிமரம், பலிபீடத்தை தாண்டி, படியேறி உள்ளே சென்றால் மூலவர் அப்ரமேயராமா சந்நிதி. நின்ற திருக்கோலத்தில், மேலிரு கைகளில் சங்கு, சக்கரமும், கீழ் இடது கையில் கதையும் தாங்கி, வலது கரம் அபயஹஸ்தத்தோடு காட்சி அளிக்கிறார். அர்ச்சகர் முழுமையாக அர்ச்சனை செய்கிறார். எல்லா பெருமாள் கோவில்களைப் போலவும் தீர்த்தம் கொடுத்தார்கள், ஆனால் சடாரி சாதிக்கவில்லை.பிரகாரத்திலிருந்து உள் விமான தோற்றம்
 கோவிலின் வாகனங்கள் ப்ரும்மாண்டமாக இருக்கின்றன. 


பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தை வலம் பொழுது மீண்டும் படியேறினால், தாயார் சந்நிதி. அமர்ந்த திருக்கோலத்தில் அழகான அரவிந்தவல்லியை சேவித்து விட்டு, அதே திண்ணை போன்ற அமைப்பில் வலது பக்கம் திரும்பி தொடர்ந்து நடந்தால் மாலூர் கிருஷ்ணன் எனப்படும். நவநீத கிருஷ்ணனை தரிசிக்கலாம்.  "கண்ணா, கருமை நிறக்கண்ணா .." என்பதற்கிணங்க ஒரு கையில் வெண்ணையோடு தவழும் கருமை நிற கண்ணன் ஜீவ களையோடு! முகம் தவிர உடல் முழுவதும் வெண்ணை காப்பிடப்பட்ட கிருஷ்ணன். காதுக்கருகில் தொங்கும் குழல் கற்றை, இடுப்பில் சலங்கை இவைகளை வெண்ணை காப்பிடவில்லை. அழகான அந்த கண்ணனை அப்படியே தூக்கி வைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.
குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இந்த நவநீத கிருஷ்ணனை வகிழிபட்டு வேண்டிக்கொள்ள, அவர்களுக்கு உடனே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல, நடைமுறையும் கூட. குழந்தை  பிறகு அந்த குழந்தையை இந்த கோவிலின் வெள்ளித்தொட்டிலில் விடுவார்களாம். நாங்கள் கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது, இரண்டு மாத குழந்தையோடு ஒரு குடும்பம் வந்து கொண்டிருந்தது. 

பிரகாரங்களில் வேதாந்த தேசிகர், ராமானுஜர், இவர்களோடு கூரத்தாழ்வாருக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இதைத்தவிர ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. நிறைவாக தரிசனம் முடித்து வெளியே வந்தோம். 

அந்த கோவிலுக்கு வெளியே கடைகளில் கிடைக்கும் புளிக்காய்ச்சலும், புளியோதரையும் மிகவும் நன்றாக இருக்கும் என்று எங்கள் சம்பந்தி சொல்லியிருந்தார். ஆனால் ஒரே ஒரு ஐயங்கார் மெஸ் என்பதைத் தவிர வேறு கடைகள் ஏதும் கண்ணில் படவில்லை. பக்கத்தில் இருக்கும் நதி நரசிம்மர் கோவிலில் கிடைக்கலாம் என்று இங்கே வாங்காமல் விட்டு விட்டோம். ஆனால் அங்கேயும் கிடைக்கவில்லை., புளியோதரை போச்சு...:((( 

மாலூர் அப்ரமேயராமா கோவிலிருந்து 1.2 கி.மீ. தொலைவில் வயல்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது நதி நரசிம்மர் கோவில். மிகவும் சிறிய கோவில். 1200 வருடங்களுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று அங்கிருக்கும் அர்ச்சகர் கூறுகிறார்.  ஆனால் அப்படிப்பட்ட புராதன கட்டிட கலை அமைப்பு அதுவும் தெரியவில்லை.

நதி நரசிம்மா கோவில்

இப்பொழுது இந்த நரசிம்மர் கோவில் அமைந்திருக்கும் இடம்தான் முன் காலத்தில் ஊராக இருந்ததாம். அருகில் இருக்கும் கண்வ நதியில் வெள்ளம் வந்து ஊரு முழுவதும் நீரில் மூழ்கி, பின்னர் மண் மேடிட்டு விட்டதாம். கன்னடத்தில் மரலூர்(sand city) என்றால் மண் என்று பொருளாம். மரலூர் என்பதே மாலூர் என்று மறுவியதாம். 

கண்வ மகரிஷி (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) இங்கு தவம் செய்ததாகவும், அப்போது வனமாக இருந்த இந்த பகுதியில் அவருக்கு காட்சி அளித்த நரசிம்மர், தனக்கு ஒரு கோவில் இங்கே கட்டி வழிபட சொன்னதோடு, அவருக்கு என்ன வரம் வேண்டும் என்றும் கேட்கிறார். கண்வ மகரிஷி," இங்கு வந்து தங்களை வழிபடுபவர்களின் தேவைகளை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாராம்.ஆகவே அந்த நரசிம்மரை, ஸ்வாதி நட்சத்திரத்தன்று வழிபடுபவர்கள் கேட்கும் வரத்தை இந்த நரசிம்மர் வழங்குவார் என்றும் கூறினார். சிறிய கோவிலாக இருந்தாலும், அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள். நல்ல அதிர்வுகளை உணர முடிந்தது. அங்கும் வழிபட்டு விட்டு வீடு திரும்பினோம்.  

நவநீத கிருஷ்ணன் படம் உதவி: கூகுள்.நன்றி.