வியாழன், 15 ஆகஸ்ட், 2019

தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம்

தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம் ராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் தேவி பட்டிணம் சென்று அங்கு ராமபிரான் ஸ்தாபித்த நவபாஷாண நவகிரகங்களை வணங்கி, பின்னர் திருப்புல்லாணி சென்று தர்பசயன ராமரை சேவித்து பின்னரே ராமேஸ்வரம் வந்து பர்வதவர்த்தினி சமேத ராமநாதரையும், அவருக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் காசி விஸ்வநாதரையும், விசாலாக்ஷியையும் வணங்க வேண்டுமாம். இந்த நடைமுறை எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் யதேச்சையாக இப்படி நேர்ந்தது இறையருள் என்றுதான் கூற வேண்டும். 

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்றவுடன் தேவிபட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தலங்களுக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தோம்.

தேவிப்பட்டிணம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நவபாஷாண நவக்கிரகங்கள். ஆனால் இந்த இடம் பல புராதன பெருமைகளை உடையது. மூல சேது என்று அழைக்கப்படும் இங்கு ஒரு முறை தர்ம தேவதை தன்மைகொண்டது நான்கு கால்களோடு தவம் புரிந்து சிவ பெருமானின் வாகனமாகிய ரிஷபமாகியதால் இதற்கு தர்ம தீர்த்தம் என்று ஒரு பெயர் உண்டு. 

காலவ மகரிஷி என்பவர் இங்கு மஹாவிஷ்ணுவை குறித்து அக்னிக்கு நடுவில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பொழுது, மிகுந்த பசியோடிருந்த துர்தமன் என்னும் அசுரன் பயங்கர சப்தம் எழுப்பியபடி இவரை விழுங்க வந்தான். அவன் எழுப்பிய சப்தத்தால் தவம் கலைந்த காலவ மகரிஷி அவனைக் கண்டு பயந்து போய் கண்களை மூடி  மஹாவிஷ்ணுவை மனதில் இருத்தி மீண்டும் தவத்தில் ஈடுபட, மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் துர்தமனை வதம் செய்தார். காலவ மகரிஷி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருக்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருப்பதால் இது சக்ர தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. 

மஹிஷாசுரனுக்கும், அம்பிகைக்கும் யுத்தம் நடந்த பொழுது, மகிஷாசுரன் இங்கிருக்கும் சக்ரகுளத்தில் வந்து ஒளிந்து கொள்கிறான். அம்பிகை தனது வாகனமாகிய சிங்கத்திடம், இந்த குளத்தின் நீரை  குடிக்கச் செய்து மகிஷாசுரனை வதம் செய்கிறாள். எனவே இந்த குளம் வற்றி விடுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை கொண்டுவந்து இதை நிரப்புகிறார்கள். ஏனவே இது அமிர்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.  மஹிஷனை அம்பிகை அழித்த இடமாகையால் தேவிப் பட்டிணம் என்னும் பெயர் பெற்றது. 

ராமபிரான், ராவணனோடு யுத்தம் செய்யவும் முன் இங்கு நவபாஷாணத்தால் ஆன நவகிரகங்களை அமைத்து,வழிபட்டுவிட்டு சென்றாராம். இப்போது தேவி பட்டினம் என்றால் எல்லோருக்கும் அதுதான் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் கடலுக்குள் இருக்கும் அந்த நவபாஷாண நவகிரகங்களை கடலுக்குள் இறங்கித்தான் வணங்க முடியும். இப்போது அதைச் சுற்றி பாலம் போல அமைத்து விட்டார்கள். இயலாதவர்கள் அந்த பாலத்தில் மேல் நடந்து சென்று நவகிரகங்களை சுற்றி வர முடியும். நாங்கள் அதைத்தான் செய்தோம். 

அடுத்து தர்பசயன ராமரை தரிசிக்கலாம்.

*கடைசி புகைப்படம் உபயம் கூகுள். 

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

திருஉத்திரகோசமங்கை

திருஉத்திரகோசமங்கை


நீண்ட நாட்களாக திருஉத்திரகோசமங்கை செல்ல வேண்டும் என்ற என் ஆசை சமீபத்தில் நிறைவேறியது. காசிக்கு செல்லும் முன் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பதால் அங்கு சென்ற பொழுது உத்திரகோசமங்கைக்கும் சென்றோம்.

சைவர்களுக்கு மிகவும் முக்கியமான கோவிலான இது ராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரத்திற்கும் ராமேஸ்வரத்திற்கு இடையில், இராமேஸ்வரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது.  . ராமாயண காலத்திற்கு முற்பட்ட மிகவும் புராதனமான கோவில்என்கிறார்கள். மண்டோதரி இங்கிருக்கும் மங்களேஸ்வரரை வழிபட்டுதான் ராவணனை கணவனாக அடைந்தாளாம்.

உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்பது இங்கே பார்வதி தேவியை குறிக்கிறது. சிவபெருமான் மங்கையாகிய பார்வதி தேவிக்கு, வேதங்களின் பொருளை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால் உத்திரகோசமங்கை. திரு என்னும் அடைமொழி சேர்த்து திருஉத்திரகோசமங்கை.
இறைவன்: மங்களேஷ்வரர்/மங்கள நாதன்
இறைவி : மங்களேஷ்வரி
ஸ்தல விருட்சம் : இலந்தை
நடராஜர் : ஆதி சிதம்பரேசன்


இரண்டு கோபுரங்கள் தெரிகிறதா?

பெரிய விஸ்தாரமான கோவில். சுவாமி சந்நிதிக்கு, அம்பாள் சந்நிதிக்கு என்று இரண்டு கோபுரங்கள். கோவில் வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

இந்த கோவிலின் கருவறைக்கு முன்பு வலது பக்கத்தில் பெரிய சாளக்ராமமா?? சிறிய லிங்கமா என்று தெரியாமல் ஒன்று இருந்தது.  அதைப்பற்றி விசாரித்தபொழுது, அந்த அர்ச்சகர்," இது இராவணன் பூஜித்த சாளக்ராமம்" என்றார்.  புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

ராவணன் பூஜித்த சாளக்ராமம் ராமநாதபுரம் ராஜா

மரகத நடராஜர் சன்னதி

இந்த கோவிலில் பல வித்தியாசமான விஷயங்கள் உள்ளன.

சாதாரணமாக எல்லா சிவன் கோவில்களிலும் நுழைவு வாசலில் இடது புறம் விநாயகருக்கும், வலது புறம் முருகனுக்கும் சிறிய சந்நிதி இருப்பதை காணலாம். இங்கு அது இடம் மாறி வலது புறத்தில் முருகனுக்கும், இடது புறம் விநாயகருக்கும் சிறிய சந்நிதிகள் காணப்படுகின்றன.

சிவனுக்கு ஆகாது என்று சொல்லப்படும் தாழம்பூவால் இங்கிருக்கும் சிவபெருமானை அர்ச்சனை செய்யலாம்.

இங்கிருக்கும் நடராஜர் முழுவதும் மரகத கல்லால் வடிக்கப்பட்டவர். அதிக ஒலி மரகத கல்லில் விரிசலை ஏற்படுத்தும் என்பதால் இந்த கோவிலில் மேளம் போன்ற அதிக ஒலியை ஏற்படுத்தும் கருவிகள் வாசிக்கப்படுவதில்லை. சப்தத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வருடம் முழுவதும் இந்த நடராஜர் சந்தன காப்பிடப்பட்டு இருக்கிறார்.  மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் திருவாதிரை அன்று மட்டும்(பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளில்தான் வரும்) சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்படுமாம்.  பிறகு மீண்டும் சந்தன காப்பிடப்பட்டு விடுகிறது.

இங்கிருக்கும் நடராஜருக்கு கையில் பாம்பு கிடையாது, இடுப்பில் புலித்தோல் கிடையாது, தலையில் கங்கை கிடையாது என்று கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் முதன்முதலாய் நடராஜா நடனம் ஆடினாராம், அதற்குப்பின்னர்தான் சிதம்பரத்தில் ஆடினாராம், எனவே இது ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இத்தனை சிறப்புக்கள் கொண்ட நடராஜர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுதருளியிருக்கிறார்.

திருவிளையாடற்புராணத்தில் வரும் வலை வீசி மீன் பிடித்த படலம் இங்கேதான் நிகழ்ந்தது.

தற்சமயம் கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனாலோ என்னவோ, இந்த கோவிலின் சிறப்பு அம்சமான திறந்த வாய்க்குள் சுழலும் பந்தோடு கூடிய யாளியை பார்க்க முடியவில்லை. அறுபது மூவர் சிலைகளுக்கு மேல் ஒவ்வொரு நாயனாரும் செய்த திருப்பணி ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது.

கோவிலை விட்டு வெளியே வந்த பொழுது எங்கள் காரோட்டி,"இந்த கோவிலுக்கு எல்லோரும் வந்து விட முடியாது, இங்கிருக்கும் சிவன் அழைத்தால்தான் வர முடியும்" என்றார். கடவுளுக்கு நன்றி கூறி கிளம்பினோம். தென்னாடுடைய சிவனே போற்றி!