பரவசம் தந்த நவ திருப்பதியும்,
நவ கைலாசமும் - 4
ஆழ்வார் திருநகரியில் திருப்தியாக தரிசனத்தை முடித்துக் கொண்டு, ராகு, கேது தலங்களான இரட்டைத் திருப்பதி என்னும் திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் தலத்திற்குச் சென்றோம். இரண்டு சிறிய கோவில்களும் அருகருகே, நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கின்றன. இரண்டிற்கும் இடையே அழகான நந்தவனம் ஒன்றை அமைத்து பராமரிக்கிறார்கள். நவதிருப்பதி கோவில்களை பராமரிக்கும் டி.வி.எஸ். ட்ரஸ்டின் அலுவலகமும் இங்குதான் இருக்கிறது.
ஆத்ரேய சுப்ரபர் என்னும் ரிஷி யாகம் செய்வதற்காக பூமியை சுத்தம் செய்த பொழுது,பூமியில்புதையுண்ட மிகவும் ஒளிமயமான ஒரு வில்லையும், தராசையும் கண்டார். அவைகளை கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறி, குபேரன் சாபத்தால் தாங்கள் இது போல மாறி, பூமியில் புதையுண்டு கிடந்ததாக கூறி,முக்தி அடைந்தனர். அதனாலேயே இந்த ஷேத்திரம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது.
யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்த சுப்ரபர் அவிர் பாகத்தை தேவர்களுக்கு அளித்தார். அவிர் பாகம் கிடைக்கப்பெற்ற தேவர்கள் சுப்ரபருடன் திருமாலை வேண்ட, திருமாலும் அங்கு காட்சி அளித்தார். அதனால் மூலவர் தேவர்பிரான் என அழைக்கப்படுகிறார். இந்திரனுக்கும், வருணனுக்கு, வாயு பகவானுக்கும் பெருமாள் காட்சி அளித்த இடம். தாயாருக்கு தனி சந்நிதி இல்லை. நவகிரகங்களில் ராகுவிற்கான தலம்.
தேவர்பிரானை சுப்ரபர் தினமும் தாமரை மலர் கொண்டு பூஜிப்பதை பார்த்த, இத்திருக்கோவிலின் பெருமாள், தன்னையும் அதைப் போல தாமரை மலர் கொண்டு பூசிக்கும்படி வேண்ட, சுப்ரபர் இரண்டு கோவிலில் உள்ள பெருமாளையும் தாமரை மலர் கொண்டு தினமும் பூஜித்தாராம். "இந்தக் கோவிலில் தாமரை மலர் கொண்டு தன்னை பூஜிப்பவர்களின் சகல பாவங்களையும் நீக்கி அருள் தருவேன்" என்று பெருமாள் கூறியிருக்கிறார். ஆகவே, மக்களே, இந்த கோவிலுக்குச் செல்லும் பொழுது தாமரை மலர் வாங்கிச் செல்லுங்கள்.
மருத்துவத்திற்கு அதிபதிகளான அஸ்வினி குமாரர்கள் இந்தக் கோவில் பெருமாளை வழிபட்டு அவிர்பாகம் பெற்றார்கள் என்கிறது தல வரலாறு.
கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் மூலவர் அரவிந்தலோசனர். உற்சவர் செந்தாமரைக்கண்ணன். தாயார் கருந்தடங்கண்ணி. தனி சந்நிதி கிடையாது.
இங்கிருந்து வன திருப்பதி என்று இப்போது அறியப்படும் புன்னை நகர் அல்லது புன்னையடியில் சரவணபவன் முதலாளி ராஜகோபால் அண்ணாச்சி எழுப்பியிருக்கும் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.
நாங்கள் சென்ற நேரம் நடை அடைத்திருந்ததால் அங்கிருக்கும் சரவண பவனில் பகல் உணவை முடித்துக் கொண்டோம். உணவு அத்தனை சிலாக்கியம் இல்லை. உணவருந்திவிட்டு வந்த பொழுது நடை திறக்கப்பட்டிருந்தது. அங்கு தரிசனம் செய்து விட்டு, ஸ்ரீ ஜெயந்தி என்பதால் கொடுக்கப்பட்ட சுவையான வெல்லச்சீடை பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதிக்கு அருகில் இருந்த அந்த ஊரின் தெய்வமான ஆதி நாரயணப் பெருமாள், மற்றும் கிராம தெய்வங்களான பெரிய பலவேசம், சின்ன பலவேசம் முதலிய சன்னிதிகளில் வணங்கிவிட்டு வந்தோம். அங்கிருந்த பூசாரி, "இந்த இடத்துக்கு முன்பு யாரும் வர மாட்டார்கள், பக்கத்தில் பாலாஜி கோவில் பெரிதாக வந்தவுடன், இந்த கோவிலும் பெரிதாகி விட்டது" என்றார்.
அங்கிருந்து திருச்செந்தூர் சென்றோம். வன திருப்பதி, திருச்செந்தூர் போன்றவை நவ திருப்பதி தலங்களில் வராது என்றாலும், அவைகளுக்கும் இப்போது டூர் ஆபரேட்டர்ஸ் அழைத்துச் செல்கிறார்கள். திருச்செந்தூர் கோவிலை காலை ஆறுமணிக்கு திறந்தால், காலை ஆறு மணிக்கு இரவு 9:30குத்தான் அடைப்பார்களாம். இடையில் திரை கூட போடா மாட்டார்கள் என்பதால் மதிய நேரத்தை வீணடிக்காமல் அங்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். கார் நிருத்தும் இடத்திலிருந்து பேட்டரி காரில் கோவிலின் ப்ரதான வாயில் வரை செல்லலாம்.
திருச்செந்தூரில் கும்பல் அதிகம் இல்லாததால் சந்தனக் காப்பில் முருகனை கண் குளிர தரிசனம் செய்து கொண்டோம். வெளியே ப்ரொஃபெஷனல் காமிராவை வைத்துக் கொண்டு, கடல் பின்ணனியிலும், கோவில் பின்ணனியிலும் புகைப்பட்ம் எடுத்து, அதை உடனே ப்ரிண்டும் போட்டுத் தருகிறார்கள். எங்களுக்கு பேட்டரி கார் வந்து விட்டதால் அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் வந்து விட்டோம்.
இன்னும் இரண்டு திருப்பதிகளை தரிசிக்க வேண்டுமே...
இன்னும் இரண்டு திருப்பதிகளை தரிசிக்க வேண்டுமே...